அசாம் வெள்ளம்: 45 பேர் பலி, பல லட்சம் பேர் வீடிழந்தனர்- எங்கும் தண்ணீர்

- எழுதியவர், திலிப் குமார் ஷர்மா, அசாம் மற்றும் சோயா மேட்டீன் டெல்லி
- பதவி, பிபிசி
"எங்களை சுற்றி எங்கும் நீர் சூழ்ந்துள்ளது, ஆனால் குடிப்பதற்கு ஒரு சொட்டு நீர் இல்லை."
சனிக்கிழமையன்று தனது வீட்டின் நிலையை இப்படித்தான் ராஞ்சு செளத்ரி விவரித்தார்.
அவர் கடுமையாக வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான அசாமில் உள்ள தொலைதூர கிராமமான உடியானாவில் வசிக்கிறார்.
இந்த வெள்ளத்தால் பல லட்சம் பேர் வீடிழந்துள்ளனர். இதுவரை 45 பேர் இந்த வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர்.
மழை விடாமல் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது என அவர் நினைவு கூர்கிறார். ஒரு சில மணிநேரங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழந்துவிட்டது. மழைநீர் அவர்களின் வீட்டிற்குள் புகுந்துவிட்டபோது, இருட்டில் அவரது குடும்பம் மிகவும் சிரமப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.
இரண்டு நாட்கள் முடிந்த பின்னும் அவரின் குடும்பத்தால் வீட்டைவிட்டு வெளியேற முடியவில்லை. இப்போது அவர்களின் வீடு எல்லாப் பக்கமும் நீரால் சூழந்த ஒரு தீவைப் போல காட்சியளிக்கிறது.

"எங்களின் வீடு எல்லாப் பக்கத்திலும் நீரால் சூழப்பட்டுள்ளது. ஆனால் குடிப்பதற்கு நீர் இல்லை. உணவும் தீர்ந்து போகும் நிலையில்தான் உள்ளது. நீரின் அளவு மேலும் அதிகரிக்கிறது என கேள்விப்பட்டேன். எங்களுக்கு என்ன நேரும்?" என்றார் செளத்ரி.
அசாமில் எதிர்பாராமல் பெய்த மழையால் பலத்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கிராமங்கள் நீரில் மூழ்கிவிட்டன. பயிர்கள் அழிந்து, வீடுகள் சேதமடைந்தன.
அசாமில் உள்ள 35 மாவட்டங்களில் 32 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த மழையால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். 47 லட்சம் பேர் தங்களின் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.
கனத்த மழையால் அருகாமை மாநிலமான மேகாலயாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசாமில் 1,425 தற்காலிக பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் மழையின் தீவிரம் மிக கடுமையாக இருப்பதால் அதிகாரிகள் தங்களின் பணி அத்தனை எளிமையானது இல்லை என்கின்றனர்.
"முகாமில் குடிக்க நீர் இல்லை. எனது மகனிற்கு காய்ச்சல் அடிக்கிறது. அவனை மருத்துவரிடம் கொண்டு செல்ல முடியவில்லை," என்கிறார் ஹஸ்னா பேகம். இவரும் உடியானா கிராமத்தை சேர்ந்தவர்
மழைநீர் அவரின் வீட்டை சூழ்ந்த போது அவர் நீந்திக் கொண்டே யாரேனும் உதவிக்கு வருவார்களா என்று தேடினார். தற்போது ஒரு கிழிந்த பிளாஸ்டிக் டென்டில் தனது இரு குழந்தைகளுடன் தவித்து வருகிறார் 28 வயது பேகம்.

தன்னுடைய வாழ்நாளில் இப்படி ஒரு வெள்ளத்தை அவர் பார்த்தது இல்லை என்கிறார்.
அசாம் மக்களின் வாழ்க்கையின் ஆதாரம் என்று சொல்லப்படும் பிரம்மபுத்ரா நதி கரையில் வசிக்கும் மக்களுக்கு இம்மாதிரியான வெள்ளம் புதியதல்ல. ஆனால் பருவநிலை மாற்றம், தீவிர தொழில்மயம், முறையற்ற கட்டுமானம் இவற்றால் தீவிர வானிலை பேரழிவுகள் அதிகமாக நடக்கின்றன.
கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் அசாமில் 39 பேர் உயிரிழந்தனர். இந்த மாதம் ஏற்கனவே சராசரியைக் காட்டிலும் 109 சதவீதம் அதிக அளவிலான மழை பொழிந்துவிட்டதாக வானிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பல இடங்களில் பிரம்மபுத்ரா நதி அபாய அளவை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த வெள்ளம் குறித்து அசாம் மக்கள் மற்றும் அதிகாரிகளிடம் பேசியது பிபிசி. தற்போதைய இந்த பேரழிவை அசாமின் சமூக மற்றும் பொருளாதார அமைப்பை மாற்றும் ஒரு பேரழிவாக அவர்கள் பார்க்கிறார்கள்.
இந்த முறை நிலைமை மேலும் மோசமாகவுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவுடன் ராணுவமும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட அனைத்து பகுதியும் நீரில் மூழ்கி புதியதாக தோன்றிய ஒரு நதியை போல காட்சியளிக்கின்றன.

அசாமின் பொருளாதார மையமாக விளங்கும் கெளஹாத்தி நகரம், அதன் அருகாமை பகுதிகள் இடிபாடுகள் சூழ்ந்த பகுதியாக காட்சியளிக்கிறது. நெல் விளையும் நிலங்கள் சேறு நிறைந்த பகுதியாக தோன்றுகிறது.
உடியானா கிராமத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள், கோயில்கள், மசூதிகள் என எதையும் பார்க்க முடியவில்லை. எங்கும் நீர் மட்டுமே காட்சியளிக்கிறது. மக்கள் வாழை இலையாலும், மூங்கில் குச்சிகளாலும் ஆன படகுகளால் பயணிக்கின்றனர். இல்லையேல் அந்த நீரில் விரக்தியுடன் நீந்தி ஆரஞ்சு நிற உடையணிந்த மீட்புப் பணியாளர்களை மக்கள் தேடுகின்றனர்.
காமரூப் மாவட்டத்தில் இன்னும் பலர் வீடுகளில் சிக்கி தவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
64 வயதான சிராஜ் அலி, தனது கிராமத்தில் வெள்ள நீர் சூழந்து அனைத்தையும் அழித்தபோது தனது உயிருக்கு ஆபத்து வந்துவிட்டதாக கருதினார். இருப்பினும் பகுதியளவில் நீரால் மூழ்கிய தனது வீட்டில் தொடர்ந்து தங்கி வருகிறார் சிராஜ் அலி. தனது பிள்ளைகளை மட்டும் சாலையோரத்தில் இருக்கும் முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
"நீரால் சூழந்தபோதும், குடிநீர் இல்லை. உணவு இல்லை. மூன்று நாட்களாக பட்டினியாக இருக்கிறேன். எங்கு செல்வேன் என்ன செய்வேன்? என்று புரியவில்லை" என்கிறார் கண்ணில் கண்ணீர் மல்க.

அலியை போலவே அவரின் பக்கத்து வீட்டுக் காரர் முகமது ரபுல் அலியும் தனது வீட்டை பாதுகாக்க அங்கேயே தங்க முடிவெடுத்துவிட்டார்.
"சைக்கிள், வீட்டுக்கு தேவையான மெத்தை, நாற்காலி என அனைத்தும் மிகவும் சிரமப்பட்டுதான் வாங்கினேன் ஆனால் அது அத்தனைதும் இப்போது அழிக்கப்பட்டுவிட்டது," என்கிறார் ரபுல்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வருக்கும் நீர் மற்றும் உணவு வழங்குவது சிரமமாக உள்ளது என்கின்றனர் அதிகாரிகள்
வெள்ளத்தை தாங்கும் மாநிலத்தின் நீடித்த முயற்சிகளை பருவநிலை மாற்றம் கடினமாக்கிக் கொண்டு வருகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
"இந்த முறை ஏற்பட்ட வெள்ளம் மிக ஆபத்தானது என்பதில் சந்தேகமில்லை. அதேபோல மழையின் அளவும் அதிகரித்துள்ளது" என்கிறார் அசாம் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியர் ஜெயஸ்ரீ ரவுட்.
இருப்பினும் இதற்கு பருவநிலை மாற்றம் மட்டுமே காரணம் என்று சொல்வதற்கு முன்னால் காடுகளை அழிப்பது போன்ற மனிதர்களின் செயல்பாடுகள் குறித்தும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.
மரங்கள் வெட்டப்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும் என்று கூறும் ரவுட், குறிப்பாக நதிக் கரைக்கு அருகாமையில் இருக்கும் மரங்களை வெட்டுவதை நிறுத்த வேண்டும்.
ஏனென்றால் இந்த மரங்களின் வேர்கள் நீண்ட நேரம் நீரை பிடித்து வைக்க பயன்படும்.
ஆனால் இந்த காரணங்கள் குறித்து ஆராய தனக்கு எந்த நேரமும் இல்லை என்று கூறும் செளத்ரி, மேகம் சூழந்த வானத்தில் சூரியன் ஏதோ துளிகளை போல காட்சியளிக்க பாதியளவு மூழ்கிய தனது வீட்டில் மிகுந்த வருத்தத்துடன் அமர்ந்திருக்கிறார் அவர்.
"இதுவரை இங்கு யாரும் வரவில்லை எந்த நிவாரணமும் தரவில்லை. யாராவது வருவார்களா என்று தெரியவில்லை" என்கிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












