மாதவிடாய் தேதி அட்டையை வீட்டு கதவில் மீரட் பெண்கள் தொங்க விடுவது ஏன்?

பட மூலாதாரம், SHAHBAZ ANWAR
- எழுதியவர், ஷாபாஸ் அன்வர்
- பதவி, பிபிசி இந்திக்காக
உத்தர பிரதேசத்தின் மீரட்டின் ஹாஷிம்புராவில் வசிக்கும் அல்ஃபிஷானின் வீட்டிற்கு உள்ளே ஒரு கதவில் மாதவிடாய் தேதியின் அட்டவணை தொங்க விடப்பட்டுள்ளது. அவருடைய அண்ணனும் அப்பாவும் கூட அதே வீட்டில் ஒன்றாக வசிக்கிறார்கள். அவர்களின் கண்களும் இந்த அட்டவணையை அவ்வப்போது பார்க்கும். ஆனால் இப்போது அது சாதாரணமாகிவிட்டது. அவர்கள் அதைப் பார்த்து விட்டு நகர்கிறார்கள்.
"பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. எரிச்சல், பலவீனம் மற்றும் பல பிரச்னைகள் இருக்கும். இந்த அட்டவணையை நான் வீட்டிற்குள் வைத்ததால், என் மாதவிடாய் எப்போது என்பது எல்லோருக்கும் தெரிகிறது. என்னை நானே கவனித்துக் கொள்ள ஆரம்பித்தேன். எனக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் வருகிறதா என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடிகிறது," என்று அல்ஃபிஷான் பிபிசியிடம் தெரிவித்தார்.
மீரட்டில் வசிக்கும் ஆலிமாவும் அத்தகைய ஓர் அட்டவணையை தனது அறையின் கதவில் ஒட்டியுள்ளார். ஆலிமாவின் வீட்டில் அண்ணன், தங்கை, அப்பா என மொத்தம் ஏழு பேர் இருக்கின்றனர். தற்போது ஆலிமாவின் மாதவிடாய் தேதி, அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிகிறது.
"நான் ஓர் ஆசிரியை. நான் வீட்டிற்கு வெளியே சென்று பணிபுரிகிறேன். அதனால் மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை நான் அறிவேன். மாதவிடாய் அட்டவணையை ஒட்டியபிறகு குறைந்த பட்சம் வீட்டில் உள்ள அனைவருக்கும் என் மாதவிடாய் தேதி தெரிவதால், அவர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். இது மிகவும் வசதியானதாகவும், இனிமையாகவும் உள்ளது,"என்று ஆலிமா கூறுகிறார்.

பட மூலாதாரம், SHAHBAZ ANWAR/BBC
இயக்கத்தால் ஏற்பட்ட மாற்றமா?
இன்றைய காலகட்டத்தில் மீரட்டில் பல்வேறு இடங்களில் சுமார் 65 முதல் 70 வீடுகளில் பீரியட் சார்ட்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் இவையெல்லாம் எப்படி திடீரென்று சாத்தியமானது, திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களும் இந்த அட்டவணையை தங்கள் வீடுகளின் பொது இடங்களில் எப்படி வைக்க துணிகிறார்கள்?. இந்த கேள்விக்கு 'செல்ஃபி வித் டாட்டர் அறக்கட்டளை' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சுனில் ஜக்லான் பதிலளிக்கிறார்.
"எங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பெண்களின் நலன்களுக்காக நாங்கள் பல பணிகளைச் செய்துள்ளோம். ஆனால் மாதவிடாய் அட்டவணையைப் பொருத்தவரை 2020 ஆம் ஆண்டு முதல் நாங்கள் வட இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய இடங்களில் செயலில் உள்ளோம்." என்று அவர் கூறினார்.
"எங்கள் அமைப்பு மகளிருக்கு கல்வி, சுகாதாரம், உரிமைகள் மற்றும் பொருளாதார ரீதியிலான சுதந்திரத்திற்காக பாடுபடுகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
" மாதவிடாய் காலகட்டங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். வீட்டில் இருக்கும் பெண் உறுப்பினர்களின் பிரச்சனைகளை நான் பார்த்திருக்கிறேன். எனவே இதற்காக நாம் ஏன் சிறப்பாக எதையாவது செய்யக்கூடாது என்று மனதில் தோன்றியது. அதன்பிறகுதான் சில சக மருத்துவர்களிடம் பேசி ஆலோசனை பெற்ற பிறகு பீரியட் சார்ட் இயக்கம் தொடங்கப்பட்டது,"என்று சுனில் ஜக்லான் தெரிவித்தார்.

பட மூலாதாரம், SHAHBAZ ANWAR/BBC
250 அட்டவணைகளில் 180 கிழிக்கப்பட்டன
மீரட்டில் பீரியட் அட்டவணையின் பிரசாரம், 2021 டிசம்பரில் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக நகரின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பள்ளி, கல்லூரிகளில் தொடர்பு கொண்டு மாணவிகளிடம் உரையாடல் நடத்தப்பட்டது.
"2021 டிசம்பரில் மீரட்டில் இந்த இயக்கத்தை தொடங்கினோம். பல மாநிலங்களிலும் பணிபுரிந்த 30-35 பெண்கள் எங்கள் குழுவில் இருந்தனர். நாங்கள் பெண்கள் பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள மாணவிகளைத் தொடர்புகொண்டோம். லாடோ பஞ்சாயத்து என்று அழைக்கப்படும் பஞ்சாயத்தில் சிறுமிகளை வரவழைத்தோம். வீடு, வீடாகவும் சென்றோம். அவர்களது மொபைல் எண்களை பெற்று வாட்ஸ்அப் குரூப்களையும் உருவாக்கினோம். பல இடங்களில் ஆண்களும் எங்களுக்கு உதவ முன்வந்தனர்,"என்று சுனில் ஜக்லான் கூறினார்.

பட மூலாதாரம், SHAHBAZ ANWAR/BBC
"நாங்கள் ஆரம்பத்தில் 250 பீரியட் அட்டவணைகளை வீடுகளில் உள்ள பெண்களுக்கு விநியோகித்தோம். ஆனால் எங்கள் குழு உறுப்பினர்கள் பின்னர் வீடுகளில் சுற்றிப் பார்த்தபோது, இந்த அட்டவணைகளை 65 முதல் 70 வீடுகளில் மட்டுமே பார்க்கமுடிந்தது. பெரும்பாலான வீடுகளில் இந்த அட்டவணைகள் கிழிக்கப்பட்டன அல்லது அவற்றை மாட்ட சிறுமிகள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் சில வீடுகளில் பெண்களின் மாதவிடாய் தேதிகளை அந்த வீட்டின் உறுப்பினர்கள் அறிந்திருப்பதில் நாங்கள் திருப்தி அடைகிறோம். அந்த பெண்களுக்கு அங்கு உதவி கிடைக்கிறது என்று நம்புகிறேன். விழிப்புணர்வு அதிகரிக்கும் போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்."
இந்த பீரியட் அட்டவணைகளுக்கு எல்லா பிரிவு மக்களிடையேயும் ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுகிறது என்றார் அவர்.
மாதவிடாய் அட்டவணையால் மகள்கள் ஆரோக்கியமாக இருப்பார்களா?
பீரியட் சார்ட் இயக்கத்தின் நோக்கம் பெண்களின் ஆரோக்கியத்தை கண்காணிப்பது ஆகும் என்று சுனில் ஜாகான் குறிப்பிடுகிறார்.
"பெண்களுக்கு மாதவிடாய் வரும் போது, அந்த நேரத்தில் அவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். எரிச்சல், பலவீனம், சோர்வு மற்றும் உடல்வலி மற்றும் வேறு சில அறிகுறிகள் உள்ளன. அந்த நேரத்தில் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களின் உதவி அவர்களுக்கு தேவை. அவர்களின் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.பல பெண்களுக்கு மாதவிடாய் சீராக இருப்பதில்லை. இந்த அட்டவணை மூலம் அது பற்றியும் தெரிய வருகிறது," என்று அவர் சுட்டிக்காட்டினார்.
"அட்டவணையில் மாதவிடாய் தேதியைக் குறிப்பிடும் பெண்களிடமிருந்து முழு ஆண்டுக்கான அட்டவணை பெறப்படும். மாதவிடாய் தேதிகளில் ஏதேனும் சீரற்றதன்மை கண்டறியப்பட்டால், அவர்களின் பட்டியல் அரசுக்கு அனுப்பப்படும். இதன் மூலம், ஆஷா சகோதரிகள் மற்றும் ஆங்கன்வாடி பணியாளர்களின் உதவியுடன் அத்தகைய பெண்கள் சிகிச்சை பெற முடியும்."
பல இடங்களில் எதிர்ப்பு, பெண்கள் பற்றி அநாகரீகமான கருத்துக்கள்
வட இந்தியாவின் பல மாநிலங்களில், சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் அட்டவணை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆன்லைன் லாடோ பஞ்சாயத்து நடத்தப்பட்டது. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பத்து நேரடி பஞ்சாயத்துகள் நடத்தப்பட்டன. இவை தவிர மேலும் பல பஞ்சாயத்துகள் ஆன்லைனில் செய்யப்பட்டன.

பட மூலாதாரம், SHAHBAZ ANWAR/BBC
"பல இடங்களில் எதிர்ப்பு காணப்பட்டது. பெண்கள், சிறுமிகள் குறித்து அநாகரீகமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் அவை புறக்கணிக்கப்பட்டன. இது தொடர்பாக எல்லா மதத்தலைவர்களின் உதவியும் நாடப்பட்டது. அவர்களில் பலர் முழு ஆதரவையும் அளித்தனர்,"என்றார் அவர்.
"ஆரம்பத்தில் தைரியம் இருக்கவில்லை, இப்போது பழகிவிட்டது"
வீடுகளுக்குள் பொது இடங்களில் மாதவிடாய் அட்டவணைகள் போடப்பட்டபோது பல பெண்கள் மற்றும் சிறுமிகள் மிகவும் சங்கடமாக உணர்ந்தனர்.
"நான் ஒரு இல்லத்தரசி. என் கணவரைத் தவிர, வீட்டில் மைத்துனர், மாமனார் மற்றும் பல ஆண் உறவினர்கள் அடிக்கடி வந்துபோவார்கள். பீரியட் சார்ட் பற்றித்தெரிந்தபோது ஆரம்பத்தில் அது எப்படி சாத்தியம் என்று யோசித்தேன். இதை என் கணவரிடம் விவாதித்த போது அவர் எனக்கு தைரியம் அளித்தார். அதன் பிறகு மாமியாரிடம் சொன்னேன். அவரும் சம்மதித்தார்,"என்று மீரட்டைச் சேர்ந்த திருமணமான பெண் ஆலியா பிபிசியிடம் தெரிவித்தார்.
பீரியட் சார்ட்டை பகிரங்கப்படுத்த்திய பிறகு குடும்ப உறுப்பினர்களிடம் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்று அவரிடம் வினவப்பட்டது. "ஆமாம். அதைப் பற்றி தெரியாதபோது அவர்கள் என்னைப்பற்றி அதிகம் கவலைப்படவில்லை. இப்போது என்னை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள்," என்று பதிலளித்தார்.
இது குறித்துப்பேசிய மற்றொரு பெண் மனீஷா, "இது நமது உடல் நலம் சம்பந்தப்பட்டது. குடும்பத்தில் உள்ள அனைவரும் மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் பெண்கள் உடல் உபாதைகள் காரணமாக சண்டையிடுவார்கள். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சிடுசிடுப்பு ஏற்படும் என்று தெரியவரும்போது சுற்றி உள்ளவர்கள் அவர்கள் மீது அனுதாபம் காட்டுவார்கள். அவர்களின் கடுமையான தொனியை புறக்கணிப்பார்கள்," என்றார்.
'நான் என் மனைவியிடம் சொன்னேன், அட்டவணையை கதவில் மாட்டு'
மீரட்டின் ஹாஷிம்புராவில் வசிக்கும் ஃஜுபைர் அகமது, மாதவிடாய் அட்டவணையை வெளிப்படையாக ஆதரிக்கிறார்.அவர் சலூன் கடை நடத்தி வருகிறார். " மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு மன அழுத்தம் தரக்கூடாது.மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பெண்கள் நினைக்கக்கூடாது. யாராவது ஒருவர் ஆரம்பித்து வைக்கத்தானே வேண்டும்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

பட மூலாதாரம், SHAHBAZ ANWAR/BBC
"தயக்கம் ஏதுமின்றி வீட்டின் எந்த கதவிலும் மாதவிடாய் தேதி அட்டவணையை வைக்கலாம் என்று என் மனைவியிடம் சொன்னேன். பல நண்பர்களையும் இதில் நான் இணைத்திருக்கிறேன்."
ஹிமாச்சல பிரதேசத்தின் ரிஷ்தா, 'பீரியட் அட்டவணையின் தூதர்'
மாதவிடாய் அட்டவணையைப் பற்றி ஒரு குறும்படமும் எடுக்கப்பட்டுள்ளது. படச் செலவுகளை 'செல்ஃபி வித் டாட்டர்' அமைப்பின் இயக்குநர் சுனில் ஜக்லான் ஏற்றுக்கொண்டுள்ளார். இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ரிஷ்தா இந்தப் படத்தின் நாயகியாக நடித்துள்ளார்.
" பீரியட் சார்ட் பற்றிய ஒரு குறும்படத்தில் பணிபுரியும் வாய்ப்பு. 2021 ஏப்ரலில் எனக்குக் கிடைத்தது. நான் ஒப்புக்கொண்டேன். நான் ஸ்கிரிப்டைப் படித்தபோது அது என்னை மேலும் கவர்ந்தது. நான் சுனில் ஜக்லானுடன் இது பற்றி உரையாடினேன். இந்த பிரச்சாரத்தில் என்னையும் இணைத்த அவர் இந்த இயக்கத்தின் தூதராக என்னை ஆக்கினார். இப்போது இது தொடர்பாக பல மாநிலங்களில் உள்ள பெண்களை நான் சந்தித்துப்பேசுகிறேன்," என்று ரிஷ்தா பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












