You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முதலமைச்சர் ஸ்டாலின் சுதந்திர தின உரை: "விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்"
இந்தியாவின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் தேசிய கொடியேற்றி உரையாற்றினார் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.
இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு 'தகைசால் தமிழர் விருது' வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அதை பெற்றுக் கொண்ட நல்லகண்ணு, விருதுடன் சேர்த்து அளிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளித்தார்.
முதலமைச்சரின் உரையிலிருந்து சில முக்கிய தகவல்கள்
- இந்திய துணை கண்டத்தில் விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான். அடிமைப்படுத்துதல் என்று தொடங்கியதோ அன்றைய நாளே விடுதலை குரலை எழுப்பிய மண், தமிழ் மண்
- உலக விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது முதல், ஒரே ஒரு இளைஞர் கூட போதைப் பொருளால் பாதிக்கப்பட கூடாது என்பது வரையிலான முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.
- இந்திய மக்கள் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒருதாய் மக்களாக உணர்ந்து பாடுபட்டதால்தான் இந்த சுதந்திரம் கிடைத்துள்ளது. ஒற்றுமையால் கிடைத்த சுதந்திரத்தை அதே ஒற்றுமையால்தான் காக்க முடியும். தேசிய கொடியின் நிறம் மூன்றாக இருந்தாலும் மூன்றும் ஒரே அளவோடுதான் ஒன்றிணைந்து இருக்கின்றன.
- வெளிப்புற சக்திகளின் தாக்குதலை வெல்ல வேண்டுமானால் உள்புற ஒற்றுமை என்பது அவசியம். இதுதான் உயிரை கொடுத்து இந்திய விடுதலைக்காக பாடுபட்ட உத்தமர்களுக்கு நாம் கொடுக்கும் உண்மையான அஞ்சலி.
- அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் துணையோடு ஒன்றிய இந்தியாவை வலுப்படுத்துவோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்.
- உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க அரசு சார்பில் ரூபாய் 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். கடந்த ஓர் ஆண்டு காலத்தில் தமிழகம் பல்துறை வளர்ச்சி பெற்றுள்ளது.
- வேளாண்மைத் துறைக்கு கொடுத்த முக்கியத்துவத்தின் மூலமாக பாசன பரப்பு அதிகரித்துள்ளது.
- இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் குழந்தைகள் கல்வியை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
- செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை உலகமே வியக்கும் அளவிற்கு நடத்தியுள்ளோம். இதேபோல விளையாட்டுத் துறையில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- 2500 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்கள் இந்த ஓராண்டு காலத்தில் மீட்கப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்