You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதியுடன் ஸ்டாலின் 17இல் சந்திப்பு: டெல்லி அரசியலில் என்ன நடக்கிறது?
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை இரவு டெல்லி வரவிருக்கிறார். சென்னையில் கடந்த மாதம் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில், பிரதமர் டெல்லிக்கு திரும்பிய இரு வாரங்களில் முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு வரவிருப்பது அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது.
இந்திய குடியரசு தலைவராக திரெளபதி முர்மூ ஜூலை 25ஆம் தேதியும், குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் ஆகஸ்ட் 11ஆம் தேதியும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு முதல் முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு வரவிருப்பதால், இரு தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக ஸ்டாலின் சந்திக்க அவர் டெல்லி வருவதாக அறிய முடிகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரின் அலுவலகத்தில் இருந்து குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் அலுவலகத்துக்கு நேரம் கேட்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் ஒரே நாளில் முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளனர். இதன்படி புதன்கிழமை காலையில் 10.30 மணிக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரும், காலை 11.30 மணிக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவும் தமிழ்நாடு முதல்வரை சந்திக்க நேரம் கொடுத்துள்ளனர்.
இந்த சந்திப்புகளின் தொடர்ச்சியாக தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்கும்போது, காவிரி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கின் நிலைமை தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தக்கூடும் என்றும் தெரிய வந்துள்ளது.
இதேபோல புதன்கிழமை மாலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி அலுவலகமும் பிரதமரை அவரது வீட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கியுள்ளது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்க ஆகஸ்ட் 17,18,19 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒன்றில் நேரம் ஒதுக்கும்படி தமிழ்நாடு அரசிடம் இருந்து பிரதமர் அலுவலகத்திடம் கேட்கப்பட்டிருந்தது. இது குறித்து பிரதமர் மோதியின் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றபோது, தன்னை ஸ்டாலின் அவர் விரும்பிய தேதியில் விரைவாகவே சந்திக்க நேரம் ஒதுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியதாக அவரது அலுவலக வட்டாரங்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தன.
நெருக்கம் காட்டும் ஸ்டாலின், மோதி
கடந்த மாதம் சென்னை செஸ் ஒலிம்பியாட் நிகழ்வின்போது மேடையில் அருகருகே அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்வையிட்ட பிரதமரும் முதல்வரும் அரசியல் கசப்புணர்வுகளுக்கு மத்தியிலும் மிகவும் நெருக்கமான முறையில் நட்புறவைப் பரிமாறிக் கொண்டது பலரது புருவங்களை உயர்த்தியது.
காரணம், அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்தும் அவரது ஆளுகையை போற்றியும் பிரதமர் நரேந்திர மோதி கருத்து வெளியிட்டார். தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்ட பிறகு 'மத்திய அரசு' என்பதை 'ஒன்றிய அரசு' என்றே அழைக்கும் வழக்கத்தை அவரும் அவரது அமைச்சரவை சகாக்கள், திமுக நிர்வாகிகள் கொண்டிருந்தனர்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்ற ஒலிம்பியாட் நிகழ்வில் 'இந்திய பிரதமர்', 'இந்திய அரசு', போன்ற பதங்களை ஸ்டாலின் பயன்படுத்தியது, அவர் இதுநாள் வரை கொண்டிருந்த ஒன்றியம் தொடர்பான வார்த்தை பயன்பாட்டு முறையில் இருந்து விலகுகிறாரோ என்ற விவாதங்களை தூண்டின.
சமூக ஊடகங்களில், அரசியல் ரீதியாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன் தமிழ்நாட்டில் ஆளும் திமுக நெருங்கிச் செல்வதாகவும் சிலர் சந்தேகம் எழுப்பினர்.
இந்த நிலையில், சென்னை ஒலிம்பியாட் துவக்க நிகழ்வில் பிரதமருடன் கலந்து கொண்ட பின்னர் அடுத்த சில நாட்களிலேயே கேரள நாளிதழான மலையாள மனோரமா நிறுவனத்தின் மாநாட்டில் காணொளி காட்சி மூலம் பங்கேற்றுப் பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது, "திமுகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாட்டில் கூட்டணியில் இருக்கிறீர்கள். பினராயி விஜயனின் அரசியலையும், ஆட்சியையும் எப்படி பார்க்கிறீர்கள்?" என்று முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி கேட்கப்பட்டது.
சர்ச்சைக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி
அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், "எங்களுடைய இரு கட்சிகளின் உறவு வெறும் தேர்தல் கூட்டணிக்கானது அல்ல. அது ஒரு கொள்கை கூட்டணி. லட்சியக் கூட்டணி. எனவே நாங்கள் இணக்கமாகவே இருக்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திமுக ஆட்சிக்கு தேவையான, ஆரோக்கியமான ஆலோசனைகளை சிபிஎம் கட்சித் தலைவர்கள் அவ்வப்போது எங்களுக்கு அறிக்கைகளாக கொடுக்கிறார்கள். தொலைபேசி மூலமாக எங்களுக்கு சொல்கிறார்கள். ஏன்? நேரடியாகவே எங்களை பார்த்து பிரச்னைகளை சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் நானும் சில விஷயங்களை அவர்களோடு கலந்து பேசியே செய்கிறேன். அதையும் தாண்டி அவர்களுடைய கருத்துகளை அவர்களின் அதிகாரபூர்வ நாளேடான தீக்கதிர் பத்திரிகைகளில் அரசின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறார்கள். அதனை நாங்கள் உடனடியாக சரி செய்கிறோம். ஆக, எங்கள் கொள்கை கூட்டணி ஆரோக்கியமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது தொடரும்" என்றார்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் பாஜகவுடன் திமுக எதிர்காலத்தில் கைகோர்க்குமோ என்று வலுத்து வந்த சந்தேகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக கருதப்பட்டது.
இந்த நிலையில், காஷ்மீரில் தீவிரவாதிகள் உடனான சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணன் சமீபத்தில் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டபோது, அங்கு அஞ்சலி செலுத்த வந்த பாஜகவினருக்கும் அரசு சார்பில் அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் பிறகு, விமான நிலையத்தை விட்டு வெளியே அமைச்சர் பிடிஆர் தனது காரில் சென்றபோது அதன் மீது செருப்பு வீசி பாஜகவினர் எதிர்ப்பை பதிவு செய்தனர். அந்த சம்பவத்துக்குப் பரவலான கண்டனங்கள் கிளம்பின.
இதற்கிடையே, பல்வேறு குற்றச்செயல்கள் விவகாரத்திலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் கூறி சில இடங்களில் பாஜகவைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதன் உச்சமாக, திமுகவில் இருந்து சில வருடங்களுக்கு முன்பு விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து மதுரை நகர் மாவட்ட தலைவராக இருந்த சரவணன், மதுரையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து மன்னிப்பு கேட்டார்.
பிடிஆரின் வாகனம் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தால் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் பாஜக மத அரசியல் செய்வது தனக்குப் பிடிக்கவில்லை என்றும் கூறி அந்த கட்சியில் இருந்து விலகுவதாக சரவணன் அறிவித்தார்.
இது பாரதிய ஜனதா கட்சிக்கு பின்னடைவாக கருதப்பட்டாலும், அரசியலில் கட்சி மாறி செல்வதெல்லாம் அவரவர் விருப்பம் என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை கூறினார்.
இத்தகைய சூழலில்தான் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் அமைந்துள்ளது. மாநில அளவில் அண்ணாமலை தலைமையில் உள்ள கட்சியினருக்கும் ஆளும் திமுகவினருக்கும் இடையே கசப்பான உணர்வு இருந்தபோதும், மத்தியில் ஆட்சியில் உள்ள தலைமையுடன் நெருக்கமாக இருக்கவே திமுக தலைமை விருப்பம் தெரிவித்து வருகிறது.
இது குறித்து திமுகவின் டெல்லி விவகாரங்களை கவனித்து வரும் அக்கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த தலைவரிடம் கேட்டதற்கு, "மாநிலத்தில் உள்ள அரசும் மத்தியில் உள்ள அரசும் எதிரும் புதிருமாக இருப்பதால் யாருக்கும் நன்மை இல்லை. தற்போது தமிழ்நாடு அரசின் அணுகுமுறை மாநில நலன்கள் சார்ந்ததாக உள்ளது. இரு அரசுகளும் நட்புடன் இருப்பது அரசியல் உறவை வலுப்படுத்துவதாகாது. அது மாநில வளர்ச்சியை உள்ளடக்கியது. அந்த கண்ணோட்டத்தில்தான் முதல்வர், பிரதமருடனான உறவை பார்க்க வேண்டும்," என்று கூறினார்.
இதையடுத்து முதல்வரின் டெல்லி வருகை தொடர்பாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையிடம் கேட்டோம். "முதல்வர் டெல்லி செல்வது பற்றி எனது கவனத்துக்கே வரவில்லை. தெரிந்தால் தானே அது பற்றி கருத்து சொல்ல முடியும்," என்று கூறினார் அண்ணாமலை.
நீட் விலக்கு மசோதாவை வலியுறுத்துவாரா முதல்வர்?
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மூவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேச திட்டமிட்டிருந்தாலும், இந்த சந்திப்பின்போது தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவரின் பரிசீலனையில் இருப்பதால் அதை விரைவாக பரிசீலிக்கும்படி ஸ்டாலின் திரெளபதி முர்மூவை கேட்டுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக இந்திய உள்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு இந்திய குடியரசு தலைவர் மாளிகையின் செயலகம் சில விளக்கங்களை கேட்டுள்ளதாகவும் அதன் பேரில் உரிய பதிலை தமிழ்நாடு அரசும் மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறது. எனவே இந்த விவகாரத்தை கவனிக்கும்படி ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் திரெளபதி முர்மூவை சந்திக்கும்போது வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
வழக்கமாக டெல்லிக்கு வரும் தமிழ்நாடு முதல்வருடன் சில அமைச்சர்கள், கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் வருவர். ஆனால், இம்முறை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் மட்டுமே டெல்லிக்கு வருகின்றனர். இந்த இருவர் மட்டுமே பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பிபிசி தமிழுக்கு தெரிய வந்திருக்கிறது.
அண்ணாமலைக்கு முக்கியத்துவம் குறைகிறதா?
இது ஒருபுறமிருக்க சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை அவரது மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார். இதன் பிறகு தமது வீட்டுக்கு திரும்பியதும் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியிடம் ஆளுநருடனான சந்திப்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "நாங்கள் அரசியல் பேசினோம். அதன் விவரத்தை சொல்ல முடியாது என்றார்.
அதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 7ஆம் தேதி டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற அம்ரித் மகோத்சவ் விருந்தோம்பல் நிகழ்ச்சிக்கு விருந்தினராக ரஜினிகாந்த் அழைக்கப்பட்டிருந்தார். அதையொட்டி டெல்லி சென்ற ரஜினியிடம் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கிய அறிவுரையின்படியே அவர் தமிழ்நாடு ஆளுநரை சென்னையில் சந்தித்ததாக தெரிய வந்துள்ளது.
இந்த இரு நிகழ்வுகளும் மாநில தலைவர் என்ற முறையில் அண்ணாமலையின் கவனத்துக்கு வராமலேயே நடந்ததால் அவரையும் மீறி டெல்லி மேலிடம் தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளில் பிறர் மூலம் காய்களை நகர்த்துவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் ஆளுநர் மாளிகையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி மாலையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அந்த நிகழ்வில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என்ற வரிசையைக் குறிக்கும் பலகையில் பிரத்யேகமாக பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது புதிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. மேலும் அந்த பலகையில் பாரதிய வித்யா பவனை குறிக்கும் பிவிபி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசியல் சார்பாற்றவராக இருக்க வேண்டிய ஆளுநர், தமது இல்லத்தில் நடைபெறும் அரசு முறையிலான தேநீர் விருந்தில் குறிப்பிட்ட கட்சியின் பிரமுகர்கள் என்ற பலகையை இடம்பெறச் செய்யலாமா என்று பலரும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை. அவரது கட்சியின் சார்பில் இரண்டு துணைத் தலைவர்கள் பங்கேற்றதாக தெரிகிறது. இவர்களைத் தவிர ஆளுநருக்கு அறிமுகமான முக்கிய பிரமுகர்கள் சிலரும் இந்த நிகழ்வில் அவரது விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்