அக்னிபத் திட்டத்தின் வயது வரம்பில் தளர்வு - புதிய சலுகைகள் அறிவிப்பு

சசிகலா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வி.கே.சசிகலா

(இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (18/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

சசிகலாவை அதிமுகவில் சேர்க்கலாம் என்பது தேச விரோத கருத்து இல்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்ததாக இந்து தமிழ் திசை இணையத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது, "நான் எந்த கட்டத்திலும் சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என்று கூறியதில்லை. இது தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவெடுக்க வேண்டிய விஷயம் என்று தான் கூறி இருக்கிறேன்.

சசிகலாவை அதிமுகவில் சேர்க்கலாம் என்பது தேச விரோத கருத்து இல்லை. சசிகலாவால்தான் இபிஎஸ் முதல்வராக்கப்பட்டார். இது யாராலும் மறுக்க முடியாத உண்மை. 2017-ம் ஆண்டு சசிகலாவுடன் இபிஎஸ் இருந்தார். அதனால் அவர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது அந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தேன். நாங்கள் வாக்களிப்பதால் அப்போது ஆட்சி கவிழும் சூழல் இல்லை. ஒரு தனிப்பட்ட ஆதிக்கத்தின் கீழ் கட்சியும், ஆட்சியும் செல்லக்கூடாது என்பதற்காக தர்மயுத்தம் நடத்தினோம். எங்கள் எதிர்ப்பை காட்டவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம்.

டிடிவி.தினகரன் அதிமுக துணைப் பொதுச்செயலராக வந்துவிட்டார். டிடிவி.தினகரன், இபிஎஸ் ஆகியோர் இடையே பிரச்னை வந்துவிட்டது. அதன் பிறகு 36 எம்எல்ஏக்கள் டிடிவி.தினகரனிடம் சென்றுவிட்டார்கள். நான் விலகி நின்றுவிட்டேன். இவர்களுக்குள் எதனால் பிரச்னை வந்தது என்று எனக்கு தெரியாது." என்றும் பேசியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கைக்குக் கடன் வழங்க தயங்கும் இந்தியா?

இலங்கைக்குக் கடன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கைக்குக் கடன்

இலங்கைக்கு அடுத்த 500 மில்லியன் டாலர் எரிபொருள் கடன் வசதியை வழங்க இந்தியா தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தமிழ்வின் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ மன்னார் அனல்மின் நிலையம் தொடர்பாக அண்மையில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் அதானி குழுமத்தினால் மன்னாரில் நிர்மாணிக்கப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுத்ததாக கோப் குழுவில் இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கை இரு நாடுகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சில உள்ளூர் குழுக்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு உருவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அக்னிபத் திட்டத்தில் இணைவதற்கான வயது வரம்பு உயர்வு

ராணுவம்

பட மூலாதாரம், Getty Images

அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பை இந்திய அரசு 21ல் இருந்து 23 ஆக உயர்த்தியதற்காக பிரதமர் நரேந்திரமோதிக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் நன்றி தெரிவித்ததாக தினத்தந்தி இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்து வரும் நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் அத்திட்டம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

தனது 'டுவிட்டர்' பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:- கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ராணுவ ஆள்தேர்வு நடக்கவில்லை. அதனால், ராணுவத்தில் சேருவதற்கு ஏராளமான இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதை மனதில் கொண்டு, பிரதமர் மோடி உத்தரவின்பேரில், அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பை மத்திய அரசு 21-ல் இருந்து 23 ஆக உயர்த்தி உள்ளது. பிரதமரின் அக்கறைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இதனால், ராணுவத்தில் சேர இன்னும் கணிசமான இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ராணுவ பணியை விரும்பும் இளைஞர்களுக்கு இத்திட்டம் பொன்னான வாய்ப்பு. இன்னும் சில நாட்களில், அக்னிபத் திட்டத்துக்கு ஆள் தேர்வு செய்யும் பணி தொடங்கும். ராணுவ பணியை விரும்பும் இளைஞர்கள் அதற்காக தயாராக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேருவோருக்கு மத்திய ஆயுதப்படை, அசாம் ரைபிள்ஸ் பிரிவில் பணியாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மாவட்டச் செயலாளர்களுடன் தனிக்கூட்டம் நடத்தும் ஓபிஎஸ்

ஓ.பன்னீர் செல்வம்
படக்குறிப்பு, ஓ.பன்னீர் செல்வம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார் என்று தினத்தந்தி இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

சென்னை, அ.தி.மு.க. செயற்குழு - பொதுக்குழு கூட்டம், வருகிற 23-ந்தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடடைபெற உள்ளது. இதையொட்டி நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஒற்றைத்தலைமை என்ற கோஷம் ஒலித்தது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு சென்னைக்கு வர அழைப்பு விடுத்துள்ளார் .சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் காலை 10 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்பதே என் நோக்கம் - இலங்கை பிரதமர் ரணில்

ரணில் விக்கிரமசிங்க
படக்குறிப்பு, ரணில் விக்கிரமசிங்க

உணவு தட்டுப்பாட்டுக்கு மத்தியில் எவரும் பட்டினியால் வாடுவதற்கு இடமளிக்கக் கூடாது என்பதே தனது கொள்கையாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக வீரகேசரி இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை உணவு பாதுகாப்பு தொடர்பான குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது. இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், "உணவு நெருக்கடியானது எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்களை நேரடியாகப் பாதிக்கக் கூடும் என்றாலும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று குறிப்பிட்டார்.

மேலும், சிறுவர்கள் மற்றும் முதியோர் மீது அதிக கவனம் செலுத்துமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

உணவு நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தலைமையில் குழுவொன்றை நியமிக்குமாறும் ,அக்குழுவில் நிமல் சிறிபால டி சில்வா, கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோரையும் மற்றும் ஜனாதிபதி அலுவலகம், நிதி அமைச்சு, விவசாய அமைச்சு, இராணுவம், தனியார் துறை உள்ளிட்ட அனைத்திலிருந்தும் உறுப்பினர்களை உள்ளடக்குமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நாடுமுழுக்க உள்ள 336 பிரதேச செயலகங்களில் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்காக 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் , எஞ்சியவற்றுக்காக அமைச்சுக்களின் செயலாளர் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

மீனவ மக்களுக்கு தேவையான எரிபொருள்,எரிவாயு மற்றும் விவசாயத்திற்கு தேவையான எரிபொருள் ஆகியவற்றை வழங்குவதற்கு முன்னுரிமையளிக்குமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

குறிப்பாக சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்களில் உணவுப் பாதுகாப்பிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

பிராந்திய ரீதியில் போட்டி நிறைந்த சந்தையை உருவாக்கும் நவீன விவசாய முறைக்கான நடுத்தர மற்றும் நீண்ட காலத் திட்டத்தின் அவசியத்தையும் பிரதமர் இதன் போது வலியுறுத்தினார் என வீரகேசரியில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காணொளிக் குறிப்பு, இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை வழங்கியதற்கு இலங்கையில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: