அக்னிபத்: மோதி அரசின் திட்டத்தால் யாருக்கு பயன்? முன்னாள் ராணுவ அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள் ?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், வினீத் கரே
- பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாயன்று இந்திய ராணுவத்தில் 'அக்னிபத்' என்ற திட்டத்தை அறிவித்தார், இதன் கீழ் குறுகிய கால நியமனங்கள் இருக்கும்.
இத்திட்டத்தின்படி, நான்கு ஆண்டுகளுக்கு இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்காலம் முடிந்ததும், அவர்களுக்கு சேவை நிதி தொகுப்பு வழங்கப்படும். அவர்களுக்கு அக்னிவீரர் என்ற பெயர் அளிக்கப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக, ராணுவத்தில் ஆள்சேர்ப்பு நிறுத்தப்பட்டது. இது குறித்து அரசிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. முக்கியமாக இளைஞர்கள் இந்த கேள்வியை எழுப்பினர். அவர்களுக்கு ராணுவத்தில் ஆட்சேர்ப்பு என்பது வாழ்க்கையின் ஒரு பெரிய கனவாகவும் வேலைக்கான முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. தனது அறிவிப்பில், விபத்து அல்லது இறப்பு ஏற்பட்டால் அக்னிவீரர்களுக்கு பேக்கெஜூகளை வழங்குவது குறித்தும் அரசு பேசியது.
ராஜ்நாத் சிங், அக்னிபத் திட்டத்தை ராணுவத்திற்கான நவீன, உருமாற்ற நடவடிக்கை என்று விவரித்தார்.
புதிய அக்னிவீரர்களின் வயது பதினேழரை முதல் இருபத்தி ஒன்று வரை இருக்கும். அவர்களின் சம்பளம் ஆண்டுக்கு 4 லட்சத்து 76 ஆயிரத்திலிருந்து 6 லட்சத்து 92 ஆயிரம் வரை உயர்த்தப்படும். பணியமர்த்தப்பட்ட இளைஞர்களில் 25 சதவிகிதம் பேர் இந்திய ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும், மீதமுள்ளவர்கள் வேலையை விட்டு வெளியேற வேண்டும்.
இந்த ஆண்டு 46,000 அக்னிவீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
ராணுவத்தில் பணியாற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், நமது இளைஞர்களுக்கு ராணுவ சேவை வாய்ப்பை வழங்கவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
இந்தத் திட்டம் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும், சேவையின் போது பெற்ற திறன்கள் மற்றும் அனுபவங்கள் அவர்களுக்கு பல்வேறு துறைகளிலும் வேலைகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், ANI
இது இந்திய ராணுவத்தின் முகத்தை மாற்றுமா?
இளைஞர்களிடையே தேசிய உணர்வை வலுப்படுத்துவதும், இந்திய ராணுவத்தின் முகத்தில் இளமைப் பொலிவை ஏற்படுத்துவதும், இந்திய ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதும் இத்திட்டத்தின் நோக்கம் என அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், இது இந்திய ராணுவத்தின் பாரம்பரிய தன்மையை சீர்குலைக்கும் தவறான நடவடிக்கை என்றும், வீரர்களின் மன உறுதியை பாதிக்கும் என்றும் இத்திட்டத்தை விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர்.

அக்னிபாத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
- ஆள் சேர்ப்புக்கான வயது - 17.5 முதல் 21
- கல்வித் தகுதி - 10வது அல்லது 12வது வகுப்பு தேர்ச்சி
- பணிக்காலம் 4 ஆண்டுகளுக்கு இருக்கும்
- நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மதிப்பீடு செய்யப்பட்டு 25 சதவிகிதம் பேர் பணியில், நிரந்தரமாக்கப்படுவார்கள்.
- ஜவான்கள் அக்னிவீர் என்று அழைக்கப்படுவார்கள்.
- முதல் ஆண்டு சம்பளம் மாதம் 30 ஆயிரம்
- 4 - ஆவது ஆண்டு மாதம் 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங் இதை ஒரு முட்டாள்தனமான நடவடிக்கை என்று கூறுகிறார். "பணத்தை சேமிப்பது நல்லது, ஆனால் பாதுகாப்புப் படைகளின் செலவு விஷயத்தில் அதை செய்யக்கூடாது" என்றும் அவர் கூறுகிறார்.
இந்திய ராணுவத்தின் சம்பளம் மற்றும் ஓய்வூதியச் சுமையைக் குறைப்பதே அரசின் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று நம்பப்படுகிறது. ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஷீயோனன் சிங் , "நாங்கள் செய்து காட்டியுள்ளோம், நாங்கள் முடிவுகளை மேற்கொள்ளும் கட்சி என்று பாஜக காட்ட விரும்புகிறது. குறிபார்த்து வீசும் விளையாட்டு போல இது உள்ளது. முடிவு பற்றிய கவலை இல்லை," என்று குறிப்பிட்டார்.
மாறிவரும் காலத்துக்கு ஏற்ப இந்திய ராணுவத்தை எப்படி மேம்படுத்துவது என்ற விவாதம் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு இதுதான் மருந்தா?
இந்திய ராணுவத்தில், 68 சதவிகித தளவாடங்கள் பழையதாக உள்ளன. 24 சதவிகித உபகரணங்கள் நடப்பு காலத்தை சேர்ந்தது மற்றும் எட்டு சதவிகிதம் அதிநவீன வகையிலும் உள்ளன. காரணம் தெளிவாக உள்ளது. 2021-22 ஆம் ஆண்டில், பாதுகாப்பு பட்ஜெட்டில் 54 சதவிகிதம் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்பட்டது. மூலதனச் செலவு 27 சதவிகிதம்.
அதாவது புதிய பணிகளை மேற்கொள்வதற்கு. மீதமுள்ளவை ஸ்டோர்ஸ், உபகரணங்கள் பராமரிப்பு, எல்லையில் உள்ள சாலைகள், ஆராய்ச்சி, மேலாண்மை ஆகியவற்றிற்காக செலவிடப்பட்டது.
பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கான செலவு கடந்த 10 ஆண்டுகளில் 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் பாதுகாப்பு பட்ஜெட்டில் சராசரி அதிகரிப்பு 8.4 சதவிகிதம் ஆகும். பாதுகாப்பு பட்ஜெட்டில் ஓய்வூதியத்தின் சதவிகிதம் 26 சதவிகிதமாக அதிகரித்து, பின்னர் 24 ஆக குறைந்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
நாட்டில் வேலை கிடைக்காதது பெரும் பிரச்னையாக இருக்கும் நேரத்தில் அரசின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்தியாவில் வேலையின்மை ஒரு தீவிரப் பிரச்னையாக இருக்கிறது. ஏனெனில் மக்களுக்கு வேலைகள் தேவைப்படும் விகிதத்திற்கு ஏற்ப, வேலை வாய்ப்புகள் அந்த அளவுக்கு வேகமாக வளரவில்லை என்று கூறுகிறார் இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் அமைப்பான CMIE இன் மகேஷ் வியாஸ்.
இந்தியாவில் வேலையின்மை விகிதம் கோவிட் காலகட்டத்தில் 25 சதவிகிதத்தை எட்டியது என்றும் இப்போது இந்த விகிதம் ஏழு சதவிகிதமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். நகர்ப்புறங்களில் இளைஞர்களிடையே (15-29 வயது) வேலையின்மை விகிதம் நீண்ட காலமாக 20 சதவிகிதத்திற்கு மேல் உள்ளது. இவ்வாறான நிலையில் அடுத்த ஒன்றரை வருடங்களில் 10 லட்சம் பேரை அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் நியமிக்கப் போவதாக பிரதமரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திட்டம் நல்லதா கெட்டதா?

பட மூலாதாரம், Getty Images
இந்திய ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் என்பது மிகக் குறுகிய காலம். அது நல்ல யோசனையாக இருந்திருந்தால், கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஒரு இளைஞன் இவ்வளவு குறுகிய காலத்தில் எப்படி ராணுவக் கட்டமைப்புடன் தன்னை இணைத்துக் கொள்ள முடியும் என்ற கவலையும் உள்ளது என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங் தெரிவித்தார்.
"இந்த நான்கு ஆண்டுகளில் ஆறு மாதங்கள் பயிற்சியில் செலவிடப்படும். அதன்பிறகு அந்த நபர் காலாட்படை, சிக்னல்கள் போன்ற பகுதிகளுக்குச் செல்வார், பின்னர் அவர் சிறப்பு பயிற்சி எடுக்க வேண்டும், அதற்கு அதிக நேரம் எடுக்கும். கருவிகளைப் பயன்படுத்துவதற்கு முன், நீங்கள் இதைச்செய்ய வேண்டும். அதைப் பற்றி நல்ல அறிவு வேண்டும்."என்று அவர் குறிப்பிட்டார்.
பயிற்சி போன்றவற்றில் அதிக நேரத்தைச் செலவழித்த பிறகு, ஒரு நபர் எந்த அளவுக்கு சேவையில் முன்னேற முடியும் என்று கவலைப்படுகிறார் அவர். "அந்த நபர் விமானப்படையில் பைலட் ஆக மாட்டார். கிரவுண்ட்மேனாகவோ அல்லது மெக்கானிக்காகவோ வருவார். பணிமனைக்கு செல்வார். நான்கு வருடத்தில் என்ன கற்றுக்கொள்வார்? யாரும் விமானத்தை தொட விடமாட்டார்கள். காலாட்படையில் உள்ள உபகரணங்கள் பற்றியும், அதை சரிசெய்யவும் தெரியவில்லை என்றால், நீங்கள் அங்கு வேலை செய்ய முடியாது."

பட மூலாதாரம், @ADGPI
"அனுபவம் வாய்ந்த ராணுவ வீரருடன் அவர் போருக்குச் செல்லும்பட்சத்தில், அந்த உயர் ராணுவ வீரர் மரணமடைந்துவிட்டால், நான்கு ஆண்டுகள் மட்டுமே பயிற்சி பெற்றவர் அந்த இடத்தை எடுத்துக்கொள்ள முடியுமா? அது நடக்காது. பாதுகாப்புப் படையினரின் செயல்திறன் இதனால் பாதிக்கப்படும்."
இந்தியா போரை விட கிளர்ச்சி அல்லது பயங்கரவாதத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. அதைச் சமாளிக்க அனுபவம் வாய்ந்த மற்றும் மன முதிர்ச்சி தேவை என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங் கூறினார்.
அரசின் இந்த நடவடிக்கை காரணமாக இந்திய ராணுவத்தின் சராசரி வயது ஆறு ஆண்டுகள் குறையும். அது நன்மை தரும் என்கிறார் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.பி. ஆஸ்தானா.
"ஐ.டி.ஐ.யில் இருந்து ஆட்களை எடுத்தால், டெக்னிக்கலாக சிறப்பாக இருப்பார்கள். வயதானவர்களை டெக்னிக்கல் ரீதியாக மேம்படுத்துவது கடினம். இந்த தலைமுறையினர் டெக்னிக்கல் அடிப்படையில் திறமைசாலிகள்" என்கிறார் அவர்.
இந்தத் திட்டம் ராணுவத்தில் சிறந்த 25 சதவிகிதம் வீரர்களை வைத்திருக்கவும், மீதமுள்ளவர்களை நீக்கவும் சுதந்திரம் அளிக்கும் என்கிறார் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.பி.ஆஸ்தானா.
"இப்போது உள்ள அமைப்பு முறை என்னவென்றால், ஒரு ஜவான் அனுமதிக்கப்பட்டு, அவர்சரியில்லை என்று உணர்ந்தால், அவர் மீது ஒழுக்கமின்மை அல்லது திறமையின்மை வழக்குத் தொடரப்பட்டாலன்றி அவரை பணிநீக்கம் செய்ய முடியாது."என்று அவர் கூறினார்.
இந்த விவாதத்துக்கு நடுவே, நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அசாம் ரைபிள் மற்றும் மத்திய ஆயுதப்படைகளில் அக்னிவீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அரசு அறிவிப்பு வந்துள்ளது.
திட்டத்தில் பணியமர்த்தப்பட்டவர்களின் எதிர்காலம்?
ராணுவத்தில் பயிற்சி பெற்ற 21 வயது வேலையில்லாத இளைஞர், தவறான பாதையில் சென்று தனது பயிற்சியை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் சமூகத்திற்கு பிரச்னையை உருவாக்கலாம் என்று அக்னிபத் திட்டத்தை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள்.
21 வயது, 10 அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலையில்லாத இளைஞர்கள் வேலைக்கு எங்கு செல்வார்கள் என்று வினவுகிறார் அவர்.
"காவல்துறையில் ஆட்சேர்ப்புக்கு சென்றால், ஏற்கனவே பி.ஏ., பாஸ் செய்த இளைஞர்கள் இருப்பதாகக்கூறி இவர்களை பின் வரிசையில் நிற்கச்செய்வார்கள். படிப்பு காரணமாக பதவி உயர்வு பாதிக்கப்படும்,'' என்கிறார் அவர்.
இளைஞர்களை 11 ஆண்டுகள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது குறைந்தது எட்டு ஆண்டுகள் அவர்கள் பணியாற்ற முடியும். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாதி ஓய்வூதியத்துடன் வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
21 வயதான பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் மற்றும் அக்னிவீர் ஆகிய இருவரும் வேலை தேடும் போது வேறுபாடு இருக்காது, ஏனெனில் அக்னிவீரின் திறமைகள் அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தும் என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.பி. ஆஸ்தானா தெரிவித்தார்.
இந்த அரசு திட்டத்தின் அடிமட்ட நிலை தாக்கத்தை கருத்தில் கொண்டு, அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கலாம். அரசும் ராணுவத் தலைமையும் இந்தத் திட்டத்தில் பல மாதங்களாக உழைத்துள்ளது. பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தின் தாக்கத்தைப் புரிந்து கொள்ள எட்டு முதல் பத்து ஆண்டுகள் ஆகும் என்றும், பணத்தை மிச்சமானால் அதை ராணுவ நவீனமயமாக்கலுக்கு செலவிடலாம் என்றும் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் டிஎஸ் ஹூடா தெரிவித்தார்.
"இந்த திட்டத்தின் கீழ், அடுத்த 4 ஆண்டுகளில் 1.86 லட்சம் வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இது ராணுவ பலத்தில் 10 சதவிகிதமாக இருக்கும். இந்த 4 ஆண்டுகளில் இந்த திட்டம் எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு வாய்ப்பு கிடைக்கும். இளைஞர்கள் இதில் ஈர்க்கப்படுகிறார்களோ இல்லையோ, அவர்கள் யூனிட்டில் இணைகிறார்களா?, அவர்களின் மனநிலை என்ன?, அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கிறது? என்பதை நாம் பார்க்கலாம்,"என்று அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலுடன் ஒப்பீடு
மோதி அரசின் அக்னிபத் திட்டத்தின் மாதிரி வேறு எங்கும் முயற்சிக்கப்படவில்லை என்று சொல்லமுடியாது என்று ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எஸ்பி ஆஸ்தானா கூறினார். அவர் இஸ்ரேலின் உதாரணத்தை சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேலின் நிலைமை என்ன என்பதை அறிய, ஜெருசலேமில் உள்ள பத்திரிகையாளர் ஹரேந்திர மிஷ்ராவை தொடர்பு கொண்டேன். வேலையில்லாத் திண்டாட்டம் இல்லை, கட்டாய ராணுவப் பயிற்சிக்குப் பிறகு இளைஞர்கள் அந்தப் பயிற்சியைத் தவறாகப் பயன்படுத்துவதில்லை. அங்குள்ள ஒவ்வொரு இளைஞரும் 18 வயதில் கட்டாயப் பயிற்சி செய்ய வேண்டும் என்றும், அந்த பயிற்சிக்கு சம்பளம் எதுவும் கிடைக்காது, ஏனெனில் அது ஒரு வேலையாக இல்லாமல் நாட்டிற்கு சேவை செய்யும் உணர்வோடு பார்க்கப்படுகிறது என்று ஹரேந்திர மிஷ்ரா கூறினார்.
பெண்களுக்கு இந்த பயிற்சி இரண்டு ஆண்டுகள் மற்றும் ஆண்களுக்கு நான்கு ஆண்டுகள். இந்த பயிற்சியின் போது பாக்கெட் மணி மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியை அனைவரும் செய்ய வேண்டும் என்பதால், பயிற்சி முடிந்து சிலர் மட்டும் படிப்பில் முன்னேறிச் சென்றுவிடுவார்கள் என்பது இல்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













