2021-2022 நிதியாண்டில் நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.71% - இந்திய அரசு

2021-2022ஆம் நிதியாண்டில் இந்திய அரசின் நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.71 சதவிகிதமாக இருந்தது என்று இந்திய அரசு இன்று வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. இது 6.9 சதவிகிதமாக இருக்கும் என்று பட்ஜெட் கணிப்பு திருத்தப்பட்டபோது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்த முக்கிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

  • 2021-22 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.7 சதவீதமாக இருந்தது என்றும் அந்த தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
  • ஜனவரி - மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • மின்சாரம், எரிவாயு, தண்ணீர் விநியோகம் துறை 7.5 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.
  • கட்டுமான துறை 11.5 சதவீதமாக ஏற்றம் பெற்றுள்ளது. உற்பத்தி துறை 9.9 சதவீதமாக ஏற்றம் கண்டுள்ளது.
  • விவசாயத்துறை 3 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 3.3 சதவீதமாக இருந்தது.

ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகை விடுவிப்பு

  • இதனிடையே, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு மொத்தம் 86,912 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், தமிழ்நாட்டுக்கு ரூ. 9,602 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மகராஷ்டிராவிற்கு ரூ. 14,145 கோடி, கர்நாடகத்திற்கு ரூ. 8,633 கோடி, உத்தர பிரதேசத்திற்கு ரூ. 8,874, டெல்லிக்கு ரூ. 8,012 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவிற்கு ரூ. 5,693 கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ. 6,591 கோடி, புதுச்சேரிக்கு ரூ.576 கோடி என 21 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ. 86,912 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
  • இன்று மே 31 வரையிலான அனைத்து ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையையும் விடுவித்துள்ளதாக, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியில் 25,000 கோடி ரூபாய் மட்டுமே இருந்த நிலையில், இந்திய அரசு முழு இழப்பீட்டுத் தொகையையும் விடுவித்துள்ளது. மீதமுள்ள ரூ.61,912 கோடி மத்திய அரசின் கூடுதல் வரி வசூல் மூலம் விடுவிக்கப்படும்.
  • இதில், 2022-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய பாக்கி ரூ. 17,973 கோடியாகும். பிப்ரவரி, மார்ச் மாதத்திற்கான பாக்கி ரூ. 21,322 கோடி. 2022 ஜனவரி வரையிலான இழப்பீட்டு பாக்கி ரூ. 47,617 கோடி. மொத்தம் 86,912 கோடி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: