You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"அதிமுக நெருக்கடிக்கு யார் காரணம்? சதி வலை பின்னியது யார்?" - மதுரையில் ஓபிஎஸ் பேட்டி
அ.தி.மு.கவில் உள்கட்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில், ' தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை, யாரால் எப்படி ஏற்பட்டது, எவரால் இந்தச் சதி வலை பின்னப்பட்டது என்பதை உணர்ந்து மக்களே உரிய தீர்ப்பினை வழங்குவார்கள்' என்கிறார், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் அறிவித்தனர்.
ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி பதவியேற்கும் வகையில் வரும் ஜூலை 11 ஆம் தேதி புதிய பொதுக்குழு நடைபெற உள்ளதாகவும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ஒற்றைத் தலைமையை நோக்கி முன்னேறிய அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாகப் பார்க்கப்பட்ட மைத்ரேயன், மா.ஃபா.பாண்டியராஜன், வேளச்சேரி அசோக் உள்ளிட்டவர்களையும் தன் பக்கம் வர வைத்தார்.
மேலும், தென்மாவட்டங்களில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோரின் ஆதரவாளர்களையும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வளைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஓ.பி.எஸ், தனது ஆதரவாளரான பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ' அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்தத் தடையில்லை. அதேநேரம், தீர்மானம் தொடர்பாக உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது' என்றார்.
இதையடுத்து, இரவோடு இரவாக தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரியிடம் முறையிட்ட ஓ.பி.எஸ் தரப்பினர், இதை அவசர வழக்காக விசாரிக்குமாறு கூறினர். இதன் தொடர்ச்சியாக நடந்த மேல்முறையீட்டு விசாரணையில், 'புதிதாக எந்தத் தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது' என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் ஆவேசமடைந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர், பொதுக்குழு கூட்டத்தில் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். தனக்கு மாலை போட வந்தவர்கள் மீதும் எடப்பாடி கோபத்தைக் காட்டினார். ஒருகட்டத்தில், 'ஜனநாயகத்துக்கு விரோதமாக நடந்த பொதுக்குழுவை புறக்கணிக்கிறோம்' எனக் கூறிவிட்டு ஓ.பி.எஸ் தரப்பினர் வெளியேறினர். அப்போது ஓ.பி.எஸ் மீது பாட்டில் வீச்சு சம்பவமும் நடந்தது. இதையடுத்து, பொதுக்குழு நடந்த அன்றே டெல்லி விரைந்த பன்னீர்செல்வம், 25 ஆம் தேதி இரவு சென்னை திரும்பினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரௌபதி முர்மு, வேட்பு மனு தாக்கல் செய்யவிருந்ததால், அதற்காக ஓ.பி.எஸ் சென்றதாகக் கூறப்பட்டது.
தீவிரம் அடைந்த மோதல்
அதேநேரம், வரும் ஜூலை 11ஆம் தேதி அ.தி.மு.க சார்பில் நடக்கவுள்ள பொதுக்குழுவை தடுப்பதற்கான சட்டரீதியான பணிகளில் ஓ.பி.எஸ் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், தனது ஆதரவாளர்கள் வளையத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரை வந்த ஓ.பன்னீர்செல்வத்தை தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்களும் வரவேற்றனர்.
அப்போது பேசிய ஓ.பி.எஸ், 'எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர். தொண்டர்களுடன் நான் என்றும் இருப்பேன். இந்த இயக்கத்தை எம்.ஜி.ஆரும் அம்மாவும் மனிதாபிமான இயக்கமாக வளர்த்தெடுத்து மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றனர். இதன்மூலம் 30 ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் முதல்வராக நல்லாட்சியை நடத்தியுள்ளனர். தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை, யாரால் எப்படி ஏற்பட்டது? எவரால் இந்தச் சதி வலை பின்னப்பட்டது என்பதை உணர்ந்து மக்களே உரிய தீர்ப்பினை வழங்குவார்கள். அவர்களுக்கு எம்ஜி.ஆர் மற்றும் அம்மாவின் தொண்டர்கள் உரிய பாடத்தை வழங்குவார்கள்' என்றார்.
மேலும், 'எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா ஆகியோரின் இதயத்தில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது. பன்னீர்செல்வம் போன்ற தூய தொண்டனைப் பெற்றது என் பாக்கியம் என அம்மா கூறினார். இதைவிட வேறு என்ன வேண்டும்?' என்றார். இதையடுத்து, பேட்டியை முடித்துக் கொண்டு ஓ.பி.எஸ் கிளம்பியபோது, ' உங்களின் அரசியல் எதிர்காலம் என்ன?' என செய்தியாளர் ஒருவர் கேட்டார். இதற்குப் பதில் அளித்த ஓ.பி.எஸ், 'என்னுடைய எதிர்காலத்தை அம்மாவின் தொண்டர்களும் மக்களும் நிர்ணயிப்பார்கள்' என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்