பாஜக எதிர்ப்பை மீறி திருமணம்: தன்னைத் தானே மணந்துகொண்டார் குஜராத்தின் ஷாமா பிந்து

(இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (10/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

குஜராத்தைச் சேர்ந்த ஷாமா பிந்து என்ற பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார். பாஜக தலைவர் ஒருவரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், அவர் இந்து திருமணச் சடங்கு முறையைப் பின்பற்றி திருமணம் செய்துகொண்டதாக, 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இவரின் இந்த அறிவிப்புக்கு பல விமர்சனங்கள் எழுந்தன. பாஜக தலைவர் ஒருவர், இந்தத் திருமணம் நடப்பதை அனுமதிக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றுறு (வியாழக்கிழமை) ஷாமா பிந்து இந்து திருமண சடங்குகள்படி தன்னையே திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் பிந்துவின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர் என, 'இந்து தமிழ் திசை' செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழிவுநீர்த் தொட்டிகளை மனிதர்கள் இன்றி சுத்தம் செய்ய 'ரோபோ': சென்னை ஐஐடிகண்டுபிடிப்பு

கழிவுநீர்த் தொட்டிகளை மனிதர்கள் இன்றி சுத்தம் செய்ய 'ரோபோ' கருவியை சென்னை ஐஐடி கண்டுபிடித்து உள்ளது என, 'தினத்தந்தி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

அச்செய்தியில், "இந்தியாவில் மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறையை ஒழிப்பதற்காக சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களால், 'ஹோமோசெப்' ரோபோ உருவாக்கப்பட்டு உள்ளது. இது தற்போது களப் பணிக்குத் முழுமையாகத் தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மொத்தம் 10 எந்திரங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான இடங்களைக் கண்டறிவது தொடர்பாக தூய்மைப் பணியாளர்களுடன் ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே தொடர்பு கொண்டு உள்ளனர். குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமையில், எந்திரப் பொறியியல் துறை ஆசிரியர் மற்றும் துறை சார்ந்த பேராசிரியர்கள் ரோபோவை உருவாக்கி உள்ளனர். தூய்மைப் பணியாளர்களே ஆபரேட்டர்களாக பணியாற்றுவார்கள். ரோபோவை முழுமையாக கையாளவும், இயக்கவும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இலங்கையில் 80 சதவீதமானோர் மலிவான உணவை உண்கின்றனர்"

இலங்கையில் உள்ள குடும்பங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்த அல்லது மலிவான உணவை உண்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது என, 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், "உலக உணவுத் திட்டம் மாதாந்த அறிக்கையில் மேற்கண்ட விவரம் வெளியாகியுள்ளது. இது ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயத்தை உயர்த்தியுள்ளதாகவும் கூறியுள்ளது.

தொடர்ச்சியாக இரண்டு பருவங்களில் இருந்து நெல் அறுவடை குறைவதால் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிக்கும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், வழங்கல் பற்றாக்குறை மற்றும் அதிக உற்பத்திச் செலவு காரணமாக உள்ளூர் அரிசி வகைகளின் விலை 6 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அரச அதிகாரிகளின் வீடுகளைத் தாக்குவார்கள் - இலங்கை அமைச்சர் காஞ்சன விஜேசேகர

சிறந்த திட்டங்களை செயற்படுத்தாவிடில் மக்கள் இனி அரசியல்வாதிகளின் வீடுகளை அல்ல, அரச அதிகாரிகள் வீடுகளை தாக்குவார்கள் என, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று கூட்டத்தொடரின்போது மின் கட்டண அதிகரிப்பு தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் மயந்த திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

"மின்கட்டணத்தை அதிகரிப்பதை விடுத்து மின்னுற்பத்திக்கான செலவை குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும். சிறந்த திட்டங்களை செயற்படுத்தாவிடின் மக்கள் இனி அரசியல்வாதிகளின் வீடுகளை அல்ல அரச அதிகாரிகள் வீடுகளை தாக்குவார்கள்" என தெரிவித்துள்ளதாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: