காமன்வெல்த் போட்டிகள்: இதற்கு முன் அதிக பதக்கங்களை இந்தியா பெறவில்லையா? பா.ஜ.க. சொல்வது உண்மையா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சமீபத்தில் பர்மிங்கம்மில் நடந்து முடிந்த 22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 61 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது. பதக்கப் பட்டியலில் இறுதி இடங்களில் இருந்த இந்தியா, நான்காவது இடம்வரை வந்ததற்கு மோதி தலைமையிலான பா.ஜ.க. அரசே காரணம் என்கிறது தமிழக பா.ஜ.க. இது உண்மையா?
இங்கிலாந்தின் பர்மிங்கம் நகரில் 22-ஆவது காமன்வெல்த் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கின்றன. ஜூலை 28ஆம் தேதி துவங்கிய போட்டிகள் ஆகஸ்ட் எட்டாம் தேதி நிறைவடைந்தன.
இந்தப் போட்டிகளில் இந்தியா 22 தங்கப் பதக்கங்களையும் 16 வெள்ளிப் பதக்கங்களையும் 23 வெண்கலப் பதக்கங்களையும் வென்று, மொத்தம் 61 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது. பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு மேலே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருந்தன.
இந்திய வீரர்கள் பெற்ற வெற்றி குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அரசு நிர்வாகத்தில் இருப்பவர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த நிலையில், பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "இந்த போட்டிகளில் பதக்கப்பட்டியலில் இந்தியாவின் பெயர் இடம் பெறுவது கனவாக இருந்தது. அப்படியும் ஓரிரு பதக்கங்கள் பெற்று இருந்தாலும் இந்தியா பதக்கப் பட்டியலில் இறுதியில் காணப்படும் நிலை இருந்தது ஆனால் இன்று ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சீரிய முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் காரணமாக நாட்டின் விளையாட்டு துறை சீரமைக்கப்பட்டது.
அரசியல் விளையாட்டுகளால், தலைகுனிவை தந்த, இதற்கு முன் இந்தியாவில் இடம்பெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் போல இல்லாமல், இம்முறை அரசியல் விளையாட்டும் இல்லை விளையாட்டில் அரசியலும் இல்லை.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் நடைபெறும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், மாண்புமிகு பாரதப்பிரதமர் நேர்மையாக முறையாக தகுதி அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தற்போது நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம் 16 வெள்ளி 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் 4-ஆவது இடத்தை பதிவு செய்திருக்கிறது. இந்தச் சாதனை இதற்கு முன்பு நிகழ்த்தப்பட்டது இல்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பட மூலாதாரம், @ANNAMALAI_K TWITTER
காமன்வெல்த் போட்டிகளில் முந்தைய நிலை என்ன?
காமன்வெல்த் போட்டிகள் 1930ஆம் ஆண்டில் துவங்கிய நிலையில், அந்தப் போட்டியில் இந்தியா பங்கேற்கவில்லை. ஆனால், 1934ஆம் ஆண்டு நடந்த போட்டியில் பிரிட்டிஷ் இந்தியாவாகப் பங்கேற்று ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றது. 1938, 1950, 1954 ஆகிய ஆண்டுகளில் நடந்த போட்டிகளில் எந்தப் பதக்கத்தையும் வெல்லவில்லை. 1958-இல் நடந்த போட்டியில் 3 பதக்கங்களையும் 1966-இல் பத்து பதக்கங்களையும் 1970-இல் 12 பதக்கங்களையும் 1974, 1978ல் நடந்த போட்டிகளில் தலா 15 பதக்கங்களையும் 1982ல் 16 பதக்கங்களையும் வென்றது. 1986-இல் நடந்த போட்டிகளை இந்தியா புறக்கணித்தது.
இதற்குப் பிறகு 1990-இல் நடந்த போட்டியில் 32 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. 1994-இல் நடந்த போட்டியில் 24 பதக்கங்களையும் 1998-இல் 25 பதக்கங்களையும் வென்றது. 2002ல் நடந்த போட்டியில் 69 பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது. இப்போது நடந்திருப்பதைப் போலவே அப்போதும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு மேலே இருந்தது.
2006-இல் நடந்த போட்டியிலும் 49 பதக்கங்களை வென்று நான்காவது இடத்தைப் பிடித்தது. அப்போது 22 தங்கப் பதக்கங்கள் இந்தியாவுக்குக் கிடைத்தன. 2010-இல் இந்தப் போட்டிகளை இந்தியாவே நடத்தியது. தலைநகர் தில்லியில் நடந்த போட்டியில் இந்தியா 101 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அந்த முறை 39 தங்கம், 26 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது. காமன்வெல்த் ஆட்டங்களில் இந்தியாவின் உட்சபட்ச சாதனை அந்த ஆண்டில்தான் நிகழ்த்தப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது.
இதற்குப் பிறகு, 2014-இல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த க்ளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியா வெறும் 64 பதக்கங்களை மட்டுமே வென்று ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. 2018-இல் 66 பதக்கங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இப்போது நடந்து முடிந்திருக்கும் போட்டியில், 61 பதக்கங்களைப் பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
அதேபோல தில்லியில் நடந்த காமன்வெல்த் ஆட்டத்தில்தான் இந்தியாவின் சார்பில் உச்சகட்டமாக அதிக விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். மொத்தமாக 495 வீரர்கள் பங்கேற்றனர். இந்த முறை 215 வீரர்களே இந்தப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றனர்.
ஆகவே, இதற்கு முன்பாக காமன்வெல்த் ஆட்டங்களில் இந்தியா இறுதி சில இடங்களிலேயே இருந்தது என்ற கூற்று சரியானதல்ல. 1958-ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆட்டங்களில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வந்திருக்கிறது. 1994, 2006 ஆகிய ஆண்டுகளில் மட்டும் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட குறைந்தது. 2010ல் இரண்டாம் இடத்தைப் பிடித்து புதிய உச்சத்தைத் தொட்ட இந்தியா, 2014-இல் இருந்து 5-ஆவது, மூன்றாவது, 4-ஆவது இடங்களையே பிடித்து வருகிறது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பிரிட்டனின் முன்னாள் குடியேற்ற நாடுகளுக்கு இடையில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளாகும். 1930ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் போட்டிகள் நடந்து வருகின்றன. 1942, 1948 ஆகிய ஆண்டுகளில் இரண்டாம் உலகப் போரின் காரணமாக போட்டிகள் நடைபெறவில்லை. இதுவரை 22 போட்டிகள் நடைபெற்றுள்ளன. 1950வரை பிரிட்டிஷ் எம்பயர் கேம்ஸ் என்று அழைக்கப்பட்ட இந்தப் போட்டிகள், பிறகு பிரிட்டிஷ் எம்பயர் அண்ட் காமன்வெல்த் கேம்ஸ் என்று அழைக்கப்பட்டன. 1970, 74ல் பிரிட்டிஷ் காமன்வெல்த் கேம்ஸ் என்று அழைக்கப்பட்டன. 1978ல் இருந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என அழைக்கப்படுகின்றன.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












