அதிமுக தலைமையக கதவை உடைத்த ஓபிஎஸ் ஆதரவு தொண்டர்கள் மீது வழக்கு

பெரும் பரபரப்புக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு இன்று வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அவர் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானத்துக்கு கட்சியின் செயற்குழு ஒப்புதல் தெரிவித்ததைத் தொடர்ந்து பொதுக்குழுவில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துவந்த ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுக் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் முன்பாக அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.

அப்போது அங்கு பெரும் மோதல் ஏற்பட்டது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் இருவரும் ஒருவரை ஒருவர் கற்களையும் கம்புகளையும் கொண்டு தாக்கிக் கொண்டனர்.

இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை போர்க்களமாக காட்சியளித்தது.

அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்டோரைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால், அந்தப் பகுதி மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டது.

அதிமுக தலைமை அலுவலகம் அருகே ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூட்டை உடைத்த ஒபிஎஸ் தரப்பினர்

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தொண்டர்கள் சூழ தமது கேரவன் வாகனத்தில் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அதேவேளை, அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் அங்கு திரண்டனர். அவர்களில் ஒரு பிரிவினர், அதிமுக தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்தனர்.

அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்களைத் தாக்க ஈபிஎஸ் ஆதரவாளர்கள் முற்பட்டனர். ஆனால், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிக அளவில் திரண்டிருந்ததால் அவர்களால் முன்னேறி கதவு உடைக்கப்பட்ட பகுதிக்கு வர முடியவில்லை. இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வத்தின் வாகனமும் கட்சி தலைமை அலுவலக பகுதிக்கு வந்தது. அங்கிருந்து தொண்டர்கள் சூழ ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு போலீஸாரும் வந்தனர்.

இந்நிலையில், இ.பி.எஸ். ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்தில் வெளியே தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதாரவாளர்கள் தலைமை அலுவலகத்துக்கு உள்ளே அப்போது இருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி படம் உடைப்பு

அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எடப்பாடி பழனிசாமி புகைப்படம் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் உடைக்கப்பட்டது. பதிலாக, ஓ.பி.எஸ். புகைப்படம் தலைமை அலுவலகத்தின் மேற்பகுதியில் மாட்டினர்.

தலைமை அலுவலகத்தில் கணினி, ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகள் உடைக்கப்பட்டிருந்தன. கட்டுக் கட்டாக கோப்புகள் வண்டி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதாகக் காட்டும் படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.

இந்த நிலையில், இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரது தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் அக்கட்சி அலுவலகத்துக்குள் போலீஸார் நுழைந்தனர். இதையடுத்து வன்முறை தீவிரமாகாமல் தடுக்க அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஆர்டிஓ சீல் வைத்தார். அந்த கட்சியின் அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்த நோ்டீஸில் கட்சி அலுவலகத்துக்கு உரிமை கோரும் விஷயத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு ஆர்டிஓ அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் கட்சியின் தலைமை அலுவலகம் யாருக்கு என்பது குறித்து ஆலோசிக்க வரும் ஜூலை 25ஆம் தேதி நேரிலோ வழக்கறிஞர்கள் மூலமாகவோ ஆஜராகுமாறு எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் காவல்துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள மனு மீதான உத்தரவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பிறப்பிக்கப்படுகிறது.

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அளித்துள்ள உத்தரவின் முக்கிய அம்சங்கள்:

பொதுக்குழு கூட்ட வேண்டும் என்பது பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கை. அந்த வகையில் பொதுக்குழு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கட்சி விதிகளுக்கு உட்பட்டு இந்த பொதுக்குழுவை நடத்த வேண்டும்.

ஜூலை 11ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு நடத்தப்படும் என்று ஜூன் 23ஆம் தேதியே கட்சி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். அதன்படி கட்சி விதிகளுக்கு உள்பட்டு இந்த கூட்டத்தை நடத்தலாம்.

பொதுக்குழு நடத்தப்படும் செயல்முறையில் விதிகள் மீறப்பட்டால் மீண்டும் மனுதாரர்கள், எதிர் மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: