குஜராத்தை உலுக்கிய கிரிஷ்மா கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

கிரிஷ்மா வெகாரியா
படக்குறிப்பு, உயிரிழந்த கிரிஷ்மா வெகாரியா

குஜராத் மாநிலத்தை கடந்த பிப்ரவரி மாதம் உலுக்கிய 21 வயது பெண் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 18 வயது நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி, குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் உள்ள கம்ரேஜ் பகுதியில் கிரிஷ்மா வெகாரியா என்ற பெண் பட்டப்பகலில் பெனில் என்ற நபரால் கொல்லப்பட்டார். ஃபெனில் கோயானி என்ற அந்த நபர் மீதான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பிபிசி குஜராத்தி நிருபர் தர்மேஷ் அமீன் இந்த வழக்கு தொடர்பாக கூறுகையில், தீர்ப்பை அறிவிப்பதற்கு முன், நீதிபதி மனுஸ்ம்ருதியில் இருந்து ஒரு வாசகத்தை குறிப்பிட்டதாக தெரிவித்தார். ஃபெனிலின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜமீர் ஷேக், தமது கட்சிக்காரருக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். 'கண்ணுக்குக் கண்ணு', 'பல்லுக்குப் பல்', 'மரணத்துக்கு மரணம் என்ற பழிவாங்கல்' என்று நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சமூகத்தில் அவற்றுக்கு இடமில்லை என்றும் வழக்கறிஞர் ஷேக் தண்டனை மீதான தமது தரப்பு வாதத்தை முன்வைத்தார். அமெரிக்காவில் ஒரே மாதிரியான குற்றவியல் சட்டம் இல்லை என்றும், அமெரிக்க மாகாணங்களில் கூட மரண தண்டனை வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் வாதிட்டார். மேலும், ஃபெனிலின் குற்றத்தை அரிதான அரிதானதாகக் கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வழக்கு விசாரணையின் போது, தடயவியல் அறிக்கைகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் சாட்சியத்தையும், மருத்துவ சான்றுகள் மற்றும் தொலைபேசி அழைப்பு பதிவுகள் உள்ளிட்ட பிற முக்கிய ஆதாரங்களையும் நீதிமன்றத்தால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து கிரிஷ்மா வெகாரியாவின் தந்தை நந்த்லால் வெகாரியா கருத்து கூறுகையில், இந்த தீர்ப்பு தனது எதிர்பார்ப்புக்கு ஏற்றது என்று கூறினார்.

"இன்று என் மகளுக்கு நீதி கிடைத்துள்ளது. காவல் துறை, நீதித்துறை மற்றும் வழக்கறிஞர்கள் எனக்கு நிறைய உதவி செய்துள்ளனர். இன்றைய தீர்ப்பு மூலம் நீதித்துறை மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது," என்று நந்த்லால் தெரிவித்தார்.

குஜராத் கொலை

பட மூலாதாரம், INSTAGRAM/_FENIL_01

பாதிக்கப்பட்ட வெகாரியா குடும்பத்தார் தரப்பு வழக்கறிஞர் நயன் சுகத்வாலா கூறுகையில், "நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் போது ஃபெனிலின் கொடுமையை உணர்ந்தது. கிரிஷ்மாவுக்கு வலி கொடுக்கும் வகையில், ஃபெனில் கிரிஷ்மாவின் தொண்டையை இரண்டு முறை அறுத்தார், மூன்றாவது முறையாக, அவர் தொண்டையின் முக்கிய நரம்பைக் கிழித்தார். இது காட்டுமிராண்டித்தனமான செயல் என்று நீதிமன்றம் கருதியிருக்கிறது," என்றார்."கிரிஷ்மாவை கொன்ற பிறகு குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, விசாரணையின் போது அவர் அலட்சியமாகவும் இருந்தார்," என்றும் தீர்ப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.முன்னதாக நடைபெற்ற விசாரணைகளில் போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி விமல் வியாஸ், ஃபெனில் குற்றவாளி என அறிவித்து தண்டனையை ஒத்திவைத்தார்.தீர்ப்பின் போது நீதிபதி கூறியதைக் கவனித்த அரசு வழக்கறிஞர், "​​நிர்பயா வழக்கு மற்றும் கசாப் வழக்கை ஃபெனிலின் செயலுடன் நீதிமன்றம் ஒப்பிட்டுக் குறிப்பிட்டது," என்று கூறினார்.

கிரிஷ்மாவின் குடும்பத்தார் கேள்வி

குஜராத் மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து கிரிஷ்மா வெகாரியாவின் குடும்பத்தினர் மாநில அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஃபெனில் என்பவர் கிரிஷ்மாவை குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கொன்ற சம்பவம் பட்டப்பகலில் நடந்தது, அப்படி இருக்கும்போது மாநிலத்தில் மகள்கள் மற்றும் சகோதரிகள் பாதுகாப்பாக இருப்பதாக எவ்வாறு சொல்ல முடியும் என்று பிபிசியிடம் பேசிய கிரிஷ்மாவின் குடும்ப உறுப்பினர்கள் வினவினர்.

"இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால், எங்கள் மகள்கள் எப்படி படிப்பை தொடர்வார்கள்? மாநில அரசே,'மகளை காப்பாற்றுங்கள், மகளுக்கு கல்வி அளியுங்கள்' என்று பேனர்கள் வைக்கப்படுகிறது. இந்த பேனர்களை மாநில அரசு அகற்ற வேண்டும். தயவு செய்து கோஷம் போடுவதை நிறுத்துங்கள். 'உங்கள் மகள்களைக் காப்பாற்ற விரும்பினால், அவர்களை வீட்டில் வைத்திருங்கள்' என்ற விளம்பர பலகைகளை அவர்கள் வைக்கட்டும்," என்று கிரிஷ்மாவின் நெருங்கிய உறவினரான ராதிகா கூறினார்.

எதிர்காலத்தில் எந்த ஒரு முரடனும்,எந்தப் பெண்ணையும் துன்புறுத்துவதை தடுக்க, ஃபெனிலுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் கோரினார். கிரிஷ்மா சந்தித்த இந்தக்கொடுமையை நாட்டில் எந்த மகளும் சந்திக்கக்கூடாது. எங்கள் மகள்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பார்கள்? மாநில அரசு போதிய பாதுகாப்பை வழங்கினால் மட்டுமே அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்" என்றார் அவர்.

கிரிஷ்மாவின் தாயார் விலாஸ் வெகாரியா தனது மகளுக்கு நீதி வேண்டும் என்று பிபிசியிடம் கூறினார்.

"என் மகள் அப்பாவி. அவள் எந்தத் தவறும் செய்யவில்லை. எனக்கு நீதி மட்டுமே வேண்டும். என் கண் முன்னே என் மகளின் கழுத்தை அறுத்தார். அவள் தொண்டையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இதற்கெல்லாம் நானே சாட்சி."என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒரு வருடமாக கிரிஷ்மாவை ஃபெனில் துன்புறுத்தி வந்தார்.

"குற்றம் சுமத்தப்பட்டவர், கடந்த ஒரு வருடமாக கிரிஷ்மாவை பின்தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்தார். பின்னர் இரு குடும்பத்தினருக்கும் இடையே சமரசமும் ஏற்பட்டது."என்று போலீஸில் பதிவு செய்யப்பட்ட புகார் தெரிவிக்கிறது.

இந்த கொலையின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி, காவல்துறை மற்றும் மக்களின் மனஉணர்வு குறித்த கேள்விகளை எழுப்பியது.

ஃபெனில் மீது கார் திருட்டு வழக்கு இருப்பதாகவும், தற்போது அந்த வழக்கையும் போலீசார் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஃபெனிலை போலீசார் கைது செய்தனர்.

காமராஜில் உள்ள கோல்வாடின் லக்ஷ்மிதாம் சொசைட்டியில் வசிக்கும் க்ரிஷ்மா வெகாரியா, அம்ரோலியின் ஜே.ஜே. ஷா கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். சௌராஷ்டிராவில் உள்ள கரியாதரின் மோதி வாவ்டி கிராமத்தைச் சேர்ந்த ஃபெனில் பஞ்சக் கோயானி, சூரத்தின் கபோதராவில் உள்ள சாகர் சொசைட்டியில் வசித்து வந்தார். அவர் கடந்த ஒரு வருடமாக க்ரிஷ்மாவுக்கு தொந்தரவு அளித்து வந்துள்ளார்.

"இந்த விஷயத்தை பெண்ணின் குடும்பத்தார் ஃபெனிலின் குடும்பத்தாரிடம் கொண்டு சென்றுள்ளனர். கிரிஷ்மாவின் தாய் மாமா மற்றும் அவருடைய தந்தையின் நண்பர் ஒருவரும் ஃபெனிலிடம் பேசி, இந்த நடவடிக்கையை நிறுத்தச் சொன்னார்கள். கிரிஷ்மாவை துன்புறுத்துவதை நிறுத்துவதாக ஃபெனில் உறுதியளித்தார்."

"இருப்பினும், காதலர் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சனிக்கிழமை மாலை ஃபெனில், க்ரிஷ்மா வசிக்கும் சொசைட்டிக்கு சென்றார். அவரைப்பார்த்த க்ரிஷ்மா தனது பெரியப்பா(தந்தையின் மூத்த சகோதரர்) சுபாஷ் வெகாரியாவிடம் தெரிவித்தார். சுபாஷ், ஃபெனிலிக்கு புரியவைக்க முயன்றார். ஆனால் ஃபெனில் அவருடைய அடிவயிற்றில் கத்தியால் குத்தினார்," என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிஷ்மா வெகாரியா

பட மூலாதாரம், Getty Images

"கிரிஷ்மாவின் பதினேழு வயது சகோதரரும் புகார்தாரருமான துருவ், ஃபெனிலைத் தடுக்க முயன்றார். ஆனால் ஃபெனில் அவரையும் கத்தியால் குத்தி, கையிலும் தலையிலும் காயப்படுத்தினார்."

"க்ரிஷ்மா தலையிட்டு தனது சகோதரர் மற்றும் பெரியப்பாவை காப்பாற்ற முயன்றார். ஆனால் ஃபெனில் அவரது கழுத்தில் கத்தியை வைத்தார். அவளது சகோதரனும், பெற்றோரும், குடும்ப உறுப்பினர்களும் அவளை விட்டுவிடுமாறு கெஞ்சினார்கள். ஆனால் ஃபெனில் அவள் கழுத்தில் கத்தியால் குத்தினார்," என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்கவேண்டுமானால், தொந்தரவுக்கு ஆளாகும் பெண்ணின் குடும்பத்தினர், குடும்ப கௌரவத்தைப் பற்றி சிந்திக்காமல், காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும் என்று இந்த சம்பவத்திற்குப் பிறகு, சூரத் ரேஞ்ச் ஐஜிபி (போலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல்) ராஜ்குமார் பாண்டியன் தெரிவித்தார்.

'க்ரிஷ்மா இறந்ததை உறுதிசெய்த ஃபெனில்'

"இந்த கொடூரமான செயலுக்குப் பிறகு, யாரும் வந்து அவருக்கு உதவி செய்து காப்பாற்றாமல் இருப்பதை உறுதிசெய்ய ஃபெனில் அங்கேயே நின்றுகொண்டிருந்தார் என்று நேரில் கண்ட சில சாட்சிகள் தெரிவித்தன.

"கிரிஷ்மா இறந்துவிட்டார் என்று உறுதியானதும் ஃபெனில், தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொள்ள முயன்றார்."என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிபிசி குஜராத்தியிடம் பேசிய காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பி.கே. வாணர், "குற்றம் சாட்டப்பட்டவர் தற்கொலை செய்ய முயற்சிக்கவில்லை. ஆனால் அங்கேயே இருந்து அவளைக் காப்பாற்ற மற்றவர்கள் வராமல் தடுக்க முயன்றார். அவள் அங்கே வலியால் துடித்தபோது அவள் இறப்பதை உறுதி செய்ய விரும்பினார். யாராவது அருகில் வந்து அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை அவர் அனுமதிக்கவில்லை," என்றார்.

"கிரிஷ்மா வலியால் துடித்துக் கொண்டிருந்தபோதும் குற்றம்சாட்டப்பட்டவர் இரண்டு மூன்று நிமிடங்கள் அங்கேயே இருந்தார். அவர் வெற்றிலை மற்றும் புகையிலையை மென்றுகொண்டு அங்கேயே இருந்தார். பின்னர் அவர் கத்தியால் அங்கிருப்பவர்களை காயப்படுத்த முயன்றார். இதற்கிடையில் அதிகமான மக்கள் திரண்டதால், தன்னைத்தானே குத்திக்கொண்டு அவர்களை பயமுறுத்த முயன்றார்."

இறந்தவர் மற்றும் கொலையாளி இருவரின் வயதும் சுமார் 20 முதல் 21 இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்..

"ஃபெனில், குடும்பத்திற்கு எப்போதுமே ஒரு பிரச்னையாக இருந்து வந்துள்ளார். யாருடைய பேச்சையும் அவன் கேட்கவில்லை. கிரிஷ்மாவின் குடும்ப உறுப்பினர்கள் அவர் மீது புகார் அளித்தபோது, ​​நான் ஃபெனிலை கண்டித்தேன்."என்று ஃபெனிலின் தந்தை பங்கஜ் கோயானி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

"இனி கிரிஷ்மாவைத் தொந்தரவு செய்யமாட்டேன் என்று ஃபெனில் எங்களிடம் கூறினார், ஆனால் அதைச்செய்ய ஒருவேளை அவன் தயாராக இல்லை என்று தோன்றுகிறது. நீதிமன்றம் அவனுக்கு மரண தண்டனை விதித்தாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்."

ஃபெனிலின் உடல்நிலை குறித்து விசாரிக்க கூட தாங்கள் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்று ஃபெனிலின் பெற்றோர் கூறினர்.

மறுபுறம், பெண்ணின் தந்தை நந்த்லால் மற்றும் மாமா , ஆப்பிரிக்காவில் இருந்து சூரத் திரும்பியுள்ளனர், அதன் பிறகு அவரது இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது. இளம்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தவிர, ஏராளமானவர்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

'கல்லூரிப் படிப்பை முடிக்கவில்லை'

ஃபெனிலின் கல்லூரி வருகை 10% மட்டுமே இருந்ததால் 2020 ஜூனில் அவர் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று அதே கல்லூரியில் படித்த பத்திரிகையாளர் வந்தன் பதானி கூறுகிறார்.

"நான் அதே கல்லூரியில் படித்தேன். ஃபெனிலின் வழக்கை விரிவாகப் படித்தேன். கல்லூரியில் ஃபெனில் மற்றும் அவரது குழு மீது துன்புறுத்தல் புகார்கள் வந்தன. அவர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பதை அவரது நண்பர்கள் அறிந்திருக்கவில்லை. அவர் கல்லூரி வளாகத்தில் வெறுமனே சுற்றித் திரிந்தார்."என்று பதானி தெரிவித்தார்.

"கல்லூரியில் முதலாம் ஆண்டு மட்டுமே படித்த ஃபெனில், இரண்டாம் ஆண்டு படிப்பை தொடரவில்லை. அவர் தாமாக படிப்பை தொடரவில்லையா அல்லது நீக்கப்பட்டாரா என அறிய போலீஸ் குழு கல்லூரிக்கு சென்றது," என்று டி.ஒய்.எஸ்.பி வாணர் தெரிவித்தார்.

ஃபெனில் எம்பிராய்டரி யூனிட்டில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், ஆனால் கடந்த 15-17 நாட்களாக அவருக்கு வேலை இல்லை என்றும் அவர் கூறினார்.

கிரிஷ்மா வெகாரியா

பட மூலாதாரம், Getty Images

இது ஒருதலைபட்ச காதலால் நடந்ததாக முதல் பார்வையில் தெரிகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஃபெனிலின் கிரிமினல் கடந்த காலம் குறித்து பேசிய வாணர், "ஆமாம், அவர் கார் திருடியதாக பதிவில் உள்ளது. நாலைந்து பேர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். என்ன காரணம் என்பது விரிவான விசாரணைக்கு பின் தெரியவரும். "என்றார்.

"சனிக்கிழமை மாலை ஃபெனில் , க்ரிஷ்மா வசிக்கும் குடியிருப்புக்கு வந்தபோது, ​​அவருடன் மூன்று அல்லது நான்கு பேர் வந்ததாக சிலர் கூறுகிறார்கள். இருப்பினும், அவர்கள் குடியிருப்பு வளாகத்திற்குள் நுழையவில்லை. பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர், இருப்பினும் இது காவல்துறையால் உறுதிப்படுத்தப்படவில்லை," என்று வந்தன் பதானி மேலும் கூறினார்.

'கல்லூரிக்கு சென்று பென்ணிடம் வம்பு'

"அவருக்கு ஆபத்தான மனநிலை இருந்தது. இரண்டு அல்லது மூன்று முறை அவர் எச்சரிக்கப்பட்டார். அவரது (ஃபெனிலின்) தந்தையும் அவர் பிரச்சனையை உருவாக்க மாட்டார் என்று எங்களுக்கு உறுதியளித்தார். சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்கள், எல்லாம் சாதாரணமாக இருந்தது. அதன் பிறகு அவர் இப்படி செய்துள்ளார்."

"கிரிஷ்மா இவை அனைத்தையும் பற்றி தனது தந்தையிடம் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவர் மற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டார்."

'சமூக ஊடகங்களில் பரவும் பொய்யான செய்திகள் '

கிரிஷ்மாவின் கொடூரமான கொலை சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. கிரிஷ்மாவின் கொலையின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தவறான கூற்றுகளுடன் பரப்பப்பட்டன. பிபிசி குஜராத்தி சமூக ஊடகங்களில் கூறப்பட்ட கூற்றுகள் குறித்து உண்மை சோதனை செய்தது.

லவ் ஜிஹாத் மற்றும் மத மாற்றம் என்று கூறி க்ரிஷ்மாவின் வீடியோ சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டதாக பிபிசி குஜராத்தி கண்டறிந்துள்ளது. வீடியோவைப் பகிரும் போது, ​​ஃபெனில் ஒரு முஸ்லிம் என்றும், இஸ்லாத்தை ஏற்க மறுத்ததால் கிரிஷ்மா கொல்லப்பட்டார் என்றும் கூறப்பட்டது. ஃபேஸ்புக்கில் தேவ் கடோச் என்ற பயனர் இப்படி பதிவிட்டுள்ளார்.

இதே கூற்றை ட்விட்டரில் இந்து ராஷ்ட்ர பிரஷாஷனிக் சமிதி மற்றும் சாய் சுமன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :