பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேருக்கு பொருந்துமா?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட மற்ற ஆறு பேரின் கதி என்ன?

பட மூலாதாரம், TWITTER

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த ஏழு பேரில் பேரறிவாளன் விடுவிக்கப்பட்டுவிட்ட நிலையில், மற்ற ஆறு பேரின் நிலை என்ன?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு தண்டனைக் காலத்தை அனுபவித்து வந்த ஏழு பேரில் பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் தற்போது விடுவித்துள்ளது. மீதமுள்ள நளினி, சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் தற்போது சிறையில் உள்ளனர்.

சிறையில் இருந்த ஏழு பேரும் ஒரே குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டிருந்த நிலையில், பேரறிவாளனின் விடுதலையை அடுத்து இவர்களது நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. பேரறிவாளன் விடுதலைக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது, "தீர்ப்பின் முழு விவரமும் வரவில்லை. அது வந்த பிறகு சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்" என்று தெரிவித்தார்.

தூக்கு தண்டையிலிருந்து ஆயுள் தண்டனை

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து 2014 பிப்ரவரி 18ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அடுத்த நாளே ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவைகூடி, சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுவிக்க முடிவுசெய்தது.

குற்ற விசாரணைச் சட்டம் 432ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களை விடுவிக்க முடிவெடுத்து இருப்பதாகவும் இது தொடர்பாக மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் தனது கருத்தைத் தெரிவிக்கவில்லையென்றால், அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தார் ஜெயலலிதா.

ஆனால், இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தை அணுகி தடை ஆணை பெறப்பட்டது. இந்த வழக்கில் 2018 செப்டம்பர் 6ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் குற்ற விசாரணைச் சட்டம் 432ன் கீழ் விடுவிக்க முடிவெடுத்தது தவறு என்றும் விரும்பினால் 161வது பிரிவின் கீழ் விடுவிக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.

இதற்கு மூன்று நாட்கள் கழித்து செப்டம்பர் 9ஆம் தேதி கூடிய எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை 161வது பிரிவின் கீழ் இந்த ஏழு பேரையும் விடுவிப்பதாக பரிந்துரைத்து, அதை செப்டம்பர் 11ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவேதும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், சில தகவல்களைக் கேட்டு பேரறிவாளன் தடா நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்கிறார். இதற்கு நீதிமன்றம் மறுக்கவே, உச்ச நீதிமன்றத்தில் அதை வழக்காகக் தொடுக்கிறார். அதில் இடையீட்டு மனுவாக தனது விடுதலையையும் கோருகிறார்.

அந்த வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் மே 18ஆம் தேதியன்று பேரறிவாளனை விடுவித்துத் தீர்ப்பளித்துள்ளது.

ஆறு பேரையும் விடுவிக்க இந்தத் தீர்ப்பே போதுமா?

இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மீதமுள்ள ஆறு பேருக்கும் பொருந்துமா, அப்படிப் பொருந்தினால், தமிழ்நாடு அரசே அவர்களை விடுவித்துவிடலாமா அல்லது ஆறு பேரும் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற வேண்டுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

"இந்த ஆறு பேரையும் விடுவிக்க உச்ச நீதிமன்றம் தற்போது அளித்துள்ள தீர்ப்பே போதுமானது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு மாநில அரசு முடிவெடுப்பதை ஆளுநர் தடுக்க முடியாது. தற்போது நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், மாரு ராம் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தத் தீர்ப்பு 1980ல் ஐந்து நீதிபதிகளால் வழங்கப்பட்டது.

இந்திய உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய உச்சநீதிமன்றம்

அந்தத் தீர்ப்பின்படி மாநில அரசின் முடிவை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டியதில்லை. இரண்டும் வெவ்வேறு அதிகாரங்கள் என்பதை அந்தத் தீர்ப்பில் நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆகவே அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா என்ற கேள்விக்கு நீதிமன்றம் விடையளித்துவிட்டது. ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்தான்; அமைச்சரவையின் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதே தவறு என நீதிமன்றம் கூறிவிட்டது.

அடுத்ததாக விவாதிக்க வேண்டிய விவகாரம், பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு மற்ற ஆறு பேருக்கும் பொருந்துமா என்பது. நிச்சயமாகப் பொருந்தும். ஒரு வழக்கில் ஆறு, ஏழு பேர் சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில், ஒரே ஒருவர் மட்டுமே நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றால் அந்த நிவாரணம் மற்ற ஆறு பேருக்குமே பொருந்தும்.

தமிழ்நாடு அமைச்சரவை ஏழு பேரையும் விடுவிக்க முடிவுசெய்துதான் பரிந்துரையை அனுப்பியது. ஆளுநர் முடிவெடுக்காத நிலையில் பேரறிவாளன் நீதிமன்றத்தை நாடி நிவாரணத்தைப் பெற்றிருக்கிறார். ஆகவே அந்த நிவாரணம் மற்ற ஆறு பேருக்குமே பொருந்தும். ஏழு பேரையும் விடுவிக்க அமைச்சரவை முடிவெடுத்த நிலையில், ஒருவரை விடுவித்துவிட்டு, மற்றவர்களை விடுவிக்க முடியாது எனக் கூற முடியாது" என்கிறார் நளினி, முருகன், சாந்தன் ஆகியோரின் வழக்கறிஞரான புகழேந்தி.

ஆனால், தமிழ்நாடு அரசு தானாக ஆறு பேரையும் விடுவிக்கவில்லையென்றால் அவர்களது நிலை என்ன? "சட்டத்தின் முன்பாக அனைவருமே சமம். ஆகவே, சட்டரீதியாக நிவாரணமளிக்கப்பட்ட ஏழு பேரில் ஒருவர் விடுவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி அரசியல் சாசனத்தின் பிரிவு 14ன்படி மற்ற ஆறு பேரும் உயர் நீதிமன்றத்தையோ, உச்ச நீதிமன்றத்தையோ அணுக முடியும்.

அந்த நிலைக்கு அவர்களைத் தள்ளாமல் தமிழ்நாடு அரசே அவர்களை விடுவிக்குமென நம்புகிறோம்," என்கிறார் புகழேந்தி.

பேரறிவாளன்

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு, பேரறிவாளன்

ஆளுநர், குடியரசு தலைவரின் அதிகாரங்கள்

ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் வேறு விதமான கருத்தை முன்வைக்கிறார்.

"உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மிக விரிவான பொருளைப் பேசுகிறது. ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோரின் அதிகாரங்களை வரையறுக்கிறது. ஏழு பேரையும் விடுவிக்க மாநில அமைச்சரவை முடிவெடுத்த பிறகும், ஆளுநர் செயல்பட்ட விதத்தை இது கேள்வி கேட்கிறது. ஆளுநர் பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்காததால், உச்ச நீதிமன்றமே முடிவெடுத்திருக்கிறது.

ஆனால், மாநில அமைச்சரவை ஏழு பேரையுமே விடுவிக்கத்தான் பரிந்துரை செய்திருக்கிறது என்பதால், தற்போது ஆளுநர் அந்தப் பரிந்துரையை ஏற்க வேண்டும். இனியும் தாமதம் செய்ய முடியாது. ஏனென்றால், அந்தத் தாமதத்தையும் கேள்வியெழுப்ப முடியுமென நீதிமன்றம் கூறிவிட்டது.

மேலும், ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதையும் தீர்ப்பில் நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆகவே, ஆளுநர் மாநில அமைச்சரவையின் பரிந்துரையில் உடனடியாகக் கையெழுத்திட வேண்டும். அதுதான் அவர் முன்பாக உள்ள ஒரே வாய்ப்பு. அப்படி அவர் கையெழுத்திட்ட பிறகு, ஆறு பேரையும் மாநில அரசு விடுவிக்கலாம்" என்கிறார் ஹரி பரந்தாமன்.

மாநில அரசைப் பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது. தற்போது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வைத்தே விடுவிப்பது அல்லது ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று விடுவிப்பது அல்லது இந்த ஆறு பேரின் சார்பில் மீண்டும் நீதிமன்றத்தை அணுகி ஒப்புதலைப் பெறுவது ஆகிய வாய்ப்புகளே மாநில அரசின் முன்பாக இருக்கின்றன. அடுத்த சில நாட்களில் ஆளுநரும் சரி, மாநில அரசும் சரி ஒரு முடிவை எடுத்தாக வேண்டும்.

காணொளிக் குறிப்பு, பேரறிவாளன் விடுதலை: 31 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வரும் சிறைவாசம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: