வெறுப்புணர்வு பரவியுள்ள இந்தக் காலத்தில் நம் குழந்தைகளுக்கு அன்பின் பாடத்தைக் கற்பிப்பது எப்படி?

குழந்தைகள்

பட மூலாதாரம், NATASHA BADHWAR

    • எழுதியவர், நதாஷா பத்வார்
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக

தாயாக வேண்டும் என்று நான் எப்போதும் கனவு கண்டேன். என் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. நான் ஒரு நல்ல தாயாக இருப்பேன் என்று எனக்குத் தெரியும். என் குழந்தையின் கையைப் பிடித்தபடி நடப்பதை நான் கற்பனை செய்தேன். இருவரும், சுறுசுறுப்பாக நடை பயின்றபடி, உள்ளத்தில் மகிழ்ச்சி ததும்ப உலாவுகிறோம்.

எனது முதல் குழந்தையைப் பெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே நான் என் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பது பற்றிக் குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தேன். இந்த குறிப்புகள் உதவிகரமாகவே இருந்தன.

நான் என் மகளை முதன்முறையாக அணைத்துக் கொண்டபோது நான் பிரசவ டேபிளில் இருந்தேன். அப்போதே நான் அவளுக்காக லேசாக ஒரு பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தேன்.

அவள் இடைவிடாமல் அழுது கொண்டிருந்தாள். ஆனால் என் பாடலைக் கேட்டு அவளது அழுகை குறைந்துவிட்டது. அவள் கேட்கிறாள் என்று நான் நம்பினேன். அவளுக்கு என் குரல் தெரியும். அவள் என் வயிற்றில் இருக்கும் போதிருந்தே அவளுக்காக இந்தப் பாடலைப் பாடி வருகிறேன்.

ஆனால் காலப்போக்கில் என் குரல் எப்போதும் அவளை அமைதிப்படுத்தாது என்பதை நான் உணர்ந்தேன். இரண்டே வாரங்களில், என் கணவர், என் அம்மா, நான் மூவரும் சேர்ந்து ஒரு குழந்தை ஏன் அழக்கூடும் என்பதற்கான பட்டியலைத் தயாரித்தோம். அது இப்படி இருந்தது.

1. குழந்தைக்கு பசிக்கிறதா?

2. ஏப்பம் விடச் செய்ய வேண்டுமா?

3. நாப்பி ஈரமாக உள்ளதா?

4. தூங்குவதற்காக மெதுவாக அசைக்க வேண்டுமா?

5. மூக்கு அடைப்பட்டுள்ளதா?

6. மீண்டும் முதல் கேள்விக்கு திரும்புதல்

சில நேரங்களில் குழந்தைகளை என்ன செய்தாலும் அமைதிப்படுத்துவது கடினம். எல்லா முயற்சிகளும் வீணாகும்போது, ​​நாங்கள் எங்கள் குழந்தையை மென்மையான நீல நிற பாந்தினி துப்பட்டாவால் போர்த்தி, மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்வோம். இது எங்கள் எல்லார் மனதையும் அமைதிப்படுத்தியது.

NATASHA BADHWAR

பட மூலாதாரம், NATASHA BADHWAR

உலக விஷயங்களைக் கேட்கும் பயிற்சி

எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒரு நாள் மாலை இப்படி நாங்கள் நடந்து செல்லும் போது மழை பெய்ய ஆரம்பித்ததும், சாலையோரத்தில் உள்ள ஒரு தேநீர் கடையில் தஞ்சம் புகுந்தோம். இந்தப் புதுப் பெற்றோர் இவ்வளவு சிறிய குழந்தையுடன் இங்கு வந்திருக்கிறார்கள் என்று எங்களைச் சுற்றி இருந்தவர்கள் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். நான் குழந்தையைப் பாதுகாப்பாக என் மார்பில் கட்டியிருந்தேன். ஆனாலும் நாங்கள் விசாரணைக் கூண்டில் நிற்பது போல உணர்ந்தோம்.

வருடங்கள் செல்லச் செல்ல, வாழ்க்கையின் பாதையில் எங்கள் பயணம் முன்னேறியது. பருவங்கள் மாறிக்கொண்டே இருந்தன. நான் சரியென்று கருதிய பல தவறான புரிதல்கள் விலக ஆரம்பித்தன. மக்கள் முறைத்துப் பார்த்தால், அவர்கள் முறைக்கட்டும். மக்களின் சுடுவார்த்தைகளை இதயத்தில் வாங்க அவசியமில்லை என்றும் நான் கற்றுக்கொண்டேன்.

அந்நியர்களின் கருத்துகள், அவர்களின் அறிவுரைகள் மற்றும் அவர்களின் ஏச்சுகளுக்குக் கூட நான் புன்னகையை பதிலாகத் தரும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். குழந்தைகள் தங்கள் சொந்த வழியில் உலகத்தை ஆராயச் சென்றபோது, ​​​​நான் என் இதயத்தை கடினமாக்கிக் கொண்டேன். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், என் மனப் பாதுகாப்புக்காக, பறவையின் கூடு போல இருக்கக்கூடிய ஒரு வீட்டைக் கட்ட ஆரம்பித்தேன். பாதுகாப்பாக இருக்கவும், சத்தமாகச் சிரிக்கவும், புத்துணர்ச்சி பெறவும் இங்கு திரும்ப முடியும்.

பெற்றோராக இருப்பதன் அர்த்தம் என்ன?

பெற்றோர் என்றால் குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்கள் மட்டுமல்ல. புதிதாக ஒன்றை உருவாக்கும் பணி பின்னர்தான் தொடங்குகிறது. முதலில் உங்களிடமிருந்து பலவற்றை அழிக்க வேண்டியது அவசியம். உங்கள் ஆணவம் இங்கு எந்த சத்தமும் இல்லாமல் சரிகிறது. கருத்தரிப்பதற்கு முன்பு நீங்கள் யாராக இருந்தாலும், இப்போது அவரிடமிருந்து (அந்த சுபாவங்களில் இருந்து) நீங்கள் விடைபெறவேண்டும்.

உங்களின் சுய உணர்வு என்னவாக இருந்தாலும், அதை புதிதாக வரையறுக்கவேண்டும். ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பு நாம் ஒன்றாக இருந்ததைப் பற்றிய ஒரு மங்கலான நினைவை மட்டுமே பாதுகாக்க வேண்டும்.

பெற்றோராக இருப்பது என்பது ஒரே மூச்சில் பெருமை மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டையும் உணர்வதாகும். எதையோ இழந்ததான உணர்வும் ஏற்படும். இந்த நேரத்தில் நீங்கள் எதை இழந்தீர்கள் என்று சொல்வது கடினம். நாம் எதைத் தேடுகிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள குழந்தைப் பருவ நினைவுகளைத் திரும்பத் திரும்ப அலசுகிறோம்.

ஒரு நபர் வளர்ந்து குழந்தைகளைப் பெற்றெடுக்கும் போது, ​​அவரது இழந்த குழந்தைப் பருவம் அவரது நினைவின் ஜன்னலைத் தட்டுகிறது. தனக்கு சிகிச்சை கோருகிறது. நம் குழந்தைகளை வளர்க்கும் போதுதான், நமக்குள் தொலைந்து போன குழந்தையை மீட்டெடுக்க வேண்டும் என்பதும் நமக்குப் புரிகிறது.

என் குழந்தைகள் வளரும்போது, ​​வீட்டிலிருந்து வெளியில் அவர்களைச் சுற்றியுள்ள சூழல் எவ்வளவு குழப்பமாக மாறிவிட்டது என்று கவனிப்பதை என்னால் தடுக்க முடியவில்லை. கெட்ட செய்திகள், மோதல்கள் மற்றும் இரைச்சல் ஆகியவற்றால் அவர்களின் உணர்வுகள் தாக்கப்படுகின்றன.

டிவி திரைகளில் இருந்து வரும் அலறல்கள், மொபைலில் வீடியோக்கள், பெரியவர்களின் உரத்த உரையாடல்கள், புண்படுத்தும் கருத்துகள், பிறரை அவமதித்தல். இப்படிப்பட்ட நிலையில், இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் சுற்றுப்புறத்திலிருந்து துண்டிக்கப்பட்ட இளைஞர்களாக வளர்வதில் ஆச்சரியமில்லை.

எந்தவிதமான வன்முறைகளும் அவர்களை உணர்ச்சிவசப்படுத்துவதில்லை. தாங்கள் முன்பு சார்ந்திருந்தவர்களை அந்நியர்களாகக் கருதத் தொடங்குகின்றனர். மனதளவில் எளிதில் புண்படக்கூடிய குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்திலிருந்து தங்களைத் துண்டித்துக் கொள்கிறார்கள்.

கவலை, பீதி மற்றும் அக்கறையின்மையின் காலத்தை நாம் நம்மீது திணித்துள்ளோம். ஆனால் பெற்றோர்களாகிய நாம் இவ்விஷயத்தில் உதவியற்றவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைக் காப்பாற்றுவதில் நமக்கும் பங்கு உண்டு.

NATASHA BADHWAR

பட மூலாதாரம், NATASHA BADHWAR

நீங்கள் செய்வதைப் பார்த்துச் செய்கிறார்கள்

எனது வாழ்க்கையின் நடுப்பகுதியில் நான் குழந்தை வளர்ப்புப் பயணத்தைத் தொடங்கியபோது, ​​​​நான் சுய முன்னேற்றத் திட்டத்தில் கையெழுத்திடுகிறேன் என்ற எண்ணம் எனக்கு இருக்கவில்லை. நான் சில விஷயங்களைக் கற்பிக்க வேண்டும். ஆனால் நான் எதையும் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்று நினைத்தேன். ஆனால் குழந்தை வளர்ப்பின்போது, நமது பெற்றோரிடமிருந்து வித்தியாசமான பாதையில் செல்ல விரும்புவது எளிது. ஆனால் நமது சமூக-கலாச்சார பாரபட்சங்களிலிருந்து விடுபடுவது எவ்வளவு கடினம் என்பதை விரைவில் உணர்ந்தேன்.

ஒழுக்கக் கல்வியின் பாடங்கள் எனக்கு நினைவுக்கு வந்தன. பழக்க வழக்கங்கள் மற்றும் சடங்குகள் பற்றியும் அறிந்திருந்தேன். இணையத்தில் பதில்களைத் தேடுவது எனக்கு நன்றாகத் தெரியும். எல்லா முக்கியமான குறிப்புகள் மற்றும் புகைப்படங்களுடன் குழந்தை வளர்ப்பு பற்றிய சில புத்தகங்கள் கூட என்னிடம் இருந்தன. ஆனால் புத்தகங்கள் மற்றும் வகுப்புகளில் மிகவும் நன்றாகத் தோன்றும் வாழ்க்கை மதிப்புகள், நடைமுறையில் அதிகம் பயனுள்ளதாக இருக்காது. அவற்றை ஒவ்வொரு கணமும் சோதித்து, கேள்வி கேட்க வேண்டிய அவசியம் உள்ளது.

நாம் எப்போதும் பெரியவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமா? ஆசிரியர்கள் எப்போதும் சரியானவர்களா? எவ்வளவு ஐஸ்கிரீம் அதிக ஐஸ்கிரீமாக கருதப்படுகிறது? நான் லெஹங்காவுடன் ஹவாய் சப்பல் அணியலாமா?

உதாரணம் மூலம் வழி காட்டுவது மிகவும் சிரமமான பாடம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. "நீ வளர்ந்ததும் உன் மனசுக்கு பிடித்தபடி என்ன வேணும்னாலும் செய்" என்று நம் பெற்றோர் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கிறதா?

அவர்கள் அப்படிச் சொன்னார்கள், ஆனால் அதன் அர்த்தம் அது அல்ல. என் குழந்தைகள் நன்றாகத் தூங்க வேண்டும், ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டு, நிமிர்ந்து உட்கார வேண்டும் என்றால், முதலில் அதை நானே செய்ய வேண்டும். நான் செய்வதை அவர்கள் செய்கிறார்கள். நான் சொல்வதைச் செய்வதில்லை.

நான் எப்பொழுதும் ஆன்லைனில் இருந்து கொண்டு, என் குழந்தைகள் கம்ப்யூட்டரை லாக் ஆஃப் செய்துவிட்டு பூங்காவுக்குச் சென்று விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அதை நானே செய்து காட்ட வேண்டும்.

NATASHA BADHWAR

பட மூலாதாரம், NATASHA BADHWAR

சிக்கலான விஷயங்களைக் கூட புரிந்துகொள்வர்

கடைசியாக ஒரு விஷயம். குழந்தைகளின் அறிவுத்திறன் என்பது எதிர்பார்க்காத ஒரு பரிசு. இது என்னிடமிருந்து நிறைய மன அழுத்தத்தை நீக்குகிறது. நான் செவிமடுக்க மட்டுமே வேண்டும். பெரியவர்களின் உரையாடலில் உள்ள பொய்களின் வலியை குழந்தைகள் எளிதாகப் புரிந்துகொள்கிறார்கள்.

என் சிறிய மகளுக்கு நான்கு வயதாக இருந்தபோது, ​​"எல்லோரும் என்னை நேசிக்கிறார்கள், வீட்டிற்கு வரும் எல்லா விருந்தினர்களும் என்னை விரும்புகிறார்கள்" என்று சொன்னாள்.

'கேட்கவே இது நன்றாக இருக்கிறது' என்று நான் அவளிடம் சொன்னேன். அவள் இதயத்தில் ஏதோ வலி இருப்பது போல் அவளுடைய தொனி இருந்தது.

'எனக்கு இது பிடிக்கவில்லை' என்றாள் அவள்.

'ஏன் பிடிக்கவில்லை' என்று நான் கேட்டேன்.

"நேற்று அத்தை என்னிடம் நன்றாகப் பேசினார். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு தன் மகளைத் திட்டினார். என் சகோதரிக்கு எப்படி இருந்திருக்கும். இந்த விஷயம் எனக்குப் பிடிக்கவில்லை," என்று அவள் பதில் சொன்னாள்.

நான் அவளை ஆரத்தழுவினேன். ஒரு பெற்றோராக, நான் செய்ய வேண்டியதெல்லாம் என் குழந்தைகளை நம்புவதுதான். அதனால் பிள்ளைகள் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள்.

எது சரி, எது நியாயம்? அதன் புரிதல் குழந்தைகளிடம் இயற்கையாக உள்ளது. அவர்களுக்கு யார் முக்கியமோ அவர்கள் பக்கம் குழந்தைகள் பார்க்கிறார்கள். நாம் காயப்பட்டால், அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகம் மீது கவனம் செலுத்துகிறார்கள். அன்பின் குளிர் காற்றால் வெறுப்பு மேகங்களைக் கலைக்கும் தலைமுறையாக நம் குழந்தைகள் இருப்பார்கள்.

(நடாஷா பத்வார் 'மை டாட்டர்ஸ் மம்', 'இம்மார்டல் ஃபார் எ மொமென்ட்' ஆகிய புத்தகங்களை எழுதியவர். மேலும், அவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர், ஆசிரியர் மற்றும் மூன்று குழந்தைகளுக்கு தாய்.)

காணொளிக் குறிப்பு, இந்தியா அக்னிபத் என்கிற குறுகிய கால ராணுவ சேவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: