இந்து திருமணச் சட்டம்: 'மனைவி தாலியை கழற்றியதால் மன உளைச்சல்’ எனக் கூறி கணவன் விவாகரத்து பெறலாமா?

    • எழுதியவர், பத்மா மீனாட்சி
    • பதவி, பிபிசி தெலுங்கு செய்தியாளர்

"தன் கணவர் மனைவியின் குணத்தை சந்தேகிப்பது, அலுவலகத்திற்குச் செல்வது, அவர்களுடன் சண்டை போடுவது, சக ஊழியர்களுடன் பாலியல் உறவு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுவது" ஆகியவை கொடூரமான செயல்களாக கருதப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மனைவி தனது தாலியை கழற்றுவது கணவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் செயலாக கருதலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. தாலியை அகற்றுவது திருமண உறவைத் தொடர்வதில் விருப்பமின்மையை வெளிப்படுத்துகிறது என்பதை நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது .

வழக்கின் பின்னணி

ஈரோட்டை சேர்ந்த சிவகுமார் மற்றும் ஸ்ரீவித்யா இருவரும் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால், கருத்துவேறுபாடின் காரணமாக இவர்கள் இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு சிவகுமார் ஈரோடு குடும்பநல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தன் மனைவி தன்னை சந்தேகித்துக் கொண்டே இருப்பதாகவும், தான் கட்டிய தாலியை அணியாமல் மறுப்பது தனக்கு மன உளைச்சலை கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இதற்கு சரியான ஆதாரம் இல்லாத காரணத்தால் சிவகுமாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேல்முறையீட்டிற்காக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார் சிவகுமார்.

ஸ்ரீ வித்யாவுடன் சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததால், தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று சிவக்குமார் மேல்முறையீடு செய்துள்ளார். தன்னை விட்டு வெளியேறும் போது திருமண உறவின் அடையாளமாக கருதப்படும் தாலியை ஸ்ரீவித்யா நீக்கியதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ வித்யா உள்ளூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது கணவர் தனது சக ஊழியர்களுடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு வைத்திருப்பதாகவும், அவர் தினமும் அதிக மணிநேரம் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவை வைத்துள்ள பெண்ணிடம் பேசுவதாகவும் கூறியுள்ளார். ஆனால், அதே புகாரில், தங்கள் மகளின் எதிர்காலம் கருதி அவருடன் தான் இன்னும் வாழ விரும்புவதாகவும் ஸ்ரீவித்யா கூறியுள்ளார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் சிவகுமார்-ஸ்ரீவித்யா தம்பதிக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஆனால், விவாகரத்து வழங்குவதற்கான காரணங்களாக நீதிமன்றம் கூறியது தான் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தீர்ப்பில் சொல்லப்பட்டது என்ன?

தன் கணவர் குணத்தை சந்தேகிப்பது, அலுவலகத்திற்குச் செல்வது, அவர்களுடன் சண்டை போடுவது, சக ஊழியர்களுடன் பாலியல் உறவு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுவது ஆகியவை இந்து திருமண சட்டம் 13(1)(ia) என்ற பிரிவின் கீழ் வருவதால் இத்தம்பதிக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தச் செயல்கள் கணவரின் நற்பெயருக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இத்துடன் மனைவி தனது தாலியை கழற்றுவது என்பது திருமண உறவைத் தொடர்வதில் அவருக்கு உள்ள ஆர்வமின்மையைக் குறிக்கிறது என்று நீதிமன்றம் காரணம் கூறியது.

"நம் சமூகத்தில் நடக்கும் திருமணச் சடங்குகளில் தாலி கட்டுவது இன்றியமையாத சடங்காக இருக்கிறது. தாலியை அகற்றுவது பெரும்பாலும் சம்பிரதாயமற்ற செயலாகக் கருதப்படுகிறது. திருமண பந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தாலியை அகற்றுவது போதுமானது என்று கூறவில்லை, ஆனால் பிரதிவாதியின் சொல்லப்பட்ட செயலானது, இருதரப்பினரின் நோக்கங்களைப் பற்றி ஒரு அனுமானத்தை வரைவதற்கான ஒரு சான்றாக விளங்குகிறது.

பிரிவின் போது தாலியை அகற்றும் பிரதிவாதியின் செயல் மற்றும் பதிவில் கிடைக்கப்பெறும் பல்வேறு சான்றுகள், இரு தரப்பினருக்கும் சமரசம் செய்தும் திருமண பந்தத்தைத் தொடரும் எண்ணம் இல்லை என்ற உறுதியான முடிவுக்கு வருமாறு எங்களை நிர்பந்திக்க வைக்கிறது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

சட்டம் என்ன சொல்கிறது?

"ஒரு துணையை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவது, பொதுவெளியில் அவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பது போன்றவை கொடூர செயலகளாக கருதப்படும்" என்று ஹைதராபாத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் சிந்தலா கூறியுள்ளார்.

"பொதுவெளியில் தங்கள் துணையின் குணத்தை அவமானப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. பெரும்பாலான குடும்ப வன்முறை வழக்குகளில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மனைவியைப் பழிவாங்கும் எண்ணம் இருப்பது ஒரு பொதுவான நடைமுறையாகிவிட்டது" என்று ஸ்ரீகாந்த் சிந்தலா கூறியுள்ளார்.

"தாலி என்பது மதச் சடங்கு. பரஸ்பர சம்மதத்துடன் அல்லது நாகரீக நோக்கத்திற்காக தாலியை அகற்றுவது வேறு விஷயம். நீதிமன்றங்களும் தாலியை அகற்றுவதன் பின்னணியில் உள்ள நோக்கத்தையும் சூழலையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. தாலியை அகற்றுவது மட்டும் கொடூர செயலாக கருதப்பட்டு விவாகரத்து வழங்குவதற்கான காரணமாக சொல்லப்படாது" என்று ஸ்ரீகாந்த் சிந்தலா கூறியுள்ளார்.

"இந்த வழக்கில் சேகரிக்கப்பட்ட கூடுதல் ஆதாரங்களை கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தாலியை கழற்றுவது மட்டுமே கொடூரச் செயலாகாது," என்கிறார் ஸ்ரீகாந்த்

அதுமட்டுமல்லாமல் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் வல்லபா v/s ஆர். ராஜா சபாஹி 2016 தீர்ப்பை மேற்கோள் காட்டியது.

"வல்லபா மற்றும் ஆர். ராஜா சபாஹி வழக்கில் நீதிபதி வழங்கிய தீர்ப்பின் காரணம் திருமணமான எந்த இந்து பெண்ணும் தன் கணவனின் வாழ்நாளில் எந்த நேரத்திலும் தாலியை அகற்ற மாட்டார்கள் என்பது தெரிந்ததே. மனைவியின் கழுத்தில் உள்ள தாலி என்பது திருமண வாழ்க்கையின் தொடர்ச்சியைக் குறிக்கும் புனிதமான விஷயம்.

கணவனின் மரணத்திற்குப் பிறகுதான் தாலி என்பதே அகற்றப்படும். எனவே, மனுதாரர் மனைவியால் "தாலி" அகற்றப்பட்டதை மிக உயர்ந்த மன உளைச்சலை பிரதிபலிக்கும் செயலாகக் கூறலாம். ஏனெனில் அது வேதனையை உண்டாக்கி, பிரதிவாதியின் உணர்வுகளைப் புண்படுத்தும்". என நீதிபதி தெரிவித்திருந்தார்.

தாலி என்பது உறவுக்கு அடிப்படையா?

"தற்போதைய வழக்கை எடுத்துக் கொண்டால் தாலியை அகற்றுவது என்பது ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது இது நாம் இன்னும் பழங்காலத்திலேயே இருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டுகிறது," என்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான சாய் பத்மா கூறியுள்ளார்.

"பழங்காலங்களில் சிறுமிகளுக்கு மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது மற்றும் தாலி, மெட்டி போன்ற திருமண அடையாளங்கள் பெண்களை அவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளிலிருந்து பாதுகாக்கும் வழிமுறையாக கருதப்பட்டன. நவீன உலகில், பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் தாலியை கூட அணிவதில்லை" என்று சாய் பத்மா கூறினார்.

"உறவை நிர்ணயிப்பதில் அடையாளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று சொல்வது வருத்தமாக இருக்கிறது. பரஸ்பர நம்பிக்கை, பொறுப்பு, புரிதல் இல்லாததால் முறிந்து போன திருமண அமைப்பை தாலி மூலம் உயிர்ப்பிக்க முடியும் என்று சொல்வது வேடிக்கையானது.

அது சரியல்ல. தாலி அணிவதையும் அணியாததையும் வேறு ஏதோ ஒரு நோக்கமாக பார்க்க வேண்டும். இந்த தீர்ப்பு தாலி அணியாதவர்கள் தங்கள் உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று சொல்வது போல் தோன்றுகிறது" என்று சாய் பத்மா கருத்து தெரிவித்துள்ளார்.

சில திருமண மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பின்பற்றாமல் இருப்பது, வேண்டுமென்றே திருமண உறவைப் புறக்கணிப்பதாகும் என்று ஹைதராபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சித்ரா லேகா கூறியுள்ளார்.

"திருமணமானவர் மற்றும் திருமணமாகாதவர்களை வேறுபடுத்துவதற்காக தாலி அணிதல் என்ற நடைமுறை பண்டைய காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்."

"தற்போதைய நவீன யுகத்தில் தாலி அணிவது எவ்வளவு முக்கியம் என்பதும் சிந்திக்க வேண்டியது அவசியம். தாலி அணியாமல் மனைவியாக இருக்கலாம். தாலி அணிவது மனைவிமீது கணவருக்கு உரிமை வழங்குகிறதா?" சித்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆணாதிக்கத்தின் அடையாளங்கள்

"தாலி மற்று மெட்டி அணிவது, நெற்றியில் குங்குமமிடுவது ஆகியவை திருமணத்தின் அடையாளங்கள் . ஆனால், அதை அணியாதது தனது கணவர்மீது ஏற்படும் விருப்பமின்மை மற்றும் அன்பின் குறைவு என்று சொல்ல முடியாது" என்று பாப்புலேஷன் ஃபர்ஸ்ட் அமைப்பின் இயக்குனர் ஏ.எல்.சாரதா கூறியுள்ளார்.

மேலும், இந்த அடையாளங்கள் பெண்களுக்கு மட்டும் ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

"இவை ஆணாதிக்கத்தின் அடையாளங்கள் . அவற்றை அணிவது அல்லது அணியாதது உறவின் வலிமையை தீர்மானிக்காது, என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :