You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்க நெட்டிப்பட்டம், வெண்கல பொருட்கள் கண்டெடுப்பு
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்க நெட்டிப்பட்டம், வெண்கல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் இந்திய தொல்லியல் துறை சார்பில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தொல்லியல் துறையின் திருச்சி மண்டல இயக்குநர் அருண் ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது.
இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த அகழாய்வு பணிகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் நடந்து வருகிறது. இதன் அங்கமாக 80க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆதிச்சநல்லூரில் 'சி சைட்' என அழைக்கப்படும் அலெக்சாண்டர் ரியா கடந்த 117 வருடங்களுக்கு முன்பு அகழாய்வு செய்த பகுதியில் 30 செண்டி மீட்டர் ஆழத்தில் ஒரு தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டெடுக்கப்பட்டது.
ஆதிச்சநல்லூரில் 1903ஆம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா அகழாய்வு செய்தபோது தங்கத்தால் செய்யப்பட்ட நெட்டிப்பட்டம் கண்டெடுக்கப்பட்டது.
3 மீட்டர் ஆழத்தில் கிடைத்த ஆயுதங்கள்
அதன்பின்னர் நடந்த 4 கட்ட அகழாய்வு பணியில் தங்கத்தால் செய்யப்பட்ட பொருள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தொடர்ந்த அந்த பகுதியில் சுமார் 3 மீட்டர் ஆழத்தில் தோண்டிய போது அங்கே நீளமான ஈட்டி போன்ற ஆயுதம், இடுக்கி போன்ற இரும்பு பொருள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.
அத்துடன் இரும்பு பொருள் மீது படிந்த நெல்லின் படிமங்களும் கிடைத்தது.
இந்த நிலையில் தற்போது சி சைட் என அழைக்கப்படும் பகுதியில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் தங்கத்தாலான 3.5 செண்டி மீட்டர் நீளம் கொண்ட நெட்டிப்பட்டம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அதே முதுமக்கள் தாழியில் வெண்கலத்தால் ஆன அலங்கார ஜாடி, ஜாடியின் மேல் கொக்கு, வாத்து பறவைகள் நீர் அருந்துவது போல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகில் 2 வெண்கலத்தால் ஆன வடிக்கட்டிகள் கிடைத்துள்ளன.
மேலும் அதே குழியில் 20 இரும்பு பொருட்கள் கிடைத்தது அதில் 9 அம்புகள், 1 வாள், 1 ஈட்டி, 1 சூலம், தொங்கவிட்டான் உள்பட 20 பொருட்கள் உள்ளன.
இரும்பு கலாசார பொருட்கள்
இது குறித்து இந்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் பிபிசி தமிழிடம் பேசுகையில், "ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த வருடம் அகழாய்வு பணிகள் தொடங்கியது. தொடங்கிய காலத்தில் இருந்தே ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்து வருகிறது. தற்போது கிடைத்துள்ள பொருட்கள் இரும்புக் கால கலாசாரத்தில் பயன்படுத்தப்பட்டன," என்றார்.
"இந்த கலாசாரத்துடன் தொடர்புடைய இடங்கள் தென்னிந்தியாவில் 2 ஆயிரம் உள்ளது. இருப்பினும் ஆதிச்சநல்லூர் மிக முக்கியத்துவமானதாகவே கருதப்பட காரணம் இங்கு மட்டுமே தங்கம் மற்றும் வெண்கலத்தாலான பொருட்கள் கிடைக்கிறது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் வெண்கலம் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தாலும் தற்போது கிடைத்துள்ள நெட்டிப்பட்டம் வேறு எங்கும் கிடைத்ததாக தகவல் இல்லை," என்று அவர் குறிப்பிட்டார்.
ஆதிச்சநல்லூரில் தற்போது அகழாய்வு நடைபெற்று வரும் இடத்தில் 1903 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தொல்லியல் துறை ஆர்வலர் அலெக்சாண்டர் ரியா அகழாய்வு செய்து கிடைத்த பொருட்களை 42 காளை மாட்டு வண்டியில் எடுத்து சென்றதாக பதிவு செய்துள்ளார்.
அவர் கொடுத்த தரவுகள் அடிப்படையில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 175 ஏக்கரில் தொடர்ந்து அகழ்வாராய்வு நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சியில் இரும்பாலான ஈட்டி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் அதிக அளவில் கிடைத்து வருகிறது. சங்க காலத்திற்கு முன்பு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்து வருகின்றன.
இவை தொடர்பாக விவரித்த அருண்ராஜ், "தற்போது கிடைத்துள்ள தங்கத்தாலான நெட்டுப்பட்டம், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்டது. தங்க நெட்டிப்பட்டம் கிடைத்த குழியில் புதைக்கப்பட்டவர் அந்த காலத்தில் மிகப்பெரிய தலைவராக இருந்திருப்பார். எனவே தான் இந்த குழியில் மேலும் வெண்கல பொருட்கள், இரும்பு பொருட்கள் கிடைத்துள்ளன," என்றார்.
"இந்த தங்கம் வரும் காலங்களில் ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியகத்தை அலங்கரிக்கும் ஒரு பொருளாக இருக்கும்," என்று தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்