பிரசாந்த் கிஷோருக்கு காங்கிரஸ் விடுத்த அழைப்பு: 2024க்காக இணையுமா இந்த கூட்டணி?

காணொளிக் குறிப்பு, பிரசாந்த் கிஷோரை காங்கிரஸுக்கு அழைத்த சோனியா காந்தி... ஏன்?

தேர்தல் உத்திகள் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேருமாறும் ஆலோசகராகப் பணியாற்றாமல் பொறுப்பாளராக செயலாற்றுமாறும் கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் கூறுகின்றன.

2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள இந்திய மக்களவை பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 370 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் கவனம் செலுத்தலாம் என்றும் அதற்கு முன்னதாக, கட்சியின் பலவீனங்கள் மற்றும் முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தியுடன் பேசியிருக்கலாம் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர், சோனியா இடையிலான சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால், காங்கிரஸ் வளர்ச்சிக்காக பிரசாந்த் கிஷோர் வழங்கியுள்ள யோசனைகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆராய ஒரு சிறிய குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர கேட்டுக் கொள்ளப்பட்டாரா என அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "எல்லாவற்றுக்கும் ஒரு வாரத்தில் பதில் தெரியவரும்," என்று கூறினார் வேணுகோபால்.

சோனியா காந்தியுடனான சந்திப்பின்போது, மக்களவை தேர்தலின்போது உத்தரபிரதேசம், பிகார் மற்றும் ஒடிஷாவில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்றும் தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் கிஷோர் பரிந்துரைத்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின.

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ்

பட மூலாதாரம், PRASANTH KISHORE

படக்குறிப்பு, பிரசாந்த் கிஷோர்

இந்த யோசனையை ராகுல் காந்தி ஒப்புக்கொண்டதாக பெயர் வெளியிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் உட்பட நாட்டில் நடைபெறவுள்ள முக்கிய தேர்தல்களுக்கு முன்னதாக காங்கிரஸுக்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பது தொடர்பாக பேச இன்றைய பேச்சுவார்த்தைக்கு பிரசாந்த் கிஷோர் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் குஜராத் தேர்தலை மையமாக வைத்து இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் 2024ஆம் ஆண்டு தேர்தல் குறித்தே அவர் சோனியா காந்தியுடன் அதிக நேரம் பேசியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்கும் பணியை படிப்படியாக செயல்படுத்தலாம் என்ற கட்சி மேலிடத்தின் விருப்பத்துக்கு எதிரான நிலைப்பாட்டை பிரசாந்த் கிஷோர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரைப் பொறுத்தவரை கட்சியில் மேல் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம்வரை மிகப்பெரிய மாற்றங்களை ஒரே நேரத்தில் செய்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி வெற்றி பெற பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த தேர்தல் உத்திகள் பலன் கொடுத்தன. அதன் பிறகு பிரசாந்த் கிஷோருக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான உறவு எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த மாநில சட்டடமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்குப் பிறகு மீண்டும் பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வெற்றி உத்திகள் தொடர்பான ஆலோசனைகளை அவரிடம் பெற காங்கிரஸ் மேலிடம் ஆர்வம் காட்டியது. இந்தப் பின்னணியிலேயே இன்றைய சந்திப்பு நடந்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

யார் இந்த பிரசாந்த் கிஷோர்?

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ்

பட மூலாதாரம், JDU

பிரசாந்த் கிஷோர் இந்திய அரசியல் கட்சிகள் சிலவற்றால் தேர்தல் வெற்றி உத்திகள் வகுப்பாளராக பார்க்கப்படுவர். பிகார் மாநிலத்தின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள கோரான் கிராமத்தில் பிறந்த இவர், ஐ.நா அலுவலக பணியில் எட்டு வருடங்களை கழித்தார்.

பிறகு அவர், பாஜகவின் அரசியல் வியூகவாதியாகப் பணியாற்றினார். ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகியவற்றின் தேர்தல் வெற்றிக்காகவும் அவர் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.

முதன் முதலாக அவர் 2011இல் நரேந்திர மோதிக்கு உதவினார். அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோதி 2012ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக முதல்வராக பிரசாந்த் கிஷோரின் உத்திகள் கை கொடுத்தன. அதன் பிறகு சிஏஜி எனப்படும் பொறுப்பான நிர்வாகத்திற்கான குடிமக்கள் என்ற பிரசார நிறுவனத்தின் அடையாளத்துடன் அவர் தேர்தல் வெற்றி உத்திகளை 2014ஆம் ஆண்டில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய நரேந்திர மோதிக்காக வகுத்தார்.

தொட்ட இடமெங்கும் வெற்றி

காங்கிரஸ் பிரசாந்த் ஸ்டாலின்

பட மூலாதாரம், IPAC

அடுத்த ஆண்டே சிஏஜி நிறுவன ஊழியர்களைக் கொண்டு ஐ-பிஏசி என்ற பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கினார் பிராந்ச் கிஷோர். அதன் மூலம் பிகார் முதல்வராக நிதிஷ் குமாரின் தேர்தல் வெற்றிக்காக உத்திகளை வகுத்துச் செயல்பட்டார்.

2016ஆம் ஆண்டில் பிரசாந்த் கிஷோரின் சேவைகளை அப்போது காங்கிரஸில் ஆளும் அமரிந்தர் சிங் பெற்றார். இதைத்தொடர்ந்து 2017இல் அவரது உத்திகள் திட்டத்தை உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த காங்கிரஸ் முற்பட்டது. ஆனால், அந்த தேர்தலில் காங்கிரஸுக்கு தோல்வியே மிஞ்சியது.

2017இல் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டார். அப்போது நடந்த தேர்தலில் பிரசாந்த் வகுத்துக் கொடுத்த உத்திகள் கைகொடுக்கவே 175 இடங்களில் 151 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வென்று ஆட்சியைப்பிடித்தது.

2020இல் டெல்லி சட்டமன்ற தேர்தலின்போது பிரசாந்த் கிஷோரின் சேவையை ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்திக் கொண்டது. இங்கு 70 தொகுதிகளில் 62 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வென்று ஆட்சியை தக்க வைத்தது.

பிகாரில் யாருக்கும் ஆதரவு தர மறுப்பு

அரவிந்த் கேஜ்ரிவால்

பட மூலாதாரம், ARVIND KEJRIWAL

அதே ஆண்டு பிகார் சட்டமன்ற தேர்தல் நடந்தபோது, தமது ஆதரவு யாருக்கும் இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தார் பிரசாந்த் கிஷோர். அதே சமயம், 2020ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கான தேர்தல் உத்திகளை வகுப்பதற்காக அதன் தலைவர் மு.க. ஸ்டாலினுடன் கைகோர்த்தார் பிரசாந்த் கிஷோர்.

2021இல் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் நடந்தபோது அவரது சேவையை திரிணமூல் காங்கிரஸ் பெற்றது. அதிலும் 294 இடங்களில் 213 இடங்களில் பெரும்பான்மையை பெற்று மமதா பானர்ஜி அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

தமிழ்நாட்டிலும் 234 இடங்களில் 159 இடங்களில் திமுக வென்றது. மு.க. ஸ்டாலின் முதல் முறையாக மாநில முதல்வரானார்.

2022இல் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலையொட்டி தமது வெற்றிக்கு உதவிடுமாறு 2021இல் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங் பிரசாந்த் கிஷோரை கேட்டுக் கொண்டார். மேலும், அவரை கேபினட் அமைச்சருக்கு இணையான முதல்வரின் ஆலோசகர் பதவிக்கும் நியமித்தார் அமரிந்தர். ஆனால், நான்கே மாதங்களில் அந்த பொறுப்பைத் துறந்தார் பிரசாந்த் கிஷோர். அவர் பதவி விலகிய அடுத்த சில மாதங்களிலேயே பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் உள்கட்சி பூசல் ஏற்பட்டு முதல்வர் பதவியை அமர்ந்தர் சிங் இழந்தார்.

இதன் பிறகு அரசியல் கட்சிகள் மத்தியில் பொதுவெளியில் அதிகம் பேசப்படாமல் இருந்து வந்த பிரசாந்த் கிஷோர், தற்போது சோனியா காந்தியை சந்தித்துப் பேசியதன் மூலம் ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளார். ஆனால், அவர் காங்கிரஸ் கட்சியில் சேருவாரா அல்லது அரசியல் ஆலோசனைகளை மட்டும் வழங்குவாரா என்பதை இரு தரப்பும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: