You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து அற நிலையத்துறை ஆய்வு செய்ய கோயில் நிர்வாகம் எதிர்ப்பு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து அற நிலையத்துறை வரும் 7, 8 தேதிகளில் ஆய்வு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. கோயிலை நிர்வகிக்கும் 'பொது தீட்சிதர்கள்' என்ற குழு இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்று தெரிவித்துள்ள இந்த அமைப்பு, இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கோயிலை நிர்வகிக்கும் 'பொது தீட்சிதர்கள்' என்ற குழு தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி தரிசனம் செய்ய கடந்த 2 ஆண்டுகளாக பொது தீட்சிதர்கள் தடை விதித்திருந்தனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பரிந்துரையை ஏற்று சிற்றம்பல மேடையில் ஏறி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
குடியரசுத் தலைவர், பிரதமருக்கு கடிதம் எழுதிய தீட்சிதர்கள்
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பொது தீட்சிதர்கள், 'வெறுப்புப் பிரசாரத்தை' முன்னின்று நடத்தும் குழுக்கள், போராட்டங்கள் காரணமாக வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளதாகக் கூறியும், பாதுகாப்பு கோரியும் பொது தீட்சிதர்கள் குழுவின் செயலாளர் ஹேம சதேஷ தீட்சிதர் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், தமிழ்நாடு ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு கடந்த மே 22ஆம் தேதியன்று கடிதம் அனுப்பியிருந்தனர்.
அக்கடிதத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பொது தீட்சிதர் குழு கோவிலை நிர்வகித்து வருகிறது. மத உரிமைகள், நம்பிக்கைகள், நடைமுறைகள் அரசமைப்புச் சட்டத்தின் 26வது பிரிவின் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. மதச் செயல்பாடுகள், கடமைகள், நம்பிக்கைகள், நடைமுறைகள் பழங்காலத்திலிருந்தே கோயில் பாரம்பரிய பழக்க வழக்கங்களின்படி பொது தீட்சிதர்களால் செய்யப்பட்டு வருகின்றன. சமய விவகாரங்களை அரசமைப்புச் சட்டத்தின் 26வது பிரிவின்படி பொது தீட்சிதர்கள் மட்டுமே முடிவு செய்ய முடியும் என 2014 ஜனவரி 6ஆம் தேதியன்று வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது.
சிற்றம்பல மேடை மீது ஏற அனுமதியும் தீட்சிதர்கள் எதிர்ப்பும்
சிற்றம்பல மேடை மீது பக்தர்கள் ஏற அனுமதித்து, தமிழ்நாடு அரசு கடந்த மாதம் 17ஆம் தேதி ஆணை பிறப்பித்தது. இதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவித்து சட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அருகில் நடக்கும் போராட்டங்களைத் தடை செய்ய கோரி பொதுநல வழக்கு பக்தர்களால் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. ஒரு சிலர் மத நம்பிக்கைகளில் தலையிட முயல்கின்றனர். இதனால் எங்கள் வாழ்க்கை, தனிப்பட்ட சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. எனவே அரசமைப்புச் சட்டப்படி பாதுகாக்கப்பட்ட மத மற்றும் நிர்வாக உரிமைகளுக்கு நாங்கள் பாதுகாப்பை நாடுவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை விசாரணை குழு அமைப்பு
இந்த சூழலில் தற்போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் பணிப் பிரிவு, கோயில் நிர்வாகம், சிற்றம்பலம் மீது ஏற அனுமதி மறுத்தது உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை விசாரணைக் குழு அமைந்துள்ளது.
சிதம்பரம் சபாநாயகர் கோயில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், மேற்கொண்ட கோயில் சட்டவிதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும், திருக்கோயிலை நேரடியாக ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு கோயில் நிர்வாகத்தைச் சீரமைப்பது குறித்து உரிய பரிந்துரைகள் வழங்கிட இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959ல் உள்ள சட்டப்பிரிவு 23 மற்றும் 33ன் கீழ் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி ஒரு குழுவை இந்து சமய அறநிலையத்துறை நியமித்து, அதன் ஒருங்கிணைப்பாளராக சி.ஜோதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரும் ஜூன் மாதம் 7 முதல் 8ஆம் தேதி வரை விசாரணைக் குழு நேரடியாக ஆய்வு செய்யவுள்ளது என்று இந்து அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்கு ஆவணங்களை தயார் நிலையில் வைக்குமாறு கடிதம்
இந்த ஆய்வுக்காக கீழ்க்கண்ட ஆவணங்களைத் தயார் நிலையில் வைக்குமாறு விசாரணைக் குழு ஒருங்கிணைப்பாளர் கோயில் செயலாளருக்கு கடிதம் அனுப்பினர்.
அதில் குறிப்பிட்ட ஆவணங்கள் பின்வருமாறு:
1. 2014 முதலான வரவு-செலவு கணக்குகள்.
2. 2014 முதலான தணிக்கை கணக்குகள்.
3. 2014 முதலான திருக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்தான விவரங்கள், அவற்றிற்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து அறநிலையத்துறை அனுமதி விவரம், மதிப்பீடு விபரங்கள்.
4. திருக்கோயிலுக்கு சொந்தமான கட்டளைகள், கட்டளைகளுக்குச் சொந்தமான சொத்துகள், அவற்றிலிருந்து பெறப்படும் வருவாய் இனங்கள்.
5. மேற்கண்ட சொத்துக்களின் தற்போதைய நிலை.
6. இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட சொத்துப்பதிவேடு, மரப்பதிவேடு, திட்டப்பதிவேடு மற்றும் காணிக்கை பதிவேடுகள்.
7. திருக்கோயிலுக்குச் சொந்தமான நகைகள் மற்றும் விலையுயர்ந்தவைகள் மதிப்பீட்டறிக்கை.
8. திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் அதன் குத்தகைக்காரர்கள் விபரம்.
9. கேட்பு வசூல் நிலுவை பதிவேடுகள்.
உள்ளிட்ட ஆவணங்களுடன் குழுவின் ஆய்வுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்படி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
அரசின் முடிவுக்கு கோயில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு
இதைத் தொடர்ந்து சிதம்பரம் கோயில் பொது தீட்சிதர்கள் தரப்பில் மீண்டும் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். குறிப்பாக தீட்சிதர்கள் கோயிலை நிர்வகித்து வரும் சூழ்நிலையில் தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் அரசு செயல்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்