சானியா கான்: விவாகரத்து ஆனதை டிக்டாக்கில் வெளியிட்ட பெண்ணை சுட்டுக் கொன்ற கணவன்

தன் மோசமான திருமண வாழ்விலிருந்து விடுபட்ட பிறகு முதல்வேலையாக, தன்னை வாழ்வில் தோற்றுப்போனவள் என்று உணரவைத்த தெற்காசிய இஸ்லாமிய கூட்டமைப்புக்கு டிக் டாக் மூலம் ஒரு செய்தியை அறிவித்தார் இந்தப் பெண். அதாவது ஆதரவையும் இயல்பான நல்லுணர்வையும் முகம் தெரியாதவர்களிடம் தான் உணர்வதாக அறிவித்தார். ஆனால், அவரது மகிழ்ச்சி வெகுநாட்கள் நீடிக்கவில்லை.

புதுவாழ்வைத் தொடங்கப்போவதாக அறிவித்த இந்தப் பெண்ணுக்கு மரணம் கணவர் வடிவில் காத்திருந்தது.

எச்சரிக்கை: இந்தப் பெண்ணின் கதை வாசகர்களில் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

என்ன நடந்தது?

ஜூலை 21ஆம் தேதி, சிகாகோவை விட்டும், தன் வாழ்வில் அதிர்ச்சியூட்டும் வகையில் தவறாகிப்போன திருமண வாழ்க்கையை விட்டும் நீங்கி, தன் சொந்த ஊருக்கு கிளம்ப தயாராக இருந்தார் 29 வயதான சானியா கான்.

ஆனால், தன் சொந்த ஊருக்கு சவப்பெட்டியில்தான் சென்று சேர்ந்தார்.

அதற்கு, மூன்று தினங்களுக்கு முன்பாக, இவரும் இவரது முன்னாள் கணவர் ரஹீல் அகமதுவும் இணைந்து வாழ்ந்த இல்லத்தின் வாசற்படியில் இவர் சடலமாக கிடந்தார். தலையின் பின்புறத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளார். காவல்துறையின் வருகையை அடுத்து, ரஹீலும் துப்பாக்கியால் உயிரை மாய்த்துக்கொண்டார்.

காவல்துறை என்ன சொல்கிறது?

சிகாகோ சன்-டைம்ஸ் பத்திரிகைக்கு காவல்துறை அளித்த தகவலின்படி " கணவன் மனைவி இருவரும் பிரிந்திருந்த நிலையில், கணவன் சுமார் 700 மைல் தொலைவில் உள்ள அவரது சொந்த ஊரில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இந்த திருமணத்தை காப்பாற்றவே அவ்வளவு தூரம் பயணித்து வந்துள்ளார் ரஹீல் அகமது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய சமூகத்தில் நிலவும் திருமணம், விவாகரத்து குறித்த பழமைவாதங்களை எதிர்த்துப் போராடும் ஒரு குரலாக, சமூக ஊடக தளமான TikTok இல் அங்கீகாரம் பெற்ற இளம் புகைப்படக்கலைஞரான சானியாவின் இறுதி அத்தியாயமாக இந்த சம்பவம் அமைந்துவிட்டடது.

இந்த மரணம் சானியாவின் நண்பர்களையும் உறவினர்களையும் ஆன்லைன் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

"என் 29 வயது என்பது என் வாழ்வின் புதிய தொடக்கமாக இருக்கும் என்று அவள் கூறினாள். அதற்காக மிகுந்த ஆர்வத்துடனும் இருந்தாள்" என்கிறார் அவரது கல்லூரி நண்பரான ப்ரி அன்ன வில்லியம்ஸ்.

உங்களுக்காக எதையும் செய்யத் துணியும் குணமுடையவர் தான் சானியா. அவர் எவ்வளவு கடினமான சூழலில் இருந்தாலும், நமக்கு போன் செய்து நலம் விசாரிக்கும் பழக்கமுடையவர் என்கிறார் சானியாவின் நெருங்கிய நண்பர் மெஹ்ரு ஷேக்.

இன்ஸ்டாகிராமில்தான் அவர் தன் முதல் சமூக வலைதளப்பக்கத்தை தொடங்கினார். அதில், கேமரா மீதான தன் காதலை குறித்து அவர் எழுதியிருந்தது கூட கவனம் பெற்றது. அதாவது 'தன்னைத் தானே நேசிக்கும் மனிதர்களுக்கும் என் கேமராவின் முன்னிருக்கும் அனைவருக்கும் நான் உதவுவேன்' என்று இருந்தது.

செல்வந்த வாடிக்கையாளர்கள் அல்லது நண்பர்கள் என பலருக்கும் திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் சானியா புகைப்படக்கலைஞராக இருந்துள்ளார்.

"படமெடுக்கும் போதுதான் சானியா உயிர்ப்போடு இருப்பார். கேமராவுக்கு முன் மக்களை இயல்பாக வைத்திருப்பதும் இயல்பான உணர்ச்சிகளை படமெடுப்பதும் இவருக்கு கைவந்த கலை" என்கிறார் மெஹ்ரு.

இப்படித்தான் இவரது வாழ்க்கையும் இருக்க வேண்டும் என்று சாய்னா விரும்பினார். 5 ஆண்டுகளாக காதலித்து பின்னர் 2021ஆம் ஆண்டில்தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

"மிகச்சிறப்பாக பாகிஸ்தானி முறையில் அவர்களது திருமணம் நடைபெற்றது. ஆனால், பொய்களாலும் திரிப்புகளாலும் கட்டமைக்கப்பட்டது அந்த திருமணம்" என்கிறார் சானியாவின் பால்யகால நண்பர் ஒருவர்.

மேலும், "நீண்ட நாட்களாக அகமதுவுக்கு (சானியாவின் கணவர்) மனநல பிரச்னை இருந்து வந்துள்ளது. திருமணத்துக்கு முன்பாக பெரும்பாலும் தொலைவிலேயே இருந்ததால் சானியாவால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை" என்றும் தெரிவிக்கிறார் அவர்.

தன் கணவரது மனநல பிரச்னை காரணமாக, தான் பாதுகாப்பற்று உணர்வதாக சானியா வெளியில் சொன்னபோதுதான் இவர்களுக்கிடையிலான பிரச்னை பெரிதானது. இதில், அகமது தரப்பு விளக்கத்தைக் கேட்க அகமதுவின் குடும்பத்தை பிபிசியால் அணுக முடியவில்லை.

இதற்குப்பிறகுதான் சாய்னாவின் மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கை குறித்து வெளியில் நண்பர்களுக்கு தெரிய வந்தது.

இரவில் அவரது கணவர் உறங்குவதில்லை என்றும் வித்யாசமாக நடந்துகொள்கிறார் என்றும் தன் நண்பர்களிடம் அவர் பேசியுள்ளார். சிகிச்சைக்கு செல்லலாம் என்று அழைத்தால் அதற்கும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

பின்னர், நண்பர்களின் உதவியுடன் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். ஆகஸ்ட் மாதம் இந்த விவாகரத்து இறுதிக்கு வந்தது.

பின்னர், டிக்டாக்கில் தன் கதையை பகிர்ந்து கொண்ட போது அவருக்கு மோசமான கமெண்ட்டுகளே கிடைத்தன. குறிப்பாக, நீங்கள் வாழ்வில் ஏதோ ஒரு விதத்தில் தோற்றவராகவே கருதப்படுவீர்கள் என்று அந்தப் பதிவு தெரிவித்தது.

நீ சைத்தானுக்கு வாழ்வில் இடம் தருகிறாய் என்று அவரது குடும்பம் தெரிவித்தது. இந்த நிலையில்தான் டிக் டாக்கில் வீடியோக்கள் பதிவிட தொடங்கினார். நல்ல வரவேற்பு கிடைத்தது.

அவர் இறக்கும் சமயத்தில் அவரை 20000 பேர் டிக்டாக்கில் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர். அவர்களில் பிஸ்மா பர்வேஸும் ஒருவர்.

"இது போன்ற சூழலில் இருக்கும் பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், பொறுமை இந்த விவகாரத்துக்கு சரியான பதில் இல்லை" என்கிறார் அவர்.

மேலும், சானியாவின் மரணம் குறித்து விவரித்து டிக்டாக்கில் இவரும் ஒரு வீடியோ பதிவிட்டார். அது பலராலும் பகிரப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, குடும்ப வன்முறைகள் தொடர்பாக இயங்கி வரும் அமைப்பான 'அப்னா கர்' சானியாவின் மரணத்துக்கு இந்த மாதம் ஒரு நினைவஞ்சலி கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

"பெண்களை பாதுகாப்பாக இருங்கள் என்று எப்போதும் சொல்கிறோம். ஆனால், பெண்களை மதிக்கும் மகன்களை வளர்க்க வேண்டியதும் அவசியம். இந்த மாற்றத்தை உருவாக்க ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தொடங்க வேண்டும்" என்கிறார் பர்வேஸ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: