You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்கிறதா? ஜிடிபி வளர்ச்சி பற்றி ஓர் அலசல்
- எழுதியவர், அர்ச்சனா ஷுக்லா
- பதவி, பிபிசி செய்தியாளர்
2022-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறைந்துள்ளது. கொரோனாவின் ஒமிக்ரான் அலை காரணமாக வணிக செயல்பாடுகள் குறைந்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளின் தாக்கத்தால் விலைவாசி உயர்ந்துள்ளது.
தேசிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி ஜனவரி-மார்ச் காலாண்டில் 4.1% ஆகவும் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 5.3% ஆகவும் குறைந்துள்ளது.
எரிபொருள் விலை உயர்ந்தது மற்றும் நுகர்வோர் நிலையிலான பணவீக்கம் தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு 6 சதவீதத்திற்கும் மேலாகவே இருந்த வேளையில் ஜனவரி-மார்ச் காலகட்டத்தில், நாட்டின் வளர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது.
யுக்ரேன் - ரஷ்யா போர், விநியோகச் சங்கிலி தடைகளுக்கு வழிவகுத்தது. அதோடு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை உயர்த்தியது. இது மக்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்காகச் செலவிடும் திறனையும் பாதித்துள்ளது.
2020-21ஆம் நிதியாண்டில் பொருளாதாரம் 6.6% சுருங்கியது. 2021-22ஆம் நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.7% ஆக இருந்தது. இது அரசாங்கத்தின் முந்தைய மதிப்பீடான 8.9% வளர்ச்சியைக் காட்டிலும் சற்று குறைவு.
2022 நிதியாண்டின் கடைசி காலாண்டில் உற்பத்தி செயல்பாடு ஓரளவுக்குக் குறைந்தது. புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய தட்டுப்பாடு காரணமான திடீர் விநியோக மாற்றங்களுக்கு மத்தியில் எஃகு, பிளாஸ்டிக், பிற தொழில்களின் உள்ளீட்டு விலைகள் அதிகரித்து வருகின்றன. இது உற்பத்தி நிறுவனங்களின் விலை மற்றும் விநியோகத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்களைச் சமாளிக்கும் திறனை பாதித்துள்ளது.
'சிறு, குறு தொழில்களில் லாபம் குறைந்து வருகிறது'
மும்பையின் புறநகரில் சமையல் பாத்திரங்கள் தயாரிக்கும் சிறிய அளவிலான தொழிற்சாலையை நடத்தி வரும் காந்திலால் பிரேம்ஜி மாரு பிபிசியிடம், அவருடையதைப் போன்ற சிறு, குறு தொழில்களில் லாபம் குறைந்து வருவதாகக் கூறினார். அவரது தொழிற்சாலையில் எஃகு பயன்படுத்துவதற்கு, கடந்த ஆண்டை விட தற்போது ஒன்றரை மடங்கு அதிகமாகச் செலவாகிறது. அதிக பேக்கேஜிங், போக்குவரத்து செலவுகளுடன், அவரால் தொழிலை இயக்க முடியவில்லை.
மேலும், "எங்களால் முழு 8 மணிநேர வேலைநேரத்தை இயக்க முடியவில்லை. எனவே நாங்கள் சில இயந்திரங்களை நிறுத்தி வைத்துள்ளோம். எங்கள் ஊழியர்களில் சிலரை வேலையை விட்டு நீக்க வேண்டியிருந்தது," என்று கூறுகிறார் காந்திலால்.
தொழிலாளர்களை அதிகளவில் பணியமர்த்துகின்ற விவசாயத்துறை, நல்ல விளைச்சலுடன் இதுவரை நெகிழ்வுத் தன்மையோடு இருக்கிறது. விவசாயத் துறை, ஜனவரி-மார்ச் காலாண்டில் 4.1% வளர்ச்சியைக் கண்டது. இருப்பினும், உரங்களின் விலை அதிகரித்து வருவது, கணிக்க முடியாத வானிலை போன்ற காரணிகள், இந்த வளர்ச்சியைப் பாதிக்கலாம்.
வர்த்தகம், உணவகங்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்ற சேவை துறைகளின் வளர்ச்சி, நான்காவது காலாண்டில் 5.3% ஆகவும் முந்தைய காலாண்டில் 6.3% ஆகவும் குறைந்துள்ளது. பெரும்பான்மையான சிறு, குறு நிறுவனங்களை உள்ளடக்கிய, பெரியளவிலான முறைசாரா பணியாளர்களைப் பணியமர்த்தும் சேவைகள், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சியின் முக்கிய அம்சமாக உள்ளன.
அதிர்ச்சியளிக்கும் பிரிவு
பாங்க் ஆஃப் பரோடாவின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ், "அதிர்ச்சியளிக்கும் அம்சமாக வர்த்தகம் / சுற்றுலா சார்ந்த பிரிவு இருக்கிறது. இதில் தேங்கியிருந்த தேவை முற்றிலும் வளர்ச்சியாக மாறாததால், முழு நிதியாண்டில் எதிர்பார்த்ததைவிடக் குறைவான வளர்ச்சியை இந்தப் பிரிவு பதிவு செய்துள்ளது. இந்தத் துறையில், நீண்ட நாட்களாக இல்லாத வாய்ப்பு மீண்டும் கிடைக்கும்போது அவையெல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்துச் செலவு செய்யும் ஒரு கூறு இருந்தது. அந்தக் கூறு அதிக வளர்ச்சி விகிதத்திற்கு வழிவகுத்திருக்க வேண்டும்.
ஆனால், இந்தியாவின் நுகர்வு சார்ந்த பொருளாதாரம் ஒரு கட்டுக்குள்ளேயே இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளில் கவலையளிக்கக்கூடியது, தனியார் நுகர்வுதான். நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனியார் நுகர்வின் பங்கு சரிவைக் கண்டுள்ளது.
பெரும்பாலும் எரிபொருள் விலையேற்றத்தால் உந்தப்பட்ட, சில்லறை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது தனியார் நுகர்வைப் பாதிக்கும். வளர்ச்சியை மையமாகக் கொண்ட பணவியல் கொள்கை கடைபிடிக்கப்பட்ட பல மாதங்களுக்குப் பிறகு, ரிசர்வ வங்கி திட்டமிடப்படாத கொள்கை முடிவில், அதிகரித்து வரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்தியது. அடுத்து வரும் காலாண்டுகளில் இதுபோன்ற மேலும் பல வட்டி விகித உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா- யுக்ரேன் இடையே நடந்து வரும் போருக்கு நடுவே, அன்றாடப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்து வருவது, அடுத்த நிதியாண்டிலும் கூட நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.
மோர்கன் ஸ்டான்லி அதன் வளர்ச்சி முன்கணிப்பை 7.9 சதவீதத்திலிருந்து 7.6 சதவீதமாகக் குறைத்தது. உலக மூலதனச் சந்தைகளில் உலகளாவிய வளர்ச்சியின் மந்தநிலை, அதிகமாகியிருக்கும் சரக்குகளின் விலை போன்ற எதிர்மறையான அபாயங்களைக் காரணம் காட்டி, கச்சா எண்ணெய் விலையில் ஒவ்வொரு 10% அதிகரிப்பும் பணவீக்கத்தை 30 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தவும் பொருளாதாரத்தின் வளர்ச்சியை 20 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கவும் இந்திய ரிசர்வ்0 வங்கி மதிப்பிட்டுள்ளது.
புதிய முதலீடுகள் தேவை
இந்தியாவின் வளர்ச்சியை அதிகரிக்க புதிய முதலீடுகள் தேவை என்று பொருளாதார வல்லுநர்க்ள் கூறுகின்றனர். அப்சர்வேடிவ் குரூப்பின் மூத்த இந்திய ஆய்வளர் ஆனந்த் நாராயண் பிபிசியிடம், இந்தியா தனது பொருளாதார சீர்திருத்தத்தைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று கூறினார்.
மேலும், "ஏழு முதல் எட்டு சதவீதம் வரையிலான நிலையான வளர்ச்சிப் பாதையில் இந்தியா செல்ல முடியாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. இந்தியாவில் அதிகமான முதலீடுகளைச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய நிறைய திட்டங்கள் உள்ளன. சாலைக்ள், ரயில்கள், துறைமுகங்கள், மின்சாரம் போன்றவற்றுக்கு மூலதன செலவினங்களுக்கு முன்பைவிட அதிக பணத்தை அரசங்கம் ஒதுக்கியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, நம்முடைய முந்தைய வரலாறும் இந்த சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதும் மோசமான நிலையில் உள்ளது. இப்படியொரு நிலை இருக்கையில், உண்மையில் இந்த சீர்திருத்தங்கள் வேரூன்றும் என்றோ அதன்மூலம் சாத்தியமான வளர்ச்சியை அடைவோம் என்றோ நான் நம்பவில்லை," என்றும் கூறினார்.
உலகளாவிய தலையீடுகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் இந்தியாவில் தனியார் முதலீட்டு சுழற்சியை பாதிக்கும் என்று கேர் ரேட்டிங்ஸின் தலைமை பொருளாதார நிபுணர் ரஜனி சின்ஹா தெரிவித்துள்ளார். மேலும், "இதோடு, உலக பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் ஏற்றுமதிகள், உலகளாவிய பொருளாதார வளர்ச்சி வேகமும் குறைந்து வருவதன் தாக்கத்தையும் எதிர்கொள்ளும்," என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்