ராகுல் பிறந்த நாள்: தமிழ்நாடு, கேரள அரசியல் பக்கம் திடீர் ஆர்வம் ஏன்?

பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத மற்றும் ஆதிக்கம் செலுத்தி வரும் அரசியல் சக்தியாக ஜவாஹர்லால் நேரு-இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என வழி, வழியாக ஒரு அரசியல் குடும்பம் கோலோச்சி வருகிறது. அந்த குடும்பத்தின் நான்காம் தலைமுறை தலைவரான ராகுல் காந்திக்கு ஜூன் 19ஆம் தேதி பிறந்த நாள். ஆனால், 137 ஆண்டுகள் பழம் பெரும் இந்த கட்சியின் முழு நேர தலைமை பதவியில் அதிகபட்சமாக பதினெட்டரை மாதங்கள் மட்டுமே அவரால் வகிக்க முடிந்தது. இருந்தபோதும், அந்த கட்சியின் அசைக்க முடியாத தலைவராகவும் தேசிய அரசியலில் தற்போது தவிர்க்க முடியாதவராகவும் ராகுல் காந்தி பரிணமிக்க அவர் கொண்டிருக்கும் தெற்கு நோக்கிய அரசியல் பார்வை உதவி வருகிறது. அது எப்படி என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
52 வயதாகும் ராகுல் காந்தி வழிநடத்திய காங்கிரஸ் தலைமையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், 1984 மற்றும் 1991க்கு இடையிலான காலகட்டத்தில் அவரது தந்தை ராஜீவ் காந்தியின் காங்கிரஸின் தலைமைத்துவத்தை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
இந்திரா காந்தியின் படுகொலையால் உருவான தேர்தல் அலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்தார் ராஜீவ் காந்தி. ஆட்சிக்கு வந்த சீக்கிரத்திலேயே, 'அனுபவம் மிக்க நிர்வாகியாகவும் தலைவராகவும்' தம்மை இந்திய அரசியலில் நிலைநிறுத்திக் கொண்டார்.
தமது தாயுடன் நெருக்கமாக வலம் வந்த தலைவர்களை படிப்படியாக ஓரங்கட்டி விட்டு தமக்கு நெருக்கமானவர்களை அரசு, கட்சிப் பதவிகளில் ராஜீவ் அமர்த்தினார். 1984இல் நடந்த மக்களவை தேர்தலில் உடனடியாக தேர்தல் நடந்த 514 இடங்களில் 404 இடங்களை ராஜீவ் காந்தியின் தலைமை வென்றது. 400க்கும் அதிகமான இடங்களுடன் அரசாங்கத்தைப் பாதுகாத்த ராஜீவின் தலைமைத்துவம், அப்போது காங்கிரஸ் கட்சியுடன் பின்னிப்பிணைந்திருந்த பழைமைத்துவத்தை புனரமைப்பதில் பல முறை தள்ளாட்டத்தைக் கண்டது. அந்த காலகட்டத்தில் தமது அமைச்சரவை சகாக்களான வி.பி. சிங், அருண் நேரு ஆகியோர் ராஜீவ் காந்தியின் அரசியல் அப்பாவித்தனத்தை அதிகம் பயன்படுத்திக் கொண்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுவதுண்டு. அந்த தலைவர்கள் 1989இல் காங்கிரஸை தோற்கடிக்க எதிர்கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தனர்.
அன்று ராஜீவுக்கு, இன்று ராகுலுக்கு
33 ஆண்டுகளுக்கு முன்பு தமது தந்தைக்கு நேர்ந்த அதே அனுபவத்தை ஒத்த சில நிகழ்வுகளை 2018, 2019களில் ராகுல் காந்தி எதிர்கொண்டார்.
இந்தியாவின் பிரபல அரசியல் குடும்பத்தின் வாரிசான ராகுல் காந்திக்கு ஒரு பெரிய பாத்திரம் தரப்பட வேண்டும் என 2010க்கு முன்பில் இருந்தே காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து வந்தனர். ராகுலின் கொள்ளுத்தாத்தா ஜவாஹர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இருந்தார், அவரது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி ஆகியோர் இந்திய பிரதமர்களாக இருந்துள்ளனர்.
ஆனால், அவர்களுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவரான ராகுலின் தாயார் சோனியா காந்தி, 'பிரதமர் பதவி' ஏற்க வாய்ப்பு வந்தபோதும் அந்தப் பதவியை ஏற்காமல் கட்சித் தலைவராக மட்டுமே நீடித்தார்.


அவரது மகன் ராகுல் காந்தி, சரியான காலகட்டத்தில் முழு நேர அரசியலுக்குள் நுழைவதற்காக பயிற்று விக்கப்படுவதாகவே அரசியல் களத்தில் பேசப்பட்டு வந்தது. அதுபோலவே இளைஞர் காங்கிரஸில் தீவிர கவனம் செலுத்தி வந்த ராகுல், 2013இல், கட்சியின் இரண்டாவது மிக மூத்த பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
2014ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் அவர் காங்கிரஸ் கட்சியின் பிரசார முகமாக அடையாளப்படுத்தப்பட்டார்.

மத்தியில் நரேந்திர மோதி பிரதமராக வந்த பிறகு காங்கிரஸ் கட்சி அருணாசல பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்பட ஆறு மாநிலங்களில் ஆட்சியைப் பறிகொடுத்தது.
மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் நடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதும், அங்கு கட்சிகளை உடைத்து ஆட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது.
கடந்த ஆண்டு புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பறிகொடுத்தது. அங்கு பாஜகவுடன் கைகோர்த்துள்ள என். ரங்கசாமி தலைமையிலான 'என்ஆர் காங்கிரஸ்' ஆட்சியில் உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜோதிர்ஆதித்ய சிந்தியா ஒரு காலத்தில் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராகவும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய அமைச்சராகவும் இருந்தவர்.

பட மூலாதாரம், AICC
காங்கிரஸில் நிலவிய தலைமைத் தொடர்பு இடைவெளியால் அதிருப்தியில் இருந்த ஜோதிர்ஆதித்ய சிந்தியாவை தன் பக்கம் இழுத்தது பாஜக. அந்த மாநிலத்தில் ஆட்சியில் இருந்த கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு 2020இல் கவிழ ஜோதிர்ஆதித்ய சிந்தியா முக்கிய பங்கு வகித்தார். அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த அவர், தற்போது மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அமைச்சரவையில் இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ராகுலின் மற்றொரு நண்பரும் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராகவும் இருந்த சச்சின் பைலட் உதவியுடன் அங்கு ஆட்சியில் இருக்கும் அசோக் கெலோட் அரசை கலைக்க பாஜக முயன்றது.
ஆனால், மத்திய பிரதேசத்தில் ஈடேறியதை போல ராஜஸ்தானில் பாஜகவின் ஆட்சி மாற்ற கனவு பலிக்கவில்லை. அங்கு கட்சி மேலிடத்தின் சில நிலைப்பாடுகளுடன் தமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலேயே இருப்பதாக சச்சின் பைலட் கூறி வருகிறார்.
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க தமது சகோதரி பிரியங்கா காந்தியை பிரசார முகமாக முன்னிறுத்தினார். ஆனால், அது அம்மாநிலத்தில் காங்கிரஸுக்கு வெற்றியைத் தேடித் தரவில்லை.
இப்படியாக தன்னுடன் நெருக்கமாக இருந்த பலர் மூலம் மாநில அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த ராகுல் முற்பட்டபோதெல்லாம் அங்கெல்லாம் காங்கிரஸுக்கு சறுக்கல்களே மிஞ்சியதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
ராகுலை மட்டுப்படுத்தும் சொல்லாடல்கள்
ராகுலை இப்போதும் கூட தேர்தல் பரப்புரை காலங்களில் 'இளவரசர்', 'எளிதில் அணுக முடியாதவர்', 'நேரு காந்தி வம்சத்தைச் சேர்ந்த இளவரசர்' என பிரதமர் நரேந்திர மோதியும் பாஜகவினரும் விமர்சிக்கின்றனர். வட மாநிலங்களில் ராகுலுக்கு எதிரான இத்தகைய விமர்சனங்கள் பரவலாக செய்யப்படுவதுண்டு.
இத்தகைய சொல்லாடல்களால்தான் ராகுல் தமது அரசியல் பார்வையை தெற்கு நோக்கித் திருப்பி அங்குள்ள மக்களை கவர முற்பட்டு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கருதுகிறார்.
இது குறித்து ராகுலுக்கு நெருக்கமான கட்சித் தலைவர்கள் வளையத்தில் உள்ள விருதுநகர் தொகுதி எம்.பி மாணிக்கம் தாகூர் பிபிசி தமிழிடம் கூறும்போது, "ராகுலின் இந்தியாவுக்கான பார்வை எப்போதுமே வித்தியாசமானதாக இருந்தது. அதை புரிந்து கொள்ளாமல் பலரும் விமர்சனம் செய்திருக்கலாம். குறிப்பாக, ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் தனி நபர் விமர்சனங்களை செய்து எதிரணியில் இருப்பவர்கள் மட்டுப்படுத்துவதை தங்களுடைய பாணியாகவே கொண்டவர்கள். எல்லா மாநிலங்களிலும் அந்த பாணியையே அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்," என்கிறார்.

பின்னடைவை சந்தித்த ராகுல் தலைமை

பட மூலாதாரம், Getty Images
ஆனால், 2018இல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜகவை வீழ்த்தியதன் மூலம் ஆட்சியை அறுவடை செய்த காங்கிரஸ், அடுத்த ஆண்டு (2019) மக்களவை பொதுத் தேர்தலை எதிர்கொண்டது. அப்போது கட்சித் தலைமைக்கும் பழைய தலைவர்களுக்கும் இடையிலான தகவல் தொடர்பு இடைவெளி அதிகரித்தது. அது 2014 தேர்தலில் காங்கிரஸுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த தேர்தலில் காங்கிரஸ் 44 இடங்களில் வென்றது.
2004ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தியை மக்களவைக்கு அனுப்பி வைத்த அமேதி தொகுதி, 2014இல் ராகுல் காந்திக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது.
2017இல் சோனியா காந்திக்கு பதிலாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வந்தார். அவரது தலைமையில் 2019இல் நடந்த மக்களவை தேர்தலில் அக்கட்சி 52 இடங்களில் வென்றது.
ஆனால், தொடர்ந்து இரு முறை மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் வெற்றி வாய்ப்பை இழந்ததால், தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி தமது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவருடன் சேர்ந்து பல ராகுல் ஆதரவு தலைவர்கள் பதவி விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.
ராகுலின் சாதுர்ய முடிவு

பட மூலாதாரம், MANICKAM TAGORE
2019 நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை தொகுதியில் போட்டியிட ராகுல் முடிவெடுத்தார். அமேதியுடன் சேர்த்து தென் மாநிலமான கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல், முதல் முறையாக அங்கு வெற்றியும் பெற்றார்.
தெற்கு நோக்கிய ராகுலின் அரசியல் வெற்றிக்கு அந்த தேர்தல் உதவிகரமாக இருந்தது.
இது குறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "வட மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் ராகுலுக்கு எதிரான விமர்சனங்களை ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையாக முன்வைக்கின்றன. ஆனால், தென் மாநிலங்களில் ராஜீவ் குடும்பம், இந்திரா குடும்பம், நேரு குடும்பம் என இப்போதும் ஒருவித கவர்ச்சி நீடிப்பது ராகுலின் தென் மாநில அரசியல் பிரவேசத்துக்கு கைகொடுக்கிறது," என்கிறார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஏழு பேரில் பேரறிவாளன் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டு விட்டார். மீதமுள்ள நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகியோரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டில் முந்தைய அதிமுக ஆட்சியிலும் தற்போதைய திமுக ஆட்சியிலும் அரசியல் குரல்கள் ஒலித்து வருகின்றன.
தமது தந்தை படுகொலை செய்யப்பட்டபோதும், அந்த வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளை மன்னித்து விட்டதாகவும், அவர்களை விடுதலை செய்ய தமக்கும் தமது சகோதரிக்கும் தாய்க்கும் ஆட்சேபம் இல்லை என்றும் வெளிப்படையாகவே கூறினார் ராகுல் காந்தி.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் அமர்வுகளின் போது பொதுப்பிரச்னைகள் குறித்துப் பேசும்போதெல்லாம் கேரள மாநில விவகாரங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு தொடர்புடைய பிரச்னைகளையும் கிடைக்கும் வாய்ப்புகளில் ராகுல் காந்தி பேசினார்.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது அவர் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசினார்.
அப்போது தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா குறித்தும் பாஜகவால் தமிழ்நாட்டில் என்றுமே ஆட்சிக்கு வர முடியாது என்றும் பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
"தமிழ்நாடு பற்றி இப்போதெல்லாம் அதிகமாக பேசுகிறீர்களே, ஏன்?" என்று அவைக்கு வெளியே வந்த ராகுல் காந்தியிடம் நிருபர்கள் கேட்டபோது, "நானும் தமிழன்தான்" என்று அவர் அளித்த பதில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
சில நாட்கள் கழித்து தமது 'பதில்' பற்றி ராகுல் காந்தியே விளக்கம் அளித்தார்.


தமிழ்நாடு மீது தனி பாசம் ஏன்?
"எனது தந்தை உயிர் விட்ட மண் தமிழ்நாடு. அந்த வகையில் எனக்கு ரத்தம் கொடுத்த தந்தையின் ரத்தம் தமிழ்நாட்டு மண்ணில் உள்ளதால் எனக்கு தமிழ்நாடு பிடிக்கும். அந்த மாநிலத்துக்கும் எனக்கும் இடையிலான உறவை பிரிக்க முடியாது," என்று ராகுல் காந்தி கூறினார்.
ஓர் அரசியல்வாதியாக ராகுல் காந்தி இப்படி பேசுவது வியப்பு தராவிட்டாலும், அவர் வெளிப்படையாக பேசுவதை வரவேற்க வேண்டும் என்கிறார் காங்கிரஸ் கட்சி தலைமையகம் தொடர்பான செய்திகளை கடந்த 20 ஆண்டுகளாக சேகரித்து வரும் இவர் நியூஸ்18 தொலைக்காட்சியின் அரசியல் ஆசிரியர் பல்லவி கோஷ்.
மறுபுறம் ராகுலின் தமிழ்நாடு பாசம் குறித்து விவரித்த மாணிக்கம் தாகூர் எம்.பி, "தமிழ்நாட்டில் இருப்பவர்கள் இயல்பாக பழகக் கூடியவர்கள். தமிழர்களிடம் செயற்கைத்தனமோ போலித்தனமான அன்போ இருக்காது என்று நம்புபவர் ராகுல்," என்கிறார்.
ராகுலின் பலமும் பலவீனமும் என்ன என்று கேட்டதற்கு, "எந்த விஷயமாக இருந்தாலும் அதை மேம்போக்காகக் கேட்காமல் அதிக சிரத்தையுடன் எதிரே பேசுபவரின் கருத்துக்களைக் கேட்பது ராகுலின் பலம். அதிலும் தம்மை அறிந்தவர்கள் பேசுவதை விட புதிதாக தம்மை சந்திக்க வருபவர்கள் பேசும் விஷயங்களுக்கு கூடுதல் கவனம் கொடுப்பதும் அவரது பலம்," என்கிறார் மாணிக்கம் தாகூர்.
"நெஞ்சில் பட்டதை நேர்படப் பேசுவது ராகுலின் பலவீனம். அவருக்கு ஒருவரையோ, ஒருவர் பேசும் விஷயமோ பிடிக்கவில்லை என்றால் அதை நேரடியாகவே கூறி விடுவார். சாதாரண அரசியல்வாதிகள் போல ராகுலுக்குப் பொய் சொல்லத் தெரியாது, நடிக்கத் தெரியாது," என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
ராகுல் காந்தி தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் மக்களோடு மக்களாக பழக பல முயற்சிகளை எடுத்து வருகிறார். கேரள மாநிலம் கொல்லத்தில் மீனவர்களுடன் காலை வேளையில் மீன் பிடித்தது, கடலில் குதித்து நீச்சல் அடித்தது என சாமானியர்களுடன் எளிமையாகப் பழக சில நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார் ராகுல். அதுபோலவே, தமிழ்நாட்டில் வில்லேஜ் குக்கிங் என்ற யூடியூப் சேனல் குழுவினருடன் சேர்ந்து உணவு சாப்பிட்டது, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடியது என பல வகைகளில் மக்களை கவர ராகுல் முற்பட்டார்.
அவரது செயல்பாடுகள் வரவேற்புக்குரிய விஷயம்தான். ஆனாலும், அரசியலில் அவர் சாதிக்க இன்னும் பல ஆக்கபூர்வ களப்பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் குபேந்திரன்.
"ராகுல் காந்தியை ஒரு தனி நபராக நீண்ட காலமாக அறிந்திருக்கிறோம். அவரைப் பற்றி பொதுமக்கள் நெருக்கமாக தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது," என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
தெற்கு நோக்கிய ராகுலின் அரசியல், தனிப்பட்ட முறையில் அவருக்கு உதவினாலும், அந்த அரசியல் வெற்றி பெற அந்தந்த மாநிலத்தில் உள்ள பெரிய கட்சிகளுடன்தானே காங்கிரஸ் கைகோர்த்துச் செயல்பட வேண்டியுள்ளது. அப்படியென்றால் காங்கிரஸால் தனித்து வளர முடியாதா என்று மாணிக்கம் தாகூரிடம் கேட்டோம்.

பட மூலாதாரம், AICC
"இந்த எண்ணத்தை ராகுலும் கொண்டிருக்கிறார். அவரைப் பொருத்தவரையும் காங்கிரஸாரைப் பொருத்தவரையும் காங்கிரஸுக்கு என தனி அடையாளம் உள்ளது. எப்படி திமுகவுக்கு திராவிட மாடல் அரசியல் என்ற அடையாளம் உள்ளதோ அதுபோல காங்கிரஸுக்கு இந்திய தேசியம் என்ற அடையாளம் உள்ளது. அதை விட்டு, விட்டு அரசியல் செய்வதோ சமரசம் செய்வதோ கூடாது என்று சமீபத்தில் கூட அவர் எங்களிடம் வலியுறுத்தினார்," என்கிறார் மாணிக்கம் தாகூர்.
இத்தகைய சூழலில், 137 ஆண்டுகள் பழமையான கட்சியை மறுசீரமைப்பதும், அதில் தலைமையை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு அனைவரையும் தயார்படுத்துவதும் இரண்டு வரலாற்று ரீதியிலான நாடாளுமன்ற தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு 2024இல் வரவுள்ள தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு சரியான உத்தியை வகுப்பது ராகுல் காந்தியின் முன் உள்ள மிகப்பெரிய சவால் என்கிறார் பல்லவி கோஷ்.


ராகுலின் மனமாற்றமும் அனுபவமும்
இந்த சவாலை ராகுலால் சமாளிக்க முடியுமா என்பதை விட அவரிடம் காணப்படும் மனமாற்றம் அவருக்கு சாதகமான முடிவைத் தரலாம் என்கிறார் பல்லவி.

பட மூலாதாரம், PALLAVI GOSH
"15 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பார்த்த ராகுல் வேறு. இப்போது பார்ப்பவர் வேறு. இப்போது அவர் பழுத்த அரசியல் அனுபவத்தை பெற்றுள்ளார். தெற்கு நோக்கிய அவரது பார்வைக்கு உதாரணமாக அவர் அடிக்கடி தென் மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடி மாநில நிகழ்வுகளை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதை கூறலாம். அவரது அரசியல் பின்புலமாக உள்ள கே.சி. வேணுகோபால், மாணிக்கம் தாகூர், ஸ்ரீனிவாஸ் போன்ற அனைவருமே தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அந்த வகையில் தமது அரசியல் வாழ்க்கை பலப்பட தென் மாநிலங்கள் முக்கியம் என்பதை ராகுல் உணர்ந்திருக்கிறார்," என்று பல்லவி கூறுகிறார்.
தேசிய அரசியல் மட்டுமின்றி கேரளாவில் மாநில அரசியல் விவகாரங்களுக்காகவும் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார் ராகுல் காந்தி. அங்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான சிபிஐ-எம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் ஊழலில் ஈடுபடுவதாகவும், குறிப்பாக தங்கக் கடத்தல் மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வில் முறைகேடுகள் நடப்பதாகவும் ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது அந்த மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை பத்திரிகையாளர் குபேந்திரனும் ஏற்றுக் கொள்கிறார்.
இரு தென் மாநிலங்களுக்கும் ராகுல் அடிக்கடி சென்று வருவதால், ராகுல் தமது புதிய அடையாளத்தை இங்கே பதிவு செய்யும் முயற்சியாக அவரது அரசியலை பார்க்கலாம் என்கிறார் அவர்.

பட மூலாதாரம், AICC
புதிய உத்தி பலன் தருமா?"2019இல் 'இந்தியா டுடே' நடத்திய ஆய்வில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி விரும்பப்படுகிறார் என்று கண்டறியப்பட்டது. அப்போது, திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 இடங்களில் தேர்தல் நடந்த 38 இடங்களில் 37 இடங்களைக் கைப்பற்றி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது. கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 19 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது.இந்த வெற்றிகள் ராகுல் தீவிர கவனம் செலுத்தி வரும் தமிழ்நாடு, கேரளாவில் தொடர அவரது புதிய அரசியல் உத்திகள் கைகொடுக்கலாம். 2019இல் நடந்த தேர்தல் வெற்றிக்கு தமிழ்நாடு, கேரளாவில் இருந்த பாஜகவுக்கு எதிரான உணர்வு காரணமாக இருக்கலாம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வாக்காளர்களின் எதிர்ப்பு மனநிலை, 2024இல் நடக்கவிருக்கும் தேர்தலிலும் இருக்குமா என்று உறுதியாக கூற முடியாது," என்கிறார் குபேந்திரன்.
இதே கருத்தை வலியுறுத்தும் பல்லவி கோஷ், "ராகுலின் புதிய அடையாளம், அரசியல் உத்தி எல்லாம் அவருடைய செல்வாக்கு உயர உதவலாம். ஆனால், கட்சியின் முழு நேர தலைவராக அவர் இப்போது இல்லை. ஆனால், கட்சியின் எல்லாமுமாக அவரே விளங்குகிறார். எந்தப் பதவியும் வகிக்காமல் முக்கிய முடிவுகளை கூட அவரே எடுக்கிறார். இது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகானதாக தோன்றவில்லை. அடிப்படையில் இதை ராகுல் சரிப்படுத்திக் கொண்டு தீவிர அரசியலில் கவனம் செலுத்துவதே அவருக்கு நல்லது," என்கிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












