கோயம்புத்தூரில் திமுக - பாஜக போஸ்டர் யுத்தம்: நள்ளிரவு மோதலுக்குக் காரணம் என்ன?

கோவை அவினாசி சாலை ஜென்னி கிளப் அருகே மேம்பால தூணில் போஸ்டர் ஒட்டுவதில் திமுகவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது.

சமீபத்தில், கோவை மாநகரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் அனைத்து கட்சி கூட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என வலியுறுத்தி இருந்தார். ஏற்கெனவே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் 10 நாட்களுக்குள் அகற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில், திமுக சார்பாக தமிழக அரசின் சாதனைகள் குறித்த போஸ்டர்களை திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் ஒட்டியிருந்தார். இதனையடுத்து, திமுகவினர் மட்டும் தொடர்ந்து போஸ்டர்களை ஒட்டுவதாகவும், சுதந்திர தினத்திற்காக போஸ்டர் ஒட்டச்சென்ற பாஜகவினரிடம் திமுகவினர் அராஜகமாக நடந்து கொண்டதாக பீளமேடு காவல் நிலையத்தில் நேற்று புகாரளிக்கப்பட்டு இருந்தது.

முன்னதாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கோவை ஆட்சியர் மாநகரத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை இன்று இரவிற்குள் அகற்ற வேண்டும் என ஆட்சியருக்கு கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் போஸ்டர்கள் அகற்றப்படாததால், நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர், திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், பிரதமர் நரேந்திர மோதி தந்த பணத்தில் வீண் விளம்பரம் தேவையா, அது மோதியின் பணம் என கண்டன கோசங்களை எழுப்பினர்.

இதனையடுத்து, திமுகவினர் ஒட்டிய பிளக்ஸ்க்கு பாதுகாப்பு அளிக்க காவலர்கள் நிறுத்தப்பட்டனர்.

ஏற்கெனவே மாநகராட்சி பகுதிகளில் போஸ்டர் ஒட்டிய மூன்று பேர் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்நிலையில் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக், திமுக அரசின் சாதனைகளை பிளக்ஸ் பேனராக புதிதாக கட்டப்பட்டு வரும் அவினாசி மேம்பால தூண்களில் ஒட்டியுள்ள நிலையில், மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகம் இவர் மீது எடுக்கவில்லை என்று பாஜக குற்றச்சாட்டியுள்ளார்.

மீண்டும் போராட்டம் நடத்த முடிவு

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 30 பேரை நேற்றிரவு காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்ய பாஜகவினர் வலியுறுத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு கோட்டாட்சியரிடம் பாஜகவினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இரு நாட்களுக்குள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அனைத்து போஸ்டர்களும் எடுக்கப்படும் என கோட்டாட்சியர் பாஜகவினரிடம் தெரிவித்தார். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தில், உடனடி நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் கோவை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க உள்ளதாக பாஜகவின் கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கூறியுள்ளார்.

மேலும், வருகின்ற 16ஆம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், மாநிலத்தலைவர் அண்ணாமலையை வரவழைத்து போராட்டம் நடத்தப்போவதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: