உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி உதய் உமேஷ் லலித் - யார் இவர்?

உச்சநீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித்
    • எழுதியவர், சுசித்ரா கே மொஹந்தி
    • பதவி, பிபிசிக்காக

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி உதய் உமேஷ் லலித்தின் (யு.யு.லலித்) பெயரை தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரைத்துள்ளார்.

நீதிபதி லலித்துக்கு முன், நீதிபதி சிக்ரி 1964 ஆம் ஆண்டு மன்றத்தில் இருந்து நேரடியாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் முதல் நீதிபதி ஆவார்.

மறைந்த நீதிபதி எஸ்.எம்.சிக்ரிக்கு அடுத்தபடியாக 2வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்பார் நீதிபதி உதய் உமேஷ் லலித்.

இவர், வழக்கறிஞர் பிரிவில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மறைந்த நீதிபதி சிக்ரி ஜனவரி 1971 முதல் ஏப்ரல் 1973 வரை இந்தியாவின் 13வது தலைமை நீதிபதியாக (CJI) இருந்தார்.

பிப்ரவரி 1964, அவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார், ஜனவரி 1971 இல் இந்தியாவின் தலைமை நீதிபதியானார்.

ஆகஸ்ட் 13, 2014 அன்று வழக்கறிஞர் பிரிவில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி லலித், ஆகஸ்ட் 27, 2022 அன்று தற்போதைய தலைமை நீதிபதி - நூதலபதி வெங்கட ரமணாவை அடுத்து, 49 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுப் பதவியில் நீடிப்பார். 73 நாட்களுக்கு இப்பதவியில் இருக்கப்போகும் அவர், நவம்பர் 8, 2022 அன்று 65 வயதில் ஓய்வு பெறுகிறார்.

தனக்கு அடுத்தபடியாகப் பதவியேற்க, நீதிபதி லலித்தின் பெயரை தலைமை நீதிபதி ரமணா இன்று சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சரிடம் பரிந்துரை செய்தார்.

நீதிபதி லலித் மறுத்த வழக்குகள்

அயோத்தி உரிமைப் பிரச்னை, மும்பை குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி, யாகூப் மேனனின் மரண தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மறுஆய்வு மனு, ஆசிரியர் பணி நியமன ஊழலில் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மனு, சூர்யநெல்லி பாலியல் வல்லுறவு வழக்கில் மேல்முறையீடுகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விசாரிப்பதில் இருந்து நீதிபதி லலித் விலகியுள்ளார்.

நீதிபதி லலித் விலகியுள்ள வழக்குகளின் வரலாறு

1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேனனின் மரண தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரிய யாகூப் மேனனின் மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி லலித் தனது பதவிக் காலத்தில், 2014 இல் விலகிக் கொண்டார்.

2015 ஆம் ஆண்டில், 2008 மாலேகான் குண்டுவெடிப்பில் நியாயமான விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிப்பதில் இருந்து அவர் விலகிக் கொண்டார், ஏனெனில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை அவர் முன்னர் ஆதரித்து வாதிட்டிருந்தார்.

2016 ஆம் ஆண்டில், ஆசாராம் பாபு மீதான விசாரணையில் ஒரு முக்கிய அரசு தரப்பு சாட்சி காணாமல் போனது குறித்து விசாரணை கோரிய மனு விசாரணையில் இருந்து அவர் விலகினார்.

ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழல் வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மனுவை விசாரிப்பதில் இருந்தும் அவர் விலகினார்.

2017 ஆம் ஆண்டில், சூர்யனெல்லி பாலியல் வல்லுறவு வழக்கின் மேல்முறையீடுகளை விசாரிப்பதில் இருந்து அவர் தன்னைத்தானே விலக்கிக் கொண்டார், ஏனெனில் அவர் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்காக முன்பு ஆஜரானார்.

நீதிபதி உதய் உமேஷ் லலித்

2018 ஆம் ஆண்டில், சட்ட அமலாக்க அதிகாரிகளால் சித்திரவதை மற்றும் வற்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படும் மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் மனுவை விசாரிப்பதில் இருந்து அவர் விலகினார்.

2019 இல், நீதிபதி லலித், அயோத்தி உரிமையியல் சர்ச்சையை விசாரிக்கும் பொறுப்பான அரசியல் சாசன அமர்வில் இருந்து விலகினார்.

உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக

1957 இல் பிறந்த நீதிபதி லலித், 1983 இல் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். நீதிபதி லலித் 1983 முதல் டிசம்பர் 1985 வரை பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். ஏப்ரல் 2004 இல் உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

நீதிபதி லலித் 2ஜி வழக்கில் சிறப்பு பப்ளிக் ப்ராசிக்யூட்டராக உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்டார்.

அனைத்து 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்குகளிலும் விசாரணை நடத்துவதற்காக, மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) சிறப்பு அரசு வழக்கறிஞராக (SPP) உச்ச நீதிமன்றம் அவரை நியமித்தது.

நீதிபதி லலித், முன்னாள் அட்டர்னி ஜெனரல் (ஏஜி) சோலி சொராப்ஜியுடன் 1986 முதல் 1992 வரை பணியாற்றியுள்ளார்.

அவர் வழக்கறிஞராகப் பணியாற்றும் போது குற்றவியல் சட்டத்தில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றார். நீதிபதி லலித் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) செயல் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

நீதிபதி லலித் வழங்கிய தீர்ப்புகள்

முத்தலாக் செல்லுபடியாகுமா என்பதை விசாரித்த அரசியலமைப்பு அமர்வில் நீதிபதி லலித் ஒரு அங்கமாக இருந்தார். அவர் முத்தலாக்கை ரத்து செய்தார், மேலும் முத்தலாக் என்பது இந்திய அரசியலமைப்பின் 14 வது பிரிவின் அடிப்படை உரிமையை மீறுவதாகவும் கூறினார்.

நீதிபதி லலித், எஸ்சி/எஸ்டி (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் 'துஷ்பிரயோகத்தை' தடுக்கச் சில பாதுகாப்பு வழிமுறைகளையும் அறிமுகப்படுத்தினார். காசிநாத் மகாஜனுக்கு எதிரான மகாராஷ்டிர அரசு வழக்கில், அவர் நீதிபதி ஆதர்ஷ் கோயலுடன் சேர்ந்து, எப்ஐஆர் பதிவு செய்வதற்கு முன் பூர்வாங்க விசாரணையை எவ்வாறு நடத்துவது என்பது குறித்த சீட்டேன் நடைமுறையை வகுத்தார். அதில், விசாரணை அதிகாரி கைது செய்வதற்கு முன் மேலதிக அனுமதியைப் பெறுதல். சட்டத்தின் கீழ் முன்ஜாமீன் வழங்குவதற்கான ஏற்பாடு ஆகியவை அடங்கும்.

நீதிபதி லலித், முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி குரியன் ஜோசப் ஆகியோருடன், ரஞ்சனா குமாரிக்கு எதிராக உத்தரகாண்ட் வழக்கில், புலம்பெயர்ந்த மாநிலத்தில் குறிப்பிட்ட சாதியை பட்டியல் சாதியாக அங்கீகரிப்பதால், புலம்பெயர்ந்தோரை பட்டியல் சாதி நபராக அங்கீகரிக்க முடியாது என்று கூறினார். .

பிரத்யுமன் பிஷ்ட் வழக்கில், நீதிபதி லலித், நீதிபதி ஆதர்ஷ் கோயல் ஆகியோர், ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது இரண்டு மாவட்டங்களில், நீதிமன்றங்களுக்குள்ளும், நீதிமன்ற வளாகத்தில் உள்ள முக்கியமான இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை (ஆடியோ பதிவுகள் இல்லாமல்) பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். இருப்பினும், இந்த பதிவுகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல என்று அவர் உத்தரவிட்டார்.

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்ய, இந்து திருமணச் சட்டத்தின் 13பி(2) பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட 6 மாதக் காத்திருப்பு காலம் கட்டாயமில்லை என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் நீதிபதி லலித் இருந்தார். அமர்தீப் சிங் வெர்சஸ் ஹர்வீன் கவுர் வழக்கில் நீதிபதி ஆதர்ஷ் கோயலின் தீர்ப்பு, குறிப்பிட்ட சூழ்நிலையில் குறிப்பிட்ட காத்திருப்பு காலத்தைத் தள்ளுபடி செய்யலாம் என்று கூறியது.

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக தப்பியோடிய மதுபான வியாபாரி விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறைத்தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து நீதிபதி லலித் தீர்ப்பளித்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகளை முன்கூட்டியே தொடங்க நீதிபதி லலித் ஆதரவு அளிக்கிறார்

உச்ச நீதிமன்ற அமர்வுகள் காலை 9 மணிக்குத் தொடங்கி 11.30 மணிக்கு அரை மணி நேர இடைவெளி எடுக்கலாம் என்று நீதிபதி லலித் பரிந்துரைத்தார். மீண்டும், நீதிமன்ற நடவடிக்கைகள் 12 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 2 மணிக்கு முடிக்கப்பட வேண்டும் என்றும் இதனால் மாலையில் அதிக விஷயங்களைச் செய்ய நேரம் கிடைக்கும், என்றார்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு விசாரணையின் போது, நீதிபதி லலித், குழந்தைகள் காலை ஏழு மணிக்கு பள்ளிக்குச் செல்ல முடியும் என்றால், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஏன் காலை ஒன்பது மணிக்கு தங்கள் நாளைத் தொடங்க முடியாது என்று கேள்வி எழுப்பினார்.

காணொளிக் குறிப்பு, கால்பந்து கிராமம்: எங்க ஊருக்கு இது தேசிய விளையாட்டு மாதிரி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: