அக்னிபத் திட்டம்: தமிழ்நாடு, பிகார் உள்பட பல மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம்

போராட்டம்

பட மூலாதாரம், SEETU TIWARI/BBC

இந்திய ராணுவத்தில் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகாரின் சாப்ரா மாவட்டத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டயர்களை எரித்ததாகவும், பேருந்து ஒன்றை சேதப்படுத்தியதாகவும் ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அதேபோன்று, அம்மாநிலத்தின் ஜெஹனாபாத் பகுதியிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் மட்டுமல்ல ராஜஸ்தான் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிலும் அக்னிபத் திட்டத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்திய ராணுவத்தின் முப்படைத் தலைவர்கள், ராணுவத்தில் குறுகிய கால பணி நியமனம் தொடர்பான 'அக்னிபத்' கொள்கையை சமீபத்தில் அறிவித்தனர். அக்னிபத் திட்டத்தில் ஆட்சேர்ப்பு முறை 'டூர் ஆஃப் டூட்டி' என்று அழைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தால், "நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். வேலையில்லாத இளைஞர்களின் 'போராளிகள் குழு' உருவாகிவிடுமோ என்ற அச்சம் நிலவுவதாக" சிங்கப்பூரில் உள்ள எஸ் ராஜரத்தினம் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸைச் சேர்ந்த அனித் முகர்ஜி பிபிசியிடம் கூறியிருந்தார்.

இந்நிலையில், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகாரில் ராணுவத்தில் சேருவதற்கு ஆர்வமுள்ள, தங்களை தயார்படுத்திக்கொண்டு வரும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர், "டூர் ஆஃப் டூட்டி முறையை கைவிட வேண்டும், முன்பு இருந்த முறையிலேயே ஆட்சேர்ப்பை நடத்த வேண்டும். 4 ஆண்டுகளுக்கு மட்டும் யாரும் ராணுவத்தில் சேரமாட்டார்கள்" என தெரிவித்ததாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தலைநகர் ஜெய்பூரில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோடு

அக்னிபாத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

  • ஆள் சேர்ப்புக்கான வயது - 17.5 முதல் 21
  • கல்வித் தகுதி - 10வது அல்லது 12வது வகுப்பு தேர்ச்சி
  • பணிக்காலம் 4 ஆண்டுகளுக்கு இருக்கும்
  • நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மதிப்பீடு செய்யப்பட்டு 25 சதவிகிதம் பேர் பணியில், நிரந்தரமாக்கப்படுவார்கள்.
  • ஜவான்கள் அக்னிவீர் என்று அழைக்கப்படுவார்கள்.
  • முதல் ஆண்டு சம்பளம் மாதம் 30 ஆயிரம்
  • 4 - ஆவது ஆண்டு மாதம் 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்
கோடு

இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

ஹரியானா மாநிலத்தின் குருகிராம் மற்றும் ரெவாரியிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

வேலூரில் போராட்டம்

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தின் வேலூர் மாவட்டத்திலும் போராட்டம் நடைபெற்றது.

வேலூர்மாவட்டம், வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென குவிந்து மறியலில் ஈடுபட முயன்றனர் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்திற்காக ஆட்களை சேர்க்க திருவண்ணாமலையில் நடைபெற்ற உடற் தகுதி தேர்வில் இவர்கள் தேர்வானார்கள் ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் கொரோனாவை காரணம் காட்டி எழுத்து தேர்வு நடத்தப்படவில்லை இதனால் ராணுவத்திற்கு செல்ல ஆர்வமுள்ள இவர்கள் உடனடியாக எழுத்து தேர்வை நடத்த கோரியும் மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணி என்பதை ரத்து செய்ய கோரியும் மறியல் செய்ய முயன்றனர் ஆனால் அவர்களை வேலூர் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்க அறிவுறுத்தி திருப்பி அனுப்பினார்கள் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

அக்னிபாத் திட்டம் என்றால் என்ன?

'அக்னிபாத்' திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். இதில் சேரும் 25% இளைஞர்கள் பின்னர் நிரந்தரமாக்கப்படுவார்கள். அதாவது 100ல் 25 பேருக்கு முழு நேர சேவைக்கான வாய்ப்பு கிடைக்கும்.

இத்திட்டம் வேலை வாய்ப்புகளை அதிகரித்து, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். அக்னிவீரராக மாறுங்கள் என்று இளைஞர்களிடம் பாதுகாப்பு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். நான்கு வருட சேவைக்குப் பிறகு தக்கவைக்கப்படும் 25 சதவிகித வீரர்கள், 'அக்னிவீர்' என்று அழைக்கப்படுவார்கள்.

படை

பட மூலாதாரம், Getty Images

இத்திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு சுமார் 45000 இளைஞர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் கூறினார். ராணுவத்தின் அக்னிவீரர்களில் பெண்களும் சேர்க்கப்படுவார்கள் என்றார் அவர்.

அக்னிபாத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட இளைஞர்கள், நிரந்தர வேலையை பெற ஆறு மாதங்கள் பயிற்சி பெற வேண்டும்.

அவர்களின் சம்பளம் ஆண்டுக்கு 4 லட்சத்து 76 ஆயிரத்திலிருந்து 6 லட்சத்து 92 ஆயிரம் வரை உயர்த்தப்படும். இந்தத் திட்டத்தை அறிவித்த ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, சம்பந்தப்பட்ட அனைவருடனும் விரிவான விவாதம் மற்றும் ஆலோசனைக்குப் பிறகு இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.

அடுத்த 90 நாட்களுக்குள் அதாவது மூன்று மாதங்களுக்குள் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு தொடங்கும்.

ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான இந்தியா நெடுகிலுமான, தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்புத் திட்டம் 'அக்னிபாத்' என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் இளைஞர்களுக்கு ஆயுதப்படையின் வழக்கமான கேடரில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கும்.

பயிற்சிக் காலம் உட்பட 4 வருட சேவைக் காலத்திற்கு நல்ல நிதிப் பேக்கேஜூடன் பணியமர்த்தப்படுவார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மையப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்படையான வழிமுறைகளின் அடிப்படையில் 25% அக்னிவீரர்கள் முறைப்படுத்தப்பவார்கள். இதில் சேர ஆர்வம் உள்ளவர்கள், வழக்கமான கேடரில் ஆட்சேர்ப்புக்கு தாமாக முன்வந்து விண்ணப்பிக்கலாம்.

"ஊதியம், ஆண்டுக்கு 4 லட்சத்து 76 ஆயிரத்திலிருந்து 6 லட்சத்து 92 ஆயிரம் வரை உயர்த்தப்படும். நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தபிறகு இதில் சேர்ந்த அனைவருக்கும், 'சேவா நிதி' என்ற ஒட்டுமொத்த நிதி பேக்கேஜூம் உள்ளது," என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவத்தை உலகத்தரம் வாய்ந்த ராணுவமாக மாற்ற அக்னிபாத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

ராணுவத்தில் அதிக அளவில் வேலை வாய்ப்பு பெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய ராணுவத்தில் 14 லட்சம் பேர் பணி புரிகின்றனர்.

ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை இந்திய இளைஞர்களிடையே மிக நீண்ட நாட்களாக வலுவாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 60,000 பேர் இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள். இந்த காலி பதவிகளுக்கு திறந்தநிலை ஆட்சேர்ப்புக்காக 100 க்கும் மேற்பட்ட முகாம்களை ராணுவம் நடத்துகிறது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: