You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜார்கண்டில் ஒரு பாரம்பரியம்: வாழ்ந்து பார்த்த பிறகு திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகள்
- எழுதியவர், ரவி பிரகாஷ்
- பதவி, ராஞ்சியில் இருந்து பிபிசி ஹிந்திக்காக
குந்தி மாவட்டத்தில் உள்ள தூமர்தகா என்ற ஊரைச் சேர்ந்த ஃபுல்மணி டூட்டிக்கு 46 வயது. 1998-ம் ஆண்டு அவருக்கு முதல் திருமணம் நடந்தபோது அவருக்கு வயது 22. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது கணவர் காலமானார். அந்த நேரத்தில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. மூன்றாவது குழந்தை வயிற்றில் இருந்தது.
கணவர் இறந்த பிறகு அவர் தனியாகிவிட்டார். மூன்று குழந்தைகள், ஆனால் சம்பாதித்து வீட்டை நடத்த ஒரு ஆண் இல்லை.
அவருடைய மாமனார் மிகவும் வயதானவர். இதனால் அவர் வெளியே சென்று வேலை செய்யும் நிலையில் இல்லை. மாமியார் ஏற்கனவே இறந்துவிட்டார். ஃபுல்மணியின் வாழ்வில் துயரம் அப்போது மலைபோல் இருந்தது. அதைக் கடக்க அவருக்கு எந்த வழியும் தெரியவில்லை.
ஃபுல்மணி தனது இரண்டு மகன்கள், ஒரு மகள் மற்றும் மாமனார் பிர்ஸா லோஹ்ராவுடன் வசித்து வந்தார். அப்போது அவரது மாமனார் தனது சகோதரி மகன் மகாவீரை தத்தெடுத்தார்.
மகாவீருடன் ஃபுல்மணி டூட்டியின் நெருக்கம் அதிகரித்து அவர்கள் சேர்ந்து வாழத் தொடங்கினர். இந்த உறவை அவரது மாமனாரும் ஆதரித்தார்.
தன் மருமகளுக்கு வாழ்க்கைத் துணையும் வீட்டிற்கு வாரிசும் கிடைத்ததால், மாமனார் மகிழ்ச்சியாக இருந்தார். இப்போது இந்த உறவுக்கு சமூக அங்கீகாரம் கொடுக்க, அவர் கிராமத்தலைவர்களிடம் செல்ல வேண்டியிருந்தது. இருவரும் முறையாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் கருதினார். ஆனால் துரதிருஷ்டவசமாக அதற்கு முன்பே மாமனார் இறந்துவிட்டார்.
ஃபுல்மணி டூட்டியின் மகன்கள் மகள், மற்றும் அவர் சேர்ந்து வாழும் துணைவர் மகாவீர் லோஹ்ரா ஆகியோர் வீட்டில் ஒன்றாக இருந்தனர். மகாவீர் வேலை செய்து வீட்டுச் செலவுக்கு பணம் கொடுக்கத்தொடங்கினார். ஃபுல்மணியின் வாழ்க்கை வண்டி மீண்டும் சரியாக ஓட ஆரம்பித்தது. அவர்கள் கணவன் மனைவி போல வாழ ஆரம்பித்தார்கள்.
ஆனால், அவர்களுக்கு முறையாக திருமணம் ஆகாததாலும், சமூகத்தின் முறையான அங்கீகாரம் இல்லாமல் வாழ்ந்ததால், மகாவீரை எல்லோரும் 'டுக்கு' என்று அழைத்தனர். இதன் காரணமாக, ஃபுல்மணி டூட்டியால் தனது மாமனாரின் நிலத்தில் உரிய ஆவண உரிமையைப் பெற முடியவில்லை.
'நிமித்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வெகுஜன திருமண விழாவில் அவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்த அமைப்பின் கிராம ஒருங்கிணைப்பாளராகவும் ஃபுல்மணி உள்ளார்.
சர்னா மதத்தினர்
"எனது மாமனாரின் சொத்துரிமை எனக்கு கிடைத்துள்ளது. என் கணவருக்கு' டுக்கு 'என்று அழைக்கப்படுவதிலிருந்து விடுதலை கிடைத்தது. நாங்கள் இப்போது சட்டப்பூர்வமாக கணவன்-மனைவியாக இருக்கிறோம். எங்களின் இந்த திருமணம் 16 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பிறகு நடந்துள்ளது. அதனால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நாங்கள் சர்னா மதத்தினராக இருந்தோம். ஆனால் இப்போது நாங்கள் கிறிஸ்தவர்கள். எனவே எங்கள் திருமணம் கிறித்துவ முறைப்படி நடந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் சர்னா மற்றும் இந்து மதத்தினருக்கும் திருமணம் நடந்தது. அவர்கள் அனைவரும் எங்களைப் போலவே முன்பு சேர்ந்து வாழ்ந்தவர்கள்,"என்று ஃபுல்மணி டூட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.
பல ஜோடிகளுக்கு திருமணம்
ஃபுல்மணி டூட்டியைப் போலவே, மேலும் பல 'டுக்கு' ஜோடிகளும் குந்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட சமூகத் திருமண விழாவில் திருமணம் செய்து கொண்டனர். இப்போது அனைவரின் 'லிவ்-இன்' உறவுக்கும் சமூக மற்றும் சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது.
69 வயதில் திருமணம் - பேரக் குழந்தைகளோடு
அவர்களில் சில்வந்தி முண்டாயினும் ஒருவர். அவருக்கு 69 வயது. அவருக்கு பேரக்குழந்தைகள் உள்ளனர். ஆனால் சில்வந்திக்கு இதுவரை முறையாக திருமணம் நடக்கவில்லை. இவரது மூத்த மகனுக்கு 40 வயது. சில்வந்தி, தனது துணைவர் பிரபு சஹாய் ஐந்துடன் கடந்த 46 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
இப்போது அவர்கள் முறையாக திருமணம் செய்து கொண்டனர். ஜார்கண்ட் பழங்குடி சமூகத்தின் பாரம்பரியத்தின் படி, சில்வந்திக்கு தனது புகுந்த வீட்டின் சொத்தின் மீது உரிமை கிடைத்துள்ளது.
பிரமீளா டோப்னோ, தெக்லா உரைன், ஃபூலோ முண்டாயின், ஜௌனி முண்டாயின்,கிருபா சோய், மரியம் போத்ரா, சாந்தி ஐந்த் ஆகியோரும் பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து குழந்தைகள் பிறந்த பிறகு முறையாக திருமணம் செய்து கொண்டவர்களில் அடங்குவர்.
பழங்குடி பாரம்பரியத்தின் ஒருபகுதி இது என்பதால், ஜார்க்கண்டில் இதுபோன்ற திருமணங்கள் பற்றிய செய்தி யாரையும் ஆச்சரியப்படுத்துவதில்லை.
பழங்குடி சமூகத்தில் பல வகையான சேர்ந்து வாழும் நடைமுறைகள் உள்ளன. டுக்கு வழக்கமும் அதில் ஒன்று.
டுக்கு வழக்கம் என்றால் என்ன?
பழங்குடி சமூகம் பொதுவாக பெண் ஆதிக்கம் கொண்டதாகக் கருதப்படுகிறது. அங்கு ஒவ்வொரு முடிவிலும் பெண்களின் பங்களிப்பு உறுதி செய்யப்படுகிறது. இருப்பினும், சொத்துக்கள் மீதான பேராசையால் (கிடைத்த தரவுகளின்படி) பெண்களை சூனியக்காரி என்று கூறி சித்திரவதை செய்து கொல்லும் சம்பவங்கள் காரணமாக ஜார்கண்ட் விமர்சனத்திற்கு உள்ளாகிறது.
இது அடிப்படையில் பழங்குடி சமூகம் தொடர்பான பிரச்சனை. இருந்தபோதிலும், இங்குள்ள பழங்குடி சமூகத்தின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள், திருமணம் மற்றும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது, ஆகியவற்றில் பெண்களுக்கு சிறப்பு உரிமைகள் உள்ளன.
டுக்கு வழக்கமும், இந்த சுதந்திரத்தின் ஒரு பகுதிதான் என்று பழங்குடி மதத் தலைவர் பந்தன் திக்கா கூறுகிறார்.
"ஜார்கண்ட் ஊர்ப்புறங்களில் நடைபெறும் தூம்குடியா விழாவில் இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் தனித்தனி தங்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மாலையில் அவர்கள் ஒன்றாக ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். இதன் போது, ஒரு பெண்ணுக்கோ, இளைஞனுக்னோ யாரையாவது பிடித்தால், அவர்கள் காதலை வெளிப்படுத்துகிறார்கள். பிறகு இந்த விஷயத்தை பெற்றோரிடம் சொல்கிறார்கள், குடும்பத்தார் சம்மதித்தால், திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால், சில நேரங்களில் குடும்பத்தினர் அதற்கு சம்மதிப்பதில்லை.
அந்த நிலையில் அவர்கள் சேர்ந்து வாழத் தொடங்குகிறார்கள். இது டுக்கு என்று அழைக்கப்படுகிறது. பல நேரங்களில் இதுபோன்ற தம்பதிகள் ஊரை விட்டு வெளியேறி, குழந்தைகளைப் பெற்ற பிறகு திரும்புகிறார்கள். பின்னர் அவர்கள் சமூக அங்கீகாரத்திற்காக முறையாக திருமணம் செய்துகொள்ள, பஹான், மஹ்தோ ஆகியவர்கள் அடங்கிய ஊர் மன்றத் தலைவர்களிடம் செல்கிறார்கள்.," என்று பந்தன் திக்கா பிபிசியிடம் கூறினார்.
"ஊர் மன்றம் அவர்களுக்கு தண்டம் விதிக்கிறது. தண்டத் தொகையை செலுத்திய பிறகு, அவர்களுக்கு முறையாக திருமணம் செய்விக்கப்படுகிறது. அதனால், அவர்கள் தங்கள் பூர்வீக சொத்தில் பங்கை பெறலாம், தங்கள் குழந்தைகளுக்கு முறையாக திருமணம் செய்யலாம். எனவே சில சமயங்களில் ஒரே பந்தலில் அல்லது சில மணி நேர இடைவெளியில், பெற்றோர் மற்றும் அவர்களது பிள்ளைகள் திருமணமும் நடப்பதை பார்க்க முடிகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
சமூகத் திருமணம் ஏன்
"பொதுவாக டுக்கு இணைக்கு அபராதம் பெயரளவில்தான் இருக்கும். சில சமயங்களில் இது ரூ. 100-200 அல்லது ஒரு காசி (ஆடு) முதல் கிராமம் முழுவதும் உள்ள மக்களுக்கு விருந்து வைப்பது வரை இருக்கும். அபராதம் விதிக்கும்போது, அந்த ஜோடியின் பொருளாதார நிலைமையையும் பஞ்சாயத்து கவனத்தில் கொள்ளும்," என்று பந்தன் திக்கா கூறுகிறார்.
டுக்கு வழக்கத்தில் சேர்ந்து வாழும் இணைகளின் சமூகத் திருமண விழாக்களை ஏற்பாடு செய்யும் 'நிமித்' என்ற அரசு சாரா அமைப்பின் நிறுவனர் செயலர் நிகிதா சின்ஹா, ஜார்கண்டில் இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகக்கூறுகிறார். கோல் இந்தியா நிறுவனமும், குந்தி மாவட்ட நிர்வாகமும் தனது நிகழ்ச்சிக்கு ஆதரவளித்துள்ளதாக அவர் கூறினார்.
"நிமித் மூலம் இதுவரை 1950 இணைகளின் திருமணங்களை நாங்கள் செய்துள்ளோம். இதற்காக, பத்துக்கும் மேற்பட்ட சமூகத் திருமண விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதுபோன்ற திருமணங்களை நடத்தும்போது, அந்த இணைகளின் மதம் என்ன என்பதை நாங்கள் நினைவில் கொள்கிறோம். அவர்கள் சர்னா (பழங்குடியினர் மதம்) , இந்து, கிறிஸ்துவர்கள் அல்லது வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் திருமணம் அவர்களது மத மரபுகளின்படி செய்யப்படுகின்றன," என்று. பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.
இதுவரை நடந்த திருமணங்களின் புள்ளிவிவரங்களின்படி, 85 சதவிகித தம்பதிகள் குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளில் 85 சதவிகிதம் பேர் பட்டியல் பழங்குடியினர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்