You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அறிவியல் அதிசயம்: மனிதன் மரணத்தை வெல்வது சாத்தியமா? நீடித்த இளமையை நோக்கி முன்னேறும் மருத்துவம்
- எழுதியவர், நமசிவாயம் கணேஷ் பாண்டியன்
- பதவி, துல்லிய மருத்துவ முறை ஆராய்ச்சியாளர், ஜப்பான்
மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் ஐந்தாவது கட்டுரை இது. (இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)
வயது வித்தியாசம் பார்க்காமல், அனைவருக்கும் மரணபயம் காட்டி விட்ட இந்த கொரோனா காலத்தில், இத்தலைப்பு உங்களுக்கு நகைப்பை ஏற்படுத்தலாம். `உலக போர்க்காலத்தில் அதிமுக்கிய கண்டுபிடிப்புகள் நிகழும்`, எனும் வரலாற்று கூற்றுக்கு ஏற்ப, கிருமிகளுக்கு எதிரான இப்போரில், மனித வரலாற்றையே புரட்டிப் போடும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்று, `நீடித்த இளமை சாத்தியம்` என்பதற்கான அறிவியல் சான்றுகள்.
இக்கட்டுரையை தொடங்கும் நேரத்தில், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், வயதை வெல்வதற்காக உருவாக்கப்பட்ட 'ஆல்டோஸ் ஆய்வகத்திற்கு' பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளார் என்பது தலைப்பு செய்தி.
மனித நாகரிகத்தின் ஒட்டுமொத்த வரலாற்றில் அடையமுடியாத இந்த தேடலுக்கு, என்றுமே சந்தை உண்டு, இப்போது வாய்ப்பும் உண்டு என்ற அறிவியல் ஆதாரங்கள் அடிப்படையில் தான், இப்பெரும் முதலீடு. இயற்கையோ, அகாலமோ, அன்புக்குரியவர்களின் மரணம் என்றும் கொடிய இழப்பு தான். அதற்காக மரணத்தை வெல்வது போன்ற வார்த்தைகள் பேராசைக்கும், போலி மருந்துகளுக்கும் வழிவகுக்கும்.
அறிவியல் அறிவிப்புகளில் மொழி கவனமாக கையாளப்பட வேண்டும். இந்த கட்டுரையின் மையப்பகுதியாக இருக்கப்போகும் ஆராய்ச்சியின் இலக்கு ஈடு கட்ட முடியாத இழப்பான மரணம் அல்ல, மரணத்தை போலவே போனால் வராத 'காலம்!.'
இது உலகின் இறந்த/நிகழ்காலத்தை கடக்கும் கால இயந்திரம் இல்லை, நமது உடலிலுள்ள செல் அளவிலான, ஆயுட்கால இயந்திரத்துடன் தொடர்புடையது.
ஆயுட்காலத்தை அதிகரிப்பது சாத்தியமா?
இந்த கேள்விக்கு பதில், 'சாத்தியமே' என்பதை கடந்த நூற்றாண்டு தரவுகள் சொல்லும். 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, 40-50 ஆண்டுகளாக இருந்த உலக சராசரி ஆயுட்காலம் (lifespan) வருடாவருடம் மெல்ல மெல்ல உயர்ந்து தற்போது தற்போது 67-75ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஜப்பானில் சராசரி ஆயுட்காலம் 84ஆகவும், இந்தியாவில் 69ஆகவும் உயர்ந்துள்ளது. போர், பஞ்சம் தவிர்த்துப் பார்த்தால், நோய்க்கிருமி தொற்றுகளை (infectious diseases) இன்றைய மருத்துவம் மூலமாக கட்டுப்படுத்தியதுதான் இந்த ஆயுட்கால அதிகரிப்புக்கு காரணம்.
அதே சமயம் வாழ்க்கைமுறை சம்பந்தப்பட்ட நோய்கள் (life style diseases) அதிகரித்து வருவதால், பலர் இளமையிலேயே ஆரோக்கிய ஆயுட்காலத்தை (healthspan) தொலைக்கின்றனர். நமது குடும்பங்கள் மற்றும் அரசாங்க சுகாதார அமைப்புகள் மீது பெரும் பொருளாதார சுமையும் ஏற்படுவதால், வாழ்க்கை தரம் குறைந்து கொண்டே வருகிறது. புற்றுநோய், நரம்பு சிதைவு போன்ற கொடிய நோய்கள் வராமல், 'யாருக்கும் கஷ்டம் இல்லாமல் போய் சேர்ந்து விட வேண்டும்' என்பதே பல முதியவர்களின் வேண்டுதல். தற்போது அதீத வளர்ச்சி பெற்று வரும் நாளைய மருத்துவம் என்று அழைக்கப்படும் துல்லிய மருத்துவ அறிவியல் முறை (Precision Medicine), அந்த வேண்டுதலை நிறைவவேற்றும் பயணத்தை தொடங்கி உள்ளது. அது என்ன நாளைய மருத்துவம்?
மருத்துவத்தில் வகை உண்டா?
மருத்துவ அணுகுமுறையை மூன்று வகையாகப் பிரிக்கலாம். கடந்த காலங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட, `இந்த அறிகுறியினால், இந்த நோய் என்று கணிக்கும் அறிகுறி அடிப்படையிலான மருத்துவமுறையில் (Symptom-based medicine)`, பலன்கள் கிடைத்தாலும், கணிப்பு தவறாக வாய்ப்புள்ளதால் வெற்றி விகிதம் குறைவு, பக்கவிளைவுகள் அதிகம். நோய்க்கான காரணிகள் அறிந்து, சரியான சிகிச்சை முறை உருவாக்கி, பல்வேறுபட்ட மக்களுக்கும் பயன் அளிக்கிறதா என்ற உறுதி செய்யப்பட்ட, `ஆதாரங்கள் அடிப்படையிலான இன்றைய மருத்துவம் (Evidence-based medicine)`, குறைவான பக்க விளைவுகளுடன், பல நோய்களுக்கு தீர்வு கண்டுள்ளது.
நாளைய மருத்துவம் - அன்றே சொன்னார் திருவள்ளுவர்!
நாளைய மருத்துவ முறையை "நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்று சுருங்க சொல்லி, அன்றே விளங்கச் செய்தார் திருவள்ளுவர். இதன் கட்டங்கள் பின் வருமாறு,
1) தொடக்கப்புள்ளி நிலையிலேயே இந்த நோய்தான் என உறுதி செய்யும் வழிமுறைகள் வகுத்தல்,
2) மரபணு முதலான மூலக்கூறு தகவல்கள் அடிப்படையில் நோயின் முதன்மைக் காரணியை இலக்காக உறுதிப்படுத்துதல்.
3) நோய் இலக்குகளை துல்லியமாக தாக்கி வேரோடு களைய, மருந்து/மாத்திரை/சிகிச்சை முறைகளை உருவாக்குதல்.
உயிரியல், வேதியியல், பொறியியல் முதல் செயற்கை நுண்ணறிவு உட்பட பல துறைகளையும் சார்ந்த "நோய்முதல்" அடிப்படையிலான இந்த துல்லிய மருத்துவ முறைக்கும், நிரந்தர இளமை பற்றிய ஆராய்ச்சிக்கும், என்ன தொடர்பு? என்ற கேள்வி இங்கு எழலாம்.
அல்சைமர், இதய கோளாறு, கீல்வாதம் உள்ளிட்ட பல்வேறு தள்ளாமை நோய்களுக்கு முதற்காரணம், உடல் வயது மூப்பே. உடல் மூப்பையே இலக்காகக் கொண்டு துல்லியமாக தாக்குவதன் மூலம், வயது சார்ந்த பல தள்ளாமை நோய்களை சரி செய்யலாம் என்பதே, இத்துறை அறிவியலாளர்களின் நோக்கம். உடலை இயந்திரமாக ஒப்பீடு செய்வதன் மூலம், அதன் வயது மூப்பின் மைய காரணிகளை அறியலாம். இது எப்படி சாத்தியமென இப்போது பார்ப்போம்.
டிக் டிக் டிக் - கால அவகாச மீட்பு
உடலின் ஒவ்வொரு உறுப்புகளிலுள்ள செல்களுக்கும், ஒரு டைமர் (timer) கடிகாரம் உள்ளது. வயதாவதால் வரும் தோல் சுருக்கத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டால், தோல் செல்கள் தன்னைத்தானே புதுப்பிக்க பிரிந்து பெருகும் (cell division and proliferation) டைமர் அவகாசம் - 60 முறை மட்டுமே!
செல்லின் மூலக்கூறான டிஎன்ஏ (Deoxyribonucleic acids - DNA), படங்களில் பார்ப்பது போல் அல்லாமல், நூல்கண்டு போல சுருண்ட குரோமோசோம் கட்டமைப்பு அவிழ்ந்து விடாமல் பாதுகாப்பது, அதன் முனைக்கூறு தொப்பிகள் (Telomeres). இதன் செயல்பாட்டை, ஷூலேஸ்களின் (shoelace) முடிவில், அதன் நூல்கள் எளிதில் அவிழ்ந்து விடாமல் பாதுகாக்கும் பிளாஸ்டிக் தொப்பிகளோடு ஒப்பீடு செய்யலாம்.
ஒவ்வொரு முறை செல் பிரியும் போதும், இந்த தொப்பிகள் சுருங்குவதால், ஒரு கட்டத்திற்கு மேல் செல்கள் பிளவுபட முடியாமல், முதுமை அடையும் (cellular sensescence). சமீபத்தில், இஸ்ரேல் விஞ்ஞானிகள், ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை (HBOT) எனும் நெறிமுறை மூலம், முனைக்கூறு தொப்பி நீளத்தை அதிகரித்து, செல்கள் முதிர்ச்சி அடைய தேவையான டைமர் அவகாசத்தை மீட்டமைக்க (reset) முடியும் என்று நிரூபித்து, நிரந்தர இளமை நோக்கிய பாதையை வகுத்துள்ளனர்.
மரணமில்லா கேன்சர் செல், டைமர் அவகாசம் இல்லாமல் பெருகுவதற்கு காரணமான, முனைக்கூறு தொப்பி நீளத்தை கட்டுபடுத்தும் `டெலோமரேஸ்` என்ற நொதியை துல்லியமாக கையாள்வதன் மூலமாகவும், டைமர் அவகாசத்தை மீட்கலாம்.
மரபணு குறியீடுகள்
ஆரோக்கிய மரபணுக்களை (Genes), தேவைப்படும் இடங்களில், துல்லியமாக வெளிப்படுத்தி (ON) அல்லது மறைப்பதன் (OFF) மூலம், நமது உடலின் விதியை, செல் அளவில் நிர்ணயம் செய்வது, மரபணுகளுக்கு மேல் ஆளுமை நடத்தும் குறியீடுகள் (epigenetic codes) என்று அறியப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில தேனீக்கள், ராயல் ஜெல்லி எனப்படும் ஊட்டச்சத்து உணவை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கிய மரபணு குறியீடுகள் பெற்று, ராணித்தேனீயாக நீண்ட காலம் உயிர் வாழும். அது கிடைக்காத வேலைக்கார தேனீக்கள், சில காலம் மட்டுமே வாழும்.
மனிதர்களை ஜாதி, மதத்திற்கு அப்பால் அடையாளப்படுத்துவதும், உணவுமுறை, வாழும் சூழல், மனநிலை போன்ற வெளிப்புற காரணிகள் நமது மரபணுக்களுக்கு மேலே செலுத்தும் குறியீடுகள் தான். மரபணு குறியீடுகள், நமது அடுத்த சந்ததியினருக்கும் பரம்பரையாக சென்று, அவர்களின் ஆரோக்கிய ஆயுட்காலத்தையும் மாற்றவல்லது.
நமது உடல் விதிக்கு முன்னோர்கள் காரணமோ?! என்று அவர்களை பாராட்டுவதற்கு, அல்லது விமர்சிப்பதற்கு முன் நிற்க! மரபணு குறியீடுகள் மாற்ற முடியாத சாசனம் அல்ல, அதை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்.
`Blue zone` என்று சொல்லப்படும் உலகின் 5 இடங்களில் ஆரோக்கிய ஆயுட்காலம் அதிகமாக இருப்பதற்கு,
1) முழு தாவர/மண் சார்ந்த உணவுமுறை,
2) குறைந்த கலோரி உட்கொள்ளல்/விரதம்,
3) மிதமான உடற்பயிற்சி,
4) போதுமான தூக்கம்,
5) நல்ல நோக்கங்கள்
6) ஆரோக்கியமான சமூக வலைப்பின்னல்
என பல பொது காரணிகள் காணப்படுகிறது. இந்த காரணிகளை பின்பற்றி, நல்ல மரபணு குறியீடுகளை பெறுவதன் மூலம் ஆரோக்கிய ஆயுட்காலத்தை எந்த வயதிலும் மீட்டெடுக்கலாம்.
குடல் நுண்ணுயிரிகள் - தொலைத்த தொலைத்தொடர்பு
நுண்ணுயிர்கள் என்றாலே கிருமிகள் அல்ல, நமது உடலில் நுண்ணுயிர் செல்கள் மனித செல்களை விட 10:1 என்ற விகிதத்தில் அதிகமாக உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?
நமது குடலை வீடாகக்கொண்ட பில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள், மரபணு குறியீடுகளுடன் பின்னிப்பிணைந்து, நமது உணவை ஜீரணிக்கும் திறன் மட்டுமல்லாமல், நோயெதிர்ப்பு மற்றும் உறுப்புகளுக்கு இடையே உள்ள தொலைத்தொடர்பை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பண்டைய கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரட்டீஸின் `அனைத்து நோய்களும் குடலில் தொடங்குகின்றன` என்ற கூற்றிற்கு ஏற்ப, இத்தொடர்புகள் நாளடைவில் பாழடைந்து நோய் உருவாகிறது. குடல் நுண்ணுயிரிகளை சரி செய்வதன் மூலம் தொலைத்தொடர்பை சீரமைத்து, ஆரோக்கிய ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம்.
மைட்டோகாண்ட்ரியா - செல் இன்ஜின் சீரமைப்பு
இயந்திரத்திற்கு இன்ஜின் போல, நமது மனித செல்களின் அக ஒன்றியமாக வாழ்ந்து, என்ஜினாக செயல்படுவது, பரிணாம வளர்ச்சியில் நுண்ணுயிரின் நீட்சியான, 'மைட்டோகாண்ட்ரியா'. ஆற்றல் காரணியான, `ஏ.டி.பி (adenosine triphosphate = ATP)` உருவாக்கி, அனைத்து செல்களின் செயல்பாடுகளுக்கும் தேவையான ஆற்றலை வழங்குவது மட்டுமல்லாமல், செயல்முறைகளை ஒருங்கிணைக்கும் தொடர்பு மையங்களாகவும், மைட்டோகாண்ட்ரியா செயல்படுகிறது.
வயதிற்கும், முதுமை பருவ தள்ளாமை நோய்களுக்கும் முக்கிய காரணம், நாளடைவில் குறையும் வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் மைட்டோகாண்ட்ரியா டிஎன்ஏ அளவு, ஒருமைப்பாடு மற்றும் செயல்பாடு பிறழ்வுகள்தான். இந்த சேதங்களை, பல அடுக்குகளை துல்லியமாக தாண்டி சீரமைத்து, செல்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பதன் மூலம், முதுமை பருவ தள்ளாமை நோய்களை தடுக்கலாம்.
செல் மறுஉருவாக்கம் - ரகசியம் அம்பலம்!
தாயின் கருவறையில் பல உறுப்புகளாக முளைக்க வல்ல, பன்மை ஆற்றல் பெற்ற முளைக்கரு செல் (embryonic stem cell), கை, கால் முளைத்து குழந்தையாக மாறும் போது, ஒவ்வொரு உறுப்புகளின் செல்லுக்குள்ளேயும், 'பன்மை ஆற்றல்' ரகசியமாக மறைவதால்தான், பல்லிகளுக்கு அறுபட்ட வால் பிறகு முளைப்பது போல, நமக்கு பல உறுப்புக்கள் முளைக்காது. கியோத்தோ பல்கலைகழக Dr. ஷின்யா யமனக்கா, முளைக்கரு பன்மை ஆற்றலின் ரகசிய காரணிகளான 4 மரபணுக்களை கண்டுபிடித்து, அதை வெளிப்படுத்துவதன் (ON) மூலம், தோல் திசுக்களை மீண்டும் வேறு உறுப்புகளாக முளைக்கவல்ல, கரு செல்களாக மாற்றலாம் எனும் புரட்சிகரமான அறிவியல் முறைக்கு (induced pluripotent stem cell) நோபல் பரிசு பெற்றார்.
இந்த செல் மறுஉருவாக்க முறை மூலம், பழுதான இயந்திர பாகங்களை மாற்றுவது போல, இழந்த/ பழுதான உடல் பாகங்களை, மாற்று அறுவை சிகிச்சைக்கு, நன்கொடையாளர் அல்லது தொப்புள் கொடி ஸ்டெம் செல்கள் இல்லாமல்கூட மாற்றி, ஆரோக்கிய ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம்.
மரண காலத்தை வெல்வது சாத்தியமா?
'Sirtuins' போல இன்னும் பல முக்கிய காரணிகள் இருந்தாலும், இளமை கரைவதற்கு, நாளடைவில் ஏற்படும் மரபணு மற்றும் செல்தொடர்பு பிழைகளின் குவிப்புதான் மூலம் என்று சுருங்க சொல்லி விளங்கி கொள்ளலாம்.
துல்லியமான நேரத்தில்/இடத்தில், தேவையான மரபணுக்களை மறைத்து அல்லது வெளிப்படுத்த, இந்த காரணிகளிடம் அதன் மொழியிலே பேசுவதன் மூலம் இந்த தொடர்புப்பிறழ்வை சீர் செய்யலாம்.
ஜெல்லி மீன்கள், வில்லு திமிங்கலம் போன்ற நீண்ட காலம் வாழும் உயிரினங்களின் மரபணு காரணிகளை அறிவதும், பாரம்பரிய மருத்துவ முறைகளை மறுஆய்வு செய்வதும், இம்முறையை மேலும் துல்லியப்படுத்தும். தொடக்க நிலையில் இருந்தாலும், பல்துறை நிபுணர்களின் ஒருங்கிணைப்பு, பெரும் பணக்காரர்களின் முதலீடு, அதிவேகமாக முன்னேறும் விஞ்ஞானம் என சக்தி எல்லாம் ஒன்று சேர்வதினால், செல்வந்தர்கள் மட்டுமல்லாமல் சாமானியர்களும், இதனால் பயன் அடைய வாய்ப்புள்ளது.
அதுவரை, மருத்துவமும், அதியமான் நெல்லிக்கனியும் தேவையில்லை, நம் உள்ளங்கை நெல்லிக்கனியாக உள்ள சரியான வாழ்க்கை முறையே துணை. இளமையை நீட்டுவது, வெறும் தனிமனித வாழ்க்கை சம்மந்தப்பட்டது மட்டுமல்ல. ஒவ்வொரு தனிமனித தேர்ந்த அனுபவமும், நாட்டை, ஏன் மனித சமுதாயத்தையே அடுத்த கட்டத்திற்கு விரைந்து முன்னேற்றும்.
மலர்களோ, நட்சத்திரமோ, வயது மூப்பு மரணம் ஒரு இயற்கை நியதி. முற்றுப்புள்ளி இல்லாத வாக்கியம் அர்த்தமற்று அலுத்து விடும், வாழ்க்கையும், இந்தக் கட்டுரையும், அதுபோலதான்.
(ஐஐடி சென்னையில் தனது ஆராய்ச்சி பயணத்தைத் தொடங்கிய கட்டுரையாளர் நமசிவாயம் கணேஷ் பாண்டியன், ஜப்பானின் நிகாட்டா பல்கலைக்கழகத்தில் 2009இல் முனைவர் பட்டம் பெற்றார். தற்போது கியோட்டோ பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றும் இவர், 2018இல் தனது தாய் ஆய்வகத்தை தொடங்கினார். மரபணுக் குறியீடு, மைட்டோகாண்ட்ரியா மற்றும் வயது சம்பந்தப்பட்ட நோய்களுக்கெதிரான துல்லிய மருத்துவ முறை ஆராய்ச்சி செய்து வரும் முனைவர் கணேஷ், ருட்ஜ்ர்ஸ் பல்கலைக்கழகம் (அமெரிக்கா) மற்றும் AO ஆராய்ச்சி நிறுவனத்தில் (சுவிட்சர்லாந்து) வருகைப் பேராசிரியராகவும், ReguGene Co. Ltd இல் அறிவியல் ஆலோசகராகவும் உள்ளார்.)
தயாரிப்பு: சாய்ராம் ஜெயராமன், பிபிசி தமிழ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: