தமிழ்நாட்டில் மூடப்படும் ஃபோர்டு ஆலை: கலங்கும் தொழிலாளர் குடும்பங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ், பிபிசி தமிழுக்காக
- பதவி, பிரமிளா கிருஷ்ணன், பிபிசி தமிழ்
சென்னையை அடுத்த மறைமலை நகர் பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்த ஃபோர்டு தொழிற்சாலை விரைவில் மூடப்படவுள்ள நிலையில், பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆலை மூடப்படுவதற்கு எதிராக, கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்திவரும் தொழிலாளர்கள் இதுவரை எந்த சுமூகமான நிலையும் எட்டப்படவில்லை எனக் கொந்தளிக்கிறார்கள். ஃபோர்டு நிர்வாகம் இழப்பீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறுகிறது.
சென்னை நகரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மறைமலை நகர் பகுதியில் ஃபோர்டு தொழிற்சாலை சீருடை அணிந்து செல்லும் பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு அந்த சீருடை ஒரு நம்பிக்கையைத் தந்திருந்தது. 1990களில் இருந்து ஃபோர்டு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த பலருக்கும் நிரந்தர வருமானம் கிடைக்கும் என்ற உறுதி இருந்தது. கடந்த ஆண்டு அந்த உறுதி தளர்ந்தது.
இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் இயங்கி வரும் இரண்டு ஆலைகளையும் நஷ்டம் காரணமாக மூடப்போவதாக ஃபோர்டு அறிவித்தது. அந்த அறிவிப்பு காரணமாக, ஃபோர்டு நிறுவனத்தில் நேரடியாக வேலையில் இருந்தவர்கள், ஃபோர்டு நிறுவனத்தை நம்பி மறைமுகமாக வேலை செய்த தொழில் முனைவோர் என தமிழகத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என தொழிலாளர் சங்கங்கள் கூறுகின்றன.
குஜராத்தில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தை டாடா நிறுவனம் கையகப்படுத்த முன்வந்துள்ளதால், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்றும் தமிழ்நாடு தொழிலாளர்கள் நிலை மோசமாகியுள்ளது என்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் கூறுகின்றனர்.
32 நாடுகளுக்கு ஏற்றுமதி
அமெரிக்க நாட்டின் ஃபோர்டு மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1996ஆம் ஆண்டில் சென்னைக்கு அருகில் மறைமலைநகர் கீழக்கரணை கிராமத்தில் கார் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை நிறுவி, ஏறத்தாழ 2,700 நிரந்தர தொழிலாளர்களை நியமனம் செய்து ஃபோர்டு ஐகான், ஃபோர்டு என்டவர், ஃபோர்டு ப்யூஷன், ஃபோர்டு ஃபியஸ்டா உள்ளிட்ட ஒன்பது வகையான கார்களை தயாரித்து, ஏறத்தாழ 32 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது.
இந்தத் தொழிற்சாலையை கடந்த 2009ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி முன்னிலையில் ரூ.1,500 கோடி கூடுதல் முதலீட்டில் விரிவாக்கம் செய்திடவும் புதிதாக என்ஜின் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை நிறுவிடவும் ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ஏறத்தாழ 1,000 தொழிலாளர்களை புதிதாக நியமித்து தொழிற்சாலையின் உற்பத்தித் திறன் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் கார்கள் என்பதை 2 லட்சம் கார்கள் என உயர்த்தியது ஃபோர்டு நிறுவனம். அதேபோல் ஆண்டு ஒன்றுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கார் என்ஜின்களைத் தயாரித்து வந்தது.

ஆலை மூடப்படுவது ஏன்?
வருடத்திற்கு இரண்டு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், கடந்த சில ஆண்டுகளில் 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி நடைபெற்றுள்ளது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்ததாகக் கூறப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்த நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. அதோடு, இதன் காரணமாகவே தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்த ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது என ஃபோர்டு நிர்வாகம் தொழிலாளர்களிடையே தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தியாவில் சென்னை மற்றும் குஜராத்தில் உள்ள தங்களது இரண்டு தொழிற்சாலைகளிலும் கார்கள் தயாரிப்பதில்லை, ஏற்றுமதியும் செய்யப்போவதில்லை என்ற முடிவை ஃபோர்டு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் வலைதளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவிட்டு இருந்தது.
ஃபோர்டு நிறுவனத்தின் இந்த முடிவால் மறைமலைநகரில் இயங்கிவரும் தொழிற்சாலையில் இருக்கும் நிரந்தரப் பணியாளர்கள் சுமார் 2700 தொழிலாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், மேலும் இந்தத் தொழிற்சாலைக்கு உதிரி பாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் சுமார் 50க்கும் மேற்பட்ட இதர உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது வேலைவாய்ப்பை முழுமையாக இழக்க நேரிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் மறைமுகமாக சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர்.
மின்சார வாகன உற்பத்தி திட்டம் ரத்து
தனது உற்பத்தி நிறுத்தம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட ஃபோர்டு நிறுவனம், சென்னையில் மின்சார வாகனங்களைத் தயாரிக்க முன்னர் முடிவு செய்திருந்ததாகக் கூறியது. ஆனால் தற்போது அந்த முடிவையும் கைவிட்டிருப்பதாக அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் தொழிற்சாலைகளை மூடுவதால், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக ஊழியர்கள் சங்கத்தைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது.
40 முறை பேச்சுவார்த்தை

கடந்த ஒரு வருடமாக ஃபோர்டு தொழிலாளர் சங்கத்துடன் போர்டு நிர்வாகம் 40 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் தான் முடிந்திருக்கிறது. தற்போதைய தொழிலாளர் துறை ஆணையரிடம் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொழிலாளர்கள் முன்வைக்கும் தங்களது பிரதான கோரிக்கையான உரிய ஊக்கத்தொகை, ஓய்வூதியம் தருவதற்கு நிர்வாகம் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது என்கிறார்கள் தொழிலாளர்கள்.
ஜூன் 30 மூடப்படுகிறது
இதனிடையே தொழிற்சாலை மூடப்படுவதற்கு இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பணி செய்ய வரும் தொழிலாளர்களிடம் நாங்கள் போராட மாட்டோம் என கையொப்பம் பெற நிர்வாகம் முயற்சி செய்வதாகக் கூறி தொழிலாளர்கள் கடந்த 6 நாட்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணிக்குச் சென்ற தொழிலாளர்கள் இன்னும் வீடு திரும்பாத காரணத்தினால் தொழிலாளர்களின் பிள்ளைகள் மிகவும் கலக்கத்துடன் பணிக்குச் சென்ற தங்களது பெற்றோரைத் தேடி தொழிற்சாலை வாயிலுக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
"மற்ற தொழிற்சாலை நிறுவனங்களுடன் இணைந்து ஃபோர்டு தொழில்சாலை இயங்கும் எனப் பேசப்பட்டு வந்தது. ஆனால், மற்ற எந்த ஒரு நிறுவனமும் தற்போது இணையாமல் எங்கள் நிறுவனம் மூடப்படும் என அறிவித்திருப்பது மிகுந்த மன வேதனையை உண்டாக்குகிறது" என்கிறார் ஃபோர்டு தொழிற்சாலையின் ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் செல்வராஜ்.
ஃபோர்டு ஊழியர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் அசோக் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''ஃபோர்டு நிர்வாகம் ஓர் அமெரிக்க நிறுவனம். இந்திய ஃபோர்டு தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு முறையான இழப்பீடு தொகையை அமெரிக்க நிறுவனம் வழங்க வேண்டும். அமெரிக்க நிறுவனமான ஃபோர்டு நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்குவதாகச் சொல்லப்படுவதை தொழிலாளர்கள் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிறுவனத்தின் முதலீடு, உற்பத்தி அனைத்துமே அமெரிக்க நிறுவனத்தைச் சார்ந்ததுதான் இயங்கி வந்தது,'' என்கிறார்.
தற்போது அமெரிக்க ஃபோர்டு நிறுவனம் தென்னாப்பிரிக்காவில் 3.6 பில்லியன் டாலர் முதலீட்டில் மூன்று தொழிற்சாலைகளைத் தொடங்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டும் அசோக், ''தாய்லாந்தில் தொழிற்சாலையை விரிவுபடுத்த இருக்கிறார்கள். பல நாடுகளில் புதிதாக முதலீடு செய்யும் நிலையில் இருக்கும் நிறுவனம் எப்படி நஷ்டம் என்று கூறி ஆலையை மூடமுடியும்? அப்படி மூடினால், இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்களுக்கு அமெரிக்காவில் உள்ள இழப்பீட்டு தொகையை வழங்க அந்த நிறுவனம் முன்வர வேண்டும்,'' என்றார்.
தமிழகத்தில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையை இதுவரை யாரும் வாங்க முன்வரவில்லை அதற்காக எந்த ஒரு முயற்சியையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை என தொழிலாளர்கள் விமர்சிக்கிறார்கள். குஜராத்தில் அரசு முயற்சி செய்து டாடா நிறுவனம் ஃபோர்டு நிறுவனத்தை வாங்கிக்கொள்ள முன்வந்துள்ளதைப் போல, தமிழக அரசு முழு முயற்சியைச் செய்யவில்லை என தொழிலாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் ஃபோர்டு ஆலையை மின்சார வாகனம் தயாரிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்தாகவும் ஆனால் முடிவுகள் எட்டப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
''கழிவறையை மூடிவிட்டார்கள்''

தற்போது தொழிற்சாலையின் வெளியே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் 6 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் அன்றாடம் பயன்படுத்தி வந்த ஏழு கழிவறையில், தற்போது 5 கழிவறைகளை இரும்பு வலை வைத்து தொழிற்சாலை நிர்வாகம் அடைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
''கடந்த 25 ஆண்டுகளாக சிறுநீர் கூட கழிக்க நேரமில்லாமல் இந்த நிறுவனத்துக்காக உழைத்த எங்களின் நிலை தற்போது பரிதாபத்திற்கு உரியதாக இருக்கிறது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வலசை வரும் பறவைகள் போல் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து எச்சங்களை மட்டும் விட்டுவிட்டு மீண்டும் திரும்பிச் சென்று விடுகிறார்கள்,'' எனக் காட்டமாகப் பேசுகிறார் சிஐடியூ மாநில துணைப் பொதுச் செயலர் எஸ்.கண்ணன்.
தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறித்தும் தொழிற்சங்கத்தினர் வைத்துள்ள விமர்சனங்கங்கள் குறித்தும் ஃபோர்டு நிறுவனத்தின் கருத்துகளைப் பெற பிபிசி தமிழ் முயற்சி செய்தது.
ஃபோர்டு சொல்லும் பதிலென்ன?
ஃபோர்டு சார்பில் கேள்விகளுக்கு ஈமெயில் வாயிலாக பதில் அளிக்கப்பட்டது. அதில், ''இழப்பீடு உட்பட நிலுவையில் உள்ள அனைத்து விஷயங்களிலும் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். விவாதங்களின் தற்போதைய தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த கட்டத்தில் நாங்கள் தெரிவிப்பதற்கு எந்தத் தகவலும் இல்லை. உற்பத்தித் துறையில் உள்ள ஊழியர்களை இப்போது வரை ரோல்களில் தொடர்ந்து வைத்திருக்கிறோம்,'' என்ற பதில் மட்டும் வந்தது.
ஃபோர்டு நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் சீருடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாம் அந்தப் பகுதியைக் கடக்கும்போது, அவர்களின் குடும்பத்தினர் பலரும் அவர்களைச் சந்திக்க வருவதைப் பாரக்க முடிந்தது. இந்த மாத இறுதியில் ஃபோர்டு ஆலை மூடப்பட்டால், இனி வரும் நாட்களை எப்படிச் சமாளிப்பது என்ற பேச்சுகளும் கேட்டன.
பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் உள்ளீடுகளுடன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













