வடகலை, தென்கலை சர்ச்சை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை சர்ச்சை நீடிப்பது ஏன்?

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள மூலவருக்கு முன்பாக பாடல் பாடுவதில் வடகலை ஐயங்கார் பாடுவதா, தென்கலை ஐயங்கார் பாடுவதா என்ற சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. சில நூற்றாண்டுகளாகவே நடந்துவரும் இந்த விவகாரத்தின் மையப் புள்ளி என்ன?
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற வரதராஜப் பெருமாள் கோவிலில், காலையிலும் மாலையிலும் யார் பிரபந்தங்களைப் பாடுவது என்பதில் அந்தக் கோவிலோடு தொடர்புடைய வடகலை ஐய்யங்கார்களுக்கும் தென்கலை ஐயங்கார்களுக்கும் இடையிலான மோதல் நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டது என்றாலும், கடந்த சில ஆண்டுகளில் இந்த மோதல் உச்சத்தை எட்டியிருக்கிறது.
குறிப்பாக, 2018ஆம் ஆண்டிற்குப் பின்பாக இரு பிரிவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலாலும் வழக்குகளும் இந்த விவகாரம் மேலும் கவனிக்கப்படக்கூடிய ஒன்றாக மாறியிருக்கிறது.
எல்லா வைணவக் கோவில்களிலும் காலையிலும் மாலையிலும் பிரபந்த சேவை என்பது உண்டு. நாலாயிரத் திவ்ய பிரபந்தப் பாடல்களை, இறைவனுக்கு முன்பாக வைணவர்கள் பாடுவதே இந்த பிரபந்த சேவை. இந்த பிரபந்த சேவையில் ஈடுபடுவோர் அத்யபாகர்கள் எனப்படுவார்கள். இவர்களுக்கு இதற்கு பிரதிபலனாக பிரசாதமும் வழங்கப்படும்.
இந்தப் பிரபந்தங்களைப் பாடுவதற்கென முறைகள் உண்டு. பிரபந்தக் கோஷ்டியில் மூத்தவராக இருப்பவர், "ஆரம்பிக்கலாம்" என்ற சொன்னதும் பிரபந்த சேவை துவங்கும். முதலில், அவர்கள் சார்ந்த பிரிவின் ஆச்சாரியாரைப் போற்றிப்பாடிவிட்டு, பிரபந்தங்களைப் பாடுவார்கள். தென்கலை வைணவர்களைப் பொறுத்தவரை, பிரபந்தங்களைத் துவங்குவதற்கு முன்பாக, மணவாள மாமுனிகளை போற்றும் "ஸ்ரீ சைலேஷ தயாபாத்திரம்" என்ற மந்திரத்தைச் சொல்லி துவங்குவார்கள். வடகலை வைணவர்களைப் பொறுத்தவரை, "ஸ்ரீ ராமானுஜ தயாபாத்திரம்" என்ற மந்திரத்தைச் சொல்லித் துவங்குவார்கள்.
இதற்குப் பிறகு இரு தரப்புமே பொதுவான பிரபந்தங்களைப் பாடுவார்கள். இதனை முடிக்கும்போது, தென்கலையார் "மணவாள மாமுனிகளே இன்னும் ஒரு நூற்றாண்டிரும்" என்ற வாழித் திருநாமத்தைச் சொல்லி முடிப்பார்கள். அதேபோல வடகலையார் தங்களுக்கென ஒரு வாழித் திருநாமப்பாடலை வைத்துள்ளனர்.

வரதராஜப் பெருமாள் கோவிலைப் பொறுத்தவரை, இந்த பிரபந்தம் பாடுவதை தொடர்ச்சியாக தென்கலை பிரிவினர் செய்துவருகின்றனர். இந்த நிலையில், வடகலை பிரிவினரும் தங்களுக்கு உரிமை கோரவே, விவகாரம் பெரிதாகியிருக்கிறது.
நீண்ட காலமாகவே இந்த விவகாரம் நீடித்து வருகிறது என்றாலும் தற்போதைய முட்டலும் மோதலும் துவங்கியது 2018ல்தான்.
2018 செப்டம்பரில் வேதாந்த தேசிகரின் 750வது திருநட்சத்திர மகோத்சவம் கொண்டாடப்பட்டது. அந்தத் தருணத்தில் வடகலை பிரிவினர் நீதிமன்றத்தை அணுகி, தேசிகரின் திருநட்சத்திரத்தின்போது அவருடைய தமிழ்ப்பாடல்களை பாடினால் நன்றாக இருக்கும். அதனைப் பாட அனுமதிக்க வேண்டும். அல்லது தென்கலையார் அதனைப் பாட உத்தரவிட வேண்டுமென்று கோரினார்கள். வடகலை பிரிவினரையும் பாட அனுமதிக்கலாம் என நீதிமன்றம் வாய்மொழியாக உத்தரவிட்டது. இதையடுத்து, அந்தத் தருணத்தில், கோவிலின் செயல் அலுவலர், வடகலை பிரிவினரை பாட அனுமதித்தார்.
இதற்கு அடுத்த மாதம், அதாவது அக்டோபர் மாத திருநட்சத்திரத்தின்போதும் வடகலை பிரிவினர் பாட முயற்சித்தபோது, உடனடியாக நீதிமன்றத்தை அணுகிய தென்கலை பிரிவினர் அதே நாளில் இடைக்காலத் தடை பெற்றனர். அன்று மாலை வேதாந்த தேசிகர் உற்சவம் நடக்கவில்லை.

இதற்குப் பிறகு அவ்வப்போது இரு தரப்பினரும் மோதிக்கொள்வது நடக்க ஆரம்பித்தது. இந்த மோதல்கள் பல சமயங்களில் மிக மோசமான கட்டத்தையும் எட்டியிருக்கின்றன. இந்த மோதலின்போது கோவிலுக்குள்ளேயே, கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்ட சம்பவங்களும் வீடியோ காட்சிகளாக வெளியில் பரவின.
இந்த நிலையில், வடகலையாரைப் பாட அனுமதித்தது தவறு என்று கூறி ரங்கநாதன் என்பவர் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார். நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த அவர், முதலில் தென்கலையாரும் தொடர்ந்து வடகலையாரும் ஒருவர் பின் ஒருவராக பாடலாம் என உத்தரவிட்டார். 2019 பிப்ரவரியில் இந்தத் தீர்ப்பு வந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தென்கலையார் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த எம்.எம். சுந்தரேஷ் - கிருஷ்ணகுமார் அமர்வு, முந்தைய தீர்ப்பை, ஒதுக்கிவைத்துவிட்டு, வழக்கை புதிதாக விசாரிக்க வேண்டுமெனக் கூறியது.
இந்த நிலையில், கடந்த மே 14ஆம் தேதியன்று கோவிலின் செயல் அலுவலர் ஒரு உத்தரவை வெளியிட்டார். பிரபந்தம் பாடுவது தொடர்பாக தொடர்ந்து பிரச்சனைகள் எழுவதால், 30 பேர் மட்டுமே வேத பாராயணம் செய்ய வேண்டுமெனவும் திவ்ய பிரபந்த கோஷ்டியில் செல்பவர்களில் 10 பேர் தென்கலையினராகவும் சாதாரண வழிபாட்டாளர்களாக 10 வடகலையாரும் செல்லலாம் என ஆணையிட்டார்.
இதனை எதிர்த்து நாராயணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த எஸ்.எம். சுப்பிரமணியம், நான்காவது வரிசையில் இருந்து வடகலையாரும் பாடலாம் என்று தீர்ப்பளித்தார். மே 17 இந்தத் தீர்ப்பு வெளியானது. இதனை எதிர்த்து மே 20ஆம் தேதி தென்கலையாரால் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இதனை விசாரித்த மகாதேவன், இளந்திரையன் அமர்வு செயல் அலுவலரின் ஆணை, மே 17ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு ஆகியவற்றை ரத்து செய்ததோடு, இனி இது தொடர்பான வழக்குகளை தங்கள் அமர்வே விசாரிக்கும் என்றும் சொன்னார். தற்போது வழக்கு நிலுவையில் இருக்கிறது.
இதனால், தற்போது இறைவனுக்கு பிரபந்த சேவை நடைபெறுவதில்லை. இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து இறங்கிவருவதாகவும் தெரியவில்லை.
"ஆண்டாண்டு காலமாக இந்தச் சேவையைச் செய்து வருகிறோம். பல நீதிமன்றங்கள் எங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்திருக்கின்றன. எங்களைப் பொறுத்தவரை, 'ஸ்ரீ சைலேஷ தயாபாத்திரம்' முடிந்த பிறகு வடகலையார் எங்களோடு சேர்ந்து பிரபந்தம் பாடலாம். பெருமாளுக்கு இந்த பிரபந்த சேவையை செய்யாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. வடகலையார் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்" என்கிறார் தென்கலை பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞரான வரதராஜன்.

ஆனால், பிரபந்த சேவை என்பது தென்கலையாருக்கு மட்டுமுள்ள உரிமை என்பதை ஏற்க முடியாது என்கிறார்கள் வடகலை தரப்பினர். "இந்தக் கோவில் வடகலை கோவில், பிரபந்தம் பாடும் உரிமை எங்களுடையது. நாங்கள் அவர்களைச் சேர்த்துக்கொண்டோம். நீங்களும் பாடுங்கள் என அவர்களுக்கு அனுமதி கொடுத்தோம். அதற்கு அர்த்தம் நீங்கள் மட்டுமே பாடுங்கள் என்பதல்ல. நாங்கள் கொடுத்த அனுமதி என்பது இப்போது உள்ள தென்கலையாருக்கோ, அவர்களது முன்னோருக்கோ கிடையாது. நாங்கள் ஒருவருக்குக் கொடுத்தோம். அவர் ஏழு பேருக்குக் கொடுத்தார். அதுவே தவறு. அந்த ஏழு பேரும் இப்போது இல்லை."
"இந்த நிலையில், பிரபந்ததைத் துவக்கும் உரிமை இவர்களுக்கு இல்லை. இவர்கள் தங்களுக்கு உரிமையில்லாததை செய்கிறார்கள். எல்லா பிரச்சனைக்கும் சட்ட ரீதியாகத் தீர்வுகாண முடியாது. நீண்டகாலப் பழக்கவழக்கம் என்ற முறையில் இதை ஏற்க முடியாது. காலத்திற்குப் பொருந்தாத பல பழக்கவழக்கங்கள் தற்போது மாறிவிட்டன. பெரிய தீங்கில்லாத எல்லா மாற்றத்தையும் ஏற்க வேண்டும். தவிர, பழக்கவழக்கம் என்ற பெயரில் எங்களை வாயடைப்பதை நாங்கள் ஏற்க மாட்டோம். எங்களுக்கு உரிமை இருக்கிறது. மன்னர் மானியங்களே ஒழிக்கப்பட்ட நிலையில், இன்னும் மன்னர் காலப் பழக்கவழங்கங்களை வைத்துக்கொண்டிருக்க முடியாது. அவை மாறவேண்டும்" என்கிறார் காஞ்சிபுரத்தில் உள்ள வடகலை சம்பிரதாய அமைப்பான வடகலை வைஷ்ணவ சம்பிரதாய சபையின் தலைவரான டி.சி. ஸ்ரீநிவாசன்.
இந்தக் கோவிலின் பரம்பரை தர்மகர்த்தாக்களான தாத்தாச்சாரியார் குடும்பத்தினர் இந்த விவகாரத்தில் எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை. பிரச்சனை சுமுகமாகத் தீர்ந்து, பெருமாளுக்கு பிரபந்த சேவை நடந்தால் சரி என்கிறார்கள்.

"எல்லோரும் கடவுளை அடைய வேண்டுமென்பதுதான் வைணவத்தின் குறிக்கோள். இரு தரப்பும் ஒரு முடிவெடுத்து, ஒற்றுமையாக இருக்கவேண்டுமென நினைக்கிறோம். பேச்சு வார்த்தை மூலமாகவோ, நீதிமன்றத்தின் மூலமாகவோ இதை செய்ய வேண்டும்" என்று மட்டும் சொல்கிறார் தாத்தாச்சாரியார் குடும்பத்தைச் சேர்ந்த சம்பத்குமாரன்.
இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் இது தொடர்பாக முறையிட்டனர். இருந்தபோதும், விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், எந்த முடிவும் எட்டப்படவில்லை.

உரிமைப் போரின் வரலாற்றுப் பின்னணி
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வடகலை வைணவ சம்பிரதாயத்தின்படி நிர்வகிக்கப்படும் ஒரு கோவில். ஆனால், இந்தக் கோவில் துவக்கத்தில் தாத்தாச்சாரியார் என்ற குடும்பத்தின் வசம் இருந்தது. இந்த தாத்தாச்சாரியார் என்போர் வடகலை வைணவப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இங்கிருக்கும் அர்ச்சகர்கள் அனைவரும் வடகலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இப்படியிருக்கும்போது, இந்தக் கோவிலில் இறைவனின் திருவுருவுக்கு முன்பாக பாடும் உரிமை தென்கலை வைணவர்களுக்கு எப்படிக் கிடைத்தது? இதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணியைச் சொல்கிறார்கள் வைணவர்கள். முகலாயப் படையெடுப்பின்போது, வரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்த திருமேனி, உடையார்பாளையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, அங்கிருந்த பாளையக்காரரின் வசம் இருந்தது.
இந்தத் திருமேனிகளைத் தேடிவந்த தாத்தாச்சாரியார்கள், அவை அங்கிருப்பதை கண்டனர். ஆனால், அந்தப் பாளையக்காரர் அதனைத் தர மறுத்துவிட்டார். அப்போது அந்த ஊரில் இருந்த ஆத்தாஞ்ஜீயர் என்பவர், ஹைதராபாதில் இருந்த நவாபின் உதவியை நாடி, அந்தத் திருமேனிகளைப் பெற்றுக்கொடுத்தார்.
அதற்குப் பிரதிபலனாக, தினமும் இறைவனின் திருவுருவுக்கு முன்பாக தினமும் பிரபந்தங்கலைப் பாடும் உரிமை ஆத்தாஞ்ஜீயரின் வம்சத்திற்கு அளிக்கப்பட்டது. பிறகு, அந்த உரிமை, ஆத்தாஞ்ஜீயரின் வம்சத்தினர் மட்டுமல்லாது பல தென்கலையாருக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
வடகலை - தென்கலை வேறுபாடு என்ன?
வைணவப் பண்பாட்டில் நாதமுனிகளுடன் துவங்கும் ஆச்சார்ய பரம்பரையில் ஆளவந்தாருக்கு அடுத்து வந்தவர் ராமாநுஜர். தற்கால வைணவ நடைமுறைகளை உருவாக்கி, அவற்றுக்கு கருத்துகளின் அடிப்படையில் உயிர் கொடுத்தவராக, ராமானுஜரை வைணவர்கள் கருதுகின்றனர்.
ராமாநுஜரின் காலத்திற்குப் பிறகே வைணவத்தில் வடகலை - தென்கலை என இரு பிரிவுகள் ஏற்பட்டன. காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்ட ஆச்சார்யார்களைப் பின்பற்றுபவர்கள் வடகலை என்றும் திருவரங்கத்தை மையமாகக் கொண்ட ஆச்சார்யார்களைப் பின்பற்றுவோர் தென்கலை என்றும் பொதுவாகக் குறிக்கப்படுகின்றனர்.

இதனை வேறுவிதமாகவும் சொல்வதுண்டு. வைணவர்களைப் பொருத்தவரை கோவில் என்ற சொல் திருவரங்கத்தில் உள்ள ரங்கநாத சுவாமி திருக்கோவிலையே குறிக்கும். இதற்குத் தென்பகுதியில் உள்ள திருநெல்வேலியில், ஆழ்வார் திருநகரியில் 1370ல் பிறந்த மணவாள மாமுனிகளைப் பின்பற்றும் வைணவர்கள் தென்கலையார் என்றும் அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக, 1268ல் காஞ்சிபுரத்தில் தூப்புல்லில் பிறந்த வேதாந்த தேசிகரை பின்பற்றும் வைணவர்கள் வடகலையார் என்றும் அழைக்கப்படுகிறார்கள் என்ற கருத்தும் உண்டு. திருவரங்கத்திற்கு வடக்கே காஞ்சிபுரமும் தெற்கே ஆழ்வார் திருநகரியும் உள்ளதால், நிலவியல் சார்ந்து இந்தப் பெயர்கள் அளிக்கப்பட்டதாக கருதலாம்.
ராமாநுஜருக்குப் பிறகு, வைணவத்தில் மிகவும் மதிக்கப்படும் இரண்டு மிக முக்கிய ஆச்சார்யர்களான வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள் ஆகியோர் யார் என்பதை இப்போது பார்க்கலாம்.
வேதாந்த தேசிகர்
வடகலை வைணவர்களால் போற்றப்படும் வேதாந்த தேசிகர், கி.பி. 1261(?)ல் காஞ்சிபுரத்தை அடுத்துள்ள தூப்புலில் பிறந்தவர். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் வேங்கடநாதன். இவருடை மாமாவாகிய கிடாம்பி அப்புள்ளார், வேங்கடநாதனுக்கு வைணவத்தின் அடிப்படைகளைக் கற்பித்தார். இவருடைய உபதேசங்களைக் கேட்ட கடவுளே, இவருக்கு வேதாந்தச்சார்யன் என்ற பட்டத்தை அளித்தார் என்பது வைணவர்களின் நம்பிக்கை. இவர் தமிழிலும் வடமொழியிலும் சேர்த்து 112 நூல்களை இயற்றியுள்ளார். ராமானுஜருக்கு அடுத்த நிலையில் வைத்து வடகலையார் இவரைப் போற்றுகின்றனர். ஆனால், இவர் தமிழில் எழுதினார் என்பதை தென்கலையாரில் சிலர் ஏற்பதில்லை.

மணவாள மாமுனிகள்
தென்கலை வைணவர்களால் போற்றப்படும் மணவாள மாமுனிகள் வேதாந்த தேசிகர் மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு திருநெல்வேலி மாவட்டத்தில் கி.பி. 1370ல் பிறந்தவர். தென்கலை வைணவர்கள் இவரை, ராமானுஜரின் மறு அவதாரமென்றும் அவரோடு ஒப்புவைக்கத் தக்கவரென்றும் கருதுகிறார்கள். ராமானுஜர் மீது பெரும் பக்தி கொண்ட இவர், யதிராஜ விம்சதி, உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, இயல் சாத்து, திருவாரதன கிரமம், ஸ்ரீ தேவராஜ மங்களம், ஸ்ரீகாஞ்சி தேவப்பெருமாள் தோத்திரம் உட்பட பத்தொன்பது நூல்களை எழுதியிருக்கிறார்.
மேலே சொன்னபடி, வேதாந்த தேசிகரை பின்பற்றுவோர் வடகலையார் எனவும் மணவாள மாமுனிகளைப் பின்பற்றுவோர் தென்கலையார் எனவும் கூறப்பட்டாலும் வடகலை வைணவர்களுக்கும் தென்கலை வைணவர்களுக்கும் அடிப்படையில் 18 தத்துவ வேறுபாடுகள் இருக்கின்றன. 'அஷ்டதசபேத நிர்ணயம்' என இந்த வேறுபாடுகள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் 10 வேறுபாடுகள் மிக முக்கியமானவை. 1. பெருமாளின் கருணையை அடைவது 2. மகாலட்சுமியின் நிலை, 3. கைவல்ய நிலை, 4. பக்தியும் சரணாகதியும், 5. சரணாகதி, 6. பாவம், 7. நித்ய கடமைகள், 8. சரம ஸ்லோகம், 9. ஜீவர்களுக்காக வருத்தப்படுதல், 10. வேதங்களைப் புரிந்துகொள்வது.
இந்தப் பத்து வேறுபாடுகளில் மிக முக்கியமானது பெருமாளின் கருணையை அடைவது. ஆண்டவனின் கருணையைப் பெறுவதற்கு ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். குட்டிக் குரங்கு எப்படி தன் தாயின் வயிற்றை விட்டுப் பிரிவதில்லையோ அதுபோல பகவானை நாம் பற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் முக்தியடைய முடியும் என்பது வடகலையாரின் தத்துவம். இதற்கு 'மார்க்கட நியாயம்' என்று பெயர்.
ஆனால், தென்கலையாரைப் பொறுத்தவரை, இறைவனே நமக்கு சரணாகதி என்பதை உணர்ந்தாலே போதும்; தனியாக ஏதும் செய்ய வேண்டியதில்லை. தாய்ப் பூனை எப்படி தன்னுடைய குட்டிகளை கவ்வி எடுத்து தான் செல்லும் இடங்களுக்குத் தூக்கிச் செல்கிறதோ, அப்படி பெருமாள் நம்மைக் காப்பார் என்பது தென்கலையாரின் தத்துவம். இதற்கு 'மார்ச்சல நியாயம்' என்று பெயர்.

இதுபோல, தத்துவ வேறுபாடுகள் இருந்தாலும் இவற்றில் பலரும் அறிந்திருப்பது வைணவர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் திலகத்தில் உள்ள வேறுபாடுகள்தான். வைணவர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் நாமம், பெருமாளின் பாதங்களைக் குறிக்கிறது. அதனை வெறுமனே நெற்றியில் வரையக்கூடாது எனக் கருதி, ஒரு சிறிய தாமரை மலரை நாமத்திற்குக் கீழ் வரைந்தனர் தென்கலையினர். இது நாமத்தோடு இணைந்து Y வடிவிலானது. ஆனால், வடகலையினர் இதனை ஏற்கவில்லை. அவர்கள் வெறுமனே U வடிவில் நாமத்தை இட்டுக் கொள்வதையே தொடர்கின்றனர்.
ராமானுஜருக்குப் பிறகு வடகலையைச் சேர்ந்தவர்கள், வேதாந்த தேசிக பிரபந்தங்களைப் பின்பற்றி நடந்தனர். தென்கலையாரைப் பொறுத்தவரை, பிள்ளை லோகாச்சாரியார் அருளிய நூல்களையும் மணவாள மாமுனிகள் அருளிய விரிவுரைகளையும் பின்பற்றினர்.
ஆனால், தற்போது காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் நடக்கும் பிரச்சனை என்பது மேல் குறிப்பிடப்பட்டதைப் போன்ற தத்துவார்த்தப் பிரச்சனை அல்ல. தென்கலை வைணவர்களுக்கும் வடகலை வைணவர்களுக்கும் இடையில் நடக்கும் உரிமை சார்ந்த பிரச்சனை. இருதரப்பும் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தாலும், அத்தோடு இந்தப் பிரச்சனை முடிவுக்கு வரும் உறுதியாகச் சொல்வதற்கில்லை.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












