ஓ.பன்னீர்செல்வம் பேட்டி: "நல்லாதான் போயிட்டிருக்கு, எனக்கு ஈகோ இல்லை" - முக்கிய அம்சங்கள்

அதிமுக ஓ.பன்னீர்செல்வம்
  • இன்றைய காலகட்டத்தில் இரட்டைத் தலைமை நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எனவே ஒற்றைத் தலைமை தேவையில்லை.
  • கட்சி உடையக்கூடாது என்பதால் பிரதமரை டெல்லியில் சந்தித்தேன். அப்போது அவர்தான் துணை முதல்வர் பதவியை ஏற்க என்னை நிர்பந்தித்தார்.
  • எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஜெயக்குமார் அறைக்குள் பேசியவற்றை வெளியே தெரிவிக்கும்வரை எல்லாம் நன்றாகவே இருந்தது.
  • எனக்கு எந்த ஈகோவும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச தயாராக உள்ளேன்.
  • பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது கட்சி செயல்பாட்டிற்காக தற்காலிக ஏற்பாடுதான்.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை என்பது தற்போதைய சூழ்நிலையில் தேவையில்லை. கட்சியின் பொதுச் செயலாளர் பதவி என்பது ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரியது என்று பொதுக்குழுவிலேயே தீர்மானம் போடப்பட்டு விட்டது. அதை மீறுவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்று கூறியிருக்கிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

அதிமுக பொதுக்குழு ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தை நடத்தக்கூடாது என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் மீதான விசாரணை வரும் 22ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்றைய தினம் (ஜூன் 15ம் தேதி) நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஒற்றைத் தலைமை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதற்கு பெரும்பான்மையானவர்கள் ஆதரவளித்துள்ளனர். இன்றைய சூழலில் ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் தேவையாக இருக்கிறது. யார் அந்த ஒற்றைத் தலைமை என்பது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்'' என்றார்.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை காலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், வைகைச்செல்வன், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர், செம்மலை, ஆர்.பி. உதயகுமார், வளர்மதி, ஜெயக்குமார், சி.பி. சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அங்கு வந்து தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். சேலத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருந்த நேரத்தில் திடீரென்று சென்னையில் பன்னீர்செல்வம் நடத்திய ஆலோசனைக் கூட்டம், அக்கட்சி மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தமது அரசு குடியிருப்பில் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது கட்சியில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த விஷயங்கள் இதுவரை வெளியே பேசாமல் தவிர்த்து வந்த தகவல்களை பன்னீர்செல்வம் பேசினார். அதன் விவரம்:

கழகத்தை வழிநடத்தும் பொறுப்பு, ஒவ்வோர் அதிமுக தொண்டர்களால் தேர்தல் முறையில் பொதுச்செயலாளர் என்ற பதவி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே விதிகளை எம்ஜிஆர் உருவாக்கினார்.

பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்கு மட்டுமே

அதிமுக எடப்பாடி பழனிசாமி
படக்குறிப்பு, கோப்புப்படம்

இந்த சட்ட விதி மற்றும் எந்த சூழ்நிலையிலும் எப்படியும் மாற்றப்படக் கூடாது. அப்படி உருவாக்கப்பட்ட பொதுச்செயலாளர் என்ற பதவி தான் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டது. அவருக்குப் பிறகு 30 ஆண்டுகளாக அம்மா (ஜெயலலிதா) பொதுச்செயலாளராக இருந்தார். கழகத்தை அமைப்பு ரீதியாக வழிநடத்தி கட்சியின் சட்ட விதிப்படி கிளை, பேரூராட்சி, நகராட்சி, மாவட்ட கழகம், தலைமைக்கழக நிர்வாகிகள் தேர்வு நடத்தப்பட்டது.

ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பொதுச்செயலாளர் பதவி என்பது அவருக்கு மட்டுமே உரித்தானது என்ற நோக்கத்தில் அவருக்குரிய அந்தஸ்தை வழங்கினோம். அதன் பிறகு இரட்டைத் தலைமை என்ற அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.

அப்போதே இந்த பதவிகளை ஏன் உருவாக்க வேண்டும் என நான் கேட்டேன். எனக்கு துணை முதல்வர் பதவியோ அமைச்சர் பதவியோ தேவையில்லை என்று கூறினேன்.

'எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து செயல்படும் தேவை அவசியமானது. காரணம், எங்களுக்கு எதிராக டிடிவி தினகரன் 17 உறுப்பினர்களுடனும் திமுக உறுப்பினர்கள் ஆதரவுடனும் இருந்தனர். அப்போதிருந்த அதிமுக ஆட்சி பறிபோகக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், டிடிவி தினகரன் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்ததால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு காப்பாற்றப்பட்டது.'' என்றார்.

'இரட்டைத் தலைமை' என்பது வெறும் பதவி மட்டுமே என்று கூறினார்கள். பிறகு, கழக நடவடிக்கையில் இருவரும் சேர்ந்து கையெழுத்து போட வேண்டும் என்றவாறு இருக்க வேண்டும் என்று கூறினார்கள். அப்போது கழகம் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் செயல்பட நான் ஒப்புக் கொண்டேன்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், துணை முதல்வர் என்ற பதவி வெறும் பெயரளவுக்கே இருந்தது. அதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது தெரிந்தும்

பிரதமர்தான் நிர்பந்தித்தார்

அதிமுக எடப்பாடி ஓபிஎஸ்
படக்குறிப்பு, கோப்புப்படம்

அதற்கு முன்னதாக, டெல்லி சென்று பிரதமரை சந்தித்தபோது அவரும் துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்தித்தார். அதனால் ஏற்றுக் கொண்டேன்.

நல்லாதான் போய்க் கொண்டிருந்தது. இந்த இரட்டைத் தலைமை. ஒற்றைத் தலைமை என்பதே ஏன் வந்தது? எனத் தெரியவில்லை.

சிறப்பு அழைப்பாளர்களுக்கு ஏன் அழைப்பில்லை?

பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக முக்கியமான கூட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்பிதழ் போய்க் கொண்டிருந்தது. அம்மா காலத்தில் இருந்தே சிறப்பு அழைப்பாளர்களாக இருந்தவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு ஏன் செய்யவில்லை என்று நான் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டேன்.

பொதுக்குழுவிற்கான ஆலோசனைக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமிதான் மாதவரம் மூர்த்தி என்பவரை பேச அழைத்தார். அவர்தான் ஒற்றைத் தலைமை குறித்து முதலில் பேசினார். அப்படியொரு திட்டம் குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளரான என்னிடமோ பிறரிடமோ ஆலோசிக்கப்படவில்லை.

இத்தகைய சூழலில்தான் கட்சியில் ஒரு அறைக்குள் பேச வேண்டிய விஷயத்தை வெளியே பேசியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அவர் பேட்டி கொடுத்ததால்தான் பிரச்னை பூதாகரமாகியிருக்கிறது.

நான் இந்த கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எவ்வித சஞ்சலங்களுக்கும் இடம் கொடுக்காமல் மன நிறைவோடு பணியாற்றியிருக்கிறேன்.

ஜெயலலிதா உடல் நலமின்றி இருந்த காலகட்டத்தில் அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நீங்கள்தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று சொன்னபோது கூட நான் மூன்று மாதங்களுக்கு மட்டும் இருக்கிறேன் என்று சொன்னவன் நான்.

தற்போதைய சூழ்நிலையில் கட்சி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். நாம் எதிர்கட்சியாக செயல்படுகிறோம். எனவே ஒற்றுமையாக இருக்க வேண்டும் என திரும்பத்திரும்ப வலியுறுத்தி வந்துள்ளேன். என்றார் ஓபிஎஸ்.

ஒற்றை தலைமை தேவையில்லை

செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ்
படக்குறிப்பு, செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ்

தொடர்ந்து அவர் கூறுகையில், 'இன்றைய காலகட்டத்தில் இரட்டைத் தலைமை நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. அம்மா (ஜெயலலிதா) பொதுச்செயலாளராக இருந்தபோது அவர் மட்டுமே வகித்த பதவியில் வேறு யாரும் வரக்கூடாது என்று பொதுக்குழு மூலம் முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு முரணாக செய்வதாக இருந்தால் அது அம்மாவுக்கு (ஜெயலலிதாவுக்கு) செய்யும் துரோகமாக கருதப்படும்.

எத்தனையோ பிரச்னையில் நான் எடப்பாடி பழனிசாமியுடன் பேசியிருக்கிறேன். எனக்கு எந்த ஈகோவும் இல்லை. அவருடன் பேச நான் தயாராகவே இருக்கிறேன்.

என்னை யாரும் ஓரங்கட்ட முடியாது

இதற்கு முன்னதாக, ஒற்றைத் தலைமை குறித்து, நானோ எடப்பாடி பழனிச்சாமியோ ஒன்றாகவோ, தனியாகவோ பேசியதில்லை. கட்சிக்காக, தொண்டர்களுக்காகவே நான் விட்டுக் கொடுத்தேன். நான் அதிகாரப் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை. தொண்டர்களுக்காகவே விட்டுக் கொடுத்துள்ளேன்.

என்னை யாரும் ஓரம் கட்ட முடியாது. தொண்டர்களிடமிருந்து என்னை யாரும் பிரிக்க முடியாது. அந்தளவுக்கு தொண்டர்களோடு தொடர்பில் இருப்பவன் நான். ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலகுங்கள் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்றார் பன்னீர்செல்வம்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பன்னீர்செல்வம் அளித்த பதில்:

தற்போதுள்ள பிரச்னைக்கு தீர்வு என்ன ?

தீர்வு குறித்த திட்டத்தை கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளோம். குறிப்பாக, கட்சியின் மூத்த நிர்வாகிகள் 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைப்பது உள்ளிட்ட திட்டத்தை நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளோம். பொதுச் செயலாளர் பதவியில் ஜெயலலிதா இடத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க முடியாது என்று சொல்லும் நீங்கள் சசிகலாவை பொதுச் செயலளாராக்கியது ஏன் ?

'பொதுச் செயலாளர் (ஜெயலலிதா) மறைவையடுத்து, அப்போதிருந்த சூழலில் கட்சி அமைப்பு, செயல்பாட்டிற்காக தற்காலி பொதுச் செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டார். தொண்டர்களால் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படும் வரை, கட்சியின் அமைப்பு ரீதியிலான செயல்பாட்டிற்கான தற்காலிக ஏற்பாடுதான் அது.

பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வந்தால்?

"ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வர முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் பேசி ஒரு முடிவு எடுத்து விட்டால், இதற்கு தேவை இருக்காது.

தற்போது ஒற்றைத் தலைமை குறித்து பேச்சுக்கு யார் காரணம்?

இது குறித்து நேரடியாக குறிப்பிட்டு யார் மனதையும் நோகடிக்க விரும்பவில்லை.

கட்சிக் கட்டுப்பாட்டை மீறி பேட்டியளித்த ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? பொறுத்திருந்து பாருங்கள்.

காணொளிக் குறிப்பு, "தமிழ்நாட்டுக்கு ஏற்ப பாஜக கொள்கையை மாற்றிக்கொள்ளவேண்டும்" - பொன்னையன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: