மு.க.ஸ்டாலின்: "சாதி மதத்தால் தமிழினத்தை பிளவுபடுத்தி வளர்ச்சியை தடுக்க பார்க்கிறார்கள்"

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

(இலங்கை, இந்தியாவில் இன்றைய நாளின் நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியானவற்றில் கவனிக்க வேண்டிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.)

நம்மைப் பிளவுபடுத்துவதன் மூலமாக, நமது வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள். தமிழினம் அதற்கு பலியாகிவிடக் கூடாது, அதற்குப் பின்னால் இருக்கும் சதியை உணர்ந்து தெளிந்து புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தி 'இந்து தமிழ் திசை' நாளிதழில் வெளியாகியுள்ளது.

திமுகவின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் சென்னை திருவான்மியூரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ரமலான் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

"இசுலாமியச் சமுதாயப் பெருமக்கள் இந்த ரமலான் மாதத்தை மிகமிகப் புனிதமான மாதமாகக் கடைபிடித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பசி, தாகம் ஆகியவற்றை மறந்து நோன்பு இருக்கிறார்கள். இதனைத் தங்கள் கடமையாக நினைத்துச் செய்கிறார்கள். சிறுபான்மை இயக்கத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் கருணாநிதிக்குமான நட்பு என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, தொடரத் தான் போகிறது. அதில் யாரும் களங்கத்தையோ பிரிவையோ ஏற்படுத்த முடியாது.

எதிர்க்கட்சியாக இருந்தபோதே சிறுபான்மையினர் உரிமைக்குக் குரல் கொடுத்த திமுக, ஆட்சி அமைத்த பின்னர் ஏராளமான சாதனைகளைச் செய்து கொடுத்தது. இப்போதும் சிறுபான்மையினருக்கான நன்மைகளை தொடர்ந்து செய்து வருகிறோம். அதில் மிக முக்கியமானது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம். நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கேள்விக்குறியாக்கும் மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை நான் தான், "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்" கொண்டு வந்து நிறைவேற்றினேன். முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்தது. இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

மாநிலங்களவையில் CAA-விற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் தான் அதிமுக உறுப்பினர்கள். இந்தப் பத்துப் பேரும் ஆதரித்ததால்தான் அந்தச் சட்டமே நிறைவேறியது. நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் மக்களவையிலும் இதனை எதிர்த்து, மக்கள் மன்றத்தில் கையெழுத்து இயக்கம் நடத்திய கட்சி திமுக.

மதம் என்பதும், சமய நம்பிக்கைகள் என்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள். ஆனால் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் கிடைக்கும் நன்மையும் அதிகம், பலமும் அதிகம். தமிழினத்தை சாதியால், மதத்தால் பிரிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். அவ்வாறு செய்தால்தான் தமிழினத்தை அழிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். நம்மைப் பிளவுபடுத்துவதன் மூலமாக, நமது வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள். அதற்குத் தமிழினம் பலியாகிவிடக் கூடாது. அதற்குப் பின்னால் இருக்கும் சதியை உணர்ந்து தெளிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் அமைதி நிலவ வேண்டும், அமைதியான நிம்மதியான நாடுதான் அனைத்துவிதமான வளர்ச்சியையும் பெறும். அத்தகைய வளர்ச்சிக்கான சூழ்நிலையை கடந்த ஓராண்டு காலத்தில் நம்முடைய அரசு உருவாக்கி உள்ளது. அதனால்தான் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் வளர்ச்சியானது தமிழ்நாட்டை இந்தியாவின் சிறப்பான மாநிலங்களில் முதலிடத்தைப் பெறும் அளவிற்கு முன்னோக்கி நகர்த்தி வருகிறது. இத்தகைய வளர்ச்சிக்கு அனைத்துத் தரப்பினரும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

10 ஆண்டுகளில் 17 லட்சம் இந்தியர்களுக்கு ஹெச்ஐவி பாதிப்பு: நான்காவது இடத்தில் தமிழகம்

ஹெச்.ஐ.வி

பட மூலாதாரம், Getty Images

கடந்த 10 ஆண்டுகளில் 17 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது என, 'தினமணி' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அளித்த பதிலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஹெச்ஐவி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. கடந்த 2011-12 ஆம் ஆண்டில் பாதுகாப்பற்ற உடலுறவு முறை காரணமாக ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.4 லட்சமாக இருந்த நிலையில், 2020-21 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 85,268 ஆக குறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 2011 முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 17,08,777 பேர் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஆந்திர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் 3,18,814 பேர் பாதிக்கப்பட்டனர். அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 2,84,577 பேரும், கர்நாடகத்தில் 2,12,982 பேரும், தமிழகத்தில் 1,16,536 பேரும், உத்தர பிரதேசத்தில் 1,10,911 பேரும், குஜராத் மாநிலத்தில் 87,440 பேரும் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மேலும், இந்தக் காலகட்டத்தில் ரத்த தொடர்பு மூலமாக 15,782 பேரும், தாயிடமிருந்து குழந்தைக்கு பரவும் தன்மை மூலமாக 4,423 பேரும் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் 81,430 குழந்தைகள் உள்பட 23,18,737 பேர் ஹெச்.ஐ.வி தொற்றுடன் வாழ்ந்து வருகின்றனர். இருந்தபோதும், இந்தத் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகிறது" என்று அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தீவிரம்

மஹிந்த ராஜபக்ஷ

பட மூலாதாரம், MAHINDA RAJAPAKSA FB

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், உக்கிரமடைந்துள்ள அரசியல் இழுபறி நிலைமை தொடர்வதால், பிரச்னைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதில் தாமத நிலைமை தொடர்கின்றது.

நெருக்கடிகளுக்கு உடன் தீர்வை பெற்றுக்கொள்வதற்கு இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பான அழுத்தம் அதிகரிப்பதால், அதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் சூடுபிடித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தமிழன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என ஆளும் தரப்பிலிருந்து விலகிய சுயாதீனக் குழுக்களும், ஆளுந்தரப்புடன் இருக்கும் சில சிரேஷ்ட உறுப்பினர்களும் கடும் அழுத்தம் கொடுப்பதால், அரசியல் நெருக்கடி நிலைமை இழுபறியிலுள்ளது.

இடைக்கால அரசாங்கத்திற்கு பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் இணக்கம் தெரிவித்தாலும், அதே பிரதமர் தலைமையில் இடைகால அரசாங்கம் அமைப்பதற்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் விரும்பவில்லை என்பதோடு, பிரதான எதிர்க்கட்சியும் இடைகால அரசாங்கத்திற்கு அதரவளிக்கவில்லை என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதனால், பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் குழுக்களுக்கு இடையில் முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ளதால், முடிவுகளை எடுப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக யோசனை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான யோசனை இன்று கூடவுள்ள அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வீரகேசரி பத்திரிகை செய்தி பிரசுரித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் குழுவினர் சபாநாயகரிடம் சமர்பித்த 21வது திருத்த பிரேரணைகளின் அடிப்படையிலேயே பிரதமர் அமைச்சரவையில் இந்த யோசனையை சமர்ப்பிக்கவுள்ளார்.

பிரதமரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள யோசனையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

21வது திருத்தத்துக்கு ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

காலி முகத்திடல் பகுதியில் போலீசாரால் ஏற்படுத்தப்பட்ட முள் தடைகள்

இலங்கை போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

காலி முகத்திடல் பகுதியை அண்மித்து நேற்றைய தினம் போலீஸாரினால் ஏற்படுத்தப்பட்ட வீதி தடைகளில் கறுப்பு நிறத்திலான துணியினால் மூடப்பட்ட முற்கள் பொருத்தப்பட்ட வீதிகளில் தடைகள் காணப்பட்டதாக மவ்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தை மேற்கோள்காட்டி இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நடவடிக்கையினால், மக்களுக்கு கடும் காயங்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :