அதிமுகவின் ஒற்றைத் தலைமை யார்?: ஓபிஎஸ் - இபிஎஸ் தனித்தனி ஆலோசனை - என்ன நடக்கிறது ?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
அதிமுகவின் ஒற்றைத் தலைமை குறித்து விவாதம், நிர்வாகிகள் ஆலோசனை, ஆதரவு சுவரொட்டிகள் என்று அடுத்தடுத்த நிகழ்வுகள் பேசுபொருளாகி வருகின்றன. இதையடுத்து யார் அந்த ஒற்றைத் தலைமை? என்னவாகும் அதிமுக ? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (ஜூன் 14ம் தேதி) நடைபெற்றது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், முனுசாமி, அண்மையில் பாஜக குறித்து கருத்து தெரிவித்த, முன்னாள் அமைச்சர் பொன்னையன், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒற்றைத் தலைமை குறித்து முழக்கம் எழுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
ஒற்றைத் தலைமை விவாதம்

பட மூலாதாரம், ADMK
கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அது ஆரோக்கியமானதாக இருந்தது.
அன்றைக்கிருந்த சூழல் வேறு. இன்றைக்குள்ள நிலை வேறு. ஆகையால், காலத்தின் கட்டாயத்தால், அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதை பெரும்பான்மையானவர்கள் வலியுறுத்தியுள்ளனர்" என்றார்.
தனித்தனியாக ஆலோசனை
அதிமுகவின், ஒற்றைத் தலைமை முழக்கம் எழுந்த 24 மணி நேரத்திற்குள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை குறிப்பிட்டு, "ஒற்றைத் தலைமை வேண்டும். ஓபிஎஸ் தலைமை வேண்டும்'' என்று அவருக்கு ஆதரவான சுவரொட்டிகள் சென்னை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனியாக தங்களது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் இடையிலான தலைமைப் பதவி போட்டிக்கான களம் சூடு பிடித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மூத்த நிர்வாகிகள் பலரும் அதிருப்தி
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் மணா பிபிசி தமிழிடம் கூறுகையில், "1972 அக்டோபர் மாதம் எம்.ஜி.ஆர் கட்சியைத் தொடங்கியது முதல் பல்வேறு நெருக்கடிகளை அதிமுக சந்தித்துள்ளது. குறிப்பாக, எஸ்.டி.எஸ் தனிக்கட்சி, ஜானகி, ஜெயலலிதா அணிகள் உள்ளிட்டவற்றை சொல்லலாம். ஜானகி - ஜெயலலிதா அணிகள் பிரிந்த போது இரு அணிகளின் இணைப்புக்கு பத்திரிகையாளர்கள் சோ, எம்.நடராஜன் தொடங்கி ராஜீவ் காந்தி வரை முயன்றனர். இரு அணிகளும் இணைந்தன.

பட மூலாதாரம், Mana
ஆனால், தற்போது அது போன்ற ஒரு நிலை இல்லை. ஓபிஎஸ் - இபிஎஸ் இரு அணிகள் கண்ணுக்கு தெரிந்தாலும், வெளியில் தெரியாமல் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்து கட்டுக்கோப்பும் இல்லை.
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரை எடுத்த இணைப்பு முயற்சிக்கு எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டை போட்டுவிட்டார். தற்போது, இணைப்பு சாத்தியப்படாமல் போவதற்கு தனிப்பட்ட ஈகோவே காரணமாக இருக்கிறது. இதனால், நிர்வாகிகள் மட்டுமின்றி தொண்டர்கள் மத்தியிலும் குழப்பமான நிலை உள்ளது.
தற்போது, பணபலம், அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு, தனிப்பட்ட யுக்தி என எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமைக்கு வந்தாலும் அதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்பது நிச்சயமில்லை. எடப்பாடி பழனிச்சாமியின் ஆதிக்கத்தால், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து பணியாற்றும் நிலையும் ஏற்படலாம். முதல்முறையாக கொங்கு மண்டலம், தென்மண்டலம் என அதிமுகவில் வெளிப்படையான பிரிவு ஏற்பட்டுள்ளது. இது கட்சிக்கு எதிராகவே முடியும்.
பல்வேறு நெருக்கடியான நிலைகளைக் கடந்தும் அதிமுகவின் வாக்கு வங்கியானது சற்றேறக்குறைய 30 சதவீதமாக நிலைத்திருக்கிறது. தற்போதுள்ள நிலை அந்த வாக்கு வங்கியை சிதைக்கும்" என்கிறார்.
டிடிவி தினகரன் விமர்சனம்
அதிமுகவின் ஒற்றைத் தலைமை முழக்கம் குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இப்போதிருக்கும் அதிமுக ஒரு கட்சியே அல்ல. அது ஒரு கம்பெனி. யார் அதிக முதலீடு செய்துள்ளார்களோ அவர்களுக்கு ஆதரவாக 'ஜே' போடுகிறார்கள். அதிமுகவை நாங்கள் மீட்டெடுப்போம். சசிகலா சட்டப் போராட்டத்தைத் தொடருவார்" என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாதான் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லி வருகின்றனர். ஆனால், அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சசிகலா ஆதரவாளர்கள் கருத்து

பட மூலாதாரம், NARASIMMAN
இது குறித்தும் ஒற்றைத் தலைமை முழக்கம் பற்றியும் முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும் சசிகலா ஆதரவாளருமான பள்ளிப்பட்டு நரசிம்மனிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, 'அதிமுகவிற்கு தொடர்பில்லாதவரா எடப்பாடி பழனிச்சாமியை முதலைமைச்சராக்கினார்?. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், எம்.எல்.ஏக்களை ஒருங்கிணைத்து, ஆட்சியை ஸ்திரப்படுத்தியது யார் என்று அனைத்து தொண்டர்களுக்கும் தெரியும்.
அதிமுகவை ஒற்றைத் தலைமைதான் வழி நடத்த வேண்டும் என்பதைத்தான் நாங்களும் சொல்கிறோம். அந்த ஒற்றைத் தலைமை சசிகலாதான். இதை காலம் சொல்லும். அதிமுக பிரிந்து கிடக்கும் வரை தோல்விதான் கிடைக்கும். இதை தொண்டர்கள் விரும்பமாட்டார்கள். எனவே தொண்டர்கள் விருப்பத்துடன் சசிகலா ஆளுமைமிக்க ஒற்றைத் தலைமையாக கட்சியை வழி நடத்துவார்.' என்கிறார் பள்ளிப்பட்டு நரசிம்மன்.
"ஜெயலலிதாதான் நிரந்தரப் பொதுச் செயலாளர்" - டி.ஜெயக்குமார்

இப்போதும் அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான். அவர் இடத்தில் வேறு யாரையும் வைத்துப் பார்க்கவில்லை என்று முன்பு சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்.
தொடர்ந்து அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிற கருத்து குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கு பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் ஒப்புதல் அளித்தனர். யார் அந்த ஒற்றைத் தலைமை என்பதை கட்சிதான் முடிவு செய்யும். அதாவது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள், மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள். அதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்" என்றார்.
ஆனால், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் இன்றைக்கு தனித்தனியாக ஆலோசனை நடத்துகிறார்களே? என்று கேட்டதற்கு, "அதிமுக ஒரு ஜனநாயகக் கட்சி. ஆகையால், ஓ.பி.எஸ், இபிஎஸ் இருவரிடமும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகிறார்கள். மூத்த நிர்வாகிகள் ஆலோசனைப்படிதான் முடிவு செய்யப்படும். எனவே, இதை ஆதரவாளர்களுடன் தனியாக கூட்டம் நடத்துகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகிறார்கள்.' என்றார்.
பதவி பின்னர் முடிவு செய்யப்படும்

ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவான சுவரொட்டிகள் குறித்து கேட்டதற்கு, "தலைமை யார் என்பதை மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள். அதற்கு முன்பாக போஸ்டர் ஒட்டுவது போன்ற செயல்கள் கட்சிக் கட்டுப்பாடான செயல் அல்ல" என்றார்.
ஒற்றைத் தலைமை என்பது பொதுச்செயலாளர் பதவியா? என்று கேட்டதற்கு, "அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் அம்மாதான் (ஜெயலலிதா) அந்த இடத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்கவில்லை என்று முன்பு சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை.
ஒற்றைத் தலைமை என்கிற கருத்து இப்போது வந்துள்ளது. அது தேவையா? தேவை இல்லையா? என்று கட்சி முடிவு செய்யும். அதற்கு பிறகு அந்த ஒற்றைத் தலைமை யார், அந்த பதவி பெயர் என்ன? என்பது குறித்து முடிவு செய்யப்படும். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இல்லாமல் வேறு ஒருவராகவும் அந்த ஒற்றைத் தலைமை இருக்கலாம். இதையெல்லாம் கட்சிதான் முடிவு செய்யும்" என்கிறார் டி.ஜெயக்குமார்.
அதிமுகவில் தொடரும் திருப்பங்கள்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணா 1949ம் ஆண்டு திமுகவைத் தொடங்கினார். எம்.ஜி.ஆர் 1953ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். திமுக பொருளாளராகவும் உயர்ந்தார். அண்ணா மறைவுக்கு பிறகு, கட்சியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, 1972ம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.
தனது புதிய கட்சி அண்ணாவின் கோட்பாடுகளை பின்பற்றும் என்றும் அறிவித்தார். கடந்த 1987ம் ஆண்டு அவரது மறைவிற்கு பின்னர் அதிமுக ஜானகி அணி, அதிமுக ஜெயலலிதா அணி என இரண்டாக பிரிந்தது. இதையடுத்து நடைபெற்ற 1989ம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பின்னர் இரண்டு அணிகளும் இணைந்தன.
அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2016ம் ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா மறையும் வரை அவரே பொதுச் செயலாளராக தொடர்ந்தார்.

பட மூலாதாரம், VK Sasikala
இதையடுத்து, அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஓ.பி.எஸ் தர்மயுத்தம், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக தேர்வு செய்த சசிகலா. ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைப்பு, சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து நீக்கம், அமமுக என்கிற புதிய கட்சியைத் தொடங்கிய டிடிவி தினகரன் என அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டன.
இப்போது ஒற்றைத் தலைமை யார்? என்கிற அடுத்த சுற்று பரபரப்பு பற்றியுள்ளது. வரும் 23ம் தேதி கூடும் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் அல்லது முன்னதாக இதற்கான இறுதி வடிவம் கிடைத்து விடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












