தமிழ்நாடு அரசியல்: டிடிவி தினகரனின் அமமுக எதிர்காலம் இனி எப்படி இருக்கும்?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், டிடிவி தினகரனின் எதிர்காலத் திட்டம் என்ன? எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து நின்று அதிமுகவை அவரால் கைப்பற்ற முடியுமா?

டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரி வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடந்து முடிந்திருக்கிறது.

ஜெயலலிதா இருக்கும்போது அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் ஸ்ரீ வாரி வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடத்துவதுதான் வழக்கம் என்பதால், ஒருங்கிணைந்த அதிமுகவும் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுகவும் இங்குதான் பொதுக்குழு கூட்டத்தை நடத்த விரும்புவார்கள்.

அதுபோல, தங்களுடைய கட்சியின் பொதுக்குழு கூட்டத்தையும் இதே இடத்தில் நடத்த வேண்டுமென விரும்பினார் தினகரன்.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதைப் போலவே இந்த இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் விரிவாகச் செய்யப்பட்டிருந்தன. பிரதான சாலையிலிருந்து மண்டபத்திற்குச் செல்லும் பாலத்தின் இரு புறத்திலும் தினகரனை வரவேற்று பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

சுமார் 10 மணியளவில் கூட்டம் துவங்கிய நிலையில், கட்சியின் நிர்வாகிகள் முதலில் பேசினர். பேசியவர்களில் சிலர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடனும் கூட்டணி வைத்தால் கூட பரவாயில்லை; திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக முன்வைத்தனர்.

இந்த கூட்டத்தில் மொத்தமாக 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் குறிப்பிடத்தக்க தீர்மானமாக தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்போவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக, தலைவர் பதவிக்கான பொறுப்பை துணைத் தலைவரே கவனித்து வந்தார். வி.கே. சசிகலா அ.ம.மு.கவுக்கு வரும்பட்சத்தில் அவருக்காக 'தலைவர்' பதவி காலியாக வைத்திருக்கப்படும் என டிடிவி தினகரன் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால், அவர் தொடர்ந்து, அதிமுகவின் 'பொதுச் செயலாளர்' என்ற பதவியையே தனது பதவியாகக் கூறி வரும் நிலையில், இந்த முடிவை அமமுக எடுத்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் பேசியவர்கள் யாரும் சசிகலா குறித்தோ, ஓ. பன்னீர்செல்வம் குறித்தோ ஏதும் பெரிதாகப் பேசவில்லை. எடப்பாடி கே. பழனிச்சாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியரையே கடுமையாக விமர்சித்தனர்.

அதிமுகவை கைப்பற்றுவதே லட்சியம்

இதற்குப் பிறகு பேசிய டிடிவி தினகரன், அ.ம.மு.கவின் வெற்றியின் மூலம் அ.தி.மு.கவைக் கைப்பற்ற வேண்டுமெனப் பேசினார்.

"ஆர்.கே. நகரில் கிடைத்த வெற்றிதான் ஒரே வெற்றி. அதற்குப் பிறகு வந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தோல்விதான் கிடைத்தது. ஆனால், தற்போது தி.மு.க.ஆட்சிக்கு எதிரான மன நிலை உருவாகியுள்ளது. அ.தி.மு.க. சரியாக செயல்படவில்லை. அ.தி.மு.கவின் தற்போதைய நிலை வருத்தமாக உள்ளது. அதிமுக என்ற கட்சியே ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது. சொந்த கட்சியிலேயே பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை காசு கொடுத்து வாங்கும் கேவலமான நிலையில் அதிமுக உள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு 90 சதவீத ஆதரவு உள்ளது என்றால் வாக்குப் பெட்டியை வைத்து தேர்தல் நடத்த வேண்டியதுதானே?" என்றார் தினகரன்.

ஓ. பன்னீர்செல்வம் குறித்து பேசும்போது, "தன் பதவியை பறித்து விட்டார்கள் என்ற கோபத்தில் ஓ. பன்னீர்செல்வம் சென்றார். பிற்காலத்தில் தன் தவறை உணர்ந்து மாறிவிட்டார். ஆனால் பழனிசாமி மேலும் மேலும் தவறு செய்தார். துரோகம் செய்து கொண்டே இருக்கிறார். அவர் மாறவே மாட்டார்.

நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை, ஏதாவது ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்தாக வேண்டும். அது பா.ஜ.கவாகவோ, காங்கிரசாகவோ இருக்கலாம். ஆனால், காங்கிரஸ் தற்போது தி.மு.கவுடன் உள்ளது. அதனால், பா.ஜ.கவுடன் கூட்டணி அமைப்பேன் என்று கூறினேன். ஆனால், கூட்டணி குறித்த கவலைகளை என்னிடம் விட்டுவிடுங்கள். தி.மு.கவைத் தோற்கடிக்க வேண்டும். அதுதான் முக்கியம்" என்றார் தினகரன்.

தினகரனால் பதில் அளிக்க முடியாத கேள்விகள்

  • இந்த பொதுக்குழு கூட்டத்தை, அ.தி.மு.கவுக்கு இணையான பிரமாண்டத்துடன் நடத்தி விட்டாலும், பல முக்கிய கேள்விகளுக்கு டிடிவி தினகரன் பதிலளிக்கவில்லை.
  • தொடர்ந்து இரண்டு தேர்தல்களாக படுதோல்வியைச் சந்தித்து வரும் அமமுக அடுத்த தேர்தலில் எப்படி வெற்றிபெறும் என்பதை அவர் விளக்கவில்லை.
  • அப்படியே சில இடங்களை வென்றாலும்கூட, அதை வைத்து அ.தி.மு.கவை எப்படிக் கைப்பற்ற முடியும் என்பதையும் விளக்கவில்லை.
  • காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுடன் அவர் கூட்டணி வைக்க விரும்பனாலும், அந்தக் கட்சிகள் அ.ம.மு.கவுடன் கூட்டணி அமைக்க விரும்புமா என்பதும் கேள்விக்குறிதான்.

மற்றொரு ஜி. செந்தமிழன், சண்முகவேலு போன்ற சிலரைத் தவிர, மாநில அளவில் பெரிதாக அறியப்பட்ட முகங்கள் யாரும் அந்தக் கட்சியில் இல்லை. இந்த சவால்களோடுதான், 2024 நாடாளுமன்றத் தேர்தலை அக்கட்சி சந்திக்க வேண்டும்.

அதிமுகவில் குழுவை உருவாக்க முயற்சி

அதிமுகவின் அனைத்துப் பிரிவுகளும் ஒன்றாகும்போது தன் கை ஓங்கியிருக்க வேண்டுமென தினகரன் நினைக்கிறார். அதற்கான முன்னேற்பாடுகள்தான் இவை என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

"அதிமுகவிற்குள் டிடிவி தினகரன் VS எடப்பாடி பழனிச்சாமி என்ற நிலையை உருவாக்க விரும்புகிறார் தினகரன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐந்து, ஆறு தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி வாய்ப்புகளை தினகரனின் கட்சி குலைத்திருக்கிறது.

அந்தத் தேர்தலில் மொத்தமாக சுமார் 25 லட்சம் வாக்குகளை தினகரனின் கட்சி பெற்றது. இது மொத்த வாக்குகளில் சுமார் 5.25 சதவீதம்.

அதேபோல, 2021 சட்டமன்றத் தேர்தலில் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.கவின் வெற்றியைக் குலைத்தார். ஆனால், அப்போதே அவரது வாக்கு சதவீதம் சரிய ஆரம்பித்துவிட்டது. மொத்தமாக 2.25 சதவீத வாக்குகளையே பெற முடிந்தது.

சட்டமன்ற தேர்தலில் கட்சி தோல்வியடைந்து, எடப்பாடி VS ஓ. பன்னீர்செல்வம் என பிரிந்திருக்கும் நிலையில், 2024க்குள் கட்சி ஒன்றாகிவிடும்; அப்போது கட்சிக்குள் தனக்கான மரியாதை குறைந்துவிடக்கூடாது என நினைக்கிறார். அதற்கான பணிகளைத்தான் இப்போதே துவங்கியிருக்கிறார். தற்போது ஓ. பன்னீர்செல்வம் பின்னால் உள்ள முக்குலத்தோர் வாக்குகளை, தன் பக்கம் திருப்ப நினைக்கிறார் அவர். அதில் வெற்றியும் கிடைக்கக்கூடும்.

மேலும், சசிகலாவுக்கு என தனிப்பட்ட நிலைப்பாடு ஏதும் இல்லாததால், அவர் ஆதரவு வாக்குகளையும் டிடிவி ஆதரவு வாக்குகளாகத்தான் கொள்ள வேண்டும். இப்படியாக, சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், டிடிவி என மூன்று தரப்பும் இணைந்தால், அ.தி.மு.கவிற்கு வரும் தேர்தலில் பலத்த சவாலை உருவாக்க முடியும். அப்படியான நிலையில், எடப்பாடியை விட தனக்கு அ.தி.கவினரிடம் கூடுதல் ஆதரவு இருக்கிறது என காட்ட நினைக்கிறார். அதற்கான முஸ்தீபுகள்தான் இவை" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

ஆனால், இதற்கு டிடிவி தினகரன் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். பணபலமும் தேவைப்படும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: