அக்னிபத்: வேலூரில் போராட்டம் - "இளைஞர்களின் ராணுவ கனவைக் கலைக்கும் திட்டம் இது"

- எழுதியவர், பிரசன்னா
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்திய அரசு தற்போது அறிவித்துள்ள "அக்னி பத்" திட்டத்தை ரத்து செய்ய கோரி வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தேசிய கொடியுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய ராணுவத்திற்காக ஆட்களை சேர்க்க திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில், சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய, 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலிருந்தும், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இவர்களது, கல்வி சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பொது நுழைவு தேர்வு இரண்டு முறை அறிவிக்கப்பட்டு பல்வேறு நிர்வாக காரணங்களால் தற்போது வரை நடத்தப்படாமல் உள்ளது.
இதில் குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பொது முடக்கம் காரணமாக தேர்வு நடத்தப்படாமல் உள்ளது.
இதனால் ராணுவத்திற்கு செல்ல ஆர்வமுள்ள இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் ஆகவே நிலுவையில் உள்ள எழுத்து தேர்வை உடனடியாக நடத்த கோரியும் நாடு முழுவதும் ஆங்காங்கே பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரிலும் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"ராணுவத்தில் சேருவது கனவு"
"ராணுவத்தில் சேருவதை நாங்கள் வேலையாகப் பார்க்கவில்லை. அது எங்கள் கனவு. அது அதை பறிக்க பார்க்கிறார்கள். 'அக்னிபத்' மூலம் 4 ஆண்டுக்கு மட்டும் ஆள் எடுத்துவிட்டு பின்னர் வெளியேற்றப்பட்டால் நாங்கள் வயதை தொலைத்து விட்டு என்ன செய்வது?" என கவலை தெரிவிக்கிறார் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த தாஸ்.

"ராணுவத்தில் பணிபுரியும்போது மாதம் கிடைக்கும் 40 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை, எங்கள் கிராமத்தில் எங்கள் வீட்டில் நாங்கள் வளர்க்கும் மாடுகளிடமிருந்து பால் கறந்து சம்பாதிக்க இயலும். பணம் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல, ராணுவ உடை அணிந்து இருக்க வேண்டும் ராணுவ உடையை எங்களுடைய உயிராக நாங்கள் நினைக்கிறோம்" என்கிறார் தாஸ்.
'அக்னிபத்' திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். இதில் சேரும் 25% இளைஞர்கள் பின்னர் நிரந்தரமாக்கப்படுவார்கள். அதாவது 100ல் 25 பேருக்கு முழு நேர சேவைக்கான வாய்ப்பு கிடைக்கும் என பாதுகாப்புத் துறை அறிவித்திருக்கிறது. நான்கு வருட சேவைக்குப் பிறகு தக்கவைக்கப்படும் 25 சதவிகித வீரர்கள், 'அக்னிவீர்' என்று அழைக்கப்படுவார்கள்.
இந்தத் திட்டம் நாடு முழுவதும் ராணுவத்தில் சேரக் காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது.
வேலூர் மாவட்டம் ராணுவ பேட்டை சுற்றுவட்டாரத்தில் இருந்து மட்டும் சுமார் 150க்கும் மேற்பட்டோர் தற்போது எழுத்துத் தேர்வுக்காக காத்திருப்பதாக தாஸ் கூறுகிறார்.
"அக்னி பத்" திட்டம் ராணுவ அலுவலக பணிக்கு செல்வோருக்கு பொருந்தாது என்பதால், இதிலும் பாகுபாடு பார்க்கபடுவதாக அவர் கூறுகிறார். 2019-ல் நடந்த உடல் தகுதி தேர்வு முடித்து தற்போது வரை தேர்வு நடைபெறும் என காத்துக் கொண்டிருக்கிறோம். இதில் பலருக்கும் வயது கடந்துவிட்டது என்கிறார் அவர்.
"ராணுவத்தில் பணிபுரிந்த எங்கள் உற்றார் உறவினர்கள் தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்திருக்கிறார்கள். நாங்களும் அவர்களின் வழியில் தேசத்தின் மீது அதீத பற்று கொண்ட ராணுவத்தில் சேர்ந்து இந்த தேசத்திற்கு பணிபுரிய வேண்டும் என வாழ்நாள் கனவாக இதை நாங்கள் உயிருக்கும் மேலாக நினைத்து வருகிறோம். அதை அடைவதற்கு பல வருடங்கள் உழைத்து இருக்கிறோம். உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு சிறுவயதிலிருந்தே எங்களை நாங்கள் செதுக்கிக் கொண்டு இருக்கிறோம் எளிதாக உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற இயலாது. தற்பொழுது அனைத்தும் கைகூடி வரும் நிலையில் எல்லாம் கை மீறிச் செல்கிறது" என்றார்.

"கிராமப்புற இளைஞர்களுக்கு பாதிப்பு"
இரண்டு ஆண்டுகளாக ராணுவத்தில் ஆள் எடுப்பதற்கான எழுத்துத் தேர்வும் நடைபெறாததால் ராணுவ வேலைவாய்ப்பு கனவில் இருந்த வட மாவட்ட இளைஞர்கள் விரக்தியில் உள்ளனர் என்கிறார் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல்.
"எங்கள் கிராமத்திலிருந்து ராணுவத்தில் சேர்ந்து தாய் நாட்டிற்காக சேவை புரிந்து ஓய்வு பெற்று மீண்டும் எங்கள் கிராமத்திற்கு வந்த முன்னாள் படை வீரர்கள், நாங்கள் சிறுவர்களாக இருக்கும் சமயத்தில் எங்களை நல்வழிப்படுத்தி எங்களுக்கு தகுந்த பயிற்சி அளித்திருக்கிறார்கள்" என்கிறார் சக்திவேல்.
"அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பை கொட்டி கொடுக்கும் துறையாக ராணுவம் உள்ளது. இதில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு டிரேட்ஸ்மேன் பணி தொடங்கி, ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் பத்தாம் வகுப்பில் ஐம்பது சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சோல்ஜர் பணியும், பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம் பயின்றவர்களுக்கு டெக்னிக்கல், அறிவியல் பாடத்தில் பயின்றவர்களுக்கு நர்சிங் அசிஸ்டன்ட் , இதர பாடத்தில் பயின்றவர்களுக்கு கிளர்க் போன்ற பணிகளும் கிடைக்கும்." என்கிறார் சக்திவேல்.
"ராணுவத்தை ஒரு சேவையாக பார்க்கும் தங்களின் லட்சியக் கனவுகளை கலைக்கும் விதமாக இந்த திட்டம் இருப்பதாக இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால், அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யும்படியும், இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராணுவ தேர்வை நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்." என்றார் அவர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












