You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிமுக பொதுக்குழு: எடப்பாடி ஆதரவு அலை, ஜூலை 11 அடுத்த பொதுக்குழு - வெளிநடப்பு செய்த ஓபிஎஸ்
பெரும் பரபரப்புக்கு மத்தியில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்மகன் உசேன் புதிய அவைத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மேடை ஏறி அமர்ந்தனர்.
வளர்மதி பேசுவதற்கு முன்பாக மைக்கைப் பிடித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அனைத்து தீர்மானங்களும் பொதுக்குழுவால் நிராகரிக்கப்படுவதாக சத்தமாக கூறினார்.
பிறகு பேசிய வளர்மதி, எடப்பாடி பெயரையும், அவரது பதவிகளையும் குறிப்பிட்டு வரவேற்றார். ஆனால் ஓ.பி.எஸ். பெயரைத் தவிர்க்கும் வகையில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களே என்று ஒரு வரியில் கடந்து சென்றார்.
பிறகு, பேசிய கே.பி. முனுசாமி, அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக கூறினார். அத்துடன் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக கூறினார்.
பிறகு, பல காரணங்களால் இறந்த அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் செம்மலை இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.
முன்னதாக, 23 தீர்மானங்களையும் தாம் வழிமொழிவதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பிறகு, அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். பிறகு, திண்டுக்கல் சீனிவாசன் அதனை வழிமொழிந்தார்.
பிறகு பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எடப்பாடி பழனிசாமியை ஒற்றைத் தலைமை நாயகன் என்று குறிப்பிட்டார்.
"பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஒற்றைத் தலைமை கோரிக்கை"
2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டதாக கூறி ஒரு கடிதத்தை சி.வி.சண்முகம் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனிடம் அளித்தார்.
ஒற்றைத் தலைமை தேவை என்பதை வலியுறுத்தியே இந்த கடிதம் அளிக்கப்படுகிறது என்று பேசிய சி.வி.சண்முகம், இரட்டைத் தலைமையோடு திமுக-வை வலுவாக எதிர்த்துப் போராட முடியவில்லை என்று குறிப்பிட்டார். அத்துடன் அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை புதிய அவைத் தலைவர் முடிவு செய்யவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்து பேச வந்த தமிழ்மகன் உசேன் ஜுலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு நடக்கும் என்று தெரிவித்தார்.
ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் வெளிநடப்பு
இதனிடையே, இந்தப் பொதுக்குழு சட்டவிரோதமாக நடப்பதாக கூறி ஓ.பி.எஸ். வைத்திலிங்கம் ஆகியோர் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். மேடையில் இருந்து இறங்கும்போது ஓ.பி.எஸ். மீது பாட்டில் வீசப்பட்டது. வழி நெடுகிலும் ஓபிஎஸ் ஒழிக என தொண்டர்கள் முழக்கமிட்டனர்.
எடப்பாடிக்கும், ஒற்றைத் தலைமைக்கும் ஆதரவாக எஸ்.பி. வேலுமணி பேசினார். அதன் பிறகு கூட்டம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அனைவரும் வெளியேறினர்.
நீதிமன்ற உத்தரவு
முன்னதாக, அதிமுகவின் பொதுக்குழுவை நடத்த எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் சார்பில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை இன்று அதிகாலை நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் விசாரித்தனர்.
விசாரணைக்கு பின் பொதுக்குழுவை நடத்த எந்த தடையும் இல்லை என்று தெரிவித்தும் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர, புதிய தீர்மானங்களை கொண்டுவரக்கூடாது எனவும் ஆணை பிறப்பித்துள்ளனர்.
இன்னும் சற்று நேரத்தில் பொதுக் குழு கூட்டம்
இன்னும் சற்று நேரத்தில் அதிமுகவின் பொதுக் குழு கூட்டம் வானகரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் அந்த பகுதியில் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்