பிடிஆர் விவகாரம், எச்சரிக்கும் முதல்வர், சர்ச்சையில் பாஜக: என்ன சொல்கிறார் அண்ணாமலை?

மதுரையில் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வாகனம் மீது பாஜகவினர் காலணி வீசிய சம்பவத்தில் முதல்வரால் எச்சரிக்கப்பட்டது, பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் திருவாரூர் பாஜக தலைவர் கைது செய்யப்பட்டது, தருமபுரியில் பூட்டை உடைத்த விவகாரத்தில் மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கைது செய்யப்பட்டது என தொடர் சர்ச்சைகளில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பெயர் அடிபட்டிருக்கிறது.
கடந்த 48 மணி நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பிரிவு எதிர்கொண்ட இந்த சர்ச்சை தொடர்பாக ராமேஸ்வரம் வந்த பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டனர். ஒவ்வொரு விவகாரத்திலும் தமது கட்சியின் நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தினார்.
முன்னதாக, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் அம்ரித் மஹோத்சவ் நிகழ்வின் அங்கமாக ஆகஸ்ட் 13 முதல் 15ஆம்தேதி வரை நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில் தேசிய மூவர்ண கொடியை ஏற்ற பிரதமர் விடுத்த வேண்டுகோளின்படி, ராமேஸ்வரத்தில் மீனவர்களுடன் படகுகளில் சென்று நடுக்கடலில் தேசிய கொடியை பறக்க விடும் நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொண்டார்.
நடுக்கடலில் படகில் இருந்தபடி 'வந்தே மாதரம்' என அவர்கள் முழக்கமிட்டனர். இதைத்தொடர்ந்து கரைக்கு திரும்பிய அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அதன் விவரம்:
பல ஆண்டுகளாக கச்சதீவு பிரச்னையால் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படுவதை பார்க்கிறோம். தமிழ்நாட்டு மீனவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 2017, 2018ஆம் ஆண்டுகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த இந்திய படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்தார்.
இன்றைய தேதியில் இலங்கை சிறைகளில் தமிழக மீனவர்கள் யாரும் இல்லை என்ற அளவிற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மாவட்ட மீனவர்கள் 9 பேரை விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை வசம் உள்ளன. அந்த படகுகளை முழுமையாக மீட்க பிரதமர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார் அண்ணாமலை.
கச்சத்தீவால் இலங்கைக்கு பயனில்லை

கச்சத்தீவு மீட்பு நடவடிக்கை குறித்து கேள்விக்கு, அந்தத்தீவு தொடர்பாக 1972ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் 6 ஷரத்தின்படி கச்சதீவுக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் செல்லலாம். படகுகளை பழுதுபார்க்கலாம். மீன்பிடி வலைகளை உலர்த்தலாம். ஆனால் அடுத்த ஒப்பந்தத்தில் எந்தவொரு இந்திய மீனவரும் கச்சத்தீவுக்கு செல்ல கூடாது என்றும் அது இலங்கைக்கு மட்டுமே அது சொந்தமானது என்றும் இலங்கை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தம் முந்தைய ஆட்சியாளர்கள் செய்த தவறு. இரண்டாவது ஒப்பந்தத்தின் ஷரத்தை மாற்றச் சொல்லி மீண்டும் பாஜக நீதிமன்றம் செல்லும். கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து இந்தியா திரும்பப் பெற வேண்டும் என இந்திய பிரதமருக்கு பாஜக அகில இந்திய தலைவர் உள்பட கட்சியில் உள்ள அனைவரும் கோரியுள்ளோம். கச்சத்தீவால் இலங்கைக்கு எந்தவித பலனும் கிடையாது என்றார் அண்ணாமலை.
பிடிஆர் சர்ச்சை: சரவணன் நீக்கம் ஏன்?
கடந்த சனிக்கிழமை இரவு பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவராக இருந்த சரவணன், பாஜக மதவாத அரசியல் செய்வதாகவும் சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பதாகவும் கூறி பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
அது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "கட்சியில் இருந்து வெளியே செல்லும் சகோதர, சகோதரிகளை நான் எப்போதும் தவறாக பேசியது இல்லை. சில காரணங்களுக்காக வெளியே செல்கின்றனர் ஆயிரம் புதியவர்கள் கட்சியில் சேருகின்றனர். பெரிய தலைவர்கள் கூட வெவ்வேறு கட்சிகளில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து விட்டு பிறகு கட்சி மாறுகிறார்கள்.
இன்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் வீட்டுக்குச் அந்த குடும்பத்தில் இருந்தவர்களுடன் காலை உணவு சாப்பிட்டேன். அதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன். நான் மாநில தலைவராக இருந்து பல மேடைகளில் பேசியிருக்கிறேன். இந்தியா என்பது ஒருமைப்பாடான நாடு இதில் முஸ்லிம்களை எதிர்த்தும் கிறிஸ்தவர்களை எதிர்த்தும் பாஜக எப்போதும் அரசியல் செய்யாது. அனைவரும் சேர்ந்து ஒன்றாக சென்றால் தான் ஒருமைப்பாட்டை நிலைப்படுத்த முடியும்.
இன்று நான் சென்ற படகை கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் இயக்கினார்கள் எல்லோரையும் அனுசரித்து ஒன்றாகச் செல்ல வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கம். இந்துத்துவா என்பது எல்லோரும் ஒருமைப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதைத்தான் உணர்த்துகிறது. நான் எங்கும் கிறிஸ்தவர்களை, முஸ்லிம்களை பற்றி தவறாக பேசியதில்லை.
சரவணனுக்கு வாழ்த்து அனுப்பினேன்

மதுரை புறநகர் மாவட்ட தலைவர் ஆக இருந்த சரவணன் கட்சியில் இருந்து விலகியது அவருடைய ஆசை. அதை தடுப்பதற்கு பாஜக தயாராக இல்லை. சரவணனுக்கு பதில் அடுத்த கட்ட தலைவர்கள் அந்த பொறுப்பை ஏற்க தயாராக இருக்கிறார்கள்.
பல ஆண்டுகளாக பாஜகவில் பல பேர் வந்து போயிருக்கிறார்கள். இன்று காலையில் நான் சரவணனுக்கு பெஸ்ட் விஷஸ் என வாழ்த்துச் செய்தி அனுப்பினேன். சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி பாஜக என்று சொன்னதால் மட்டுமே கட்சியில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கப்பட்டார் என்கிறார் அண்ணாமலை.
இதையடுத்து மதுரையில் சனிக்கிழமை தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசப்பட்ட நிகழ்வு முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டதா என செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேட்டனர். அதற்கு அவர், "மதுரையில் ராணுவ வீரர் லட்மணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற பாஜகவினரை நிதியமைச்சர் 'இவர்களுக்கு இங்கு வர என்ன உரிமை உள்ளது' என கேட்டார். அங்கு மிகவும் சூடான மனநிலையில் பாஜகவினர் இருந்தனர்.
செருப்பு வீசியதில் உடன்பாடு இல்லை
நான் அங்கு செல்லும் முன்பே எங்களுடைய கட்சியை சேர்ந்த சிலர், தமிழக நிதி அமைச்சரின் கார் மீது காலணிகளை வீசி விட்டனர். அந்த சம்பவமானது நடந்து இருக்கக் கூடாது என்பதே எனது கருத்து. பாஜகவின் சித்தாந்தத்தின்படி அந்த நிகழ்வு நடந்து இருக்கக் கூடாது. ஆனால் அமைச்சரின் பேச்சு அங்கிருந்த கட்சியினரை சூடான மனநிலைக்கு கொண்டு சென்றதன் எதிரொலியாக அப்படி நடந்துள்ளது.
பாஜகவினர் பொறுமை காக்க வேண்டும் இவ்வாறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்பதை தான் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். நேற்று தமிழக நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்ட நிகழ்வை பாஜக நிச்சயம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்றார் அண்ணாமலை.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்த விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதில் சிலர் சம்பவத்தில் தொடர்பு இல்லாதவர்கள். அவர்கள் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். சம்பவத்தில் தொடர்பு இல்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டம் என்று காவல்துறையினரை நான் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.
பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் கைது செய்யப்பட்டது குறித்து கேட்டதற்கு, "தவறு செய்தது உண்மை என்றால் அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்கும். சட்டம் அதன் கடமையைச் செய்யும். அது யார் தவறு செய்தாலும் பொருந்தும். அந்த வழக்கில் உரிய சாட்சியங்கள் இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என நானே நேரடியாக காவல்துறை உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன், என்றார் அண்ணாமலை.
இதற்கிடையே, பாஜக மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளது பற்றி தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக அண்ணாமலை கருத்து வெளியிட்டு உள்ளார். "அரசு அதிகாரிகளின் அனுமதியுடனேயே கே.பி. ராமலிங்கம் தருமபுரியில் உள்ள பாரத மாதா கோயிலில் உள்ள பாரத மாதா சிலைக்கு மாலை மரியாதை செலுத்தச் சென்றார். அங்கு சென்றபோது அனுமதி கொடுத்த அதிகாரிகள் அங்கு வரவில்லை. இதனால் அவர் அங்கே எதையும் சேதப்படுத்தாதவாறு உள்ளே சென்றார். ஆனால், அவரை காவல்துறை கைது செய்துள்ளது. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்," என்று ட்வீட்டில் கூறியுள்ளார் அண்ணாமலை.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














