You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லியில் ஓபிஎஸ் முகாம் - ஓரம்கட்டுகிறாரா பிரதமர் நரேந்திர மோதி?
அதிமுகவில் ஒற்றைத்தலைமை குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு குரல் கொடுத்ததால் அதிருப்தியில் கட்சிப் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், டெல்லியில் தற்போது முகாமிட்டுள்ளார்.
டெல்லி வரும் முன்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பழங்குடியின பெண் தலைவர் திரெளபதி முர்மூ, ஜூன் 24ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதால் அதில் பங்கேற்க செல்வதாக கூறினார்.
இந்த நிலையில், டெல்லிக்கு வியாழக்கிழமை நள்ளிரவில் வந்த ஓ.பன்னீர்செல்வம் நட்சத்திர விடுதியில் தங்கினார். அவரது மகனும் தேனி தொகுதி மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் வெள்ளிக்கிழமை காலையில் அவரை சந்தித்தார். ஓபிஎஸ் ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன், மதுரை முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் அங்கு வந்தனர்.
அதிமுகவுக்கு தலைமை யார் என்ற விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இரு தரப்பும் கட்சிக்குள் தீவிரமாக மோதிக் கொள்ளும் சூழல் உருவான நிலையில், திடீரென ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு புறப்பட்டதால் அவரது வருகை பரவலாக உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் டெல்லியில் வெள்ளிக்கிழமை காலையில் தேர்தல் ஆணையத்துக்குச் சென்று அதிமுக தலைமை விவகாரம் தொடர்பாக புகார் மனு அளித்துள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அவரது ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் இந்த புகார் மனுவை அளித்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மூவுக்கு ஆதரவு தெரிவிக்க மட்டுமே டெல்லி வந்துள்ளேன். வேறு எந்த நோக்கமும் இல்லை," என்று கூறினார்.
திடீரென பரவிய வதந்தி
இதேவேளை அதிமுக மூத்த தலைவரும் மக்களவை முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரையும் டெல்லி வந்தார். அவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே சமரசம் செய்வதற்காக கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் முனுசாமியுடன் சேர்ந்து இருவரையும் பல முறை சந்தித்துப் பேசியதில் தம்பிதுரை முக்கிய பங்காற்றினார்.
டெல்லியில் வெள்ளிக்கிழமை காலையில் நாடாளுமன்றம் அருகே உள்ள விஜய் செளக் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, தமது டெல்லி வருகை குறித்து விளக்கினார்.
"பாஜக மேலிட தலைவர் சி.டி. ரவியும் மாநில தலைவர் அண்ணாமலையும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து குடியரசு தலைவர் வேட்பாளராக போட்டியிடும் திரெளபதி முர்மூவுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கேற்ப, நாடாளுமன்ற அதிமுக குழு தலைவர் என்ற முறையில் நான் இங்கே வந்தேன்," என்று தம்பிதுரை கூறினார்.
மேலும், "திரெளபதி முர்மூ எனது வீட்டுக்கே வந்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். நான் கட்சியின் முழு ஆதரவும் அவருக்கு உண்டு என எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார் என அவரிடம் தெரிவித்தேன்," என்று தம்பிதுரை கூறினார்.
ஒரே அறையில் ஓபிஎஸ், தம்பிதுரை
மறுபுறம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டடத்தில் அறை எண் 074இல் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் முர்மூவை பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு ஓ.பன்னீர்செல்வம், அவரது மகனும் எம்.பியுமான ரவீந்திரநாத் உள்ளிட்டோர் இருந்தனர். அந்த அறைக்குள் தம்பிதுரை வந்தபோது அவரும் ஓ.பன்னீர்செல்வமும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். அதன் பிறகு இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.
அந்த அறைக்குள் பிரதமர் நரேந்திர மோதி வந்தபோது பன்னீர்செல்வமும் தம்பிதுரையும் வணக்கம் தெரிவித்தனர். இருவருக்கும் தனித்தனியாக பதில் மரியாதை செலுத்தாமல் நரேந்திர மோதி நகர்ந்து சென்றார். அமித்ஷா, ராஜ்நாத் சிங் புன்னகை மட்டும் செய்தனர்.
பிறகு குடியரசு தலைவர் தேர்தலை நடத்தும் பொறுப்பு அதிகாரியான மாநிலங்களவை செகரட்டரி ஜெனரல் அறைக்குச் சென்றனர்.
அங்கு முதல் வரிசையில் திரெளபதி முர்மூ, அவர் அருகே பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக ஆகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் இருந்தனர். இரண்டாம் வரிசையில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஓ.பன்னீசெல்வம், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர், குஜராத் முதல்வர் பூபேந்தர் படேல், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங், முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் இருந்தனர். இரண்டாம் வரிசையில் பன்னீர்செல்வத்துக்கு பக்கத்தில் அமராமல் ஓர் இடம் விட்டே தம்பிதுரை அமர்ந்திருந்தார்.
பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்காத ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் விஜய்சாய் ரெட்டி, பிஜூ ஜனதா தளம் கட்சியின் சஸ்மித் பாத்ரா உள்ளிட்டோரும் திரெளபதி முர்மூவுக்கு ஆதரவாக வந்திருந்தனர். கடைசி வரிசையில் ரவீந்திரநாத் எம்.பி இருந்தார்.
திரெளபதி முர்மூவின் வேட்பு மனு தாக்கல் நிகழ்வு முடிந்த பிறகு, ஓப.ன்னீர்செல்வத்திடம் சென்ற தம்பிதுரை, பிரதமர் நரேந்திர மோதியை மரியாதை நிமித்தமாக சந்திக்குமாறு அறிவுறுத்தினார். ஒரு துண்டுச்சீட்டில் பிரதமரை சந்திக்க விரும்புவதாக அவரது தனிச்செயலரிடம் கொடுக்குமாறு தம்பிதுரை கூறினார். ஆனால், முறைப்படி நேரம் பெறாமல் பிரதமரை சந்திப்பது சரியாக இருக்காது என்று கூறி அந்த யோசனையை நிராகரித்தார் பன்னீர்செல்வம்.
ஓபிஎஸ் உடன் திரெளபதி சந்திப்பு
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தமது மகனும் எம்.பியுமான ரவீந்திரநாத்தின் எம்.பி வீட்டுக்குச் சென்றார். அங்கு ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க திரெளபதி முர்மூ வந்தார். அவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அழைத்து வந்து ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத், ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.
டெல்லி வந்துள்ள பன்னீர்செல்வம் மீண்டும் சென்னை திரும்புவதற்கான விமான இருக்கை முன்பதிவு எதையும் செய்யவில்லை.
இதற்கிடையே, பிரதமரின் அலுவலகத்தில் அவரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் சார்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோதி வரும் ஞாயிற்றுக்கிழமை மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாக ஜெர்மனி செல்லவுள்ளார். அதனால், நாளை மாலைக்குள் நரேந்திர மோதி நேரம் ஒதுக்கினால் மட்டுமே, அவரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு அதிமுகவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரு அணிகளாக ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டபோது இருவரையும் பிரதமர் நரேந்திர மோதி தலையிட்டு சமாதானப்படுத்தி இரு அணிகள் இணைந்து செயல்பட காரணமாக இருந்தார்.
டெல்லியில் முகாமிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டணி கட்சித் தலைவர் என்ற முறையில் பிரதமர் நரேந்திர மோதிக்கு பின்னால் இருக்கும் வகையில் அந்தஸ்து வழங்கப்பட்டது. இதை சுட்டிக்காட்டும் ஓபிஎஸ் ஆதரவு அதிமுக நிர்வாகிகள், டெல்லியில் பாஜக மேலிட தலைவர்களிடம் இப்போதும் ஓ.பன்னீர்செல்வத்துக்கே ஆதரவு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்