காவிரி: டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் மீண்டும் போராட்டம்

பட மூலாதாரம், P.R.Pandian
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக சென்று, டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தை இன்று(ஜூன் 16ம் தேதி) முற்றுகையிட்டனர். பின்னர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர் கோபால் ராயிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். எதற்காக இந்த போராட்டம் ? தமிழ்நாடு விவசாயிகள் மீண்டும் டெல்லி செல்ல காரணம் என்ன?
தமிழ்நாடு - கர்நாடகா இடையிலான காவிரி நதி நீர்ப் பிரச்னை கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புடன் முடிந்து விட்டது என்று பலரும் நினைத்தனர். ஆனால், முடியவில்லை தொடரும் என்பது போல், மேகேதாட்டு அணை என்கிற பெயரில் மீண்டும் காவிரி விவகாரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்கிற இடத்தில் அணை கட்டப்படும் என்று கர்நாடக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சொல்லி வந்தன. இந்த திட்டத்திற்கு சுமார் ரூ. 9 ஆயிரம் கோடியில் விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) கர்நாடக அரசு தயாரித்தது. தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
''மேகேதாட்டு அணை கட்ட மத்திய அரசு எந்தவித அனுமதியும் அளிக்க கூடாது' என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 21ஆம் தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவை தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்

பட மூலாதாரம், TNDIPR
தீர்மானத்தை முன்மொழிந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ''மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகம் பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் சொன்னதை மதிக்க மாட்டோம் என்று ஒரு மாநில அரசு சொல்கிறது. கூட்டாட்சி எங்கே இருக்கிறது?" என்று துரைமுருகன் பேசினார்.
''காவிரி நதிநீர் நடுவர் மன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக அரசு மதிக்கவில்லை என்றும், இணைப் படுகையில் உள்ள மாநிலங்களிடமிருந்தோ இந்திய அரசிடமிருந்தோ அனுமதி பெறாமல் அணை கட்ட முன்வருகிறது.'' என்று குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் தீர்மானத்தில், 'கர்நாடகத்தின் ஒருதலைப்பட்ச செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த நடவடிக்கையை சட்டப்பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது" என்றும் தெரிவிக்கப்பட்டது.
'கர்நாடக அரசுக்கு மத்தியில் ஆளும் அரசு எவ்வித தொழில்நுட்பம் அல்லது சுற்றுச்சூழல் அல்லது வேறு எந்த அனுமதியும் அளிக்கக் கூடாது.' என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசின் இந்த தீர்மானத்திற்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை எதிர்ப்பு தெரிவித்தார். மேகேதாட்டு அணைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
கர்நாடக முதலமைச்சர் எதிர்ப்பு
இந்நிலையில், ஜூன் 17ம் தேதிக்கு திட்டமிடப்பட்ட, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டத்தில், கர்நாடக அரசு தயாரித்துள்ள மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்தும் விவாதிக்கப்படும் என்று நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
''காவிரி ஆற்றின் குறுக்கே, மேகேதாட்டு அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இது குறித்து உரிய அறிவுரைகளை இந்திய ஜல்சக்தி (நீர் வளத்துறை) அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும்.'' என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இதற்கு, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ''மேகேதாட்டு அணையை தமிழ்நாடு அரசு அரசியல் உள்நோக்கத்துடன் எதிர்க்கிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு, பிரதமருக்கு கடிதம்... என காவிரி விவகாரத்தை தமிழ்நாடு அரசு மீண்டும் கையில் எடுத்துள்ளது. இதை, உரியமுறையில் எதிர்கொள்வோம்.'' என்று பொம்மை கூறினார்.

பட மூலாதாரம், Basavaraj s Bommai/Twitter
ஜுன் 17ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான், தமிழ்நாட்டு விவசாயிகள் டெல்லி சென்று மீண்டும் ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?

பட மூலாதாரம், P.R.Pandian
இது குறித்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், ''காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு 2018ல் கர்நாடகாவிற்கு மேகதாது அணை கட்டுவதற்கு வரைவுத் திட்ட அறிக்கை தயார் செய்ய சட்டவிரோதமாக அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின், கடந்த மூன்று கூட்டங்களில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் வரைவுத் திட்ட அறிக்கை விசாரணைக்கு ஏற்க கூடாது என்று பெரும்பான்மை மாநிலங்களின் கருத்தின் அடிப்படையில் மறுக்கப்பட்டுள்ளது.
திடீரென தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதனை எதிர்த்தும் புதிய அவசர வழக்கை தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் ஆணையம் விசாரணைக்கு ஏற்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனையில் நடுநிலையோடு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட வேண்டிய காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடகாவிற்கு ஆதரவாக மோதி அரசின் அரசியல் அழுத்தத்தால் துணைபோவது ஏற்க முடியாது.'' என்கிறார் பி.ஆர்.பாண்டியன்.
அணை கட்டினால் என்ன பாதிப்பு ?
மேலும், ''மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் சென்னை உட்பட 11 மாநகராட்சிகள் உள்ளடக்கிய 32 மாவட்டங்களில் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பறிபோகும். காவிரி டெல்டாவில் 2 கோடி விவசாயக் குடும்பங்கள் அகதிகளாக வெளியேற நேரிடும்.
எனவே காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகம் கொடுத்திருக்கிற வரைவுத் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையிலும் ஆணையம் இது குறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்கக் கூடாது. இதை வலியுறுத்திதான் இன்று (ஜூன் 16ம் தேதி) முற்றுகை போராட்டம் நடத்தினோம்.'' என்றார்.
தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளரும் மூத்த பொறியாளர்கள் சங்க தலைவருமான அ.வீரப்பன் கூறுகையில், "மேகேதாட்டுவில் தற்போது கட்ட முயற்சிக்கும் அணை மட்டுமல்ல ஏற்கனவே கட்டியுள்ள 5 அணைகளும் முறைகேடானவை. கடந்த 1970ம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு 350 டி.எம்.சி தண்ணீர் வந்தது. கடந்த 1990ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பில் 205 டிஎம்சியாக இது குறைந்தது.
கடந்த 2007ம் ஆண்டு இறுதித் தீர்ப்பில் 192 டிஎம்சியாக குறைந்தது. தொடர்ந்து 2018ம் ஆண்டு உச்சநீதிமன்ற மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் 177.25 டிஎம்சி என்று மேலும் 14.75 டிஎம்சி குறைந்தது. இதையும் கர்நாடக அரசு முறையாக வழங்குவதில்லை. இது குறித்து மத்திய அரசோ, காவிரி மேலாண்மை ஆணையமோ கண்டுகொள்வதில்லை.'' என்கிறார் வீரப்பன்.
கடந்த மார்ச் மாதம் விவசாயிகளிடம் காவிரி மேலாண்மை ஆணையம், ''மேகேதாட்டு அணை திட்டத்தை கர்நாடக அரசு ஜல்சக்தி துறை மூலம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பி வைத்தது. அதனை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து கருத்து கேட்டுள்ளோம். தொடர்ந்து ஆணையக் கூட்டத்தில் அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கர்நாடகம் வலியுறுத்தி வருகிறது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் அனுமதிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆணைய கூட்டத்தில் விவாதித்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அனைத்துமே ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் புதிய அணை கட்டுவதற்கு காவிரி ஆணையம் மத்திய அரசுக்கு தடையில்லா சான்று கொடுக்க முடியும். ஒரு மாநிலம் எதிர்த்தாலும் கூட ஆணையம் அனுமதிக்காது என்று உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













