ஐந்து மாநில தேர்தல்: பெண்கள் ஏன் நரேந்திர மோதியின் பா.ஜ.கவுக்கு அதிகமாக வாக்களிக்கின்றனர்?

    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பது பிரபலமான வாக்கியம்.

ஆனால், இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு பின்னால் லட்சக்கணக்கான பெண்கள் இருக்கிறார்கள் என்று சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

சமீபத்தில் நடந்த ஐந்து மாநிலங்கள் தேர்தலில் நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. அதில், பிரேசில் நாட்டை விட அதிகமான மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசமும் அடங்கும். இது குறித்து நடந்த இரண்டு ஆய்வுகளில், ஆண்களைவிட பெண்களே பா.ஜ.கவுக்கு அதிகமாக வாக்களித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையம் பொதுத் தேர்தல்களில் பாலினத்தின் அடிப்படையில் வாக்காளர்களின் எண்ணிக்கையை பிரிக்க தொடங்கியது. அதிலிருந்து, தேசிய அளவில் அதிகமான பெண்கள் எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தனர்.

ஆனால், 2019 ஆம் ஆண்டில், முதன்முறையாக, அதிகமான பெண்களின் வாக்குகளைப் பெற்ற கட்சியாக, பாஜக மாறியது.

இப்போது, பெரும்பாலான இந்திய அரசியல் கட்சிகளைப் போலவே பா.ஜ.கவிலும் பெண்ணியவாதிகள் குறைவாகவே உள்ளனர். மேலும், பல பெண்கள் விரும்பாத கட்சியாக பாஜக உள்ளது என்பது உலக பார்வையாக உள்ளது.

மேலும், அக் கட்சித் தலைவர்கள் ஆணாதிக்க கருத்துகளை கூறுவது அவ்வப்போது செய்திகளில் அடிப்படும்.

அக்கட்சி ஆளும் சில மாநிலங்களில், பாலியல் வன்முறை வழக்குகளை மோசமாகக் கையாளப்படுவது குறித்து சர்வதேச ஊடகங்களில் செய்திகளாக வெளியாகும்.

மேலும், அரசின் சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான மிக நீண்ட காலப் போராட்டம், பெண்களால் நடத்தப்பட்டன.

ஆனால், இதையும் மீறி தற்போது அதிகமான பெண்கள் பாஜகவுக்கு வாக்களிப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அப்படியெனில், பாஜக எப்படி இந்தியப் பெண்களின் விருப்பமான கட்சியாக மாறியது?

"நரேந்திர மோதியால் தான்" என்கிறார் டெல்லியைச் சேர்ந்த ஆய்வுக் கழகமான, செண்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சோசைசிட்டிஸைச் சேர்ந்த (சிஎஸ்டிஎஸ்) சஞ்சய் குமார்.

"பெண்களை ஈர்க்கும் கட்சியாக மாறியது திடீரென்று நடந்த ஒன்றல்ல. அதில் நிச்சயம் நரேந்திர மோதி ஒரு காரணியாக இருக்கிறார் - முக்கிய காரணி" என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்த விவகாரம் குறித்து, 'தி நியூ பிஜேபி' என்ற தனது சமீபத்திய புத்தகத்தில் விரிவாக ஆராய்ந்திருக்கிறார், அரசியல் ஆராய்ச்சியாளரும், எழுத்தாளருமான நளின் மேத்தா. 1980 ஆம் ஆண்டு மகளிர் பிரிவை உருவாக்கிய போது கட்சி பெண்களை அணுக தொடங்கியது என்று அவர் கூறுகிறார்.

"பாஜகவுக்குள் அப்போது சில முக்கியமான, செல்வாக்கு மிக்க பெண் தலைவர்கள் இருந்தனர். அது பெண்கள் சார்ந்த பிரச்னைகளில் குறிப்பிடத்தக்க வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் பல தசாப்தங்களுக்கு பிறகும் பல பெண்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை. அக்கட்சி பெரும்பாலும் ஆணாதிக்கவாதிகள் கொண்ட கட்சியாக இருந்தது, பெண்களிடம் குறைந்த அளவிலான கவனத்தையே கொண்டிருந்தது".

2019 ஆம் ஆண்டு தேசிய அளவில் ஏற்பட்ட பெரிய மாற்றம், குஜராத்தின் முதலமைச்சராக நரேந்திர மோதி மீண்டும் பதவியேற்க முயற்சித்த 2007 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கியதாக நாம் பார்க்கலாம் என்று அவர் கூறுகிறார்.

நரேந்திர மோதி அதிகமாக பெண்களை குறிப்பிட்டு பேசியது இதுவே முதல்முறை என்று மேத்தா கூறுகிறார்.

தேர்தல் பேரணிகளில், மோதி அவ்வப்போது 56 அங்குலம் மார்பளவு பற்றி பேசுவார். இந்தி பேசும் மாநிலங்களில் உடல் வலிமையானவர்கள் பயன்படுத்தும் பொதுவான ஆண்பால் பெருமை இது. வலுவான தேசியவாத அரசியலுக்கு பெயர் பெற்ற மோதி அந்த வார்த்தைக்கு சொந்தக்காரர் ஆனார்.

"ஒவ்வொரு முறையும் அவர் அதைக் குறிப்பிடும்போது, பார்வையாளர்களிடமிருந்து, குறிப்பாக பெண் வாக்காளர்கள் அமர்ந்திருக்கும் பகுதியிலிருந்து ஒரு சத்தம் கேட்கும். மேலும் அவரது பேரணிகளில் பெரும்பாலும் ஆண்களை விட பெண்களே அதிகம் இருந்தனர். அவர் அவர்களை நோக்கி, 'நான் உங்கள் சகோதரர், நான் உங்கள் மகன், எனக்கு வாக்களியுங்கள், உங்கள் நலன்கள் குறித்து நான் கவனித்துக்கொள்வேன் என்பார்," என்று மேத்தா கூறுகிறார்.

ஆனால் 'வலுவான ஆண்' என்ற உக்தியை குறிப்பிட்ட காலம் வரைதான் சொல்ல முடியும். எனவே அனைத்தையும் சரி செய்யும் ஆல்ஃபா ஆண் என்ற தோற்றத்துடன் பெண்கள் முன்னேற்ற திட்ட உக்தியையும் இணைத்தார். இது அவருக்கு 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் வெற்றி பெற உதவியது.

2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றபோது, அவர் இந்த உத்தியை கச்சிதமாக வளர்த்து இருந்தார். அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமராக நாட்டுக்கு அவர் ஆற்றிய முதல் உரையில், பெண் சிசுக்கொலையை எதிர்த்தும், பாலியல் வன்முறைகளை கண்டித்தும் பேசினார். மேலும், மகன்களை நல்ல முறையில் வளர்க்கவும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஒரு பிரதமராக , நரேந்திர மோதி "மாற்றத்தின் மறு உருவமாக" மாறினார். அவர் பொதுக் கூட்டங்களிலும், தேர்தல் பேரணிகளிலும், பெண்களின் பிரச்னைகளைப் பற்றி தொடர்ந்து பேசினார். 2014 முதல் 2019 வரையிலான அவரது உரைகளில், முதல் ஐந்து தலைப்புகளில் பெண்கள் அதிக முறை இடம்பெற்றுள்ளனர்.

ஆனால் பாஜக மோதிக்கு கிடைக்கும் ஆதரவை மட்டுமே பயன்படுத்துவதைத் தவிர, அரசியலில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவத்தையும் அளித்து வருகிறது. 2019 ஆம் ஆண்டில், பாஜக மற்ற எந்த கட்சிகளையும் விட அதிகமான பெண் வேட்பாளர்களை நிறுத்தியது. மேலும், முன்பு இருந்த அரசுக்களை விட அதிக பெண் அமைச்சர்களை நியமித்தது. அது மட்டுமல்லாமல், கட்சியின் நிர்வாக கட்டமைப்பை மறுசீரமைத்தது. பெண்களுக்கான ஒதுக்கீட்டைக் கொண்டு வந்து, கிராமப்புற மற்றும் ஏழ்மையான பின்னணியில் இருந்து அதிகமான பெண்களை உள்ளடக்கிய வகையில், அதன் சமூக அடிப்படை தளத்தை விரிவுபடுத்தியது.

பாஜகவின் பெண் ஆதரவாளர்களில் கணிசமான பகுதியினர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், கட்சியின் நலத்திட்டங்களும் அவர்களைக் குறிவைத்துள்ளதாக மேத்தா கூறுகிறார்.

ஆணாதிக்கத்தில் ஆழமாக வேரூன்றிய நாட்டில் பெண்களுக்கு வெகுசில சொத்துரிமைகளே உள்ள நிலையில் 2014 மற்றும் 2019 க்கு இடையில் அனுமதி தரப்பட்ட 1.7 மில்லியனுக்கும் அதிகமான ஏழைகளுக்கான வீடுகளில் 68% பெண்களின் பெயரில் தனியாகவோ அல்லது ஆண்களுடன் கூட்டாகவோ பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாஜக அரசு பல்லாயிரக்கணக்கான வீட்டுக் கழிப்பறைகளைக் கட்டியது. மேலும் லட்சக்கணக்கான பெண்கள் வங்கிக் கணக்குகளைத் திறக்க உதவியது. இதனால் அவர்கள் ஓய்வூதியம், மானியங்கள் மற்றும் பிற சலுகைகளை நேரடியாகப் பெற முடியும்.

"தொட்டிலில் இருந்து கல்லறை வரை பெண்களைக் கவனித்துக் கொள்ளும் நலத்திட்ட அமைப்பை நாங்கள் உருவாக்குகிறோம் என்று மோதி அவ்வப்போது கூறுவதைக் மக்கள் கேட்டிருக்கின்றனர். திட்டங்கள் மிகவும் சரியானவை அல்ல, ஆனால் அவை நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்துகின்றன" என்று மேத்தா கூறுகிறார்.

"இதன் விளைவாக, பல பெண் வாக்காளர்கள் பிற கட்சியை காட்டிலும் சிறந்த கட்சியாக பார்க்கிறார்கள்."

ஆனால், பாலின அடிப்படையிலான இந்த ஆதரவு, ஒரு கட்சியின் தனிநபர் ஆளுமையால் இயக்கப்படும்போது அது குறுகிய காலத்திற்கே நீடிக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரும் அசோகா பல்கலைக்கழகத்தின் ஊடக ஆய்வுத் தலைவருமான மாயா மிர்ச்சந்தானி.

" நரேந்திர மோதி மிகவும் வசீகரமானவர். அவரை எளிமையான வாழ்க்கை நடத்தும் எளிய மனிதராகப் பார்க்கும் அவரது ஆதரவாளர்களிடம் மிகுந்த அனுதாபத்தை பெற்று வருகிறார். அவர்களுக்கு அவர் வசீகரமானவராக உள்ளார். ஏனென்றால் அவர் கட்டுக்கோப்பான உடல்நிலையுடன் இருக்கிறார். அவர் ஆடம்பரமாக இல்லை.அவர் பொது வெளியில் வரும்போது மிகவும் மாசற்ற மனிதராக இருக்கிறார். ஆனால் அவருக்கு ஏற்கனவே 71 வயது ஆகிறது. வயது அதிகரிக்க இது எல்லாம் மாறிவிடும்." என்கிறார்.

இந்த நேரத்தில் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகளை, அவரது இந்த பாணி சமாளிக்குமா என்பதையும் பார்க்க வேண்டும்.

"வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் அதிகரிப்பு, எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த நேரத்தில், அவரது ஆதரவாளர்களை ஒன்றாக வைத்திருப்பது மத அடையாள அரசியல்தான். ஆனால், இந்த மத கலவரம் கையை மீறி போனாலோ, பொருளாதாரத்தை சரியாக வழிநடத்த தவறினாலோ, குடும்பம் நடத்தும் பெண்கள்தான் அவருக்கு எதிராகத் திரும்புவார்கள், "என்று அவர் கூறுகிறார்.

"அத்தகைய திருப்புமுனை இன்னும் வரவில்லை, ஆனால் அது வரக்கூடும்"

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :