செஸ் ஒலிம்பியாட்: ஹாங்காங்குக்காக விளையாடிய மதுரையின் சிகப்பி கண்ணப்பன்

சிகப்பி கண்ணப்பன் - செஸ் ஒலிம்பியாட்
படக்குறிப்பு, சிகப்பி கண்ணப்பன்
    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளி செஸ் வீராங்கனை சிகப்பி கண்ணப்பனும் அவருடைய மகன் தண்ணீர்மலையும் 187 நாடுகளின் வீரர்கள் பங்கேற்றுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அசத்தியிருக்கின்றனர். ஆனால், அவர்கள் விளையாடுவது ஹாங்காங் நாட்டுக்காக.

மதுரையில் வளர்ந்து தற்போது ஹாங்காங் நாட்டுக்காக விளையாடுவதில் பெருமிதம் அடையும் சிகப்பி கண்ணப்பன், இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது கனவாகவே உள்ளது என்கிறார். இருப்பினும், சொந்த ஊரில் தற்போது மீண்டும் செஸ் விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது என ஆனந்தம் அடைகிறார்.

மதுரையிலிருந்து ஹாங்காங்கில் குடிபெயர்ந்து சாதித்துவரும் சிகப்பி கண்ணப்பன் தன்னுடைய செஸ் வெற்றிப் பயணம் குறித்து 'பிபிசி தமிழிடம்' பகிர்ந்துகொண்டார்.

"ரொம்ப மோசமாக தோற்றேன்"

"நான் மதுரையில்தான் பிறந்து வளர்ந்தேன். செஸ் விளையாட கற்றுக்கொண்டதும் மதுரையில்தான். என்னுடைய தாத்தா தான் எனக்கு செஸ் விளையாட கற்றுக்கொடுத்தார். என்னுடை பெரியப்பாவின் மகன் அண்ணாமலை அண்ணன் என்பவர்தான் என்னை செஸ் போட்டிக்கு முதன்முறையாக அழைத்துச் சென்றார். அந்த போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றேன். என்னுடைய திறமையை கண்டுகொண்ட பயிற்சியாளர் என்னுடைய குடும்பத்தினரிடம் இது பற்றி கூறினார். குடும்பத்தினரின் ஊக்கத்துடன் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றேன்" என்கிறார் சிகப்பி கண்ணப்பன்.

தண்ணீர்மலை
படக்குறிப்பு, சிகப்பி கண்ணப்பனின் மகன் தண்ணீர்மலை

"என்னுடைய 10 வயதில் ஆமதாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றேன். 4 சுற்றுகள் வரை வெற்றி பெற்றேன். இறுதி போட்டிக்கு முன்பு நடந்த சுற்றின்போது, பல ஊடகங்கள், 'மதுரையில் இருந்துவந்த ஒரு பொண்ணு நேஷனல் சாம்பியன் ஆக போறா'ன்னு எழுதுனாங்க. எனக்கு இதனால் பதற்றம் வந்துவிட்டது. அதனால் அடுத்த சுற்றில் ரொம்ப மோசமாக தோற்று விட்டேன். தேசிய அளவில் நான்காம் இடத்தைப் பிடித்தேன். அச்செய்தி ஊடகங்களில் இடம்பிடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் பாராட்டினர்" என சிரித்துக்கொண்டே கூறுகிறார் சிகப்பி கண்ணப்பன்.

பயிற்சியாளர்கள் முரளி மோகன், அதுலன் உள்ளிட்டோர் மிக சிறப்பாக தமக்கு பயிற்சியளித்ததாக கூறுகிறார் சிகப்பி.

சிகப்பி கண்ணப்பன்

"செஸ் சாப்டரை அப்படியே மூடிவிட்டேன்"

"கோழிக்கோடு, பாலக்காடு, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் பலமுறை பங்கேற்றுள்ளேன். ஒவ்வொருமுறையும் சென்று தேசியளவில் சாம்பியனாகி விடலாம் என நினைப்பேன். ஆனால், ஏதாவது ஒன்றில் கோட்டைவிட்டுவிடுவேன். 3, 4, 5ஆம் இடங்களைத்தான் பிடிப்பேன். இந்தியாவுக்காக விளையாட முடியவில்லை. அது கனவாகவே இருக்கிறது. அப்படியே அந்த 'சாப்டரை' மூடிவிட்டேன். அதன்பிறகு கல்வி. பின்னர் 2002இல் திருமணம் முடிந்து நைஜீரியா சென்றோம். அங்கு சென்று விளையாட முடியவில்லை" என கூறுகிறார் சிகப்பி.

இந்தியாவில் மூடப்பட்ட அவருடைய செஸ் கனவு மீண்டும் ஹாங்காங்கில் திறக்கப்பட்டது.

2005இல் ஹாங்காங்குக்கு குடிபெயர்ந்துள்ளார் சிகப்பி.

சிகப்பி கண்ணப்பன்
படக்குறிப்பு, கணவர் கண்ணப்பன் மற்றும் மகனுடன் சிகப்பி.

"ஹாங்காங் நாட்டின் செஸ் கூட்டமைப்புக்கு சென்றுபார்த்தபோது அங்கு பெண்கள் யாரும் விளையாடவில்லை. அங்கு சென்று விளையாடி முதன்முதலில் ரேட்டிங் வாங்கினேன். செஸ் ரேட்டிங் 1983 வந்தது. இன்னும் கூட ரேட்டிங் வந்திருக்கும். ஆனால், செஸ் விளையாட்டுடன் இடையில் தொடர்பு இல்லாததால் எடுக்க முடியவில்லை. செஸ் சாப்டரை மூடிவிட்டு வந்தது வேறு அவ்வப்போது நினைவில் வந்து செல்லும். 2016இல் அசர்பைஜானில் பெண்கள் அணியை உருவாக்கி ஹாங்காங்குக்காக விளையாடினோம். மிக நன்றாக அதில் விளையாடினேன். அதுவொரு கனவு. பல நாட்கள் கழித்து சர்வதேச அளவில் விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது" என்கிறார் சிகப்பி கண்ணப்பன்.

தன் ஊருக்கு மீண்டும் 40 வயதில் வந்து விளையாட வேண்டும் என்பது விதி என்கிறார் சிகப்பி கண்ணப்பன்.

"சர்வதேச போட்டிகளில் இனி எனக்கு ஒன்றும் பெரிய லட்சியம் இல்லை. மகன் சாதிக்க வேண்டும் என்பதுதான் லட்சியம்" என முடிக்கிறார், சிகப்பி கண்ணப்பன்.

காணொளிக் குறிப்பு, செஸ் ஒலிம்பியாட்: தெற்கு சூடான் வீரர்கள் தமிழ்நாடு குறித்து சொல்வதென்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: