You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாநிலங்கள் 'மினி இலங்கை' ஆக மாறும் ஆபத்தா?
- எழுதியவர், ஜூபைர் அகமது
- பதவி, பிபிசி செய்தியாளர்
கடந்த சில காலமாக பஞ்சாப் மாநிலம் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியுடன் ஒப்பிடப்படுகிறது. இத்தகைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இது போன்ற மாநிலங்கள் இப்போது 'மினி இலங்கை' என்று கருதப்படுகின்றன.
பஞ்சாபின் பொருளாதார நிலையை புள்ளிவிவரங்களின் மூலம் புரிந்து கொள்வோம். மாநிலத்தின் கடன், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 53% ஆகும். இது இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிக அதிகம்.
மாநிலத்திற்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. அதாவது மூன்று கோடி மக்கள் தொகை கொண்ட இந்த மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனும் ஒரு லட்சம் ரூபாய் கடனில் புதையுண்டு கிடக்கிறார்.
வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றிப் பேசினால், இது 25 சதவிகிதமாக உள்ளது. 2021 ஆம் ஆண்டில் மாநிலம்.75,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருந்தாலும், இது இலக்கை விட 20,000 கோடி ரூபாய் குறைவாகும்.
இதையும் மீறி பஞ்சாபில் ஆட்சிக்கு வந்த புதிய ஆம் ஆத்மி அரசு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில், ஜூலை 1ம் தேதி முதல், மக்களுக்கு மாதம்தோறும், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு.5,500 கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும்.
பஞ்சாபில் பணிபுரியும் பொருளாதார நிபுணர் ரஞ்சித் குமன், மானியங்கள் மற்றும் பொருட்களை இலவசமாக வழங்கும் பாதை, வளர்ச்சியை அல்ல, அழிவைக்கொண்டுவரும் என்று கூறுகிறார்.
"நீங்கள் ஏழைகளுக்கு மானியம் அளியுங்கள். அவர்களின் கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கு மானியம் வழங்கப்பட வேண்டும். மேலும் அவர்கள் அதிகாரம் பெற வேண்டும். சாமானியர்களுக்கு எட்டாத அத்தியாவசியப் பொருட்கள் மீது மானியம் வழங்கப்பட வேண்டும். ஆனால் அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்குவது எனது புரிதலுக்கு அப்பாற்பட்டது . மானியங்கள் எந்த நாட்டிலும் வளர்ச்சிக்கு வழிவகுக்காது," என்று பிபிசியிடம் பேசிய அவர் குறிப்பிட்டார்.
பல வகையான மானியங்கள் மற்றும் இலவச திட்டங்களுக்காக மாநில அரசு ஏற்கனவே ஆண்டுக்கு .17,000 கோடி ரூபாய் செலவிடுகிறது.
பஞ்சாப் அரசு தேர்தல் வாக்குறுதியின்படி மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ 1,000 வழங்க முடிவு செய்தால், அதற்கு ஆண்டுக்கு ரூ 12,000 கோடி கூடுதலாக செலவாகும். அதாவது, மாநிலத்தின் வருவாயில் 50 முதல் 60 சதவிகிதம் இலவச திட்டங்களுக்கும் மானியங்களுக்கும் செலவிடப்படும் என்று ரஞ்சித் குமன் கூறினார்.
கடனை அடைக்க அரசு தனது வருமானத்தில் 45 சதவிகிதத்தை செலவிட வேண்டியுள்ளது. இது தவிர, அரசு ஊழியர்களுக்கு, இந்த வருமானத்தில் இருந்து சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். வளர்ச்சிப் பணிகளுக்கு பணம் மிஞ்சுவதில்லை. எனவே அரசு கடன் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாநில அரசின் கடன்சுமை அதிகரித்து பொருளாதார நெருக்கடியும் அதிகரிக்கிறது.
ஒரு காலத்தில் பணக்கார மாநிலம் என்று அழைக்கப்பட்ட பஞ்சாப் இப்போது அந்த நிலையில் இல்லை என்று ரஞ்சித் குமன் தெரிவிக்கிறார். "எங்கள் தனிநபர் வருமானம் 28 மாநிலங்களில் 19 வது இடத்தில் உள்ளது. நாங்கள் இனி பணக்காரர்கள் இல்லை."என்கிறார் அவர்.
பல மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சில நாடுகளைவிட அதிகம்.
இந்தியாவில் பல மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பல நாடுகளை விட அதிகமாக உள்ளது. உதாரணமாக மகாராஷ்டிராவை எடுத்துக் கொள்வோம். 2021 ஆம் ஆண்டில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 32.24 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, அதாவது 430 பில்லியன் டாலர்கள். இது பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான 310 பில்லியன் டாலர்களை விட அதிகம்.
இந்தியாவின் எல்லா மாநிலங்களையும் ஒப்பிடுபோது மகாராஷ்டிராவின் பொருளாதாரம் மிகப்பெரியது. மறுபுறம் தமிழ் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி இலங்கையை விட மூன்று மடங்கு அதிகம்.
மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தனி நாடுகளாக இருந்தால், அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உலகின் பல நாடுகளை விட அதிகமாக இருக்கும்.
கடன் சுமை மற்றும் வளர்ச்சி விகிதம் குறைவதால் பல மாநிலங்களின் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்த மாநிலங்களின் மோசமான பொருளாதாரம் குறித்து பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பஞ்சாப் தவிர, கர்நாடகா, கேரளா, ஜார்கண்ட், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் போன்ற 20க்கும் மேற்பட்ட மாநிலங்கள் அதிகரித்து வரும் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மாநிலங்களின் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
2016 ஆம் ஆண்டில், நரேந்திர மோதி அரசு, நிதி பொறுப்பேற்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) சட்டத்தை மறுஆய்வு செய்ய என்.கே.சிங் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
குழு 2017 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது அதன் மொத்தக்கடன் 2023 க்குள் 20 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று பரிந்துரைத்தது.
ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, மாநிலங்களின் மொத்த கடன்-ஜிடிபி விகிதம், 2022 மார்ச் இறுதியில் 31 சதவிகிதமாக இருந்தது. 2022-23 இல் அடைய வேண்டிய இலக்கான 20 சதவிகிதத்தை விட இது அதிகமாக இருப்பது, கவலை அளிக்கிறது.
2022-23ல் கடன்-ஜிடிபி விகிதம் 33.3 சதவிகிதமாக இருக்கும், அதன்பின் படிப்படியாக குறைந்து 2025-26க்குள் 32.5 சதவிகிதமாகக் குறையும் என்று15வது நிதி கமிஷனின் மதிப்பீடு தெரிவிக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் மிகஅதிக மொத்த நிலுவை கடன்களை அதாவது 56.6%, கடனை கொண்டுள்ளது என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பஞ்சாப் 53.3 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. குஜராத் (21.4%) மற்றும் மகாராஷ்டிரா (20.4%) மட்டுமே 20 சதவிகித இலக்கின் அருகில் உள்ள இரண்டு பெரிய இந்திய மாநிலங்கள்.
பெருந்தொற்று
கொரோனா மாநில அரசுகளின் பொருளாதாரத்தை கணிசமாக பாதித்துள்ளது என்று இன்ஸ்டிடியூட் ஃபார் பாலிசி ரிசர்ச் ஸ்டடீஸின் பொருளாதார வல்லுநர்கள் சுயாஷ் திவாரி மற்றும் சாகேத் சூர்யாவும், 2021 நவம்பரில் தங்கள் சிறப்பு ஆய்வுக் கட்டுரையில் கூறியுள்ளனர்.
2019-20 ஆம் ஆண்டின் பொருளாதார மந்தநிலை, மாநிலங்களின் வருவாயை பாதித்தது. இதனால், அதிக கடன் வாங்க வேண்டிய நிலையும், அதே சமயம் செலவுகளை குறைக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது என்று இந்த பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த ஆண்டு, அதாவது 2020-21ல், கொரோனா இதை மேலும் மோசமாக்கியது. பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவந்தால், வருவாயில் ஏற்படக்கூடிய இழப்பை எப்படிக் குறைக்கலாம் என்று மத்திய, மாநில அரசுகள் திட்டமிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், மாநில மின் விநியோக நிறுவனங்களின் மோசமான நிதி நிலைமை மாநில அரசுகளுக்கு கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.
சுகாதாரத்துக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், உள்ளாட்சி அமைப்புகளின் நிதியை மேம்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது என்று 15வது நிதிக்கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
மானியம்
மாநிலத்தில் மானியங்கள் மற்றும் இலவச வசதிகளின் போக்கு, ஒரு நாள் அதன் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தனது பேச்சை மீண்டும் பஞ்சாப் பக்கம் திருப்பிய ரஞ்சித் குமன் கூறுகிறார்.
இப்போதெல்லாம் எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு முன் பல வசதிகளை மிகக் குறைந்த விலையில் அல்லது இலவசமாக வழங்குவதாக வாக்குறுதி அளிக்கின்றன. ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதிகளை அவை நிறைவேற்ற வேண்டும்.
மாநிலங்களின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் மானியங்கள் மற்றும் இலவச வசதிகள் என்றும், அதன் பிறகு மாநிலங்களின் வளர்ச்சிக்கு பணம் மிஞ்சுவதேயில்லை என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இலவச வசதிகள் மற்றும் மானியங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு இடையே போட்டி தொடங்கியுள்ளது. இது மாநிலங்களின் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று மும்பையை மையமாகக் கொண்டு பொருளாதார விஷயங்களைப் பற்றி எழுதும் சாய் பராட்கர் சுட்டிக்காட்டுகிறார்.
மாநிலங்களின் மோசமான நிலைக்கு மாநிலங்களே காரணம் என்று வாஷிங்டனில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் இந்திய வம்சாவளி பொருளாதார நிபுணர் தேவேஷ் கபூர் கூறுகிறார்.
"மாநில அரசுகள் நிதி ரீதியாக திவாலாகாவிட்டாலும், அவை மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அவை வருவாயை அதிகரிக்க விரும்பவில்லை. ஆனால் மானியங்களைச் சார்ந்து இருக்க விரும்புகின்றன. உண்மையான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவைகளிடம் பணம் இல்லை. பெருந்தொற்றின் இரண்டாவது அலை நமது சுகாதார அமைப்பின் மோசமான நிலையை நமக்கு தெளிவாகக்காட்டியது," என்று பிபிசியிடம் பேசிய அவர் குறிப்பிட்டார்.
"இவை நெருக்கடியில் இருப்பதற்குக்காரணம், மாநிலங்கள் சுகாதார வசதிகளில் முதலீடு செய்யாததுதான். சுகாதார சேவை மாநில அரசின் கீழ் வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்," என்கிறார் அவர்.
வளர்ச்சித் திட்டங்களுக்கு மாநில அரசுகளிடம் பணம் இல்லாதபோது, உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் செல்வதாக சொல்கிறார்கள்.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, உலக வங்கி இந்தியாவின் பல மாநிலங்களுக்கு உதவுகிறது. அதன்படி 28 பில்லியன் டாலர்கள் உதவியுடன் 127 திட்டங்கள் நடந்து வருகின்றன.
மாநிலங்களுக்கு தேவையான பொருளாதார சீர்திருத்தங்கள்
நடுத்தர காலத்தில் மாநில அரசுகளின் நிதி நிலையில் முன்னேற்றம் என்பது மின் துறையில் சீர்திருத்தங்களைப் பொருத்தது என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. வருவாய் ஈட்டுவதற்கான பல்வேறு மாதிரிகள் மற்றும் ஆக்கப்பூர்வமான வழிகளை மாநிலங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
பஞ்சாப் அரசுக்கு வருமானம் ஈட்டுவதற்கான பல வழிகளைக் கூறியிருப்பதாகவும், அதன் மூலம் மாநில அரசு தனது வருமானத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைச் சேர்க்க முடியும் என்றும் பொருளாதார நிபுணர் ரஞ்சித் குமன் கூறுகிறார்.
"பஞ்சாபின் கருவூலத்தில் தனித்தனியாக வரி விதிக்காமல் 28,500 கோடி ரூபாய் சம்பாதிக்கலாம். இந்த பரிந்துரைகள் இப்போது அரசு ஆவணங்களின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. அதில் கூடுதல் ரூபாய் சம்பாதிக்கக்கூடிய ஆறு-ஏழு துறைகள் பற்றிய விவரங்களை நான் கொடுத்துள்ளேன்."
மத்திய அரசின் உதவி
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மேலும் உதவ வேண்டும். மாநில அரசுகளின் வருவாயை வலுப்படுத்த நிதி ஆயோக், நிதி பரவலாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று சாய் பரத்கர் கூறுகிறார்.
மாநிலங்கள் வரி வசூலை மேம்படுத்தி இந்தப் பணத்தை சரியான இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்கிறார் ரஞ்சித் குமன்.
மத்திய அரசின் பொருளாதார நிலை மற்றும் அதன் கொள்கைகள் மீது மக்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் மாநில அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் கண்டுகொள்ளாமல் விடுகிறார்கள் என்று பல பொருளாதார நிபுணர்கள் வாதிடுகின்றனர். மானியங்கள், இலவச வசதிகள் வழங்குவதைப் பொருத்த வரையில், மத்திய அரசும் பல ஆண்டுகளாக இதைத்தான் செய்து வருகிறது என்பதும் உண்மை.
2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் தேசிய கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 90.6 சதவிகிதமாக இருந்தது.
நாட்டின் தேசியக் கடன் என்பது நாட்டின் அரசு கடனாகப் பெற்று இன்னும் திருப்பிச் செலுத்தாத பணம்.
அரசு செலவுகளின் அதிகரிப்பால் தேசிய கடன் ஏற்படுகிறது. இது பட்ஜெட்டில் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது. உலகின் பல வளர்ந்த நாடுகளின் தேசியக் கடன் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. 2021 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் தேசியக் கடன் 31 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்