ஈரோடு சிறுமியின் கரு முட்டை விற்ற சர்ச்சை: 4 மருத்துவமனைகளை மூட நடவடிக்கை

மா. சுப்பிரமணியன்
படக்குறிப்பு, மா. சுப்பிரமணியன்

ஈரோடு சிறுமியின் கருமுட்டை எடுத்து விற்ற வழக்கில் தொடர்புடைய 4 மருத்துவமனைகளையும் நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.

சென்னை, தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது அவர் இந்த தகவலைத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, "16 வயது சிறுமியிடம் இருந்து சினை முட்டையை எடுத்து ஈரோடு, சேலம் ஓசூர் பகுதிகளில் உள்ள செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு வணிக ரீதியில் விற்பனை செய்வதாக செய்தி வெளியாகி இருந்தது. இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஆலோசனையின்படி இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.

அவர்கள் சமர்ப்பித்த அந்த ஆய்வறிக்கையின் படி விசாரணையில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. சிறுமியின் உண்மையான பெயர், வயது மறைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.

அதே போல் சினைமுட்டை தானத்திற்கு சிறுமியை அவரது குடும்பத்தினரே ஒப்பந்தம் செய்து அதில் ஈடுபடுத்தியதாகவும் தெரிய வருகிறது . சினை முட்டையை எடுப்பதற்கு முன் சினை முட்டை வழங்குபவருக்கு அதனுடைய சாதக பாதகங்களை விளக்க வேண்டும். ஆனால் இந்த விவரங்கள் சிறுமிக்கு சொல்லப்படவில்லை. சினை முட்டை பல முறை எடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியான தகவல். அந்த ஒரே சிறுமியிடமிருந்து மட்டும் மாதம் தோறும் பலமுறை சினை முட்டை எடுத்துள்ளார்கள். ஆதார் அட்டை போலியாக தயாரிக்கப்பட்டது என்று தெரிந்தும் சம்பந்தப்பட்ட 6 மருத்துவமனைகள் அதனை தவறாக பயன்படுத்தியது தெரிய வருகிறது.

விசாரணை அடிப்படையில் ஈரோடு சுதா மருத்துவமனை, சேலம் சுதா மருத்துவமனை, பெருந்துறை ராம் பிரசாத் மருத்துவமனை ஓசூர் விஜய் மருத்துவமனை மற்றும் திருவனந்தபுரம் ஸ்ரீ கிருஷ்ணா , திருப்பதி மத்ருத்வா மருத்துவ மனை என 6 மருத்துவமனைகள் தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை மீறி செயல்பட்டிருப்பது தெரிய வருகிறது," என்று தெரிவித்தார் மா.சுப்ரமணியன்.

"விசாரணை அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களும் மருத்துவமனைகளால் முறையாக கொடுக்கப்படவில்லை. எனவே நீதிமன்ற ஆணையின்படி சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள இரு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த மாநில அரசுகளுக்கு துறை செயலாளர் மூலம் பரிந்துரைகள் அனுப்பப்படுகிறது.

கரு முட்டை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கருமுட்டை - சித்தரிப்புப் படம்.

அதாவது இன்று முதல் 15 நாட்களுக்குள் மேற்கூறிய அந்த நான்கு மருத்துவமனைகளிலும் இருக்கிற உள்நோயாளிகளை உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து அனுப்பிவிட்டு பிறகு உரிய வழி முறைகளின் படி சட்ட விதிமுறைகளின் படி அந்த மருத்துவமனைகளை நிரந்தரமாக மூடுவதற்குரிய நடவடிக்கைகள் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக ஏ.ஆர்.டி சட்டத்தின் படி 50 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க வாய்ப்பிருக்கிறது.10 ஆண்டுகள் சிறைக்கு அனுப்பும் வாய்ப்பும் இருக்கிறது. சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் மருத்துவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவதற்கு இணை இயக்குநர் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் இருக்கும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் கடமையுணர்வோடு, மனிதாபிமான உணர்வோடு, மனித நேயத்தோடு செயல்பட வேண்டும்.

மருத்துவ சேவை என்பது மகத்தானது. இது ஒரு வியாபாரமல்ல, இது ஒரு பணம் ஈட்டும் தொழில் இல்லை என்பதை உணர்ந்து மருத்துவமனைகள் செயல்பட வேண்டும்," என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு, இலங்கை நெருக்கடி: கோட்டாபய ராஜபக்சவுக்கு மாலத்தீவில் இருக்கும் சொத்துகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :