நூபுர் ஷர்மா: முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த பெண் 'உதிரி சக்தியா'?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி நியூஸ், டெல்லி
பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளால் இந்தியாவின் பன்னாட்டு உறவுகளில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நூபுர் ஷர்மா கூறிய கருத்துக்கள், இந்திய முஸ்லிம்களை கொதிப்படையச் செய்தது. பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகளையும் கொந்தளிக்க வைத்தது.
நூபுர் ஷர்மா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். கட்சியின் டெல்லி ஊடகப் பிரிவின் தலைவரான நவீன் குமார் ஜின்டாலும், ஒரு ட்வீட்டில் சர்ச்சைக்குரிய கருத்தின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்ததற்காக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
"எந்தவொரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் பாஜக எதிரானது. அத்தகைய நபர்களையோ அல்லது தத்துவத்தையோ கட்சி ஊக்குவிக்கவில்லை" என்று பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட அறிக்கையில் விளக்கமளித்தது.
சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அரசின் நிலைப்பாடு அல்ல என்றும் அவை "உதிரி சக்திகளின் கருத்துகள்" என்றும் கூறி கோபமடைந்த இஸ்லாமிய நாடுகளை அமைதிப்படுத்தும் முயற்சியில் இந்தியத் தூதர்கள் ஈடுபட்டார்கள்.
ஆனால், பலர் சுட்டிக்காட்டியபடி, நூபுர் ஷர்மா ஓர் உதிரி சக்தி அல்ல.
கட்சியில் இருந்து நீக்கப்படும் வரை, அவர் பிரதமர் நரேந்திர மோதியின் அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தொலைக்காட்சி விவாதங்களில் "அதிகாரப்பூர்வ பாஜக செய்தித் தொடர்பாளராக" இரவுக்கு இரவு தோன்றிக் கொண்டிருந்தார். 37 வயதான அவர் ஒரு வழக்கறிஞர்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்லூரி மாணவியாக இருந்தபோது, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின்(ஆர்.எஸ்.எஸ்.) மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) வேட்பாளராக மாணவர் சங்கத்தின் தலைவராக 2008 இல் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சர்வதேச வணிகச் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்று 2011 இல் இந்தியா திரும்பியபோது அவரது அரசியல் வாழ்க்கை வேகம் பிடித்தது.
துணிச்சலாகவும், தெளிவாகவும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் தனது கருத்தை முன்வைத்து வாதிடும் திறன் காரணமாக, 2013 டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் ஊடகக் குழுவில் அவருக்கு இடம் கிடைத்தது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேர்தல்கள் அறிவிக்கப்பட்டபோது, அவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
அவர் வெற்றி பெறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவரது சுறுசுறுப்பான பரப்புரை, அவரை மேலும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அதன் மூலம் டெல்லியில் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். 2020-இல் பாஜகவின் "தேசிய செய்தித் தொடர்பாளர்" ஆனார்.
கடந்த சில ஆண்டுகளில், நூபுர் ஷர்மா இந்திய தொலைக்காட்சி நேயர்களுக்கு நன்கு தெரிந்த முகமாகிவிட்டார். பெரும்பாலான மாலை நேரங்களில், அவர் தனது அரசியல் எதிரிகளை நோக்கிக் கூச்சலிடுவதையும் சில நேரங்களில் அவர்களைப் பெயர் சொல்லி அழைப்பதையும் காண முடியும்.

பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில் ட்விட்டரில் அவரது ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதம் தொடர்பான ஒரு காணொளியை அதிகமாகப் பகிர்ந்தனர். அதில் "ரத்தம் தோய்ந்த நயவஞ்சகர்" என்று ஒரு விருந்தினரை நோக்கிக் கூறி அவரை "வாயை மூடு" என்றார் நூபுர் ஷர்மா.
ட்விட்டரில் அவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். அவர்களில் பிரதமர் நரேந்திர மோதியும் ஒருவர். மேற்சொன்ன காணொளியை பகிர்ந்தபோது, அவரை "சிங்கம், அச்சமற்ற வீராங்கனை" என்று அவரது ஆதரவாளர்கள் பாராட்டினர்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், தனது கருத்துக்களை "நிபந்தனையின்றி" திரும்பப் பெறுவதாக நூபுர் கூறினார். இருப்பினும் "இந்து கடவுளான சிவன் மீதான தொடர்ச்சியான அவமதிப்புக்கு" பதிலளிப்பதாகவே தனது கருத்துகள் அமைந்தன என்று கூறி தனது கருத்துக்களை நியாயப்படுத்தவும் முயற்சித்தார்.
ஞானவாபி மசூதி தொடர்பாக நடந்த விவாதத்தின் போதுதான் அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.
புனித நகரமான வாரணாசியில் உள்ள மசூதி 16 ஆம் நூற்றாண்டின் பிரம்மாண்டமான இந்து ஆலயத்தின் இடிபாடுகளின் மீது கட்டப்பட்டது என்று இந்துக்கள் கூறுகின்றனர். மேலும் சிலர் இப்போது மசூதி வளாகத்திற்குள் பிரார்த்தனை செய்ய நீதிமன்றத்தின் அனுமதியை நாடியுள்ளனர்.
மசூதியில் நடந்தப்பட்ட வீடியோ பதிவு ஆய்வில், ஒரு உருளை போன்ற கல் இருந்ததாகவும் அது சிவ லிங்கம் என்றும் மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், மசூதி நிர்வாகத்தினர் அது ஒரு நீர் ஊற்று என்று கூறுகின்றனர்.
விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால், இது தொடர்பாக தொலைக்காட்சிகள் தொடர்ச்சியாக விவாதித்து வருகின்றன. இந்து தேசியவாதத்தை தீவிரமாக ஆதரிக்கும் நூபுர் ஷர்மா இத்தகைய விவாதங்களில் உரக்கக் குரல் எழுப்பக்கூடியவர்.
மே 27 அன்று, முகமது நபிக்கு எதிரான கருத்துகள் அளவுக்கு அதிகமாகிவிட்டதைப் போல தோன்றியது.
பத்திரிகையாளரும் உண்மை ஆய்வாளருமான முகமது ஜூபைர் இது தொடர்பாக ட்விட்டரில் தனது கோபத்தைப் பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து, "எனக்கும், எனது சகோதரி, தாய், தந்தை ஆகியோருக்கும் எதிராக வன்கொடுமை, கொலை, தலை துண்டிப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருப்பதாக" நூபுர் ஷர்மா ட்வீட் செய்தார்.

பட மூலாதாரம், Getty Images
"சூழலைச் சீர்குலைக்கவும், வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தவும், வெறுப்பை உருவாக்கவும் ஒரு போலி கதையை ஜூபைர் பரப்புகிறார்" என்று அவர் குற்றம் சாட்டினார்.
தனது ட்வீட்டில், பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரையும் இணைத்தார்.
"பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சர் அலுவலகம் மற்றும் கட்சித் தலைவர் அலுவலகம் ஆகியவை என் பின்னால் நிற்கின்றன" என்று மூன்று நாட்களுக்குப் பிறகு ஒரு பேட்டியில் கூறினார்.
ஆனால், உத்தர பிரதேசத்தில் உள்ள கான்பூரில் அவரது கருத்துக்கு எதிராக முஸ்லிம்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால், கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு சிக்கல்கள் அதிகரிக்கத் தொடங்கின.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, போராட்டக்காரர்களை கடுமையாகத் தாக்கியதுடன் பலரைக் கைது செய்தது.
நூபுர் ஷர்மாவின் கருத்துகளால் பல இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளன. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் அவருக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டெல்லி காவல்துறை அவரது பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறது..
ஒருபுறம் எதிர்ப்பு இருந்தாலும், மறுபுறம் அவருக்கு ஆதரவும் அதிகரித்து வருகிறது. #ISupportNupurSharma மற்றும் #TakeBackNupurSharma போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகின்றன. பலர் அவரைப் பாராட்டுகின்றனர். இந்த சர்ச்சை நூபுர் ஷர்மாவின் அரசியல் வாழ்க்கையை முடித்துவிடாது என்று சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









