சென்னை திருவொற்றியூரில் ரசாயன வாயுக் கசிவு: ஒரு மாத காலமாக மூச்சுத் திணறும் மக்கள்

ரசாயன வாயு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

நடுஇரவில் திடீரென உங்கள் வீட்டில் கேஸ் சிலிண்டர் வாயு கசிவது போன்ற வாசனை வீசினால் எப்படி உணர்வீர்கள்? உடனே சமையலறையில் உள்ள சிலிண்டரை சரிபார்ப்பீர்கள், அது சரியாக இருந்தால், உங்கள் அண்டைவீட்டாரைபற்றி யோசிப்பீர்கள்.

இதுபோல, ஒரு நாள் அல்ல கடந்த ஒரு மாத காலமாக சென்னை திருவொற்றியூர் பகுதிவாசிகள் தினம் தினம் நடுஇரவில், மூச்சுத்திணறல் ஏற்படும் அளவுக்கு ரசாயன வாயுகசிவால் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள்.

சென்னை - திருவொற்றியூர்

பட மூலாதாரம், Getty Images

குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்பட்டவர்கள் உள்ளிட்டவர்கள் கண்எரிச்சல், தலைவலி போன்றவற்றை அனுபவிப்பதாக கலங்குகிறார்கள். கடந்த ஒரு மாத காலமாக ரசாயன வாயு பரவுவதால் அச்சத்தில் உறைந்துள்ளனர். தமிழ்நாடு மாசுக்காட்டுப்பட்டு வாரிய அதிகாரிகள் சோதனை செய்ததில், சல்பர் டை ஆக்சைட் வாயு பரவிவருவதாக தெரிவித்தனர்.

திருவொற்றியூறில் ஜோதி நகர், டிகேஎஸ் நகர், சத்தியமூர்த்தி நகர் மற்றும் மணலி ஆகிய பகுதிகளில் ரசாயன வாயு பரவல் அதிகரித்துள்ளதால், காற்றில் பரவி வரும் நச்சு வாயுவை தடுக்க பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளித்துள்ளனர்.

44 வயதான சுமதி கடந்த இரண்டு வாரங்களில் தனது இரண்டு குழந்தைகளையும் சுவாசப் பிரச்சனைக்காக மருத்துவமனை அழைத்துச்சென்றதாக கூறுகிறார்.

''ஐந்து வயது மகள் இரவில் தூங்குவதற்கு சிரமப்படுகிறாள். வீட்டுக்குள் அவளை தூங்கவைக்கமுடியவில்லை. வெளியில் வந்தால், கேஸ் சிலிண்டர் வாசனை அதிகமாகத்தான் இருக்கிறது. நாங்கள் நிம்மதியாக தூங்கி இரண்டு வாரம் ஆகிறது,''என்கிறார்.

தொடர்ந்து ஆலை கழிவுகள் பிரச்சனைகள் இருப்பதால் ஒரு சிலர் சென்னையின் வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்துவிட்டதாகவும் சுமதி கூறுகிறார்.

''எங்கள் குடும்பம், சுற்றம், நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள். நானும், கணவரும் வேலைசெய்யும் அலுவலகமும் இங்குள்ளது என்பதால் நாங்கள் இங்கே தொடர்ந்து வசிக்கிறோம். ஆனால் அவ்வப்போது ஏற்படும் இந்த ரசாயன வாயு பிரச்சனை நிம்மதியாக தொலைக்கிறோம்,'' என்கிறார் சுமதி.

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

பிபிசி தமிழிடம் பேசிய திருவொற்றியூர் எம்எல்ஏ சேகர், ''திருவொற்றியூர், மணலி, எண்ணூர் பகுதியில் பல தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள மக்கள் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் ரசாயன வாயு பரவுவதால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள். சோதனையில், சிபிசிஎல் ஆலையிலிருந்துதான் இந்த சல்பர் ரசாயன வாயு வெளியேறி இருப்பதை கண்டறிந்தோம். சிபிசிஎல் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். சிபிசிஎல் ஆலை, சமீபத்தில், ரஷ்யாவிலிருந்து பெற்ற கச்சா எண்ணெய்யில் அதிக சல்பர் இருந்ததுதான் காரணம் என தெரியவந்தது. அடுத்தமுறை இதுபோன்ற, அதிக சல்பர் உள்ள கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என வலியுறுத்தியுள்ளோம்,''என்றார்.

மேலும், தொடர்ந்து ரசாயன வாயு பரவினால், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ''ரசாயன வாயு பரவுவது பற்றி தகவல் கிடைத்ததும், மாசுகட்டுப்பாடு அதிகாரிகள் அழைத்துவந்து சோதனை செய்தோம். ரசாயன வாயு எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிய கருவிகள் பொருத்தினார்கள். 24 மணிநேர சோதனையில் கண்டறிந்தோம். சிபிசிஎல் நிர்வாகம் முதலில் மறுத்தார்கள். பின்னர், ஆதாரத்துடன் அவர்களிடம் பேசியதால், ஒத்துக்கொண்டார்கள்,''என்கிறார் சேகர்.

சிபிசிஎல் நிர்வாகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த பதில்களை கேட்க, ஈமெயில் மற்றும் தொலைபேசி வாயிலாக பலமுறை முயன்றும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. சல்பர் உள்ளிட்ட ரசாயன வாயு பரவுவது கண்காணிக்க சிபிசிஎல் வளாகத்தில், இரண்டு காற்று தர மானிட்டர்களை நிறுவவேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: