அக்னிபத் திட்டத்தை எதிர்த்து சென்னை தலைமைச் செயலகம் முன் போராடியது ஏன்? - போராட்டக்காரர்கள் விளக்கம்

பட மூலாதாரம், UGC
- எழுதியவர், பிரசாந்த் முத்துராமன்
- பதவி, பிபிசி தமிழ்
- அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்னை தலைமை செயலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- காவல்துறையினர் தற்போது போராட்டக்காரர்களை சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் வைத்துள்ளனர். மேலும் தலைமைச்செயலகப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- தேர்தல்கள், அரசியல் கூட்டங்கள், பள்ளி கல்லூரித் தேர்வுகள் எல்லாம் நடத்தபட்டபோது எங்களுக்கான தேர்வை மட்டும் நடத்தமுடியவில்லையா?" என்று கேள்வி எழுப்புகிறார் பிபிசி தமிழுடன் பேசிய போராட்டக்காரர்களில் ஒருவர்.
அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்டது முதலே சர்ச்சையாகி வந்த நிலையில், நாடு முழுக்கப் பல்வேறு மாநிலங்களில் இதை எதிர்த்துப் போராட்டங்கள் கடுமையாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பிகார், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் போராட்டங்கள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் வேலுரில் கவனிக்கத்தக்க வகையில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
"தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்னை தலைமைச் செயலகம் அருகே தேசியக்கொடியுடன் முன்னறிவிப்பின்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'அக்னி பத்' திட்டத்தை ரத்து செய்யும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.
இவர்களின் பின்னணி என்ன?
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் நடந்த அத்தகைய ஆட்சேர்ப்பு முகாமில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய, 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலிருந்தும், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இவர்களது, கல்வி சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு தேர்வு நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென ரத்து செய்யப்பட்டது.
இதில் ஏப்ரல், ஜூலை மாதங்களில் நடக்கவிருந்த தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எழுத்து தேர்வுக்காக நாடு முழுவதும் உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் குரலைக் கேட்க ஆளில்லை
"நாங்கள் நாட்டுக்காக உழைக்கத் தயார் என்று காத்திருக்கும் வேளையில், எங்களைக் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த வேலைகளை இந்த அரசு செய்கிறது," என்கிறார் போராட்டக்களத்திலிருந்து பிபிசி தமிழுடன் பேசிய பெயர் வெளியிட விரும்பாத ஒருவர்.
இவர், சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்தகுதித் தேர்வு ஆகியவை முடித்து எழுத்துத் தேர்வுக்காகக் காத்திருந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட அக்னிபத் திட்டத்தால் தங்களுக்காக தேர்வுகள் நடத்தப்படாமலே போக வாய்ப்புண்டு என்று தெரிவிக்கிறார்.
தொடர்ந்து பேசும்போது, "நாடு முழுக்க சிஇஇ தேர்வுகளை நடத்தக்கோரி போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படவில்லை என்று காரணம் சொன்னார்கள்.

ஆனால், தேர்தல்கள், அரசியல் கூட்டங்கள், பள்ளி கல்லூரித் தேர்வுகள் எல்லாம் நடத்தபட்டபோது எங்களுக்கான தேர்வை மட்டும் நடத்த முடியவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால், இதற்காக மாநில தலைமைச் செயலகத்தின் வாசலில் போராடுவது ஏன் என்று கேட்டபோது, "எங்களுக்காக செவி சாய்க்க யாருமே இல்லை என்ற எண்ணம் வந்ததால், மாநில தலைநகரிலிருந்து எங்கள் குரலை ஒலிக்க வந்துள்ளோம். தற்போது தமிழ்நாடு முழுக்க இருந்து எங்களைப் போன்ற ஏராளமானவர்கள் இணைந்துகொண்டே உள்ளனர். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை."

உங்கள் கோரிக்கைகள் என்ன?
- எங்களுக்கான சிஇஇ தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
- அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.
"இந்த இரண்டும் நடைபெறும் வரை தொடர்ந்து போராடுவது என்பதில் உறுதியாக உள்ளோம். தற்போது எங்களை ஒரு மைதானத்தில் வைத்துள்ளனர். ஒருவேளை இரவு கலைந்தாலும் கோரிக்கைகள் நிறைவேறும்வரை மீண்டும் மீண்டும் கூடுவோம்," என்கிறார் அவர்.
நாட்டின் பல மாநிலங்களில் அக்னிபத் திட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ரயில் எரிப்பு சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இதன் விளைவாக தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
தெலங்கானாவில் நடைபெற்ற ரயில் எரிப்பு சம்பவத்தின் போது, போலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலியானார். அவருக்கு தெலங்கானா அரசு சார்பில் முதல்வர் சந்திர சேகர ராவ், சுமார் 25 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













