You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிடிஆர் வாகனம் மீது செருப்பு வீசியதாக 3 பெண்கள் கைது - அடைக்கலம் தந்ததாக காவலர் மீது சர்ச்சை புகார்
மதுரையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்த கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தெய்வானை, சரண்யா, தனலட்சுமி ஆகிய மூன்று பேரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த மூன்று பெண்களும் தலைமறைவாக இருப்பதற்கு மதுரை ஆயுதப்படையைச் சேர்ந்த ஒரு காவலர் உதவியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த காவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகல் முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக, கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு பாஜகவினர் சிலர் இருப்பதைப் பார்த்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பிய பிறகு அவருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த நிலையில், மரஞ்சலி நிகழ்வு முடிந்த பிறகு விமான நிலைய வளாகத்தில் இருந்து தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்த வாகனம் மீது போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாஜகவினர் செருப்பு வீசினர். அதில் ஒரு காணொளி பிடிஆர் வாகன கண்ணாடி மீது விழும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாயின.
அந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ரயில் நிலையத்தில் நின்ற ரயில் எஞ்சின் மீது திமுகவினர் ஏறி மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு ரயில் சேவை சில நிமிடங்களுக்கு பாதிக்கப்பட்டது.
சனிக்கிழமை நண்பகலில், அமைச்சரின் வாகனத்தை பாரதிய ஜனதா கட்சியினர் வழிமறித்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் 100க்கும் மேற்பட்ட திமுகவினர், மதுரை ரயில் நிலையத்தில் காவல்துறையினர் போட்டிருந்த தடுப்புகளைத் தாண்டி ரயில் நிலையத்துக்குள் நுழைந்தனர்.
ரயில் நிலையத்தில் திருச்செந்தூர் முதல் பாலக்காடு வரை செல்லக்கூடிய ரயிலின் எஞ்சின் மீது திமுக தொண்டர்கள் கைகளில் திமுக கொடியுடன் ஏறி பாஜகவினருக்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து அங்கு காவல்துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக அவர்கள் போராட்டம் நடத்தினர். அதன் பிறகு ரயிலில் இருந்து கீழே இறங்கிய அவர்கள் கலைந்து சென்றனர்.
பிண அரசியல் செய்வது யார்?
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர், "தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு ஆளாகி இறந்த தமிழகத்தைச் சேர்ந்த வீரரின் உடல் எப்போது மாநிலத்துக்கு வரும் என்பதை தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில் தினமும் தென் பிராந்திய ராணுவ தளபதியோடு பல முறை தொடர்பில் இருந்து கேட்ட பிறகு இங்கு வந்து மரியாதை செய்தோம். வந்த இடத்தில் பிணத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்த சாக்கடை அரசியல்வாதிகள் பற்றி எல்லாம் பேச இது சரியான இடமில்லை. யார் பிணத்தை வைத்து அரசியல் செய்தார்கள் என்பதெல்லாம் உங்களுக்கே தெரியும். மற்றவை நாளை பேசப்படும்," என்று பதிலளித்தார்.
முன்னதாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லட்சுமணன் ஜம்மு காஷ்மீரின் ரஜெளரியில் தீவிரவாதிகளுடனான சண்டையில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான திருமங்கலம் அருகே உள்ள டி. புதுப்பட்டிக்கு கொண்டு செல்லப்படுவதற்காக விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டது.
அப்போது அங்கு அஞ்சலி செலுத்துவதற்காக மதுரையில் இருந்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக நிர்வாகிகள் சிலருடன் வந்திருந்தார். மறுபுறம் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை மற்றும் அவரது கட்சியினரும் வந்திருந்தனர்.
விமான நிலைய வளாகத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், நகர மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை விமான நிலைய இயக்குநர் பாபுராஜ், மதுரை காவல் ஆணையர் செந்தில் குமார் உள்ளிட்டோரும் விமான நிலையத்துக்கு வந்து லட்சுமணின் உடல் இடம்பெற்ற சவப்பெட்டிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, அரசு தரப்பில் சம்பிரதாய முறைப்படி லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நடைமுறை நடைபெற்றது. அதில் பாஜக நிர்வாகிகளும் மலர்வளையம் வைக்க விரும்புவதாக தெரிவித்தனர்.
பாஜகவினர் வாக்குவாதம்
ஆனால், அரசாங்க நிகழ்வு என்பதால் சம்பிரதாய நடைமுறை பட்டியலில் (ப்ரோட்டோகால் லிஸ்ட்) இடம்பெற்ற மிக முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள் மட்டுமே முதலில் அனுமதிக்கப்படுவர் என்று அதிகாரிகள் கூறியுள்ளதாகத் தெரிகிறது. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனும் இதே கருத்தை கூறியது அங்கிருந்த பாஜகவினர் காதில் விழுந்ததாகவும் அதைத்தொடர்ந்து அவர்கள் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்களுடன் பேசுவதற்காகச் சென்ற அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை திமுகவினர் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து, விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமைச்சரின் கார் வெளியேவந்தபோது, சாலையில் இருந்த சில பாஜகவினர் அமைச்சருக்கு எதிராக குரல் எழுப்பினர். அதில் இருந்த சிலர் அமைச்சரின் வாகனம் மீது காலணிகளை வீசினர். அவரது காரை வழிமறிக்க முயன்ற சிலரை போலீஸார் அப்புறப்படுத்தினர்.
அப்போது அங்கிருந்த பாஜகவினர், 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷங்களை எழுப்பிய காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி மூலம் பார்க்க முடிந்தது.
ஐந்து பேர் கைது
இந்த நிலையில், நடந்த சம்பவம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 506 (குற்றவியல் மிரட்டல்), 341 (முறையற்று தடுத்தல்), 355 (தாக்குதல் அல்லது குற்றம் இழைக்க பலத்தை பயன்படுத்துதல்) மற்றும் 34 (ஒரே நோக்குடன் பலர் கூட்டு சேருதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் விமான நிலையத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட லட்சுமணனின் உடல், அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அரசியல் தலைவர்கள் கண்டனம்
இந்த நிலையில், அமைச்சரின் கார் மீது காலணி வீசிய சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
கரூர் தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கண்டித்துள்ளார். "அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை தாக்க முயன்ற தமிழக பாஜகவிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறேன். பாஜகவின் இந்த வன்முறை அரசியல் ஆபாசமானது. ஒரு மாநில அமைச்சரிடமே இவ்வளவு வன்முறையில் பாஜகவினர் ஈடுபடுவார்கள் என்றால் சாதாரண மக்களின் கதி என்ன? தமிழக அரசு பாஜகவின் இந்த வன்முறை அரசியலை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.
அமைச்சரின் வாகனம் மீதான தாக்குதல் முயற்சி அநாகரிகமானது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். பாஜகவினரின் இதுபோன்ற செயலை எதிர்க்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
அண்ணாமலை கருத்து
இதேவேளை, வன்முறையை கையில் எடுக்கும் வகையில் தாம் கட்சியை நடத்தவில்லை என்றும் தவறாக பேசிய மாநில அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
காஷ்மீரில் என்ன நடந்தது?
மதுரையைச் சேர்ந்த தர்மராஜ், ஆண்டாள் தம்பதியின் இரட்டையர் பிள்ளைகளில் ஒருவரான லட்சுமணன், பி.காம் பட்டப்படிப்பு முடித்துள்ளார். 2019இல் அவர் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.
கடந்த வியாழக்கிழமை ஜம்மு காஷ்மீரின் ரஜெளரியில் இவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் இருந்த சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி விட்டு உள்ளே நுழைய முற்பட்டனர். அப்போது அவர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தில் மதுரையைச் சேர்ந்த லட்சுமணன், ராஜஸ்தானைச் சேர்ந்த சுபேதார் ராஜந்திர பிரசாத், ஹரியாணாவைச் சேர்ந்த மனோஜ் குமார் ஆகியோர் உயிரிவந்தனர். ஆறு வீரர்கள் காயம் அடைந்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்