கள்ளக்குறிச்சி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தாயார் மனு - இன்று நடந்தது என்ன?

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்

தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் உள்ள பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அந்த மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையை ஜிப்மர் மருத்துவமனை குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த பிறகு ஆகஸ்ட் 10ஆம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும் என்று நீதிபதி சாந்தி தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் இன்று நடந்தது என்ன?

மாணவி உயிரிழந்தது தொடர்பான சிபிசிஐடி வழக்கை, பாலியல் குற்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி விசாரித்து வருகிறார். இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமை நடைபெற்றபோது, பள்ளி நிர்வாகம் தரப்பு வழக்கறிஞர் ராமச்சந்திரன் ஆஜரானார்.

அப்போது நீதிபதி, "சிபிசிஐடி போலீசார், குற்ற வழக்கு எண்ணை குறிப்பிடாமல் இருப்பதால், சின்ன சேலம் போலீசார் மாணவியின் மரணத்தை குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174 பிரிவின் கீழ் சந்தேக மரணமாக பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை முழுமை பெறாததாலும், மாணவியின் உடலை இருமுறை உடற்கூராய்வு செய்த அறிக்கையை ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவக் குழு ஆய்வறிக்கை முறைப்படி தாக்கல் செய்யப்பட்ட பிறகு பிணை மனு விசாரிக்கப்படும்," என்று கூறினார்.

மேலும், இந்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கும் நீதிபதி தள்ளிவைத்தார்.

பிணையில் விடுவிக்க மாணவியின் தாயார் எதிர்ப்பு

இதேவேளை, இவ்வழக்கின் உண்மைத்தன்மை வெளிப்படும்வரை குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி மாணவியின் தாயார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாணவி பெற்றோர் தரப்பு வழக்கறிஞரான காசி விஸ்வநாதன் கூறுகையில், "மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்து பிணை மனுவை எதிர்த்து அவரது தாயார் செல்வி மனு தாக்கல் செய்துள்ளார். நாங்கள் அளித்த மனுவை ஏற்று இந்த வழக்கை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார். இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை ஆரம்பக்கட்ட நிலையில் இருப்பதாலும், இந்த வழக்கின் தீவிரத்தன்மையை உணர்ந்து அதன் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் முதலாவது மற்றும் இரண்டாம் உடற்கூராய்வு அறிக்கையை ஜிப்மர் மருத்துவமனைக்குழு ஆய்வு செய்ய ஒரு மாதம் அவகாசம் உள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 10ஆம் தேதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்துள்ளார்," என்று கூறினார்.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்

தொடர்ந்து பேசிய அவர், "எங்கள் தரப்பு குற்றச்சாட்டாக மாணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறியுள்ளோம். இந்த வழக்கில் தீவிரமான குற்றம் இருப்பதால் அதன் உண்மை இதுவரை வெளியே வரவில்லை. அந்த உண்மையை வெளியே கொண்டு வரும் வரை அவர்களை வெளியே அனுமதிக்கக் கூடாது என்று சொல்லுகிறோம்," என்று தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணை சரியாக நடத்தப்படுகிறதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,"மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்த பிறகே மற்ற விஷயங்களை சொல்ல இயலும். அதற்கு முன்பே எந்த குறையும் சொல்லக்கூடாது. புலனாய்வாளர்கள் சிறப்பாக கடமையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம், நம்புகிறோம்," என்று மாணவியின் தாயாரும் அவரது வழக்கறிஞரும் தெரிவித்தனர்.

குற்றம்சாட்டவர்கள் ஜாமீன் மனு - தாயார் ஆட்சேபம்

முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை விசாரித்த வந்த இந்த வழக்கு மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை (சிபிசிஐடி) விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே மாணவி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்

இவ்வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 5 பேரையும் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஜூலை 27ஆம் தேதி நீதிபதி புஷ்பராணி விசாரித்தபோது, சேலம் மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பேரையும் விழுப்புரம் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து ஐந்து பேரையும் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். இதேவேளை கைது செய்யப்பட்டவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரி பள்ளி நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை அன்றைய தினம் நீதிபதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் கடந்த ஜூலை 29ஆம் தேதி விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சின்ன சேலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகலைக் கொண்டு பிணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அதை ஏற்க முடியாது என்றும் தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி வசம் சென்றுவிட்டதால் சிபிசிஐடி முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பள்ளி நிர்வாக தரப்புக்கு நீதிபதி சாந்தி அறிவுறுத்தினார்.

கள்ளக்குறிச்சி மாணவி

இதன் பேரில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை, ஆகஸ்ட் 1ஆம் தேதி விசாரித்த நீதிபதி சாந்தி, அதற்கு பதிலளிக்கும்படி சிபிசிஐடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சியில் என்ன நடந்தது?

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கணியாமூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 13ஆம் தேதி காலையில் அந்த பெண் இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது. அவரது மகள் பள்ளிக்கூடத்தின் மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் தாயிடம் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

ஆனால், அந்த பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து படித்து வந்த மாணவி, கடந்த ஜூலை 1ஆம் தேதிதான் பள்ளி விடுதியில் சேர்க்கப்பட்டதாக அவரது தாய் செல்வி ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில்தான், ஜூலை 13ஆம் தேதி, அவரது சடலம் பள்ளி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது.

காணொளிக் குறிப்பு, குரங்கம்மை: 75 நாடுகளில் 16 ஆயிரம் பாதிப்புகள் - விழித்தெழுந்த WHO

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :