பேரறிவாளன் விடுதலைக்கு பின் வீட்டில் கொண்டாட்டம்: "இனிதான் கொஞ்சம் காற்றை நான் சுவாசிக்க வேண்டும்"

பட மூலாதாரம், TWITTER
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் வீட்டில் நெகிழ்ச்சியும், கொண்டாட்டமும் சூழ்ந்து கொண்டது. பறையடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பேரறிவாளன். குடும்பத்தினர் இனிப்பை பறிமாறி மகிழ்ச்சியில் கலந்தனர்.
பேரறிவாளன் விடுதலைக்காக ஓயாத போராட்டம் நடத்திய அவரது தாய் அற்புதம் அம்மாள், தந்தை குயில்தாசன் உள்ளிட்ட குடும்பத்தினர் இந்த தீர்ப்பால் நெகிழ்ச்சி அடைந்தனர்.
தமது தாய் குறித்து பேசிய பேரறிவாளன் அவர், மக்சிம் கார்க்கியின் 'தாய்' போன்றவர் என்று தெரிவித்தார்.
ரஷ்ய எழுத்தாளர் மக்சிம் கார்க்கி 1917ம் ஆண்டு நடந்த ரஷ்யப் புரட்சிக்கு முன்பாக அந்நாட்டில் தொழிலாளர்கள் வாழ்க்கை எவ்வளவு துயரம் நிறைந்ததாக இருந்தது என்பதையும், அவர்கள் மத்தியில் போராட்டம் எப்படி வேர்கொண்டது என்பதையும் விவரிக்கும் விதமாக எழுதிய நாவல் 'தாய்'.
அந்த நாவலின் முக்கியப் பாத்திரமான பாவெல் விலாசவ் ஒரு தொழிலாளி. தொழிலாளர் போராட்டத்தை அவன் முன்னெடுத்தபோது அவனது தாய் பெலகேயா நீலவ்னா அவனுக்கு எப்படி உதவியாக அயராது வேலை செய்தார் என்பதை மையமாக வைத்து அந்த நாவல் எழுதப்பட்டது. 'மார்க்சிம் கார்க்கியின் தாய்' என்று குறிப்பிட்ட பேரறிவாளன் தம் தாய் அற்புதம் அம்மாளை பெலகேயா பாத்திரத்தோடு ஒப்பிட்டுள்ளார்.
தீர்ப்பு வெளியான நிலையில், ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் இல்லத்தில், அவருடைய உறவினர்கள் கண்ணீர் மல்க ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர். பேரறிவாளனின் தாயார், சகோதரிகள் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
"மனிதநேயம் உள்ள அனைவருக்கும் நன்றி"
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளனின் தந்தை, "மனிதநேயம் உள்ள அனைவருக்கும் நன்றி" என தெரிவித்தார். பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "எல்லாம் அம்மாவுக்குத்தான் (பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள்) தெரியும்" என பதிலளித்தார்.
பின்னர், பேரறிவாளனும் அவருடைய தாயார் அற்புதம் அம்மாளும் வீட்டிலிருந்து வெளியில் வந்து ஊடகங்களை சந்தித்தனர். முன்னதாக, தன் விடுதலையை வலியுறுத்தி தற்கொலை செய்த செங்கொடி, நீதிபதி கிருஷ்ணய்யர் ஆகியோரின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பேரறிவாளன் தன் தாயார் அற்புதம் அம்மாள் மற்றும் தந்தை குயில்தாசனுக்கு இனிப்புகளை வழங்கினார்.
"நன்றி சொல்வதை தவிர வேறு எதையும் சொல்ல முடியவில்லை"
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம் அம்மாள், "என்ன சொல்றது, என்ன பேசுறது என்கிற தடுமாற்றத்தால் கடந்த சில தினங்களாக ஊடகங்களை சந்திக்க முடியவில்லை. எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 32 ஆண்டுகால போராட்டம் இது. பேரறிவாளனை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய சிறை வாழ்க்கையை உட்கார்ந்து ஒரு நொடி யோசித்தால் தான் வலி, வேதனை புரியும். அதனை என் மகன் கடந்துவந்துள்ளார்.

பட மூலாதாரம், ARUN SANKAR/AFP/GETTY IMAGE
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. என் மகன் விடுதலைக்காக குரல் கொடுத்த முகம் தெரியாத நபர்களுக்கும் தலைவர்களுக்கும் நன்றி. நன்றி சொல்வதை தவிர வேறு எதையும் சொல்ல முடியவில்லை" என்றார்.
"மக்சிம் கார்க்கியின் 'தாய்' போன்றவர் என் அம்மா"
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், "'அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும்" என்பது குறள். கெட்டவர்கள் நன்றாக வாழ்வதையும், நல்லவர்கள் வீழ்த்தப்படுவதையும் இந்த உலகம் நினைத்து பார்க்கும் என்பது இந்த குறளின் பொருள். 'செவ்வியான் கேடு' தான் என் சிறை வாழ்க்கை.
தமிழ்நாடு மக்கள் என் மீது அன்பு செலுத்தினார்கள். தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக என்னை நினைத்தார்கள். என் விடுதலையின் மூலக்காரணம் என் அம்மா. என் அம்மாவின் தியாகம், அவரின் போராட்டம் தான் இதற்கு காரணம்.
ஆரம்ப காலங்களில் நிறைய அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் அம்மா சந்தித்துள்ளார். நிறைய வேதனை, வலிகளை சந்தித்துள்ளார். அதையெல்லாம் கடந்து 31 ஆண்டுகள் இடைவிடாமல் போராடியுள்ளார். இதற்கு காரணம் எங்கள் பக்கம் இருந்த உண்மை, நியாயம். அதுதான் எங்களுக்கு வலிமையை கொடுத்தது.
மக்சிம் கார்க்கியின் 'தாய்' நாவலை நான் நான்கு முறை படித்திருக்கிறேன். சிறுவயதிலும் சிறைபட்ட போதும், தூக்கு தண்டனை வழங்கியபோதும் படித்திருக்கிறேன். ஒவ்வொரு காலத்திலும் அது ஒவ்வொரு உணர்வை தந்திருக்கிறது. ஒரு காலகட்டத்திற்கு பிறகுதான் அதனுடன் என் அம்மாவை நான் ஒப்பிட ஆரம்பித்தேன். இதனை நான் அம்மாவிடம் சொல்லியதில்லை. ஏனெனில், எங்களுக்குள்ளான இயல்பான உணர்வு போய்விடக் கூடாது என நினைத்தேன். இந்த நேரத்தில் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.

பட மூலாதாரம், @ArputhamAmmal
அம்மா மட்டுமல்லாமல், அப்பா, என் இரு சகோதரிகள், அவர்களுடைய கணவர்களும் காட்டிய அன்பும், பாசமும் தான் இவ்வளவு தூரம் என்னை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
இவ்வழக்கில் வீழ்ச்சியை சந்திக்கும் போதெல்லாம் நான் என் அம்மாவை காண்பதற்கு அஞ்சுவேன்.
அம்மாவும், என் தந்தையும் உயிருடன் இருக்கும்போதே நான் விடுதலை செய்யப்பட வேண்டும், நியாயம் வெல்ல வேண்டும் என நினைத்திருக்கிறேன்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் எல்லோரும் அவரவர்கள் சக்திக்குமீறி இதற்காக உழைத்துள்ளனர். நேரடியாக அவர்களை சந்தித்து நன்றி செலுத்த வேண்டும்.
"செங்கொடியின் தியாகம் அளப்பரியது"
இந்த வழக்கில் தலைவர்கள், மக்களின் ஆதரவை உருவாக்கியது செங்கொடியின் தியாகம்.
என் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்துவிட்டேன் என 2013-இல் வாக்குமூலமாக அளித்தவர் சிபிஐ அதிகாரி தியாகராஜன். இது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. கிருஷ்ணய்யர், கே.டி.தாமஸ் ஆகியோரின் குரல்களும் வலுப்படுத்தின. மூத்த நீதிபதியாக இருந்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கொடுத்தவர் கிருஷ்ணய்யர். அதுவும் என் விடுதலைக்குக் காரணம். எனக்காக அவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். அதில் மண்டியிட்டு கேட்டுக்கொள்வதாக கூறியிருந்தார்.

பட மூலாதாரம், @ArputhamAmmal
நான் நினைத்துக்கூட பார்க்க முடியாத மூத்த வழக்கறிஞர்கள் இதற்காக போராடினர்.
ஏறக்குறைய 6 ஆண்டுகளாக எவ்வித கட்டணத்தையும் எதிர்பார்க்காமல் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் எனக்காக வாதாடினார்.
அதுபோலவே தமிழ்நாடு அரசு தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்கள். மூத்த வழக்கறிஞர் ராகேஷ் த்விவேதியை வைத்து வாதாடினார்கள்.
"இனிதான் காற்றை சுவாசிக்க வேண்டும்"
ஊடகங்கள் இல்லையென்றால் இந்த உண்மை வெளிவந்திருக்காது. காவல்துறையை சேர்ந்தவர்களும் என் மீது அன்பு பாராட்டினார்கள்.
31 ஆண்டுகளாக இந்த சட்டப் போராட்டம் தான் மனதில் இருந்தது. இனிதான் நான் காற்றை சுவாசிக்க வேண்டும், கொஞ்சம் மூச்சுவிட வேண்டும். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்.
எதிர்காலம் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, குடும்பத்தினரிடம் பேசிவிட்டு சொல்கிறேன்.
மரண தண்டனை வேண்டாம் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை உள்ளவன், அதனை கருணை அடிப்படையில் சொல்லவில்லை, நீதிபதிகளே கூறியுள்ளனர்.
தீர்ப்பை நான் இன்னும் நான் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு தீர்ப்பு குறித்து கருத்து சொல்கிறேன். 31 ஆண்டுகால அனுபவமும் ஒரு பாடம் தான்" என தெரிவித்தார்.
விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












