தருமபுரம் ஆதீனம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் 10 ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட பல்லக்கில் சுமக்கும் நிகழ்வு

ஸ்ரீரங்கம் கோயில்

பட மூலாதாரம், Sri Rangam temple

படக்குறிப்பு, ஸ்ரீரங்கம் கோயில்
    • எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழ்

சமீபத்தில் தருமபுரம் ஆதீனத்தில் நடந்ததைப் போலவே, கடந்த காலங்களில் ஆலயங்கள், ஆதீனங்கள் சிலவற்றில் பல்லக்கில் ஒரு மனிதரை சுமந்து செல்லும் நிகழ்வு இடையில் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாகப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற ஒரு சர்ச்சையும் எதிர்ப்பும் ஏற்பட்டது.

தருமபுரம் ஆதினத்தில் நடைபெறும் பட்டினப் பிரவேசம் நிகழ்வில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமந்து செல்வது தமிழ்நாடு அரசால் இந்த ஆண்டு அனுமதிக்கப்படவில்லை.

திராவிடர் கழகத்தினரின் போராட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று இந்த ஆண்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதை ஆதரித்தும் எதிர்த்தும் தொடர்ந்து சர்ச்சையானது ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, அரசு தடை விதித்திருப்பதை மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் எதிர்க்கின்றனர். பாஜக, அதிமுக தலைவர்கள் தருபுரம் ஆதினத் தரப்புக்கு ஆதரவாகப் பேசுகின்றனர்.

ஆனால், பட்டினப் பிரவேசம் என்கிற சடங்கை எதிர்க்கவில்லை. மனிதரை மனிதர்கள் பல்லக்கில் தூக்கி சுமப்பதையே எதிர்ப்பதாகத் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற ஒரு சர்ச்சையும் எதிர்ப்பும் ஏற்பட்டது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

பிரம்மரத மரியாதையால் சர்ச்சை, போராட்டம்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி விழாவின் நிறைவில் அரையருக்கும் (நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பாடும் இறைத் தொண்டர்கள்) அதற்கு முந்தைய மாதம் கைசிக ஏகாதசி விழாவின் நிறைவில் பட்டருக்கும் (ஸ்தலத்தார்கள்) பிரம்மரத மரியாதை அளிக்கப்படும்.

பராசர பட்டர், வேதவியாச பட்டர் குடும்பத்தினரில் ஒருவருக்கு கைசிக ஏகாதசி விழா நிறைவிலும் அரையர் குடும்பத்தினர் ஒருவருக்கு வைகுண்ட ஏகாதசி விழா நிறைவிலும் கோயிலில் மரியாதை அளிக்கப்பட்டு, அங்கிருந்து பல்லக்கில் ஏறி, வீதியுலா சென்று, அவர்களின் வீட்டில் விட்டுவிடுவார்கள்.

இதற்கு, கடந்த 2011ம் ஆண்டு கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்தது. கோயில் வளாகத்தில் பெருமாளை, கடவுளை மட்டும் வணங்க வேண்டும். கோயில் வளாகத்தில் மனிதர்களை பல்லக்கில் தூக்கிச் செல்லக் கூடாது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் கோயில்

பட மூலாதாரம், Saravanan

படக்குறிப்பு, பல்லக்கில் செல்லாமல் நடந்து சென்ற பட்டர்

இதற்கு பிரம்மரத மரியாதை பெறும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், "கோயில் நிர்வாகம் எடுத்த முடிவிற்கு தடைவிதிக்க முடியாது'' என்று தீர்ப்பளித்தார். இதையடுத்து சில ஆண்டுகள் பிரம்மரத மரியாதை என்று சொல்லப்படும் நிகழ்வில் பல்லக்கில் தூக்கிச் செல்வது நடைபெறவில்லை.

ஆனால், கடந்த 2015ம் ஆண்டு இந்த மரியாதை பெறும் குடும்பத்தினர் விண்ணப்பித்ததை அடுத்து, கோயில் நிர்வாகம் அனுமதி அளித்து. இதையடுத்து கைசிக புராணம் படித்த பட்டரை அப்போது பல்லக்கில் சுமந்து சென்றனர்.

இதற்கு திராவிடர் கழகம், பெரியார் தத்துவ மையம், மகஇக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது இந்நிகழ்வு பெரும் சர்ச்சை மற்றும் விவாதத்தை ஏற்படுத்தியது. பல்லக்கில் ஏறிச் செல்லும் குடும்பத்தினர் சிலரும் இதை விரும்பவில்லை. இவற்றால், பிரம்மரதம் என்கிற பல்லக்கில் தூக்கிச் செல்லும் நிகழ்வு ஸ்ரீரங்கத்தில் கைவிடப்பட்டுள்ளது.

சட்டப்போராட்டத்தால் நிறுத்தம்

ஆனால், இது எளிதில் நடந்துவிடவில்லை. இதற்கு நீண்ட சட்டப்போராட்டமும் நடந்தது என்கிறார் அப்போது ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையராக இருந்த சி. ஜெயராமன். இது குறித்து பிபிசி தமிழிடம் அவர் கூறுகையில்,

"கோயிலுக்குள் ஒரு மனிதனை பல்லக்கில் சுமந்து செல்வது என்பது அங்கிருக்கும் பெருமாளையும் கடவுள்களையும் அவமதிக்கும் செயல். அதுமட்டுமின்றி, இது இடையில் வந்த நடைமுறை. ஒவ்வோர் ஆண்டும் கோயில் நிர்வாகத்தின் அனுமதி பெற்று பிரம்மரத மரியாதை நடத்தப்பட்டும் வந்தது.

அறநிலையத்துறை முன்னாள் இணை ஆணையர் சி.ஜெயராமன்

பட மூலாதாரம், Jayaraman

படக்குறிப்பு, அறநிலையத்துறை முன்னாள் இணை ஆணையர் சி.ஜெயராமன்

''என்னுடைய பணிக்காலத்தில் 2011ம் ஆண்டு அனுமதி கொடுக்கவில்லை. அனுமதி மறுக்க எனக்கு (இணை ஆணையருக்கு) அதிகாரம் இல்லை என்று நீதிமன்றத்திற்கு சென்றனர். அனுமதி மறுக்க அதிகாரம் இல்லை என்றால், அவரிடம் அனுமதி கேட்டு ஏன் விண்ணப்பித்தீர்கள் என்று நீதிமன்றம் கேள்வி கேட்டது. தேவை எனில், 'அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அல்லது ஆணையரிடம் மேல்முறையீடு செய்து கொள்ளலாம்' என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது.''

''இது எங்களின் பாரம்பரியம், உரிமை'' என்று மீண்டும் நீதிமன்றத்தை நாடினார்கள். ஆனால், நீதிமன்றம் கோயில் நிர்வாகத்தின் முடிவு சரிதான் என்று சொல்லி விட்டது. எனது பணிக்காலம் முழுவதும், இது நடைபெறவில்லை. ஆனால், வழக்கம் போல் அவர்களுக்கு பிற மரியாதை அளிக்கப்பட்டது. அளிக்கப்பட்டும் வருகிறது.''

பிரம்மரத மரியாதை என்றால் என்ன ?

''பிரம்மரத மரியாதை என்பது பல்லக்கில் சுமந்து செல்வது மட்டுமல்ல. சுமந்து செல்வது, பெருமாள் மாலை மரியாதை, சந்தன கரைசல் வழங்குவது, வெற்றிலைப் பாக்கு, தீப்பந்தம் பிடித்தல் ஆகிய 5 மரியாதைகளைக் கொண்டது.

இதில், பல்லக்கில் சுமந்து செல்வது மட்டும் நடைபெறவில்லை. கோயிலுக்குள் மனிதனை மனிதன் சுமக்க கூடாது என்று ஆணையாகவே பிறப்பிக்கப்பட்டது. அதுவே தொடர்கிறது,'' என்றார் சி. ஜெயராமன்.

போராட்டம் தொடர்ந்தது

பெரியார் சரவணன்

பட மூலாதாரம், Periyar Saravanan

படக்குறிப்பு, பெரியார் சரவணன்

இது குறித்து போராட்டம் நடத்திய பெரியார் தத்துவ மையத்தைச் சேர்ந்த பெரியார் சரவணன் பிபிசி தமிழிடம் கூறுகையில், "கோயில் இணை ஆணையர் பிரம்மரத மரியாதைக்கு கோயிலுக்குள் அனுமதி வழங்கவில்லை என்றதும் கோயிலுக்கு வெளியில், அதாவது கோயில் வளாகத்திற்கு வெளியில் பல்லக்கில் சுமந்து செல்கிறோம் என்றனர். கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம். வெளியில் நடப்பதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று கோயில் நிர்வாகம் தெரிவித்து விட்டது. இதையடுத்து கோயிலுக்கு வெளியில் இருந்து பிரம்ம ரதம் என்கிற பல்லக்கில் தூக்கிச் செல்ல முயற்சித்தனர்.''

'பல்லக்கை தவிர்த்து நடந்து சென்றனர்'

''பாரம்பரியம் என்கிற பெயரில் மனிதனை மனிதன் சுமப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று கூறி பல்வேறு அமைப்புனருடன் தொடர் போராட்டங்களை நடத்தினோம். கைது செய்யப்பட்டோம். நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தோம். கோயில் இணை ஆணையர் பணி நிறைவு பெற்று சென்ற பின், அறங்காவலர் குழு, நிர்வாகம் மாறியதும் மீண்டும் ஓர் ஆண்டு பல்லக்கில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதையும் எதிர்த்து போராட்டம் நடத்தினோம். இதையடுத்து பல்லக்கில் செல்வதை தவிர்த்து நடந்து செல்லத் தொடங்கினர். அதுவே தொடர்கிறது,'' என்றார்.

'இடையில் வந்த வழக்கம்'

இது குறித்து வைஷ்ணவ சம்பிரதாய சபா செயலாளர் அந்தநல்லூர் முரளி பிபிசி தமிழிடம் கூறுகையில், "கோயிலுக்குள் பெருமாள், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் உள்ளனர்.

எனவே வளாகத்தில் இருந்து, ராஜகோபுரம் வழியாக பெருமாள், தாயார் மட்டுமே பல்லக்கில் வர வேண்டும். கோயிலுக்குள் மற்றவர்களை பல்லக்கில் சுமந்து வரக் கூடாது என்பதுதான் எங்களது நிலைப்பாடு.

ஸ்ரீரங்கம் கோயில்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்ரீரங்கம்

கோயிலுக்குள் பிரம்ம ரதம் என்கிற பல்லக்கில் வரும் நிகழ்வு 100 ஆண்டுகளுக்குள் இடையில்தான் வந்துள்ளது. அதற்கு முன்னர், வீதியிலேயே வந்து, வீதியிலேயே சென்றுள்ளனர். அப்போது, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. பிரச்னையாகி வந்தால் வீதியிலும் செல்லக் கூடாது என்று மாஜிஸ்திரேட் உத்தரவே உள்ளது.

ஆனால், தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி, கோயிலுக்குள் இருந்து பிரம்ம மரியாதை என்று பல்லக்கில் சுமந்து சென்றனர். இதை நான் கடைசி வரை எதிர்த்தேன். அதற்கான எதிர்ப்பு இப்போதும் உள்ளது. ஆனாலும் அவர்கள் செய்வது தவறு என்று எதிர்த்தேன். எனவே, நின்று போன நடைமுறையை, எக்காரணத்தை முன்னிட்டு, மீண்டும் தொடரக்கூடாது.'' என்கிறார் முரளி.

பல மடங்களில் நிறுத்தம்

மேலும், தற்போது சர்ச்சையாகியுள்ள தருமபுரம் ஆதினத்தில் பல்லக்கில் சுமந்து செல்வது ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது என்கிறார் முன்னாள் இணை ஆணையர் ஜெயராமன்.

தொடர்ந்து அவர் கூறுகையில், "தருமபுரம் மடத்தில் பல்லக்கில் செல்வதை ஏற்கனவே நிறுத்தி விட்டனர். வேளாக்குறிச்சி ஆதீனம், கல்லிடைக்குறிச்சி பெரியசாமிகள் அஜபா நடேஸ்வர பண்டார சந்நிதி காலத்தில் சுவாமிகளே நிறுத்திவிட்டார். தருமபுரத்தில் புதிய ஆதீனம் பொறுப்பேற்றதும் மீண்டும் பல்லக்கில் செல்வது தற்போது விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

காஞ்சி சங்கர மடமும் வெகுகாலத்துக்கு முன்பே நிறுத்திவிட்டது. இதர மடங்களில் நடப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் சிறிதும் பெரிதுமாக 57 மடங்கள் உள்ளன. வெளியில் தெரியாமலேயே சிலவற்றில் நடந்தாலும் நடக்கலாம்," என்கிறார் முன்னாள் இணை ஆணையர் சி.ஜெயராமன்.

காணொளிக் குறிப்பு, 2028இல் ஒலிம்பிக்கில் இந்த புதிய விளையாட்டு. ராமேஸ்வரத்தில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: