தமிழர், திராவிடர் வரலாறு: பண்டைய எகிப்திய மன்னரின் மூதாதையர் திராவிடரா?

    • எழுதியவர், பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம்
    • பதவி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், கட்டுரைகளாக வெளியிட்டிருக்கிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதின்மூன்றாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்.)

தமிழர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் தொடர்பு உள்ளதா?' என்ற தலைப்பை பார்த்ததும் நீங்கள் ஆச்சரியப்பட்டிருக்கலாம். அது எப்படி சாத்தியம்? அதற்கு என்னென்ன ஆதாரங்கள் உள்ளன? என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களை ஆராய்கிறது இந்த கட்டுரை.

கண்ணகியும் எகிப்திய கடவுள் இசிஸும் ஒன்றா?

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் இளங்கோவடிகளால் சிலப்பதிகாரம் இயற்றப்பட்டது. சிலப்பதிகாரத்தைப் படித்த பாரதியார் "யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை" எனப் புகழ்ந்துள்ளார்.

சிலப்பதிகாரத்தை முத்தமிழ்க் காப்பியம் என்பர். இந்த காப்பியத்தில் கண்ணகி தன்னிகரில்லாத் தலைவியாவாள். கண்ணகிக்குத் தமிழ்நாட்டில் பல இடங்களில் மட்டுமல்ல, கேரளம் மற்றும் இலங்கையிலும் கோயில்கள் உள்ளன. கேரளாவில் உள்ள இன்றைய கொச்சி நகரம், பண்டைய ரோம, கிரேக்க வரைபடங்களில் முசிறிஸ் என பதிவாகியுள்ளது. முசிறிசுக்கும் எகிப்து, ரோம், கிரேக்கம் ஆகிய நாடுகளுக்கும் இடையே வணிகம் நடந்ததற்கான சான்றுகள் நிறைய உள்ளன என்பதை பேராசிரியர் கமில் சுவலபில் (Prof. Kamil Zvelebil) உறுதிப்படுத்தியுள்ளார்.

மதுரையில் கண்ணகி, வெட்டப்பட்ட தன் கணவனின் தலையை உடலுடன் சேர்த்து உயிர் கொடுத்ததாக சில வாய்மொழி கதைகள் கூறுகின்றன. கண்ணகியைப் போல எகிப்தில் இசிஸ் (Isis) என்றொரு பெண் தெய்வம் உள்ளது. இந்த தெய்வமும் வெட்டப்பட்ட தன் கணவன் உடலை ஒன்றிணைத்து உயிர் கொடுத்ததாக நம்பப்படுகிறது. மேலும் இந்த தெய்வமும் பல நோய்களிலிருந்தும், கஷ்டங்களிலிருந்தும் தங்களது குடும்பத்தைக் காப்பதாக அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். பண்டைய காலங்களில் மாலுமிகள் கடல் பயணத்தின் போது தங்களை இசிஸ் தெய்வம் காப்பதாக நம்பியிருக்கின்றனர்.

கிறிஸ் மார்கன் (Chris Morgan) என்ற ஆய்வாளர் பிரிட்டனைச் சேர்ந்தவர். இவர் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் வட ஆப்பிரிக்க, ஆசிய கலாசாரம் மற்றும் பண்பாட்டில் பட்டப்படிப்பு முடித்தவர். மேலும் இந்திய - எகிப்திய பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தில் தீராத காதல் கொண்டவராக அறியப்படுபவர். இவர் இசிஸ் மற்றும் கண்ணகியைப் பற்றிய தகவல்களையெல்லாம் ஒன்றிணைத்து ஆராய்ச்சி செய்துள்ளார். இதன் மூலம் சிலப்பதிகாரத்தின் கதாநாயகி கண்ணகிதான் இந்த எகிப்தியக் கடவுள் இசிஸ் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இவர் "இசிஸ்: எகிப்திய மற்றும் இந்தியக் கடவுள்" (Isis: Goddess of Egypt & India) என்றொரு முக்கியமான நூலை எழுதியுள்ளார்.

இந்த தொடரில் வெளிவந்த கட்டுரைகள்:

இவர் இந்த நூலில் விளக்கியுள்ளதை சுருக்கமாகப் பார்க்கலாம்.

"கொச்சிக்கு அருகே கண்ணகிக்கு ஒரு கோவில் உள்ளது. இது எகிப்திய கட்டடக்கலையில் கட்டப்பட்டது. இதனை குரும்பாதேவி கோவில் என இன்றும் மக்கள் அழைக்கின்றனர். கண்ணகி கோவிலான இந்த கோவிலும் எகிப்தில் உள்ள இசிசுக்கான கோவிலும் ஒரே மாதிரியான அமைப்பில் கட்டப்பட்டுள்ளன. இந்த கோவிலில் ஒரு ரகசிய அறை உள்ளது. இந்த அறையைக் கிழக்கு மேற்காக ஒரு சுரங்கம் இணைக்கின்றது. அந்த சுரங்கத்தின் வாசலின் இருபுறமும் குதிரை சிலைகள் பாதுகாப்புக்கு நிற்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடப்பதற்கு வசதியாக ஆங்காங்கே சூரிய ஒளி படுமாறு அந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு அப்படியே எகிப்தில் உள்ள இசிஸ் கோவிலிலும் எதிரொலிக்கிறது. மழைக் காலம் தொடங்குவதற்கு முன் இந்த குரும்பாதேவி கோயிலில் பரணி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதே காலத்தில்தான் இசிஸ் தெய்வத்தின் சடங்குகளும் கோலாகலமாக இன்றும் எகிப்தின் கடற்கரையோர பகுதிகளில் நடக்கின்றன. இந்த இரண்டு விழாக்களும் ஒரே காலத்தில் நடப்பதைத் தற்செயலான நிகழ்வாகப் பார்க்க முடியாது. இது இரு நாட்டின் கலாசார ஒற்றுமையின் சான்றாகத்தான் பார்க்கவேண்டும்.

இந்த பரணி விழாவில் பிராமணர் அல்லாதோர் சுமார் 12 மணி நேரம் கண்ணகிக்குச் சடங்குகளைச் செய்கின்றனர். கண்ணகியை தெய்வமாகக் கொண்டாடுகின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த விழாவில் பங்கெடுக்கின்றனர். மேலும் வெட்டுண்டு கொல்லப்பட்ட தன் கணவனின் உடலைக் காண ஓடோடி வந்த கண்ணகியின் வீரதீர செயலை சிலப்பதிகாரம் விரிவாக விளக்குகின்றது. அதே மாதிரி இசிசும் வெட்டுண்டு கொல்லப்பட்ட தன் கணவனின் உடலைக் காணப் பரிதவித்துத் தேடுகிறாள்." என்று கிறிஸ் மார்கன் விளக்குகிறார்.

தமிழ்நாட்டிலும் கண்ணகி பத்தினி தெய்வமாகத்தான் மக்கள் மனதில் பதிந்திருக்கிறார். மேலும் இந்த நிலையில் இசிஸ் தெய்வம் இந்தியாவிலிருந்துதான் எகிப்துக்கு வந்ததாக இன்றும் எகிப்து, ரோம், கிரேக்க நாட்டினர் ஆழமாக நம்புகின்றனர் என இவர் மேலும் கூறுகிறார்.

உலகில் உள்ள பண்டைய கட்டடக் கலைகளைப் பார்க்கும் போது, ஒரு சிறு பிழையில்லாமல் செங்குத்தாகக் கட்டப்பட்டவை என்றால் அது பிரமிடுகளும் தஞ்சைப் பெரிய கோயிலும்தான். இவற்றை எல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டுக்கும் உலகப்புகழ்ப் பெற்ற பிரமிடுக்கும் ஒரு கலாசார தொடர்பு உள்ளதோ என்று எண்ணத்தோன்றுவது இயல்புதான்.

பிரமிடுகளில் இசிஸ் ஓவியங்கள் உள்ளன. இந்த பிரமிடுகள் சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. சிலப்பதிகாரம் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்புதான் எழுதப்பட்டது. கிறிஸ் மார்கனின் கருத்து உண்மை என்றால் இளங்கோவடிகள் அக்கால வாய்வழிக் கதையையே சிலப்பதிகாரமாக படைத்துள்ளாரா என்ற கேள்வி எழுகிறது.

மாறாக எகிப்திய புராணக்கதைகளின் தகவல்களை திரட்டினால் கண்ணகிக்கும் இசிசுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக இசிஸ் தன் சகோதரன் ஒசிரிசை (Osiris) திருமணம் செய்து கொண்டதாக பண்டைய எகிப்திய புராணங்கள் கூறுகின்றன. ஒசிரிஸ் உசிர் (Usir) எனவும் அழைக்கப்படுகிறார். ஆனால் கோவலன் கண்ணகிக்கு சகோதரன் அல்ல. உசிருக்கு பிரமிடில் பிரமாண்டமான சிலைகள் உள்ளன.

தமிழில் வெளிவந்த புராணங்களை நன்கு அறிந்தவர்கள் எகிப்து சென்று அங்குள்ள பிரமிடுகளில், இசிஸ் கோவிலில் உள்ள சான்றுகளை ஆராய்ந்து, துறைசார் வல்லுநர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை உறுதிசெய்ய முடியும்.

இந்த தொடரில் வெளிவந்த கட்டுரைகள்:

வேட்டிக் கட்டும் எகிப்தியர்கள்

எகிப்தில் மக்கள் பேசும் மொழி, ஒரு தனித்துவமான பேச்சு வழக்கு அரபிக் ஆகும். திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றைச் சேர்ந்த மருத்துவர் வி.ஆர். அண்ணாதுரை, எகிப்திய மொழியில் கலந்துள்ள தமிழ் எழுத்துகளை சேகரித்து வருகிறார். எகிப்தில் காமோஸ் (Kamose) என்ற ஒரு பெண் தெய்வம் உள்ளது. காமாச்சி என்ற தமிழ்ச் சொல் திரிந்துதான் காமோஸ் ஆனது என மருத்துவர் அண்ணாதுரை கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

காமாச்சி = காமம் + ஆச்சி என்கிறார். அதாவது இல்லறக் காதலை ஆட்சி செய்பவள் என்று எடுத்துக் கொள்ளலாம். அம்மா என்ற சொல்லுக்கு இணையாக அங்கே அம்மோஸ் என்ற சொல் உள்ளது. தமிழ்நாட்டைப் போன்று சேகர், சேகரன் மற்றும் ஆதிரை என்ற பெயருள்ளவர்கள் அங்கும் இருக்கிறார்கள் என்று கூறும் இவர் பல ஆயிரக்கணக்கான தமிழ் சொற்கள் எகிப்திய மொழியில் கலந்திருப்பதையும் கண்டறிந்துள்ளார். இவற்றை இவர் இணையத்தில் தொகுத்துப் பட்டியலிட்டும் உள்ளார்.

மொழி மற்றும் கடவுள் நம்பிக்கையில் மட்டுமல்ல எகிப்தியர்களின் வேட்டிக் கட்டும் முறை மற்றும் அங்கு விவசாயிகள் தலைப்பாகை கட்டும் விதம் தமிழர்களை ஒத்துள்ளன. எகிப்திலும் இந்தியாவை போல் பல்வேறு இன மக்கள் வாழ்கின்றனர். தமிழர்களை ஒத்த நிற மற்றும் முக அமைப்பைக் கொண்டவர்களும் எகிப்தில் உள்ளனர். என்னுடைய நண்பரொருவர் எகிப்திற்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த பலர் அவரை எகிப்தியர் என எண்ணி அவரிடம் எகிப்திய மொழியில் பேசத் தொடங்கியுள்ளனர். எகிப்துக்கு சென்ற நிறைய தமிழர்களுக்கு இதுபோன்ற அனுபவம் கிடைத்துள்ளது. இந்த தகவல் எகிப்தியருக்கும் தமிழர்களுக்கும் இடையேயான மரபணு ஒற்றுமையைக் கண்டறிய என்னைத் தூண்டியது. இதையடுத்து மரபணுத் தகவல்களைத் திரட்ட தொடங்கினோம்.

மரபணு ஒற்றுமை உள்ளதா?

ஒவ்வொரு இன மக்களுக்கும் தனிப்பட்ட மரபணு நிறை, குறைகள் உண்டு. ஆப்பிரிக்க மக்களிடையே இரத்த சிவப்பணு குறைபாடு (Sickle cell annemia) அதிகம் உண்டு. நரம்பியல் செல்கள் விரைவில் இறப்பதால் வரும் ஒரு வகை நோய் (Tay-Sachs disease) கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய மக்களிடையே அதிகமாக உள்ளது. இரத்த உறைவு பிரச்னையால் வரும் ஒருவகை நோய் (Beta thalassemia) இந்தியாவில் அதிகம் உள்ளது.

2010ல் கார்ஸ்டன் புஸ்ச் (Carsten Pusch) தலைமையில் நடந்த ஓர் ஆராய்ச்சியில் 11 அரச குலங்களை சேர்ந்தோர் மரபணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டன. இந்த ஆராய்ச்சியில் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட துதன்காமன் (Tutankhamen) என்ற மன்னனின் பதப்படுத்தப்பட்ட உடலிலிருந்தும் மரபணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பின்னர் அதன் தன்மையைக் கண்டறிந்தனர். இந்த ஆராய்ச்சியில் மன்னர் குடும்பத்தில் இருந்த நோய்களும் அறியப்பட்டன. மேலும் இந்த மன்னர் எப்படி இறந்தார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது, இப்படிக் கண்டறியப்பட்ட மரபணு தகவலின் அடிப்படையில் ஆராய்ச்சி செய்ததில் துதன்காமனின் மூதாதையர் திராவிடர்கள் என சென்னை அரசு பொது மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவில் பணியாற்றும் மருத்துவர் எஸ். காமேஸ்வரன் இந்திய ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

முரண்படும் ஆய்வு

ஆனால், 2017ஆம் ஆண்டு பிரமிடில் பதப்படுத்தி வைக்கப்பட்ட 151 உடல்களிலிருந்து 166 எலும்புகள் எடுக்கப்பட்டு மரபணு சோதனை செய்யப்பட்டது. இந்த ஆய்வில் பிரமிடில் பதப்படுத்தப்பட்டவர்களின் மரபணு இராக், துருக்கி, இஸ்ரேல், ஜோர்டன், சிரியா, லெபனான் மக்களோடுதான் அதிகம் ஒத்துப்போவதைக் கண்டறிந்துள்ளனர்.

இது உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றான மெசபடோமியா இருந்த இடம். இந்த ஆய்வில் நவீன அடுத்த தலைமுறை மரபணு தொடர்களை கண்டறியும் தொழில்நுட்பம் (Next Generation DNA Sequencing) பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆராய்ச்சி துல்லியமானது எனக் கருதப்படுகிறது.

இது மாதிரி, மரபணுவில் உள்ள திடீர் மாற்றங்கள் ஒவ்வொரு இன மக்களுக்கும் மாறுபடுகிறது. இதைக் கொண்டும் எகிப்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள மரபணு ஒற்றுமையைக் கண்டறியலாம். இந்த வகையில் 2013ஆம் ஆண்டு தாமஸ் போலோசாச் (Tomasz Płoszaj) வழி நடத்திய ஆராய்ச்சியில் மெசபடோமியா பகுதியில் வசித்த நான்கு பண்டைக்காலத்து மக்களின் மைட்டோகாண்ட்ரிய மரபணு குறிப்பான்களான M4b1, M49 மற்றும் M61-களை சோதனை செய்ததில் இவை இந்தியத் துணைக்கண்ட மக்களின் குறிப்பான்களுடன் ஒத்துப் போவது கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வை யா-பிங்-சாங் (Ya-Ping Zhang) இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்றார். இவர் தலைமையில் 2014ஆம் ஆண்டு 15,751 மனிதர்களின் மைட்டோகாண்ட்ரிய மரபணுவைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் MK 11G 107 என்ற மரபணுக் குறிப்பான் பண்டைய மெசபடோமியர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒற்றுமை இருந்ததாகக் காட்டுகிறது. மேலும் இந்த ஆய்வு தமிழ்நாட்டு வணிகர்கள் எகிப்தின் அண்டை நாடான ரோம் வரை சென்றதாகவும் காட்டுகிறது. இந்த ஆராய்ச்சி கட்டுரையின் தலைப்பு "பண்டைய மெசபடோமியாவில் தமிழ் வணிகர்கள்" (Tamil Merchant in Ancient Mesopotamia) என்பது சிறப்பாகும்.

இந்த தொடரில் வெளிவந்த கட்டுரைகள்:

குய் சவ் (Hui Zhou) தன் சகாக்களுடன் 2010ஆம் ஆண்டு சீனாவில் கண்டெடுக்கப்பட்ட லவ்லன் என்ற பதப்படுத்தப்பட்ட உடலை (Loulan Mummy) ஆராய்ச்சி செய்தார். இந்த உடல் சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு பெண்ணுடையது. குய் சவ் மேற்கொண்ட மரபணு சோதனையில் இந்த பெண் திராவிடர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆராய்ச்சி திராவிடர்களுக்கும் இரானியர்களுக்கும் உள்ள மரபணு ஒற்றுமையையும் கோடிட்டுக் காட்டுகிறது.

Y குரோமோசோம் ஆண்களுக்கு மட்டுமே உரியது. இந்த குரோமோசோம் பெண்களின் செல்களில் இல்லை. எகிப்தில் ஆண்களின் மரபணுவில் E-M78 என்ற ஒரு மரபணு குறிப்பான் உள்ளது. ஆனால் இது தமிழ் மக்களின் மரபணுவில் இல்லை. எனவே இருவருக்கும் மரபணுத் தொடர் பில்லை என்ற கருத்தும் ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.

நாங்கள் செய்த ஆராய்ச்சியில் STR (Short Tandam Repeat) என்ற இரண்டு மரபணு குறிப்பான்கள் எகிப்திய மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை வலியுறுத்துகிறது. ஆனால் இதனை உறுதிப்படுத்த இதுபோன்ற இருபதுக்கும் மேற்பட்ட STR-களையும் மற்றும் மரபணு மாற்றங்களில் உள்ள ஒற்றுமைகளையும் ஆராய்ச்சி செய்யவேண்டும். இதுபோன்ற மரபணு சோதனைகள் அதிக பணச்செலவு பிடிப்பவை. அரசுகளின் ஆதரவோடு இதை முன்னெடுக்கும்போது இதை தொய்வின்றி செய்ய முடியும்.

தமிழி எழுத்தில் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ பானை

தமிழி எழுத்தில் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ ஓர் உடைந்த‌ பானை ஓடு எகிப்தில் கிடைத்தது. அது ப‌ழ‌ங்காலத்தில் ரோமானிய‌ர்க‌ள் வசித்த இடம். அந்த ஓடு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. அதில் உரி (Uri) என்ற சொல் இருந்தது. ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்ட பின் அவர் உடலை எரித்துவிடுவார்கள். இதனை அறிந்த கிளியோபாட்ரா ஒரு மாவீரனை குப்பையை எரிப்பது போல் எரித்துவிட்டீர்களே என வருந்துவாள். இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்திப் பேணி பாதுகாப்பது எகிப்தியர்களின் மரபு என்பாள். பண்டைய தமிழர் மரபும் இதுதான்.

எகிப்து நாகரிகம் நைல் ஆற்றின் கரையில் வளர்ந்தது. இந்த நதியின் வண்டல் மண் பகுதியில் கோயும் எல்-குல்கன் (Koum el-Khulgan) என்ற‌ ஊர் உள்ளது. இந்த ஊர் எகிப்தின் தலை நகரமான கெய்ரோவிலிருந்து 93 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு 2021ஆம் ஆண்டு 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட 110 கல்லறைகள் கண்டறியப்பட்டன. அதில் நிறைய ஈமத்தாழிகளும் உண்டு.

ஆதிச்சநல்லூரும் எகிப்தும் - தொல்பொருட்கள் உணர்த்துவது என்ன?

தமிழ்நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூரில் எடுத்த ஈமத்தாழிகளுக்கும் எகிப்தில் கிடைத்த ஈமத்தாழிகளுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. இவ்விரு பானைகளின் வண்ணங்களும் ஒரே மாதிரியாக உள்ளன. இவ்விரண்டு ஈமத்தாழிகளிலும் இறந்த உடல்கள் மேல் மண் மட்டுமல்ல காற்றுகூட புகாதவாறு தாழியை நன்றாக மூடி புதைத்துள்ளனர். இதைப் பார்க்கும்போது இந்த இரு பண்பாடுகளின் உறவிலுள்ள பிணைப்பின் ஆழத்தை உணரமுடிகிறது.

சாதாரண மக்கள் இறந்தால் அவர்களைத் தாழியில் வைத்துப் புதைப்பதும், மன்னர் குடும்பத்தினர் என்றால் உடலைப் பிரமிடிலும் பாதுகாப்பதும் பண்டைய எகிப்தியரின் பண்பாடு. இங்குத் தமிழ்நாட்டில் வசதி படைத்தவர்களை மிகப் பெரிய தாழியிலும் சாதாரண மக்களின் உடலைச் சிறிய தாழியிலும் வைத்துப் புதைத்துள்ளனர் என 1902ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்த அலெக்சாண்டர் ரீயா கண்டறிந்துள்ளார்.

ஆச்சரியம் என்னவென்றால் கேரளப் பகுதிகளில் முற்காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை குடைந்து உடல்களைப் பாதுகாத்து வைத்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர். நிறைய ஆராய்ச்சிகள் தொடர்ந்து செய்தால் பல வியப்பூட்டும் உண்மைகள் வெளிவரும்.

எகிப்தில் மலை எதுவும் இல்லை. தமிழ்நாட்டு மக்களின் பழக்கத்தைப் பார்த்து செயற்கையாக மலைக்குன்றுகள் போல் பிரமிடுகளைக் கட்டிக் கொண்டார்களோ என எண்ணத்தோன்றுகிறது. ஒரு பிரமிடைக் கட்ட 23 லட்சம் பெரிய கற்களைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த கற்களின் சராசரி எடை பல ஆயிரம் கிலோ ஆகும். இவற்றை 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஸ்வான் (Aswan) என்ற இடத்திலிருந்து கொண்டுவந்து பிரமிடைக் கட்டியுள்ளனர்.

ஒன்று மட்டும் உண்மை, தமிழர்களின் நாகரிகம் மிகவும் ஆழமானது. கடவுள் வழிபாட்டில், மரபணுவில், இறுதிச் சடங்கு முறைகளில், கட்டட அமைப்பில், மொழியில், உடையில், அதை அணியும் விதத்தில் மற்றும் ஈமத்தாழிகளில் என எட்டு தனித்தனிப் பிரிவுகளில் நமக்கும் எகிப்துக்கும் இடையே கண்டுபிடிக்கப்படும் ஒற்றுமைகள் நீண்டு கொண்டே போகின்றன. தமிழர்கள் இங்கிருந்து எகிப்து சென்றார்களா? அல்லது எகிப்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தார்களா? இந்த கேள்விகளுக்கு இதுதான் உண்மை என அடித்துக் கூற போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை.

(மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சி பயணத்தைத் தொடங்கிய கட்டுரையாளர் சுதாகர் சிவசுப்பிரமணியம், 1999இல் முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பத்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் இவர், பல்கலைக்கழக தொல்லியல் மையத்தின் இயக்குநராவும் செயல்படுகிறார். மண்புழுவைக் கொண்டு உறுப்புக்களின் மறு உருவாக்கம் மற்றும் வயதாவது தொடர்புடைய நோய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறார். இவர் மண்புழுக்களின் மரபணுத் தொகுப்பைக் கண்டறிந்தவர்.)

தயாரிப்பு: சாய்ராம் ஜெயராமன், பிபிசி தமிழ்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: