"தமிழ் ஒன்றும் கஷ்டம் இல்லை" - கோவையில் படிக்கும் வட மாநில மாணவர்கள்

தமிழ் வழி கல்வி
    • எழுதியவர், செளமியா குணசேகரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டில் பல வடிவங்களில் இந்தி மொழி திணிக்கப்படுவதாகக் கூறி ஆளும் கட்சியும் பிற அரசியல் கட்சிகளும் அவற்றின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், வட மாநில மாணவர்களுக்கு தமிழ் மொழியைக் கற்பித்து வருகிறது கோயம்புத்தூரில் உள்ள கோவை கெம்பநாயக்கன் பாளையம் அரசுப் பள்ளி.

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் தாலுகாவில் உள்ளது கெம்பநாயக்கன் பாளையம். இங்கு வேலைக்காக தமிழ்நாட்டுக்கு இடம் பெயர்ந்த வட மாநிலங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் பலர், தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தமிழ் வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது.

ஒரே வளாகத்தில் தொடக்கப்பள்ளி தனியாகவும், மேல்நிலைப்பள்ளி தனியாகவும் செயல்பட்டு வருகின்றன. இரு பள்ளிகளிலும் வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கிறார்கள்.

இது குறித்து மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.சாக்கரடீஸ் குலசேகரனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

"ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் வட மாநிலங்களைச் சேர்ந்த பதினோரு மாணவர்களும் நான்கு மாணவிகளும் பயில்கின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 32 வட மாநில மாணவர்கள் படிக்கிறார்கள்," என்றார்.

இந்த பகுதியில் வட மாநிலங்களில் இருந்து வேலைக்காக குடும்பத்துடன் இடம்பெயர்ந்து வசிக்கும் பல குடும்பங்கள் உள்ளன.

இவர்கள் பெரும்பாலும் கூலி வேலை பார்த்து வாழ்க்கையை நடத்தி வருபவர்கள். பொருளாதார ரீதியில் பின்தங்கி இருப்பதால் தங்களுடைய குழந்தைகளை தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்திப் படிக்க வைக்க இவர்களால் இயலவில்லை. அதுவே அரசு பள்ளிகளில் தங்களுடைய பிள்ளைகளை சேர்க்க இந்த தொழிலாளர்களைத் தூண்டியிருக்க வேண்டும்.

எஸ்.சாக்கரடீஸ் குலசேகரன்
படக்குறிப்பு, எஸ்.சாக்கரடீஸ் குலசேகரன்

ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

வட மாநில குழந்தைகளுக்கு அவர்களுக்குப் புரியாத புதிய மொழியான தமிழில் கற்பிப்பது எப்படி சாத்தியமாகிறது என தலைமை ஆசிரியரிடம் கேட்டோம்.

"தமிழ் மொழியில் கற்பிப்பது சுலபமான விஷயம் அல்ல என்றாலும் அது சாத்தியமானதே. புதிதாக சேரும் மாணவர்களுக்கு பாடங்களை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் இருக்கும். சொல்லப் போனால் சுமார் ஒரு மாதத்துக்கு புதிதாக சேரந்த வட மாநில மாணவர்களுக்கு எதுவுமே புரியாது எனலாம். பிறகு மற்ற மாணவர்களுடன் சேர்ந்துப் பழக ஆரம்பிக்கும்போது குறுகிய காலத்திலேயே தமிழ் நன்றாக பேச ஆரம்பித்து விடுகின்றனர்," என்று கூறினார்.

மேலும், "சிறு வயதினர் என்பதாலோ என்னவோ, தெரியவில்லை விரைவிலேயே தமிழ் கற்றுக்கொண்டு பேசுவது எனக்கு ஆச்சரியமாகவே உள்ளது," என்றார்.

அத்கைய மாணவர்களுக்கு எந்த வகை சவால்கள் உள்ளன என்று கேட்டதற்கு, "தொடக்கப் பள்ளியில் வந்து சேரும் குழந்தைகளுக்கு இது பெரிய சவால் அல்ல. ஆனால் இடையில் ஆறாம் வகுப்புகளுக்கு மேல் வந்து சேரும் மாணவர்களுக்கு புதிய மொழியில் கற்பது பெரிய சவாலாக இருக்கும்," என்று கூறினார்.

வட மாநில மாணவர்கள் தமிழ் வழி கல்வி

"ஆசிரியர்களான எங்களுக்கும் பெரிய சாவாலாகவே உள்ளது. சில நேரங்களில் பள்ளியில் பிள்ளைகளை சேர்ந்து விடும் சிலர் சில நாட்களிலேயே அவர்களை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விடுகின்றனர். வட மாநிலங்களில் இருந்து வரும் சில மாணவர்களுக்கு எண்களை கூட ஆங்கிலத்தில் சொன்னால் புரிந்து கொள்ள முடிவது இல்லை," என்றும் அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற மொழித் தடைகளை மீறி பல வட மாநில மாணவர்கள் மிகவும் நன்றாக படிக்கவும் செய்கின்றனர் என்பதை நாம் அறிந்தோம். அப்படி பரிணமிப்பவர்களில் ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பிரின்ஸ் எனும் மாணவன்.

கோவை கெம்பநாயக்கன் பாளையம்

அவர் குறித்து தலைமை ஆசிரியரிடம் பேசியபோது, கணிதம் மற்றும் உயிரியல் பாடப் பிரிவில் படிக்கும் பிளஸ்டூ மாணவர் பிரின்ஸ். இந்த ஆண்டு பொதுத்தேர்வில் பள்ளியிலேயே பிரின்ஸ்தான் முதலிடம் வருவார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

"தமிழ் கற்பது கடினமல்ல"

மாணவர் பிரின்ஸ் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள இந்த பள்ளி தலைமை ஆசிரியர், தமிழ் வழி கல்வியில் படிப்பதால் தமிழக அரசின் 7.5% இட ஒத்துக்கீட்டில் அவருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை ஆசிரியர் குறிப்பிட்ட மாணவன் பிரின்ஸுடன் பேசினோம்.

மாணவர் தமிழ் வழி கல்வி வட மாநில தொழிலாளர்கள்
படக்குறிப்பு, பிரின்ஸ்

" 2010இல் பால் வாடி வகுப்பில் இருந்து இந்த பள்ளியில் படிக்கிறேன். எனது அம்மா, அப்பா இருவருமே ஒப்பந்த கூலி வேலைக்கு செல்பவர்கள். ஆசிரியர்கள் நன்றாக சொல்லித் தருகின்றனர், அதனால் பாடங்களை எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. தமிழ் படிப்பது கடினமானது இல்லை. புதிதாக வந்து சேரும் மாணவர்களுக்கு தமிழ் தெரியாது என்பதால் ஆசியர்கள் மொழிபெயர்ப்பு செய்வதற்காக சில சமயம் என்னை அழைப்பார்கள். இங்கு பயிலும் சில வட இந்திய மாணவர்களுக்கு நானும் அவ்வப்போது பாடங்களை சொல்லித்தர உதவுவேன். எனக்கு தமிழ் மொழி மிகவும் பிடிக்கும் அதனால் தான் என்னால் நன்றாக படிக்க முடிகிறது" என்கிறார் பிரின்ஸ். 

வாசிப்பு பயிற்சிக்கு சிறப்பு வகுப்புகள்

தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி நம்மிடையே பேசுகையில், "வட மாநில மாணவர்கள் புரிந்து படிக்கும் வகையில் அனைத்து ஆசிரியர்களும் 'தமிழ்நாடு இந்தி' பொருள் அகராதி வைத்துள்ளோம்.

முக்கியமான வார்த்தைகளை இந்தியிலும் கூறுவோம். இதன் மூலம் அந்த மாணவர்கள் புரிந்து கொள்வது எளிமையாகிறது. வட மாநில மாணவர்களில் தமிழ் மொழி வாசிப்பில் பின் தங்கியுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கென தனியாக பள்ளி நேரம் முடிந்த பிறகு மாலை வேளையில் தினமும் ஒரு மணிநேரம் நாளுக்கு ஒரு ஆசிரியர் என வகையில் எங்களுக்குள் பிரித்துக் கொண்டு தமிழ் வாசிப்பு சிறப்பு பயிற்சி அளிக்கிறோம். என்று கூறினார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :